Monday 1 October 2012

Catholic News in Tamil - 29/09/12


1. காஸ்தெல் கந்தோல்ஃபோ பணியாளர்களுக்குத் திருத்தந்தை நன்றி

2. திருஅவைக்கு இரண்டு புதிய மறைவல்லுனர்கள்

3. 2013ம் ஆண்டின் உலகச் சமூகத்தொடர்பு நாளுக்கானத் தலைப்பு

4. திருப்பீடப் பேச்சாளர் : பயணம் செய்யும் திருஅவை அன்னைமரியாவின் திருஅவை

5. இஸ்பெயினின் பொருளாதார நெருக்கடி குறித்து காரித்தாஸ் எச்சரிக்கை

6. இதய நோயால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களைவிட அதிகம்

7. செவ்வாயில் நீரோடைகள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன

8. இந்தியாவில் ஓராண்டில் 4 கோடிக்கு மேற்பட்டோர் இணையதளக் குற்றங்களால் பாதிக்கப்படுகின்றனர்
------------------------------------------------------------------------------------------------------

1. காஸ்தெல் கந்தோல்ஃபோ பணியாளர்களுக்குத் திருத்தந்தை நன்றி

செப்.29,2012. இந்த உலகில் எல்லாமே கடந்து போகின்றது, அவை இதமான மற்றும் அமைதியான நேரமாகக் கடந்து போகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
காஸ்தெல் கந்தோல்ஃபோவில் கோடைவிடுமுறையை முடித்து வத்திக்கான் திரும்புவதற்கு முன்னர், அங்கு தனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை, அவர்கள் அனைவரையும் இறைவன் தமது நன்மைத்தனத்தாலும் ஆசீராலும் நிறைத்து, தமது அன்பில் வைத்துக் காப்பாராக என்று கூறினார்.
நம் ஆண்டவர் இயேசுவுக்கும் மீட்பின் திருவார்த்தைக்கும் நம் இதயங்களையும் வாழ்வையும் அகலத் திறப்பதற்கு உதவும்வகையில் விசுவாச ஆண்டைத் தொடங்கி வைக்கும் நாளை ஆவலோடு எதிர்நோக்கியிருப்பதாகவும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வருகிற அக்டோபர் 11ம் தேதி தொடங்கும் விசுவாச ஆண்டு, 2013ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதியன்று நிறைவடையும்.
காஸ்தெல் கந்தோல்ஃபோவில் கோடைவிடுமுறை இல்லத்திலிருந்து இத்திங்களன்று வத்திக்கான் திரும்புகிறார் திருத்தந்தை.
மேலும், அருளாளர் திருத்தந்தை 23ம் அருளப்பர் லொரேத்தோ அன்னைமரியா திருத்தலத்துக்கு திருப்பயணம் மேற்கொண்டதன் 50ம் ஆண்டு நினைவாக, திருத்தந்தை 16ம் பெனடிக்டும் வருகிற அக்டோபர் 4ம் தேதி லொரேத்தோவுக்கு ஒருநாள் திருப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. திருஅவைக்கு இரண்டு புதிய மறைவல்லுனர்கள்

செப்.29,2012. வருகிற அக்டோபர் 7ம் தேதி ஞாயிறன்று வத்திக்கான் பசிலிக்காவில் திருப்பலி நிகழ்த்தி 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உலக மாமன்றத் தந்தையரோடும் இஸ்பானிய மற்றும் ஜெர்மன் ஆயர்களோடும் நிகழ்த்தும் கூட்டுத்திருப்பலியில் புனித அவிலா ஜான், புனித பின்ஜென் கில்டெகார்டு ஆகிய இருவரையும் திருஅவையின் மறைவல்லுனர்கள் என அறிவிக்கவுள்ளார் திருத்தந்தை.
16ம் நூற்றாண்டு இஸ்பானிய அருள்பணியாளரான புனித அவிலா ஜான், தனது தாயகத்தில் அருள்பணியாளர்களின் வாழ்வில் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தவர் மற்றும் மறையுரைகள் ஆற்றுவதில் தேர்ச்சி பெற்றவர்.
12ம் நூற்றாண்டு ஜெர்மன் தியான யோகியான புனித பின்ஜென் கில்டெகார்டு, புனித பெனடிக்ட் துறவு சபையைச் சார்ந்தவர். இவரது இறைக்காட்சிகளும் இறையுண்மைகள் குறித்த கடிதங்களும் நூல்களும்  புகழ்பெற்றவை.

3. 2013ம் ஆண்டின் உலகச் சமூகத்தொடர்பு நாளுக்கானத் தலைப்பு

செப்.29,2012. 2013ம் ஆண்டு மே 12ம் தேதி சிறப்பிக்கப்படவிருக்கும் 47வது உலகச் சமூகத்தொடர்பு நாளுக்கெனத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு இச்சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டது.
சமூக வலைத்தளங்கள் : உண்மை மற்றும் விசுவாசத்தின் நுழைவாயில்கள்; நற்செய்தி அறிவிப்புக்கு புதிய தடங்கள் என்பது 47வது உலகச் சமூகத்தொடர்பு நாளுக்கெனத் திருத்தந்தை தேர்ந்தெடுத்துள்ள தலைப்பாகும்.
இக்காலத்தில் வேகமாக வளர்ந்து வரும் வலைத்தளங்கள், நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு மிக முக்கியமான சவால்களில் ஒன்றாக  இருக்கின்றது எனவும், விசுவாச ஆண்டுச் சூழலில் இந்தத் தலைப்புக்குத் திருத்தந்தை மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகச் சமூகத்தொடர்பு நாள், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் அழைப்பின்பேரில் உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் ஒரே தினமாகும். 

4. திருப்பீடப் பேச்சாளர் : பயணம் செய்யும் திருஅவை அன்னைமரியாவின் திருஅவை

செப்.29,2012. இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் அருளாளர் திருத்தந்தை 23ம் அருளப்பர் மேற்கொண்ட புகழ்பெற்ற திருப்பயணத்தின் 50ம் ஆண்டு நினைவாக வருகிற அக்டோபர் 4ம் தேதி லொரேத்தோ அன்னைமரியா திருத்தலத்துக்குச் செல்லவிருக்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இக்காலத்தில் திருஅவைக்காக, குறிப்பாக, வரவிருக்கும் விசுவாச ஆண்டு மற்றும் நற்செய்தி அறிவிப்பைப் புதிய வழிகளில் செய்வது குறித்த உலக ஆயர்கள் மாமன்றத்திற்காக இறைவனின் தாயிடம் செபிக்கும் நோக்கத்தை இந்த லொரேத்தோ திருப்பயணம் கொண்டுள்ளது என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் லொரேத்தோ அன்னைமரியா திருத்தலத்துக்குச் செல்வது இது முதன்முறை அல்ல, அவர் கர்தினாலாக குறைந்தது ஏழு தடவைகளும், பாப்பிறையாக ஒரு தடவையும் சென்றுள்ளார் எனவும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் ஆரம்பமும், நிறைவும் அன்னைமரியாவின் இரண்டு முக்கிய திருவிழாக்களில்தான் இடம்பெற்றன என்பதைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், நாமும் அன்னைமரியாவின் துணையோடு அருளின் ஆண்டையும் ஆயர்கள் மாமன்றத்தையும் செலவழிப்போம் என்று கூறினார்.

5. இஸ்பெயினின் பொருளாதார நெருக்கடி குறித்து காரித்தாஸ் எச்சரிக்கை

செப்.29,2012. இஸ்பெயின் நாட்டில் உதவிக்காகக் காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை மூன்று மடங்காகியிருக்கும்வேளை, அந்நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளைக் களைவதற்கு திட்டவட்டமான நடவடிக்கைகளை அரசு எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது அந்நாட்டுக் கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனம்.
இஸ்பெயின் ஆயர்களின் பிறரன்பு நிறுவனமான காரித்தாஸ், வேலைகள் இழப்பாலும், வருவாய்க் குறைவதாலும், சமுதாய ஆதரவுக் குறைவுபடுவதாலும் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் எனவும் கூறியது.
கடந்த நான்கு ஆண்டுகளில் காரித்தாஸிடமிருந்து உதவி பெற்ற மக்களின் எண்ணிக்கை மூன்று மடங்காகியிருக்கிறது என்றும்,  ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 4 கோடியே 30 இலட்சம் டாலரை இவ்வுதவி நிறுவனம் மக்களுக்கு கொடுத்து வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. 
இதற்கிடையே, இஸ்பெயின் வங்கிகள் தொடர்ந்து இயங்குவதற்கு 5,930 கோடி யூரோக்கள் தேவைப்படுவதாகச் செய்திகள் கூறுகின்றன.

6. இதய நோயால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களைவிட அதிகம்
 
செப்.29,2012. உலகில் கடந்த முப்பது ஆண்டுகளில் இதய நோயால் இறந்துள்ள பெண்களின் எண்ணிக்கை ஆண்களைவிட அதிகம் எனவும், மாரடைப்பு ஏற்பட்ட சில வாரங்களுக்குள்ளே ஆண்களைவிட பெண்களே அதிகம் இறக்கின்றனர் எனவும் மும்பை இதய நோய் நிபுணர் மருத்துவர் பவன் குமார் கூறினார்.
செப்.29, இச்சனிக்கிழமையன்று உலக இதயம் தினம் கடைப்பிடிக்கப்பட்டதையடுத்து இவ்வாறு தெரிவித்த பவன் குமார், இந்தியாவில் மாரடைப்பால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும், நாட்டில் இடம்பெறும் பெண்களின் இறப்புக்களில் 17 விழுக்காட்டுக்கு மாரடைப்பு காரணம் எனவும் கூறினார்.
மேலும், உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில், இதய நோயால் ஏற்படும் இறப்புகள்தான் அதிகம் என்றும், ஆண்டுதோறும் ஒரு கோடியே 73 இலட்சம் பேர் இறக்கின்றனர் என்றும், இதய நோய்களில் 80 விழுக்காட்டு மாரடைப்புகள் தடுக்கப்படக் கூடியவை என்றும் உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.
மலேரியா, எச்.ஐ.வி., டி.பி., ஆகியவற்றால் ஓராண்டில் 38 இலட்சம் பேர் மட்டுமே இறக்கின்றனர் என்றுரைக்கும் உலக நலவாழ்வு நிறுவனம், உலகில் ஆண்டுக்கு பத்து இலட்சம் குழந்தைகள், பிறக்கும் போதே இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றன எனத் தெரிவிக்கின்றது.
முறையற்ற உணவுப் பழக்கவழக்கம், அதிக நேரப்பணி, உடற்பயிற்சியின்மை, மனஉளைச்சல் போன்றவை இதய நோய்க்கான சாத்தியக் கூறுகளாகும்.

7. செவ்வாயில் நீரோடைகள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன

செப்.29,2012. செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கி ஏழு வாரங்களே கடந்துள்ள நிலையில் நாசாவின் கியூரியாசிட்டி ஆய்வு விண்கலம் பழங்காலத்தில் செவ்வாய்க் கிரகத்தின் தரையில் நீரோடைகள் இருந்ததற்கான ஆதாரங்களைப் பூமிக்கு அனுப்பியுள்ளது.
செவ்வாயின் தரையில் ஊர்ந்து ஆதாரங்களைச் சேகரித்துவரும் கியூரியாசிட்டி விண்கலம் அனுப்பி வைத்துள்ள படங்களில் சரளைக் கற்களும் மணலும் கலந்து உருவான பாறைப் படிமங்களும் காணப்படுகின்றன.
இந்தப் பாறைப் படிமங்களில் காணப்படும் உருண்டை வடிவான குறுணிக் கற்களின் அளவையும் தன்மையையும் பார்க்கும்போது அவை நீரோட்டத்தால் வந்துள்ளதைக் காட்டுவதாக இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.
செவ்வாயின் தரையில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் காணப்பட்டுள்ள இந்த நீரோட்டங்கள் நீண்டகாலத்துக்கு நிலைத்து இருந்திருக்கலாம் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு நாசா ஆய்வு மையத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவியலாளர்கள் கூறினர்.
பல்லாயிரம் மில்லியன் ஆண்டுகளாக இந்த நீரோட்டங்கள் செவ்வாயின் தரையில் நிலைத்து இருந்திருக்கலாம் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

8. இந்தியாவில் ஓராண்டில் 4 கோடிக்கு மேற்பட்டோர் இணையதளக் குற்றங்களால் பாதிக்கப்படுகின்றனர்

செப்.29,2012. இந்தியாவில் கடந்த 12 மாதங்களில் ஏறக்குறைய 4 கோடியே 20 இலட்சம் பேர் இணையதளக் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதனால் ஏறத்தாழ 44,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று Norton Cybercrime அமைப்பின் ஆய்வறிக்கை கூறுகிறது.
இணையதளக் குற்றங்களால் உலக அளவில் 11,000 கோடி டாலர்வரை இழப்பு ஏற்பட்டுள்ளது எனக்கூறும் அந்த அறிக்கை, இந்தியாவில் இணையதளத்தைப் பயன்படுத்தும் வயதுவந்தோரில் 66 விழுக்காட்டினர் தங்கள் வாழ்நாளில் இணையதளக் குற்றங்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கிறது.
இணையதளத்தைப் பயன்படுத்தும் வயதுவந்தோரில், ஒரு நாளைக்கு 1,15,000 பேர் வீதமும், அதாவது ஒரு நிமிடத்துக்கு 80 பேர் வீதமும் இணையதளக் குற்றங்களால் பாதிக்கப்படுகின்றனர் எனவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
மேலும், இந்தியாவில் 83 விழுக்காட்டினர் இணையதளக் குற்றங்கள் குறித்து அறிந்திருக்கவில்லை என்று மாநில தலைமை தகவல் ஆணையர் ஸ்ரீபதி கூறினார்.
சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரியின் பல்கலைக்கழக மானியக்குழுவும், காலர் சொல்யூஷன் தனியார் அமைப்பும் இணைந்து இணையதள குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து நடத்திய இரண்டு நாள் கருத்தரங்கில் பேசிய ஸ்ரீபதி இதனைத் தெரிவித்தார்.



No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...