Wednesday, 24 October 2012

Catholic News in Tamil - 23/10/12

1. 13வது உலக ஆயர்கள் மாமன்றம் : 19வது பொது அமர்வு

2. திருப்பீடப் பிரதிநிதி : சீனாவுக்கும் வத்திக்கானுக்கும் இடையே உறவு கடினமாக இருப்பதற்கு வெளியிலிருந்து வரும் சக்திகளே காரணம்

3. சீன ஆயர் Junqiu : நம்பிக்கை ஆண்டு, நற்செய்தியைத் துணிவுடன் வாழ அழைக்கிறது

4. சிரியா ஆயர் : அனைத்து ஆலயங்களும் இழிவுபடுத்தப்பட்டுள்ளன

5. இந்திய ஆயர் பேரவை மனித உரிமைகள் குறித்த நூலை வெளியிட்டுள்ளது

6. பங்களாதேஷில் ஒரு கத்தோலிக்க அருள்தந்தைக்கு விருது

7. கென்யா : மதம் பாராது நேர்மையான தலைவர்களைத் தேர்ந்தெடுக்கத் திருஅவைத் தலைவர் ஒருவர் வலியுறுத்தல்

8. லாவோஸ் கிறிஸ்தவர்கள் பூர்வீகமதத்தைக் கடைப்பிடிப்பதற்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர்

9. தென் கொரியாவில், வெப்பநிலை மாற்றம் குறித்த ஐ.நா.வின் புதிய நிறுவனம்

------------------------------------------------------------------------------------------------------

1. 13வது உலக ஆயர்கள் மாமன்றம் : 19வது பொது அமர்வு

அக்.23,2012. புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் 19வது பொது அமர்வு திருத்தந்தையின் முன்னிலையில், இம்மாமன்றத் தலைவர் பிரதிநிதி கர்தினால் Laurent MONSENGWO PASINYAவின் தலைமையில் இச்செவ்வாய் காலை 9 மணிக்குத் தொடங்கியது.
258 மாமன்றத் தந்தையர் கலந்து கொண்ட இந்தப் பொது அமர்வில், முதலில் சிரியாவுக்குச் செல்லவிருக்கும் மாமன்றத் தந்தையர் பிரதிநிதி குழு குறித்து அறிவித்தார் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே.
சிரியாவில் இடம்பெறும் சண்டை நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் காரணத்தினால் அந்நாட்டுக்குச் சென்று திருத்தந்தை மற்றும் மாமன்றத் தந்தையரின் ஒருமைப்பாட்டுணர்வை விரைவில் தெரிவிக்கவிருந்த இம்மாமன்றப் பிரதிநிதிகள் குழு, ஏற்கனவே திட்டமிட்டபடி செல்லாது, மாறாக, இம்மான்றம் முடிந்த பின்னர் செல்லும், இன்னும், இந்தப் பிரதிநிதிகள் குழுவிலும் மாற்றம் இருக்கும் என்று கர்தினால் பெர்த்தோனே அறிவித்தார்.
மேலும், கடந்த வெள்ளிக்கிழமையன்று காங்கோ குடியரசில் கடத்தப்பட்ட Anselme Wasukundi, Jean Ndulani, Edmond Kisughu ஆகிய மூன்று Assumptionist துறவியர் விரைவில் விடுதலை செய்யப்படுமாறு அழைப்பு விடுத்த, உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலர் பேராயர் நிக்கொலா எத்ரோவிச், இக்கடத்தலால் வருந்தும் காங்கோ குடியரசின் ஆயர் பேரவைக்கு இம்மாமன்றத் தந்தையரின் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்தார்.
பொது அமர்வுகளிலும் சிறிய குழுக்களிலும் மாமன்றத் தந்தையர் பரிந்துரைத்துள்ள 326 பரிந்துரைகளில் 57 பரிந்துரைகள் இச்செவ்வாய் காலை பொது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டன.

2. திருப்பீடப் பிரதிநிதி : சீனாவுக்கும் வத்திக்கானுக்கும் இடையே உறவு கடினமாக இருப்பதற்கு வெளியிலிருந்து வரும் சக்திகளே காரணம்

அக்.23,2012. சீனாவுக்கும் வத்திக்கானுக்கும் இடையே உறவு கடினமாக இருப்பதற்கு இவ்விரு நாடுகளின் அடிப்படையான இயல்பு காரணமல்ல, மாறாக, வெளியிலிருந்து வரும் சக்திகளே காரணம் என, தாய்வானுக்கானத் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் Paul Russell தெரிவித்தார்.
தாய்வானுக்கும் திருப்பீடத்துக்கும் இடையே அரசியல் உறவு உருவாக்கப்பட்டதன் 70ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் இவ்வாறு கூறினார் பேராயர் Russell.
தாய்பேய் அமலமரி பேராலயத்தில் இச்சனிக்கிழமையன்று இடம்பெற்ற  இந்நிகழ்வில் தாய்பேய் பேராயர் John Hung, தாய்வான் அரசின் இரண்டு துணை அமைச்சர்கள், 30 குருக்கள் மற்றும் 300 விசுவாசிகள் கலந்து கொண்டனர்.
ஐரோப்பாவில் தாய்வானுடன் அரசியல் உறவைக் கொண்டுள்ள ஒரேயொரு நாடு வத்திக்கான் ஆகும். இந்த உறவை, சீனக் கம்யூனிச அரசு விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் 1949ம் ஆண்டில் மாவ் சே துங்கின் கம்யூனிச கட்சி ஆட்சியைக் கைப்பற்றியபோது, அந்நாடு தாய்வானைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர விரும்பியது. அதனால் பன்னாட்டு அளவில் தாய்வானைத் தனிமைப்படுத்தவும் சீனா முயற்சித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

3. சீன ஆயர் Junqiu : நம்பிக்கை ஆண்டு, நற்செய்தியைத் துணிவுடன் வாழ அழைக்கிறது

அக்.23,2012. நாம் எதை நம்புகிறோமோ அதைப் போதித்து அதை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதே இந்த நம்பிக்கை ஆண்டில் நமக்கு உண்மையிலேயே தேவைப்படுகின்றது என்று, சீன ஆயர் Gan Junqiu கூறியுள்ளார்.
இம்மாதம் 11ம் தேதி தொடங்கியுள்ள நம்பிக்கை ஆண்டுக்கென மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள Guangzhou ஆயர் Junqiu, நற்செய்தி அறிவிப்பாளருக்கு இயேசுவே முன்மாதிரிகை என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகில் இயேசுவின் பிரசன்னத்தின் அடையாளமாகத் திருஅவை இருக்கின்றது என்றுரைத்துள்ள சீன ஆயர் Junqiu, 16 மற்றும் 17ம் நூற்றாண்டுகளில் சீனாவில் மறைப்பணித்தளங்களை உருவாக்கிய இத்தாலிய இயேசு சபை அருள்தந்தை Matteo Ricci, சீனக் கலாச்சாரத்தோடு ஒத்துவரும் வகையில் நற்செய்தியை அறிவித்ததையும் விளக்கியுள்ளார்.

4. சிரியா ஆயர் : அனைத்து ஆலயங்களும் இழிவுபடுத்தப்பட்டுள்ளன

அக்.23,2012. சிரியாவில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் அலெப்போ, ஓர் ஒழுங்கற்ற மற்றும் பெருங்குழப்ப நிலையில் உள்ளது என்று அந்நகரின் கல்தேயரீதி இயேசு சபை ஆயர் Antoine Audo, இலண்டன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
குண்டுவெடிப்பு அச்சுறுத்தல்களுக்குப் பயந்து கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறிவிட்டனர், தங்களது வாழ்வாதாரங்களை இழந்துவிட்டனர், பள்ளிகளும் மருத்துவமனைகளும் பொதுநலச்சேவை மையங்களும் இயங்கவில்லை என்று ஆயர் Audo மேலும் கூறினார்.
80 விழுக்காட்டு மக்களுக்கு வேலை இல்லை, வேறு வழியில்லாமல் அவர்கள் வீடுகளில் இருக்கின்றனர், விலைவாசி உயர்வு மற்றும் ஊதியம் இல்லாததால் வறுமைநிலை மேலும் மோசமடைந்து வருகின்றது என்றும் ஆயர் கூறினார்.
சிரியாவில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் இரண்டாவது பெரிய நகரமான ஹோம்ஸில் எல்லா ஆலயங்களும் இழிவுபடுத்தப்பட்டுள்ளன என்றுரைத்த ஆயர் Audo, அச்சுறுத்தலினால் விசுவாசிகள் தங்களது வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர் என்று தெரிவித்தார்.

5. இந்திய ஆயர் பேரவை மனித உரிமைகள் குறித்த நூலை வெளியிட்டுள்ளது

அக்.23,2012. திருஅவையும் மனித உரிமைகளும் என்ற நூலை, இந்திய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையத்தின் தலைவர் தூத்துக்குடி ஆயர் யுவான் அம்புரோஸ் திருச்சியில் வெளியிட்டுள்ளார்.
இந்திய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையமும், தமிழக சமூகசேவை அமைப்பும் சேர்ந்து, இந்தியாவில் நீதி மற்றும் அமைதி விவகாரங்கள் குறித்த ஒருநாள் கலந்துரையாடலை திருச்சியில் நடத்தியது. அச்சமயத்தில் இந்த நூல் வெளியிடப்பட்டது.
மனித உரிமைகள் குறித்த இந்நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ஆயர் யுவான் அம்புரோஸ், இறைமக்கள் மனித உரிமைகளை ஊக்குவித்து அவற்றுக்காகப் போராடுவதற்குத் தங்களை அர்ப்பணிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இது வெளியிடப்பட்டுள்ளது எனக் கூறினார்.
ஐ.நா. மனித உரிமைகள் சாசனம் அறிவிக்கப்பட்டதன் 25ம் ஆண்டு 2011ம் ஆண்டில் கடைப்பிடிக்கப்பட்டபோது, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை இந்த நூலை முதலில் வெளியிட்டது. இந்தத் திருப்பீட அவை இந்த நூலை இந்தியாவில் வெளியிடுவதற்கு அனுமதியும் வழங்கியது என ஆயர் யுவான் அம்புரோஸ் தெரிவித்தார்.
இந்தியாவில் இந்த நூல் கிடைப்பதற்கு வழிசெய்த, இந்திய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையச் செயலர் அருள்பணி சார்லஸ் இருதயம் அவர்களுக்கு நன்றியும் சொன்னார் தூத்துக்குடி ஆயர் யுவான் அம்புரோஸ்.

6. பங்களாதேஷில் ஒரு கத்தோலிக்க அருள்தந்தைக்கு விருது

அக்.23,2012. 1971ம் ஆண்டில் பங்களாதேஷ் நாடு உருவாகுவதற்குச் சிறப்புப் பணியாற்றிய அருள்தந்தை Marino Rigonக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது அந்நாட்டு அரசு.
பங்களாதேஷ் அரசு வழங்கியுள்ள, பங்களாதேஷ் விடுதலைப் போரின் சிறப்பு மற்றும் விடுதலைப் போரின் நண்பர்கள் என்ற விருதைப் பெற்றுள்ள 61 வெளிநாட்டவரில், சவேரியன் மறைபோதகச் சபையைச் சார்ந்த அருள்தந்தை Rigonம் ஒருவர்.
டாக்காவில் இடம்பெற்ற இந்த விழாவில் பங்களாதேஷ் அரசுத்தலைவர் Zillur Rahman, பிரதமர் Sheikh Hasina ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பங்களாதேஷில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மறைப்பணியாற்றியுள்ள அருள்தந்தை Rigon, அந்நாட்டின் Gopalgonj லுள்ள Baniarchar கத்தோலிக்க ஆலயத்தில், 1971ம் ஆண்டின் விடுதலைப் போரில் போராடியவர்கள் மற்றும் அகதிகளுக்கு உதவியுள்ளார்.
இந்நிகழ்வில் பேசிய ஓர் இந்து விடுதலைப் போராட்ட வீரர், வெளிநாட்டவரான அருள்தந்தை Rigonனின் உயிருக்கு அச்சுறுத்தல் வந்தபோதிலும் அவர் அகதிகளுக்கு உணவும் உறைவிடமும் வழங்கி, காயம்பட்ட விடுதலைப் போராட்ட வீரர்களுக்குச் சிகிச்சை அளித்தார் என்று கூறினார்.

7. கென்யா : மதம் பாராது நேர்மையான தலைவர்களைத் தேர்ந்தெடுக்கத் திருஅவைத் தலைவர் ஒருவர் வலியுறுத்தல்

அக்.23,2012. செல்வம், இனம், மதம் ஆகியவற்றைக் கடந்து நேர்மையான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்குத் தேர்தல் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கின்றது என்று கென்யப் பல்சமய குருக்கள் பணிக்குழுத் தலைவர் அருள்பணி Wilybard Lagho கூறினார்.
அரசியல் தலைவர்களைத் தெரிந்தெடுப்பது, வாக்காளர்களின் சொந்த ஒருங்கிணைந்த ஆளுமைக்கு வைக்கப்படும் தேர்வு எனவும் அருள்பணி Lagho கூறினார்.
அண்மையில் Mombasaவில் இடம்பெற்ற இனக் கலவரங்களைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் உறவுள்ள அண்டைவீட்டாராக, அமைதியான முறையில் நல்லிணக்கத்துடன் வாழுமாறும் கேட்டுக் கொண்டார். 

8. லாவோஸ் கிறிஸ்தவர்கள் பூர்வீகமதத்தைக் கடைப்பிடிப்பதற்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர்

அக்.23,2012. லாவோஸ் நாட்டில் கிறிஸ்தவர்கள் பூர்வீகமத வழிபாடுகளை நடத்த மறுத்தால் அவர்களின் வீடுகள் அழிக்கப்படும் என்ற அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளதாக பிதெஸ் செய்தி நிறுவனம் கூறியது.
லாவோஸ் நாட்டின் Savannakhet மாநிலத்தின் சில அரசு அதிகாரிகள், Seekaew கிராமத்திலுள்ள கிறிஸ்தவர்களை இவ்வாறு அச்சுறுத்தியிருப்பதாக  பிதெஸ் செய்தி நிறுவனம் மேலும் கூறியது.
"லாவோஸ் சமய சுதந்திரத்துக்கான மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு(HRWLRF) " என்ற அரசு சாரா அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், Seekaew கிராமத்தின் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், அப்பகுதியின் பராம்பரியப் பூர்வீக மத மரபுகளைக் கடைப்பிடித்து, புனித நீரைக் குடிக்குமாறு அக்கிராமத்தின் முதியோரால் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.    

9. தென் கொரியாவில், வெப்பநிலை மாற்றம் குறித்த ஐ.நா.வின் புதிய நிறுவனம்

அக்.23,2012. வெப்பநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்குரிய ஐக்கிய நாடுகள் நிதி நிறுவனத்தின் புதிய செயலகத்தை, தென் கொரியாவில் அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
GCF என்ற இந்தப் புதிய செயலகம், தென் கொரியாவின் பன்னாட்டு வணிக மாவட்டமான Songdoன் Incheonல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தென்னாப்ரிக்காவின் டர்பனில் நடைபெற்ற வெப்பநிலை மாற்றம் குறித்த ஐ.நா. மாநாட்டில் வெப்பநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நிதி உதவிக்கு விண்ணப்பிக்கப்பட்டது.
பொது மற்றும் தனியார் நிறுவனங்களிலிருந்து திரட்டப்படும் நிதியுதவியிலிருந்து இந்த GCF செயலகம், ஏழை நாடுகளுக்கு ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி அமெரிக்க டாலரை வழங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...