Friday 19 October 2012

Catholic News in Tamil - 19/10/12

1. மாமன்றத் தந்தையர் : நெருக்க்டி நிறைந்த உலகில் நம்பிக்கையை வெளிப்படுத்துவதே புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியின் நோக்கம்
2. கர்தினால் வெர்சால்தி : நிதி நிர்வாகத்தில் தவறுகள் செய்வோர் முதலில் சகோதரத்துவ முறையில் திருத்தப்பட வேண்டும்
3. ஆயர்கள் மாமன்றத்தில் மியான்மார் ஆயர் : தென்கிழக்கு ஆசியாவில், நற்செய்தி அறிவிப்புப்பணி கடினமாக இருக்கின்றது
4. நைஜீரியப் பேராயர் : வன்முறைகள், கிறிஸ்தவமும் இசுலாமும் போதிக்கும் உண்மையான விழுமியங்களுக்கு எதிரானவை
5. இந்திய இறையியலாளர் கழகத்தின் 35வது ஆண்டுக் கூட்டம்
6. நேபாள மக்கள் மனமாற்றம் அடைய நம்பிக்கை ஆண்டு நல்ல வாய்ப்பு
7. இந்தோனேசியாவில் முஸ்லீம்களின் வலியுறுத்தலினால் 9 ஆலயங்கள் மூடப்ப்ட்டுள்ளன
8. உலகின் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படுவதற்கு ஐ.நா.அழைப்பு
9. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு டெங்கு உயிர்பலி நான்குமடங்கானது

------------------------------------------------------------------------------------------------------

1. மாமன்றத் தந்தையர் : நெருக்க்டி நிறைந்த உலகில் நம்பிக்கையை வெளிப்படுத்துவதே புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியின் நோக்கம்

அக்.19,2012. கடவுள் எண்ணமற்ற, அதேவேளை கடவுளுக்காக ஏங்குகின்ற இன்றைய நெருக்கடி நிறைந்த உலகில் நம்பிக்கையை வெளிப்படுத்துவதே புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியின் நோக்கம் என்று, புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் 17வது பொது அமர்வில் கூறப்பட்டது. 
இவ்வெள்ளிக்கிழமை காலை திருத்தந்தையின் முன்னிலையில் தொடங்கிய இந்தப் பொது அமர்வில் முந்தையநாள் நடைபெற்ற சிறு குழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இம்மாமன்றத்தின் தலைவர் பிரதிநிதி ஹாங்காங் ஆயர் கர்தினால் John Tong Hon தலைமையில் தொடங்கிய இப்பொது அமர்வில் 253 மாமன்றத் தந்தையர் கலந்து கொண்டனர்.
துன்புறும் சிரியா மக்களுக்கு உதவுவதற்கென வத்திக்கான் வங்கியில் ஆரம்பிக்கப்படும் புதுக்கணக்கில் மாமன்றத் தந்தையர் பணம் போடலாம் எனவும், வரும் நாள்களில் சிரியா செல்லவிருக்கும் பிரதிநிதிக்குழு, சிரியாவுக்குத் திருப்பீடம் வழங்கும் பணத்தோடு  மாமன்றத் தந்தையரின் இந்தப் பணத்தையும் எடுத்துச் செல்லும் எனவும், உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலர் பேராயர் நிக்கொலா எத்ரோவிச் அறிவித்தார்.
புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியில் குடும்பங்கள் மறக்கப்படக் கூடாது என்றும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு மறைக்கல்வி வழங்குவது வலியுறுத்தப்பட வேண்டுமென்றும் இந்த அமர்வில் கூறப்பட்டது.


2. கர்தினால் வெர்சால்தி : நிதி நிர்வாகத்தில் தவறுகள் செய்வோர் முதலில் சகோதரத்துவ முறையில் திருத்தப்பட வேண்டும்

அக்.19,2012. புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர் இவ்வியாழனன்று சிறிய குழுக்களில் கலந்துரையாடல்களை நடத்தியவேளை, பொது அமர்வுகளில் உரை நிகழ்த்தாத 18 மாமன்றத் தந்தையர் தங்களது உரைகளைச் சமர்ப்பித்துள்ளனர்.
மியான்மார், லைபீரியா, சாட், கிழக்குத் தைமூர், சூடான், எரிட்ரியா, மடகாஸ்கர், கொமோரேத் தீவு, டான்சானியா, அர்ஜென்டினா, பிரிட்டன், ஹங்கேரி, நைஜீரியா, லெசோத்தோ, பாப்புவா நியு கினி, வத்திக்கான் எனப் பல நாடுகளைச் சேர்ந்த 18 மாமன்றத் தந்தையர் தங்களது உரைகளைச் சமர்ப்பித்துள்ளனர்.
இவர்களில் பலர், புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி மற்றும் இப்பணியைச் செய்வதற்கானத் தலத்திருஅவைகளின் நிலைகள் குறித்த தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உரை சமர்ப்பித்துள்ளவர்களில் ஒருவரான திருப்பீடத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான அலுவலகத் தலைவர் கர்தினால் Giuseppe Versaldi, நிதி நிர்வாகத்தில் ஏற்படும் தவறுகள் மற்றும் அவை திருத்தப்படவேண்டிய முறைகள் பற்றி விளக்கியுள்ளார்.
திருஅவையின் சொத்துக்களை நிர்வாகம் செய்வோர் தவறு செய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளன, அந்நிர்வாகிகளில் தவறுகள் வெளிப்படும்போது முதலில் சகோதரத்துவ முறையில் அவர்களுக்குத் திருத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும், அப்படிக் கொடுத்தும் மனமாற்றம் வெளிப்படாதபோது இந்தத் தவறுகளைத் திருத்துவதற்குப் பொறுப்பான அதிகாரிகள் அழைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் கர்தினால் வெர்சால்தி.


3. ஆயர்கள் மாமன்றத்தில் மியான்மார் ஆயர் : தென்கிழக்கு ஆசியாவில், நற்செய்தி அறிவிப்புப்பணி கடினமாக இருக்கின்றது

அக்.19,2012. மியான்மாரின் Mandalay உயர்மறைமாவட்ட வாரிசு ஆயர் Nicholas MANG THANG இந்த ஆயர்கள் மாமன்றத்தில் சமர்ப்பித்துள்ள உரையில், ஆசியாவில், குறிப்பாக, புத்தமதத்தினர் அதிகமாக இருக்கும் தென்கிழக்கு ஆசியாவில், நற்செய்தி அறிவிப்புப்பணி கடினமாக இருக்கின்றது மற்றும் மதமாற்றமும் மிக மெதுவாக இடம்பெற்று வருகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன என்று கூறியுள்ள ஆயர் THANG, நாடு, கலாச்சாரம், மதம் ஆகிய மூன்றும் ஒன்றாக நோக்கப்படுவது ஒரு காரணம் எனவும், சிலுவைமரணம், வன்முறை மரணம் ஆகிய இரண்டையும் எதிர்கொண்ட ஒருவர் மீட்பராகக் இருக்க முடியாது, மேலும், இவர் நற்செய்தியைக் கொண்டிருப்பவர் அல்லர், இத்தகையவர் நல்ல தூய மனிதராக இருக்க முடியாது என்ற கருத்து மற்றொரு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டுள்ள புத்தமத மரபு இதற்குக் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ள மியான்மார் ஆயர் THANG, கடவுள் இரக்கமுள்ள தந்தை என்ற கத்தோலிக்க கோட்பாட்டில் புதிய ஒளியைச் சிந்தும் புனித குழந்தை தெரேசாவின் ஆன்மீக இறையியலை மையமாகக் கொண்ட மறைபரப்புப்பணி இடம்பெறுமாறும் கேட்டுக் கொண்டார்.


4. நைஜீரியப் பேராயர் : வன்முறைகள், கிறிஸ்தவமும் இசுலாமும் போதிக்கும் உண்மையான விழுமியங்களுக்கு எதிரானவை

அக்.19,2012. நைஜீரிய சமுதாயம் அமைதியிலும் நல்லிணக்கத்திலும் வாழ வேண்டுமெனில் கிறிஸ்தவமும் இசுலாமும் போதிக்கும் உண்மையான விழுமியங்களுக்கு அந்நாடு திரும்பிவர வேண்டுமென்று அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Ignatius Ayau Kaigama  கூறினார்.
சமயச் சகிப்புத்தன்மையும், அமைதியான ஒன்றிணைந்த வாழ்வும் என்ற தலைப்பில் அந்நாட்டு வானொலி ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் உரையாற்றிய ஜோஸ் பேராயர் Kaigama, ஒரே கடவுள் கொள்கையுடைய யூதம், கிறிஸ்தவம், இசுலாம் ஆகிய மூன்று மதங்களும் அமைதி மற்றும் சகிப்புத்தன்மை பற்றியே பேசுகின்றன என்று கூறினார்.
நைஜீரியாவின் பல பகுதிகள் வன்முறைகளால் கடுமையாய்த் தாக்கப்பட்டுள்ளவேளை, கிறிஸ்தவருக்கும் இசுலாமியருக்கும் இடையே தோழமையுணர்வு தேவை என்பதை வலியுறுத்தினார் பேராயர் Kaigama.
மேலும், 2012ம் ஆண்டின் Pax Christi அனைத்துலக அமைதி விருது, நைஜீரியாவின் அபுஜா பேராயர் John Olorunfemi Onaiyekanக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரிக்காவில் பல்வேறு மதத்தினர் மத்தியில் உரையாடல் வழியாகப் புரிந்து கொள்ளுதலை ஊக்குவித்து வரும் பேராயர் Onaiyekanனின் பணியைப் பாராட்டும் விதமாக இவ்விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Pax Christi அமைப்பின் பன்னாட்டு அதிகாரிகள், அக்டோபர் 31ம் தேதி Brusselsல்  இவ்விருதை வழங்குவார்கள்.


5. இந்திய இறையியலாளர் கழகத்தின் 35வது ஆண்டுக் கூட்டம்

அக்.19,2012. ITA என்ற இந்திய இறையியலாளர் கழகத்தின் 35வது ஆண்டுக் கூட்டம் பஞ்சாபின் ஜலந்தர் மூவொரு கடவுள் குருத்துவ கல்லூரியில் இவ்வெள்ளிக்கிழமையன்று தொடங்கியுள்ளது.
பொதுவாழ்வில் ஊழல் : ஓர் இறையியல் பதில் என்ற தலைப்பில் நடைபெறும் 5 நாள் கூட்டத்தில் ஏறக்குறைய நூறு இறையியலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள், இந்தத் தலைப்பை மையமாக வைத்து, விவிலிய, கலாச்சார மற்றும் இறையியல் கண்ணோட்டத்தில் உரையாற்றுவார்கள் என்று ITA கழகத்தின் தலைவர் அருள்பணி Antony Kalliath கூறினார்.
1976ம் ஆண்டு ஹைதராபாத்தில் உருவாக்கப்பட்ட இந்திய இறையிலாளர் கழகத்தில் 150க்கும் மேற்பட்ட இந்திய இறையியலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.


6. நேபாள மக்கள் மனமாற்றம் அடைய நம்பிக்கை ஆண்டு நல்ல வாய்ப்பு

அக்.19,2012. செபம் மற்றும் கத்தோலிக்கத் திருஅவையின் போதனைகள் வழியாக, நேபாளக் கத்தோலிக்கச் சமுதாயம் கடவுள்மீதான தங்களது நம்பிக்கையைப் புதுப்பித்து ஆழப்படுத்த வேண்டும் என நம்பிக்கை ஆண்டு தொடக்கத் திருப்பலியில் வலியுறுத்தப்பட்டது.
காத்மண்டு விண்ணேற்பு அன்னைமரி ஆலயத்தில் திருப்பலி நிகழ்த்தி இந்த நம்பிக்கை ஆண்டைத் தொடங்கி வைத்த அருள்பணி இராபின் ராய், சமயச்சார்பற்ற நாடாக மாறிக்கொண்டிருக்கும் தற்போதைய நேபாளத்தில் மக்கள், மிகுந்த மத உணர்வோடு, புனிதமானவற்றை இன்றும் மதித்து நடக்கிறார்கள் என்று கூறினார்.
அக்டோபர் 11ம் தேதி நடைபெற்ற இத்திருப்பலியில் கத்தோலிக்கர் அல்லாத பிற மதத்தவரும் கலந்து கொண்டனர்.


7. இந்தோனேசியாவில் முஸ்லீம்களின் வலியுறுத்தலினால் 9 ஆலயங்கள் மூடப்ப்ட்டுள்ளன

அக்.19,2012. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் Banda Aceh நகரத்தில் 9 பிரிந்த கிறிஸ்தவசபை ஆலயங்கள் மற்றும் 6 புத்தமத பகோடாக்களை மூடியுள்ளனர் அதிகாரிகள்.
இந்நடவடிக்கை குறித்துப் பேசிய Aceh நகர் துணை மேயர் Hajjah Illiza Sa'aduddin Djamal, ஒரு இலட்சத்து 75 ஆயிரம் பேர் வாழும் இந்நகரத்தில் ஷாரியா என்ற இசுலாமியச் சட்டம் அமலில் இருக்கின்றது மற்றும் சட்டரீதியான அனுமதியின்றி இவ்வாலயங்கள் கட்டப்பட்டுள்ளன என்று கூறினார்.
ஆயினும், அப்பகுதி முஸ்லீம்கள் கொடுத்த அழுத்தத்தினால் இவ்வாலயங்கள் மூடப்பட்டுள்ளன என்று உள்ளூர் வட்டாரங்கள் கூறுகின்றன.


8. உலகின் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படுவதற்கு ஐ.நா.அழைப்பு

அக்.19,2012. பல அரிய உயிரினங்கள் வாழும் தேசியப் பூங்காக்கள், மற்றும் பிற பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பாதி, பாதுகாக்கப்படாத நிலையில் உள்ளன என்று ஐ.நா.அறிக்கை ஒன்று கூறுகிறது.
உலகின் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஏறக்குறைய 15 விழுக்காட்டு கார்பனைக் கொண்டிருக்கின்றன மற்றும் இவை நூறு கோடிக்கு மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவியாக இருக்கின்றன என்று, இந்த அறிக்கையை வெளியிட்ட ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் இயக்குனர் Achim Steiner தெரிவித்தார்.
பல்வேறு உயிரினங்கள் குறித்த ஐ.நா. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் இந்தியாவின் ஹைதராபாத்தில் நடத்திவரும் கூட்டத்தில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
உலகில் ஏறக்குறைய 1.6 விழுக்காட்டுப் பெருங்கடல் பகுதியே பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பதாகக் கூறும் அவ்வறிக்கை, உலகின் குறைந்தது 17 விழுக்காட்டு நிலப்பகுதியும், 10 விழுக்காட்டுக் கடல் பகுதியும் 2020ம் ஆண்டுக்குள் சமமாக நிர்வாகிக்கப்பட வேண்டுமென்று ஐ.நா. திட்டமிட்டுள்ளது என்றும் கூறுகிறது.
இந்த இலக்கை எட்டுவதற்கு, மேலும் 80 இலட்சம் சதுர கிலோ மீட்டர் கடல் மற்றும் கடற்கரைப் பகுதி, பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டுமென்றும் கூறுகிறது அவ்வறிக்கை.


9. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு டெங்கு உயிர்பலி நான்குமடங்கானது

அக்.19,2012. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாக இந்திய நடுவணரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த 2012ம் ஆண்டில் இதுவரை தமிழ்நாட்டில் 5,376 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவர்களில் நாற்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதாக நடுவணரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டைத் தாக்கிய டெங்கு காய்ச்சலின் பாதிப்புக்களுடன் ஒப்பிடும்போது, இவ்வாண்டில் இப்பாதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாகவும், உயிரிழப்புக்கள் நான்குமடங்கு அதிகரித்திருப்பதாகவும் அந்தப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
மேலும், தென்னிந்தியாவின் பிற மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் கர்னாடகாவின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போதுகூட தமிழ்நாட்டில் இக்காய்ச்சலின் தாக்குதல் இரண்டு மடங்காகவும், உயிரிழப்புக்கள் நான்கு முதல் ஐந்து மடங்காகவும் இருப்பதாகத் தெரிய வருகிறது.
கொசுக்களினால் பரவும் இந்த டெங்கு காய்ச்சல் பாதித்தால், உடம்பில் நீர்ச்சத்துக் குறைந்து உடம்பு வலி ஏற்படும். இந்தக் காய்ச்சலுக்கு மருத்துவத்துறையால் அங்கரீக்கப்பட்ட எந்த ஊசி மருந்தும் சிகிச்சையும் கிடையாது எனச் சொல்லப்படுகிறது.


 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...