1. திருத்தந்தை : கிறிஸ்தவம் ஒரு மரம், அது என்றும் இளமையானது
2. திருத்தந்தை : நற்செய்தியின் மகிழ்ச்சியை நம்மோடு நாம் சுமந்து செல்கிறோம்
3. நைஜரீயாவில், நீதியுடன்கூடிய அமைதி ஏற்படுவதற்கு மாமன்றத் தந்தையர் வலியுறுத்தல்
4. சென்னை-மயிலைப் பேராயர் : மக்கள் தாங்கள் வாழும் சூழல்களில் இயேசுவைக் கண்டுணருவதற்கு உதவிகள் தேவை
5. இஸ்தான்புல் அனைத்துலக கருத்தரங்கில் திருப்பீடம்
6. தலத்திருஅவைகளில் விசுவாச ஆண்டு
7. ஐரோப்பிய சமுதாய அவைக்கு நொபெல் அமைதி விருது 2012
8. குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்பட ஐ.நா. அழைப்பு
9. இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதிலிருந்து இந்தியா பின்வாங்காது
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : கிறிஸ்தவம் ஒரு மரம், அது என்றும் இளமையானது
அக்.12,2012. கிறிஸ்தவம் ஒரு மரம், அது எப்பொழுதும் வைகறைப்பொழுதாக இருக்கின்றது, அது என்றும் இளமையானது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இவ்வியாழனன்று இடம்பெற்ற விசுவாச ஆண்டுத் தொடக்கத் திருப்பலியில் கலந்து கொண்ட உலக ஆயர் பேரவைகளின் தலைவர்கள், இரண்டாம்
வத்திக்கான் பொதுச்சங்கத்தில் கலந்து கொண்ட தந்தையர்கள் என 120 பேரை
இவ்வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து நன்றி தெரிவித்து நிகழ்த்திய
உரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் தீர்மானங்கள் எல்லாருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றதா என, இப்பொதுச்சங்கம் தொடங்கியதன் இந்த ஐம்பதாம் ஆண்டுக் கொண்டாட்டங்களையொட்டி யாரும் கேள்வி எழுப்பினால், இப்பொதுச்சங்கத்தைத்
தொடங்கி வைத்த அருளாளர் திருத்தந்தை 23ம் அருளப்பர் அன்று கூறியதே அவர்கள்
கேள்விக்குப் பதிலாக இருக்கும் என்றும் கூறினார் திருத்தந்தை.
கிறிஸ்தவம், ஏதோ கடந்த காலங்களின் ஒன்று என்றோ அல்லது அது பின்னோக்கி உள்ளது என்றோ நோக்கப்படக் கூடாது, ஏனெனில் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர், கிறிஸ்தவம்
என்றும் இளமையானது என்று அருளாளர் 23ம் அருளப்பர் ஐம்பது ஆண்டுகளுக்கு
முன்னர் கூறியதை எடுத்துரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கிறிஸ்தவம், நித்திய கடவுளின் பிரசன்னத்தால் குறிக்கப்பட்டுள்ளது, காலம் நிறைவுற்றபோது அது உலகில் நுழைந்தது, அது ஒவ்வொரு காலத்திலும் பிரசன்னமாய் இருக்கின்றது, ஏனெனில் ஒவ்வொரு காலமும் கடவுளின் படைப்பின் வல்லமையிலிருந்தும், அவரது “இன்றைய” நித்தியத்திலிருந்தும் மலர்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
தூய ஆவி திருஅவைக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த அருளின் காலமாக இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் இருந்தது, கடவுளின்
அன்புச்சுடரை ஒவ்வொரு மனிதரின் இதயத்திலும் கொண்டுவர வேண்டியது
இக்காலத்தில் மிகவும் முக்கியமானது என்றும் திருத்தந்தை எடுத்துச்
சொன்னார்.
இவ்வியாழன்
திருவழிபாட்டில் பங்குகொண்ட ஏறக்குறைய 500 திருஅவைத் தலைவர்களுடன்
சேர்ந்து இவ்வெள்ளிக்கிழமை மதிய உணவு அருந்தினார் திருத்தந்தை 16ம்
பெனடிக்ட்.
2. திருத்தந்தை : நற்செய்தியின் மகிழ்ச்சியை நம்மோடு நாம் சுமந்து செல்கிறோம்
அக்.12,2012. நற்செய்தியின் மகிழ்ச்சியை நம்மோடு நாம் சுமந்து செல்வதால், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நாம் மகிழ்ச்சி அடைந்தது போலவே இன்றும் மகிழ்ச்சி அடையலாம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இவ்வியாழனன்று
ஆரம்பித்த விசுவாச ஆண்டைக் கொண்டாடும் விதமாக இத்தாலிய கத்தோலிக்க கழகம்
மற்றும் உரோம் மறைமாவட்டம் இணைந்து வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில்
வியாழன் மாலை நடத்திய செபவழிபாடு மற்றும் மெழுகுதிரி ஊர்வலத்தில் கலந்து
கொண்ட ஆயிரக்கணக்கான விசுவாசிகளை இரவு 9 மணிக்குத் தனது அறையின் சன்னல்
வழியே வாழ்த்திப் பேசிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
வியக்கத்தக்க, கனிவான மற்றும் இறைவாக்குத்தன்மை கொண்ட அருளாளர் திருத்தந்தை 23ம் அருளப்பர், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதே சன்னல் வழியாகத் தோன்றி, மறக்கமுடியாத, முழுவதும் கவிதைநயம் கொண்ட, நன்மைத்தனம் நிரம்பிய மற்றும் இதயத்தின் வார்த்தைகளை நம்மிடம் பேசினார் என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கடந்த பல ஆண்டுகளாக நம் ஆண்டவரின் திராட்சைத் தோட்டத்தில் முரண்பாடுகளைக் கண்டு வருகிறோம், தூய பேதுருவின் படகில் பயனற்ற மீன்களும் இருந்தன, திருஅவையிலும் மனிதப் பலவீனங்கள் இருக்கின்றன என்றுரைத்தார் திருத்தந்தை.
திருஅவையின் கப்பல் வலிமையான புயல் அலைகளில் பயணம் செய்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது,
கடவுள் தூங்குகிறார் மற்றும் கடவுள் நம்மை மறந்து விட்டார் என்றுகூட சில
நேரங்களில் நினைக்கும் அளவுக்கு அப்புயல்கள் நம்மை இட்டுச்சென்றுள்ளன
என்றும் கூறினார் திருத்தந்தை.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அருளாளர் திருத்தந்தை 23ம் அருளப்பர், நவீன உலகுக்கு ஏற்றதுபோல் மாற்ற விரும்பினார், இயேசு கிறிஸ்து மாறாதவர் என்பதால் அவரது முயற்சி இக்காலத்துக்கும் ஏற்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
3. நைஜரீயாவில், உரையாடல் வழியாக நீதியுடன்கூடிய அமைதி ஏற்படுவதற்கு மாமன்றத் தந்தையர் வலியுறுத்தல்
அக்.12,2012.
கிறிஸ்தவ விசுவாசத்தைப் பரப்புவதற்கான புதிய நற்செய்திப்பணி என்ற
தலைப்பில் வத்திக்கானில் நடைபெற்றுவரும் 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின்
ஏழாவது பொது அமர்வு இவ்வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்குச் செபத்துடன்
ஆரம்பமானது.
மெக்சிகோவின் Guadalajara பேராயர் கர்தினால் Francisco ROBLES ORTEGA தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் 252 மாமன்றத் தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
இப்பொது அமர்வில் முதலில் பேசிய உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலர் பேராயர் நிக்கொலா எத்ரோவிச், கடும் துன்பங்களை எதிர்கொண்டுவரும் நைஜரீய ஆயர் பேரவைக்கு இம்மாமன்றத் தந்தையர் சார்பாகத் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்தார்.
ஆப்ரிக்க நாடான நைஜரீயாவில், குறிப்பாக அந்நாட்டின் வடபகுதியில் ஒழுங்கற்ற நிலையினால் வன்முறைகள் வெடிக்கின்றன என்றுரைத்து, அந்நாட்டில்
உரையாடல் வழியாக நீதியுடன்கூடிய அமைதியை ஊக்குவிக்கும் முயற்சிகள்
எடுக்கப்படுமாறு இம்மான்றத் தந்தையர் பெயரால் கேட்டுக் கொள்வதாகத்
தெரிவித்தார் பேராயர் எத்ரோவிச்.
மதங்கள், சில குழுக்கள் மற்றும் கட்சிகளின் நோக்கத்துக்காகத் தவறாகப் பயன்படுத்தப்படாமல், அவை புரிந்துகொள்ளுதல், ஒத்துழைப்பு, அமைதி ஆகியவற்றுக்காகப் பயன்படுத்தப்படுமாறும் அவர் வலியுறுத்தினார்.
4. சென்னை-மயிலைப் பேராயர் : மக்கள் தாங்கள் வாழும் சூழல்களில் இயேசுவைக் கண்டுணருவதற்கு உதவிகள் தேவை
அக்.12,2012.
இவ்வெள்ளிக்கிழமை காலையில் இடம்பெற்ற 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின்
ஏழாவது பொது அமர்வில் உரையாற்றிய சென்னை-மயிலைப் பேராயர் மலையப்பன்
சின்னப்பா, மக்கள் தாங்கள் வாழும் சூழல்களில் இயேசுவைக் கண்டுணருவதற்கு உதவிகள் செய்யப்படுமாறு கேட்டுக் கொண்டார்.
தனிப்பட்ட மனிதர்கள் கடவுளை அடைவதற்கு இந்திய மரபில் Mangas(வழிகள்), grana manga (அறிவு), bakati manga (கடவுளன்பு), kunma manga (செயல்முறை) ஆகிய நான்கு வழிகள் இருக்கின்றன, இவற்றுள் ஒன்றைப் பயன்படுத்திக் கடவுளை அடைய முடியும் எனவும் பேராயர் சின்னப்பா கூறினார்.
மேலும், பல்சமயச் சூழல் கொண்ட இந்தியாவில் உரையாடலின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்த பேராயர் சின்னப்பா, ஒவ்வொரு மதத்திலும் ஒளியின் அடையாளம் இருக்கின்றது, பாஸ்காப் பேருண்மையில் பங்குதாரர்களாக ஆவதற்கு தூய ஆவி ஒவ்வொருவருக்கும் வாய்ப்புக்களை வழங்குகிறார் எனவும் கூறினார்.
கடவுளோடு உறவு கொள்வதற்குத் தியானம் வழியாகவும் அவ்வுறவை ஏற்படுத்தலாம் என்றும், சமுதாயத்தில் நசுக்கப்பட்டும் பாகுபடுத்தப்பட்டும் இருக்கின்ற பழங்குடிகள், தலித்துக்கள், இன்னும்
மற்ற இனங்களின் ஏழைகளை முன்னேற்றுவது புதிய நற்செய்திப்பணித் திட்டத்தில்
முதலிடம் வகிக்க வேண்டுமென்றும் சென்னை-மயிலைப் பேராயர் சின்னப்பா கேட்டுக்
கொண்டார்.
இவ்வெள்ளிக்கிழமை காலையில் இடம்பெற்ற ஏழாவது பொது அமர்வில் 23 மாமன்றத்தந்தையர் உரையாற்றினர்.
5. இஸ்தான்புல் அனைத்துலக கருத்தரங்கில் திருப்பீடம்
அக்.12,2012. “நீதியும் புதிய உலக ஒழுங்கமைவை அமைத்தலும்”
என்ற தலைப்பில் துருக்கி நாட்டுத் தலைநகர் இஸ்தான்புலில்
இச்சனிக்கிழமையன்று தொடங்கும் இரண்டு நாள் அனைத்துலக கருத்தரங்கில்
திருப்பீடமும் கலந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல அரபு நாடுகளில் புரட்சிகள் இடம்பெற்றுள்ள சூழலில், நீதி, சமத்துவம், பிரதிநிதித்துவம், மாண்பு
ஆகியவைகள் உலகில் அர்த்தமுள்ள முறையில் இடம்பெறும் வழிகள்
இக்கருத்தரங்கில் கலந்து பேசப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி நாட்டுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Antonio Lucibello, திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் செயலர் அருள்பணி Miguel Ángel Ayuso Guixot, இன்னும் பிற கிறிஸ்தவசபைகள், சமயத் தலைவர்கள், அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், கலைஞர்கள், வணிகர்கள் எனப் பலதரப்பட்ட நிலையினர் இதில் கலந்து கொள்வார்கள்.
நீதி, உலக ஒழுங்குமுறை, அரசியல், வரலாறு, பொருளாதாரம், கலை எனப் பல்வேறு தலைப்புகள் இதில் விவாதிக்கப்படும்.
6. தலத்திருஅவைகளில் விசுவாச ஆண்டு
அக்.12,2012. இவ்வியாழனன்று தொடங்கிய விசுவாச ஆண்டை இந்தியா, மியான்மார், வியட்நாம் என உலகின் அனைத்துத் தலத்திருஅவைகளும் மிகச் சிறப்பாகத் தொடங்கியுள்ளன.
புதுடெல்லி
இயேசுவின் திருஇதயப் பேராலயத்தில் கொடியேற்றித் திருப்பலி நிகழ்த்தி இந்த
விசுவாச ஆண்டைத் தொடங்கி வைத்த டெல்லி பேராயர் வின்சென்ட் கொன்செஸ்ஸாவோ, இந்த ஆண்டில் இன்னும் நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்ந்து நமது விசுவாசத்தை மற்றவரோடு பகிர்ந்து கொள்வோம் எனக் கூறினார்.
இதேபோல் இந்தியாவின் பல நகரங்களில் இந்த விசுவாச ஆண்டு ஆடம்பரமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மியான்மாரில் இந்த விசுவாச ஆண்டைத் தொடங்கி வைத்த யான்கூன் பேராயர் சார்லஸ் மௌங் போ, குடும்பங்களில் விவிலியச் செபங்களுக்கும் இளையோர்க்கு கல்வி வழங்குவதற்கும் முக்கிய கவனம் செலுத்தப்படும் என்று கூறினார்.
இந்த
விசுவாச ஆண்டில் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத் தீர்மானங்கள்
நடைமுறைப்படுத்தவதற்கு வியட்நாம் தலத்திருஅவை கவனம் செலுத்தும் என்று
அந்நாட்டு ஆயர் பேரவை கூறியது.
7. ஐரோப்பிய சமுதாய அவைக்கு நொபெல் அமைதி விருது 2012
அக்.12,2012. EU என்ற ஐரோப்பிய சமுதாய அவை, ஐரோப்பாவில் அமைதியை ஊக்குவிப்பதற்கு அறுபது ஆண்டுகளாக ஆற்றிவரும் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக, அந்த அவை 2012ம் ஆண்டுக்கான நொபெல் அமைதி விருதுக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக நார்வே நொபெல் குழு அறிவித்தது.
ஐரோப்பா, போரின் கண்டத்திலிருந்து அமைதியின் கண்டமாக மாறுவதற்கு EU அவை பெரிதும் உதவியுள்ளது என்றும் நார்வே நொபெல் குழு அறிவித்தது.
EU அவை, தனது வரலாற்றில் தற்போது கடும் நிதிநெருக்கடிகளையும் சமூகப் பதட்டநிலைகளையும் எதிர்நோக்கினாலும், அமைதி, ஒப்புரவு, சனநாயகம், மனித உரிமைகள் ஆகியவற்றுக்கு இந்த அவை கடந்த அறுபது ஆண்டுகளாக உழைத்து வருவதைப் பாராட்டும் விதமாக இவ்விருது வழங்கப்படுவதாக, நார்வே நொபெல் குழுவின் தலைவர் Thorbjoern Jagland கூறினார்.
மேலும், இவ்விருது பற்றிய தனது கருத்தை வெளியிட்ட EU அவைத் தலைவர் Jose Manuel Barroso, EU அவையின் 50 கோடி குடிமக்களுக்கும் இந்த அமைதி விருது மிகுந்த மதிப்பைக் கொடுத்துள்ளது என்று கூறினார்.
இன்னும், இவ்வாண்டுக்கான நொபெல் இலக்கிய விருது சீன எழுத்தாளர் மோ யானுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
8. குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்பட ஐ.நா. அழைப்பு
அக்.12,2012. குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்படுவதற்கும், இந்தக்
கொடுமையான பழக்கத்திலிருந்து சிறுமிகளைப் பாதுகாப்பதற்கும் சிறந்த
யுக்திகளில் ஒன்றாக கல்வி இருக்கின்றது என ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்
கூறினார்.
இவ்வியாழனன்று முதல் அனைத்துலகச் சிறுமிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன், சிறுமிகள், மணப்பெண்களாக இல்லாமல் சிறுமிகளாக இருப்பதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோம் எனக் கேட்டுக்கொண்டார்.
இன்று உலகில் 18 வயதுக்குட்பட்ட ஏறக்குறைய 7 கோடிப் பெண்கள் திருமணமானவர்கள் என ஐ.நா. புள்ளிவிபரம் ஒன்று கூறுகிறது.
9. இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதிலிருந்து இந்தியா பின்வாங்காது
அக்.12,2012. இலங்கையில் தமிழர்கள் சுயமரியாதையுடனும், பாதுகாப்புடனும்
வாழ்வதற்கு உதவ வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து இந்தியா பின்வாங்காது
என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தங்களிடம் உறுதியளித்ததாக தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தர் தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன்பு, இலங்கை அரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ டெல்லியில் இந்தியப் பிரதமருடன் ஆலோசனை நடத்திச் சென்ற பிறகு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இந்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது.
இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது, மீள்குடியேற்றம், இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நிலவும் முரண்பாடுகள், இந்தியாவின்
பங்களிப்பு உட்பட பல்வேறு தலைப்புகள் இவ்வியாழக்கிழமை மாலை பிரதமர்
மன்மோகன் சிங்குடன் நடத்தப்பட்ட சந்திப்பில் விவாதிக்கப்பட்டன.
இலங்கைப் பிரச்சனையில் இந்தியா பொறுமை காத்து வருவதாகவும், அந்தப் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தங்களிடம் கூறியதாகவும் சம்பந்தர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment