1. 13வது உலக ஆயர்கள் மாமன்றம் அக்.07-28
2. வத்திக்கான் காவல்துறை மற்றும் பாதுகாப்புத் துறையினருக்குத் திருத்தந்தை வாழ்த்து
3. அருள்தந்தை லொம்பார்தி : உலக ஆயர்கள் மாமன்றமும் உற்றுக்கேட்டலும்
4. திருத்தந்தையின் பணியாள் பவுலோ கபிரியேலேவுக்கு 18 மாதச் சிறைத் தண்டனை
5. சிட்டகாங் ஆயர் : பங்களாதேஷில் கிறிஸ்தவச் சிறார் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்படுகிறார்கள்
6. இந்தியாவில் ஊழலற்ற திருச்சபையை உருவாக்குவதற்கு கிறிஸ்தவத் தலைவர்கள் முயற்சி
7. உலகுக்கு 17 இலட்சம் ஆசிரியர்கள் தேவை, ஐ.நா.
8. நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு மேலும் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்
9. இந்தியாவில் கல்வித் தரத்தை மேம்படுத்த உலக வங்கி நிதியுதவி
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. 13வது உலக ஆயர்கள் மாமன்றம் அக்.07-28
அக்.06,2012. 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்குகொள்ளவிருக்கும் மாமன்றத் தந்தையர்கள் உள்ளிட்ட 408 பிரதிநிதிகளுடன் இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூட்டுத்திருப்பலி நிகழ்த்தி இந்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தைத் தொடங்கி வைக்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
49 கர்தினால்கள், 7 கீழைரீதிச் சபைத் தலைவர்கள், 71 பேராயர்கள், 120 ஆயர்கள், 86 அருள்பணியாளர்கள், 9 வல்லுனர்கள், 27 பார்வையாளர்கள், 3 மொழி பெயர்ப்பாளர்கள் உட்பட 408 பேர் திருத்தந்தையோடு கூட்டுத்திருப்பலி நிகழ்த்துவார்கள்.
இத்திருப்பலியில் ஜெர்மனியின் புனித பின்ஜென் ஹில்டெகார்டு, இஸ்பெயினின் புனித அவிலா ஜான் ஆகிய இருவரையும் மறைவல்லுனர்கள் என அறிவிப்பார் திருத்தந்தை.
கிறிஸ்தவ விசுவாசத்தைப் பரப்புவதற்கான புதிய நற்செய்திப்பணி என்ற தலைப்பில் இம்மாதம் 7 முதல் 28 வரை நடைபெறவிருக்கும் இந்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தில், சென்னை-மயிலைப் பேராயர் மலையப்பன் சின்னப்பா, இலங்கையின் பதுல்லா ஆயர் ஜூலியன் வின்ஸ்டென் செபஸ்தியான் பெர்னான்டோ உட்பட 39 பேர் ஆசியாவிலிருந்து கலந்து கொள்கின்றனர்.
பாரம்பரியக் கிறிஸ்தவ நாடுகளில் நற்செய்தியைப் புதிய வழிகளில் அறிவிப்பதற்குச் செயல்திட்டங்களை உருவாக்கும் நோக்கம் கொண்ட இந்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஒவ்வொரு செயலையும் செபம் துணைநின்று வழிநடத்தும் என்று, உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலர் பேராயர் நிக்கோலா எத்ரோவிச் அறிவித்தார்.
இந்த ஆயர் மாமன்றத்திற்காக ஒவ்வொரு கிறிஸ்தவரும் செபிக்குமாறும் கேட்டுள்ளார் பேராயர் எத்ரோவிச்.
இந்த மாமன்றத்தின்போது எல்லாப் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் 23 பொது அமர்வுகளும், எட்டு சிறிய அமர்வுகளும் இடம்பெறும். இந்தச் சிறிய அமர்வுகள் மாமன்றத்தின் 12 அதிகாரப்பூர்வ மொழிகளில் நடைபெறும் எனவும் பேராயர் எத்ரோவிச் கூறினார்.
இம்மாதம் 28ம் தேதி இந்த மாமன்றத் தந்தையரோடு கூட்டுத்திருப்பலி நிகழ்த்தி இந்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தை நிறைவு செய்வார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
2. வத்திக்கான் காவல்துறை மற்றும் பாதுகாப்புத் துறையினருக்குத் திருத்தந்தை வாழ்த்து
அக்.06,2012. பணியில் நேர்மை, பற்றுறுதி, தியாகம் ஆகிய பண்புகளுடன் புனித பேதுருவின் வழிவருபவர்க்குத் தாராள உள்ளத்துடன் பணி செய்துவரும் வத்திக்கான் காவல்துறை மற்றும் பாதுகாப்புத் துறையினருக்குத் தனது நன்றியையும் பாராட்டையும் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Gendarmerie என்ற வத்திக்கான் காவல்துறை மற்றும் பாதுகாப்புத் துறையினர் இவ்வெள்ளியன்று தங்களது விழாவைச் சிறப்பித்ததையொட்டி அவர்களுக்கு தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பினார் திருத்தந்தை.
திருத்தந்தையின் இச்செய்தியை, திருப்பீடச் செயலகத்தின் நேரடிச் செயலர் பேரருட்திரு ஆஞ்சலோ பெச்சு (Angelo Becciu) வாசித்தார்.
மேலும், திருத்தந்தையின் அறையிலிருந்து அவரது கடிதங்களையும் மற்றும்பிற இரகசிய ஆவணங்களையும் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ள, திருத்தந்தைக்கு உணவு பரிமாறுதல், அறையைப் பராமரித்தல் உட்பட அவருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்துவந்த பவுலோ கபிரியேலே விவகாரத்தில் வத்திக்கான் Gendarmerieவின் பணி குறிப்பிடும்படியானது.
வத்திக்கான் Gendarmerieவின் பாதுகாவலரான அதிதூதர் மிக்கேல் விழா செப்டம்பர் 29ம் தேதியாகும். ஆயினும் இக்காவல்துறையினர் இவ்விழாவை இவ்வெள்ளியன்று சிறப்பித்தனர்.
20க்கும் 25 வயதுக்கும் உட்பட இத்தாலியக் குடியுரிமையுடையவர்கள் வத்திக்கான் Gendarmerieவில் சேர்க்கப்படுகிறார்கள். இவர்கள் குறைந்தது ஈராண்டுகள் இத்தாலியக் காவல்துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. அருள்தந்தை லொம்பார்தி : உலக ஆயர்கள் மாமன்றமும் உற்றுக்கேட்டலும்
அக்.06,2012. உலக ஆயர்கள் மாமன்றம், நம் ஆண்டவரின் தூய ஆவிக்குச் செவிமடுத்து, திருஅவை சரியான பாதையில் முன்னோக்கிச் செல்வதற்கானப் வழிகளைப் பரிந்துரைத்து அவ்வழியில் ஒன்றுசேர்ந்து பயணிக்கச் செய்கிறது என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்து கொள்பவர்கள் தங்களது கருத்துக்களைச் சொல்வதற்கு மட்டுமல்லாமல், மற்றவர் பேசுவதைக் கேட்பதற்காகவும் வந்துள்ளார்கள் என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
மற்றவர் பேசுவதைத் தாழ்மையுடன் உற்றுக் கேடபவர் தூய ஆவியின் பள்ளியில் பங்கு பெறுகிறார் என்றுரைத்த அருள்தந்தை லொம்பார்தி, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்போது இது வியத்தகு முறையில் இடம்பெற்றது என்று கூறினார்.
4. திருத்தந்தையின் பணியாள் பவுலோ கபிரியேலேவுக்கு 18 மாதச் சிறைத் தண்டனை
அக்.06,2012. திருத்தந்தையின் அறையிலிருந்து அவரது கடிதங்களையும் மற்றும்பிற இரகசிய ஆவணங்களையும் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, திருத்தந்தையின் அறையைப் பராமரித்துவந்த பணியாள் பவுலோ கபிரியேலேவுக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு வழக்கு விசாரணைகளுக்கான செலவையும் அவர் வழங்குமாறு இச்சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கபிரியேலேவுக்கு மூன்றாண்டுகள் தண்டனை வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டிருந்தாலும், இவர் இதற்கு முன்னர் எந்தக் குற்றத்தையும் தவறான செயல்களையும் செய்ததாகப் புகார்கள் இல்லாததால் தற்போது ஓராண்டும் 6 மாதங்களும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார் என நிருபர் கூட்டத்தில் கூறினார் திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை லொம்பார்தி.
வத்திக்கான் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணை முழுவதும் தனித்தும் வேகமாகவும் நடத்தியிருப்பதைப் பாராட்டிப் பேசிய அருள்தந்தை லொம்பார்தி, இது கருணையும் நீதியும் நிறைந்த தீர்ப்பு என்று கூறினார்.
பவுலோ கபிரியேலேவுக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மன்னிப்பு வழங்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார் அருள்தந்தை லொம்பார்தி.
5. சிட்டகாங் ஆயர் : பங்களாதேஷில் கிறிஸ்தவச் சிறார் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்படுகிறார்கள்
அக்.06,2012. பங்களாதேஷில் பழங்குடிச் சமூகங்களைச் சேர்ந்த கிறிஸ்தவச் சிறார் கடத்தப்பட்டு "madrassas" எனப்படும் முஸ்லீம் பள்ளிகளில் விற்கப்பட்டு மதமாற்றம் செய்யப்படுகிறார்கள் அல்லது மனித வியாபாரிகளிடம் அடிமைகளாக விற்கப்படுகிறார்கள் என்று சிட்டகாங் ஆயர் மோசஸ் கோஸ்தா கூறினார்.
குடும்பங்கள், தங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக மறைந்து வாழ்கின்றனர் என்று ஃபிதெஸ் செய்தி நிறுவனத்திடம் உரைத்த ஆயர் கோஸ்தா, இந்தப் பழங்குடிச் சமூகங்களின் சட்டரீதியான உரிமைகளும் சுதந்திரமும் பாதுகாக்கப்படுவதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்குமாறு அழைப்பு விடுத்தார்.
மேலும், சிட்டகாங் மலைப்பகுதிகளில் திரிபுரா பழங்குடிச் சிறார் இத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது பொதுவான ஒரு செயலாக இருப்பதாகவும், அண்மை மாதங்களில் madrassas பள்ளிகளிலிருந்து ஏறத்தாழ 105 கிறிஸ்தவச் சிறார் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் ஒரு கத்தோலிக்க ஆர்வலர் தெரிவித்தார்.
6. இந்தியாவில் ஊழலற்ற திருச்சபையை உருவாக்குவதற்கு கிறிஸ்தவத் தலைவர்கள் முயற்சி
அக்.06,2012. இந்தியாவில் ஊழலற்ற திருச்சபையையும் சமூகத்தையும் உருவாக்குவதற்கான வழிகளை ஆய்வு செய்யும் நோக்கத்தில் பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்த ஏறக்குறைய 70 தலைவர்கள் பங்களூருவில் இரண்டு நாள் கூட்டம் ஒன்றை நடத்தினர்.
“இந்தியத் திருச்சபைகளில் ஊழல்” என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கத்தோலிக்கத் திருஅவை, பிரிந்த கிறிஸ்தவ சபை,ஆர்த்தடாக்ஸ் சபை, கிறிஸ்தவ ஒன்றிப்பு சபை, இவாஞ்சலிக்கல் சபைகள் எனப் பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
திருஅவையின் உயர்மட்டத் தலைமைத்துவத்துக்கு உதவும் நோக்கத்தில் 2010ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட “கிறிஸ்தவ வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்கள்” இயக்கம் இக்கூட்டத்தை நடத்தியது.
விவிலியத்துக்குச் சான்று பகர்தல், ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலையளித்தல், நீதியும் ஊழலுமற்ற சமூகத்தை உருவாக்குதல் ஆகியவை திருஅவையின் மறைப்பணிகள் என்று இக்கூட்டத்தில் கூறினர் கிறிஸ்தவத் தலைவர்கள்.
7. உலகுக்கு 17 இலட்சம் ஆசிரியர்கள் தேவை, ஐ.நா.
அக்.06,2012. உலகில் 2015ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் ஆரம்பக்கல்வி வழங்கும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஏறக்குறைய 17 இலட்சம் ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள் என்று பல்வேறு ஐ.நா. நிறுவனங்களின் தலைவர்கள் கூறினர்.
உலக ஆசிரியர்கள் தினமான அக்டோபர் 5ம் தேதி, இவ்வெள்ளிக்கிழமையன்று இவ்வாறு உரைத்த ஐ.நா. நிறுவனங்களின் தலைவர்கள்,ஆசிரியர்களுக்குச் சாதகமான சூழல்களும் போதுமான ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் உருவாக்கப்படவும், அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவும் கேட்டுள்ளனர்.
ஆசிரியர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது குறித்த 1966ம் ஆண்டின் உடன்பாட்டில் யுனெஸ்கோவும், ஐ.நாவின் உலக தொழில் நிறுவனமும் கையெழுத்திட்டதை நினைவுகூரும் விதமாக 1994ம் ஆண்டிலிருந்து உலக ஆசிரியர்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
8. நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு மேலும் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்
அக்.06,2012. உலக அளவில் பெண்கள், ஐந்து சட்ட அமைப்பாளர்களுக்கு ஒருவர் வீதம் இருக்கின்றவேளை, நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு மேலும் இடங்கள் ஒதுக்கப்படுமாறு பெண் சபாநாயகர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
உலகின் பெண் சபாநாயகர்கள் புதுடெல்லியில் நடத்திய இரண்டு நாள் கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இத்தகைய முயற்சி இந்தியாவில் இடம்பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
தற்போது உலகின் 190 நாடாளுமன்றங்களில் 37 பெண்கள் சபாநாயகர்களாக உள்ளன்ர்.
9. இந்தியாவில் கல்வித் தரத்தை மேம்படுத்த உலக வங்கி நிதியுதவி
அக்.06,2012. இந்தியாவில் உயர்நிலைப் பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக ஏறக்குறைய 50 கோடி டாலர் அளவிற்கு கடன் உதவி அளி்க்க உள்ளது உலக வங்கி.
இந்தியாவில் உயர்கல்வி திட்டத்தை மேம்படுத்தும் வகையில் Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) என்ற திட்டத்திற்கு ஏறக்குறைய 50 கோடி டாலர் அளவிற்கு கடன் உதவி வழங்கப்படவுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் புதுடில்லியில் இவ்வெள்ளி்க்கிழமை கையெழுத்தானது.
நிதியமைச்சகத்தின் இணைச் செயலாளர் பிரமோத் சக்சேனா மற்றும் உலக வங்கிக்கான இந்திய இயக்குனர் Onno Ruhl ஆகியோரிடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
உலக வங்கி மூலம் பெறப்படும் இந்நிதியுதவி கல்வித்துறை வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் என நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment