Friday 19 October 2012

Catholic News in Tamil - 18/10/12


1. ஆயர்கள் மாமன்றத்தில் கர்தினால் பெர்த்தோனே :  திருப்பீடத் தூதர்கள் உரோமில் கலந்துரையாடல் நடத்துவதற்குத் திருத்தந்தை அழைப்பு
2. ஆயர்கள் மாமன்றத்தில் கர்தினால் Wuerl : விசுவாசத்தை மீண்டும் புத்துயிர் பெறச் செய்யும் வழிகளை ஆராய்வதற்குப் பரிந்துரை 
3. கலையும் விசுவாசமும் சகோதரிகள்
4. நம்பிக்கை ஆண்டையொட்டி ஜப்பான் கத்தோலிக்க ஆயர்கள் வெளியிட்டுள்ள செய்தி
5. ஆசிய நாடுகளில் மதச் சுதந்திரம் பெருமளவில் குறைந்து வருகிறது
6. Rimsha Masihன் வழக்கு விசாரணை நவம்பர் 14ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
7. ஆயர்கள் மாமன்றத்திற்கு சீனாவின் 90 வயது ஆயர் Lucas Li Jingfeng அனுப்பியுள்ள செய்தி
8. வத்திக்கான் பிரதிநிதிகள் குழு சிரியாவுக்கு வருகை தருவது அதிக நம்பிக்கை தரும் ஒரு செய்தி - Aleppo ஆர்மீனிய கத்தோலிக்கப் பேராயர்
9. பசுவின் பால் அருந்தினால் எய்ட்ஸ் நோயைத் தடுக்கலாம்
10. உலகத்தரப் பட்டியலில் டில்லி, மும்பை

------------------------------------------------------------------------------------------------------
1. ஆயர்கள் மாமன்றத்தில் கர்தினால் பெர்த்தோனே :  திருப்பீடத் தூதர்கள் உரோமில் கலந்துரையாடல் நடத்துவதற்குத் திருத்தந்தை அழைப்பு

அக்.18,2012. இம்மாதம் 11ம் தேதி ஆரம்பித்திருக்கும் நம்பிக்கை ஆண்டு குறித்து உலகின் அனைத்துத் திருப்பீடத் தூதர்களுடன் ஓர் ஆழமான கலந்துரையாடல் நடத்துவதற்கென அவர்களைத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உரோமைக்கு அழைத்துள்ளார் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே கூறினார்.
புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் இப்புதனன்று இதனை அறிவித்த கர்தினால் பெர்த்தோனே, உலகின் அனைத்துத் திருப்பீடத் தூதர்கள், திருத்தந்தையின் பிரதிநிதிகள், பன்னாட்டு நிறுவனங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளர்கள் ஆகிய அனைவரும் திருத்தந்தையுடன் கலந்துரையாடல் நடத்துவார்கள் என்று கூறினார்.
நம்பிக்கை ஆண்டில் மறைப்பணிகளை ஆழப்படுத்தும் நோக்கத்தில் பாப்பிறையின் இந்தப் பிரதிநிதிகள் தங்களது அனுபவங்களை ஒருவர் ஒருவருடன் இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில் பகிர்ந்து கொள்வார்கள் என்றும் கர்தினால் பெர்த்தோனே கூறினார்.
இக்கலந்துரையாடல் கூட்டம் 2013ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 13வது உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர் இவ்வியாழனன்று சிறிய குழுக்களில் கலந்துரையாடல்களை நடத்தினர்.
உலகில் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் திருப்பீடத் தூதர்கள் பணியாற்றுகின்றனர்.


2. ஆயர்கள் மாமன்றத்தில் கர்தினால் Wuerl : விசுவாசத்தை மீண்டும் புத்துயிர் பெறச் செய்யும் வழிகளை ஆராய்வதற்குப் பரிந்துரை 

அக்.18,2012. விசுவாசத்தை மீண்டும் புத்துயிர் பெறச்செய்வது மற்றும் திருஅவைக்கு மக்களை மீண்டும் அழைத்து வருவது பற்றிய வழிகள் குறித்து வரும் நாள்களில் கலந்துரையாடுவதற்குப் பரிந்துரைக்கும் விரிவான அறிக்கையை உலக ஆயர்கள் மாமன்றத்தில் இப்புதன் மாலைப் பொது அமர்வில் சமர்ப்பித்தார் கர்தினால் Donald Wuerl.
13வது உலக ஆயர்கள் மாமன்றத்தில், மாமன்றத் தந்தையர் இதுவரை வழங்கிய கருத்துப்பரிமாற்றங்களை வைத்து இனிவரும் நாள்களில் கலந்துரையாடல்களை நடத்துவதற்கென 14 கேள்விகள் அடங்கிய அறிக்கையை இம்மாமன்றத்தின் 11வது நாளில் சமர்ப்பித்தார் கர்தினால் Wuerl.
திருமுழுக்குப்பெற்ற விசுவாசிகள் நற்செய்தி அறிவிப்புப்பணிக்கு எவ்விதத்தில் பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள் என்பது பெரிய அளவில் உணர்த்தப்படுவதற்குத் திருஅவை செய்யவேண்டியதென்ன?, திருஅவையில் வேதியர்களுக்கு ஒரு நிரந்தரப்பணியைக் கொடுப்பதற்கான காலம் இதுவா? விசுவாசத்தின் சாரம் மற்றும் நற்செய்தி குறித்த அறிவு குறைந்துள்ள இக்காலத்தில், இவை பற்றி, குறிப்பாக இளையோர் மத்தியில் போதிப்பதற்கு எடுக்க வேண்டிய முயற்சிகள் என்ன? போன்றவை அவ்வறிக்கையில் சொல்லப்பட்டுள்ளன.
வாஷிங்டன் பேராயர் கர்தினால் Wuerl, இந்த உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுத் தொகுப்பாளர் ஆவார்.


3. கலையும் விசுவாசமும் சகோதரிகள்

அக்.18,2012. திருஅவையின் கலாச்சாரப் பாரம்பரிய வளங்களுக்கானத் திருப்பீட ஆணையம், வருகிற நவம்பர் 3ம் தேதியன்று திருப்பீட கலாச்சார அவையுடன் இணைக்கப்பட்டு ஒரே திருப்பீட அவையாகச் செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 30ம் தேதி திருத்தந்தையால் அங்கீகரிக்கப்பட்ட அப்போஸ்தலிக்க அறிக்கையின்படி திருஅவையின் கலாச்சாரப் பாரம்பரிய வளங்களுக்கானத் திருப்பீட ஆணையம், திருப்பீட கலாச்சார அவையுடன் இணைக்கப்படுகிறது. இது வருகிற நவம்பர் 3ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.
இவ்விணைப்பு குறித்துப் பேட்டியளித்த திருப்பீட கலாச்சார அவைத் தலைவர் கர்தினால் ஜான்பிராங்கோ ரவாசி, கலையும் விசுவாசமும், மனிதர் திட்டங்களும் தூயஆவியின் செயல்களும், பேருண்மையும் அடையாளங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையன, இவை திருஅவையின் வரலாற்றில் பிரிக்கமுடியாதவைகளாக இருந்து வருகின்றன எனக் கூறினார்.
கலையும் விசுவாசமும் எவ்வாறு சகோதரிகளாக இருக்கின்றன என்பது குறித்தும் கர்தினால் ரவாசி விளக்கினார்.


4. நம்பிக்கை ஆண்டையொட்டி ஜப்பான் கத்தோலிக்க ஆயர்கள் வெளியிட்டுள்ள செய்தி

அக்.18,2012. Fukushimaவில் நிகழ்ந்த நிலநடுக்கமும், சுனாமியும் மனிதகுலத்தின் மீதும், தனி மனிதர்கள் மீதும் இன்னும் ஆழமான நம்பிக்கை வைப்பதற்கு நல்லதொரு தருணமாக அமைந்தது என்று ஜப்பான் கத்தோலிக்க ஆயர்கள் அவை கூறியுள்ளது.
இம்மாதம் 11ம் தேதி ஆரம்பமான நம்பிக்கை ஆண்டையொட்டி செய்தி வெளியிட்டுள்ள ஜப்பான் ஆயர்கள் பேரவை, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி ஜப்பானில் நிகழ்ந்த இயற்கைப் பேரழிவுகளின்போது தனி மனிதர்களும், குழுக்களும் செய்த உதவிகள் மனிதகுலத்தின் மீது நம்பிக்கையை வளர்த்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்டியது.
ஜப்பானிய சமுதாயம் சந்தித்துவரும் பல்வேறு சவால்களை இச்செய்தியில் குறிப்பிடும் ஆயர்கள், அறிவியல் சாதனைகளைக் கடந்து, இறைவனை நம்பி வாழ்வதற்கு இவ்வாண்டு நமக்குச் சிறப்பான அழைப்பை விடுக்கிறது என்று கூறியுள்ளனர்.
குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்து நம்பிக்கைக் கதவின் வழி ஒருங்கிணைந்த பயணம் செய்யவேண்டும் என்று ஆயர்களின் செய்தி அழைப்பு விடுத்துள்ளது.


5. ஆசிய நாடுகளில் மதச் சுதந்திரம் பெருமளவில் குறைந்து வருகிறது

அக்.18,2012. ஆசியாவின் பல்வேறு நாடுகளில் மதச் சுதந்திரம் பெருமளவில் குறைந்து வருகிறது என்று கத்தோலிக்க பிறரன்பு நிறுவனம் கூறியுள்ளது.
Aid to the Church in Need என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு இப்புதனன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், பாகிஸ்தான், சீனா, இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் கடந்த ஆண்டு சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவர்கள் பெருமளவில் அச்சுறுத்தல்களுக்கு இலக்காகி உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், சீனா, மியான்மார், வியட்நாம் ஆகிய நாடுகளில் மதச் சுதந்திரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறும் இவ்வறிக்கை, வடகொரியாவில் மதச் சுதந்திரம் முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
அனைத்திந்திய கிறிஸ்தவக் கழகத்தின் பொதுச்செயலர் ஜான் தயாள், இவ்வறிக்கையை உரோம் நகரில் வெளியிட்டுப் பேசியபோது, இந்தியாவில் மதம், ஜாதி ஆகிய இரு வழிகளிலும் கிறிஸ்தவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டினார்.
ஆசிய நாடுகளிலேயே தாய்லாந்து மட்டுமே சமய உரையாடல்களில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது என்பதையும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


6. Rimsha Masihன் வழக்கு விசாரணை நவம்பர் 14ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

அக்.18,2012. பாகிஸ்தானில் தற்போது நிலவும் பதட்டமானச் சூழலின் விளைவாக இஸ்லாமாபாதில் உள்ள உயர் நீதி மன்றம் Rimsha Masihன் வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
தேவநிந்தனை சட்டத்தின் கீழ் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையத்தில் விடுவிக்கப்பட்ட சிறுமி Rimsha Masihயின் வழக்கைத் தள்ளுபடி செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இம்முயற்சிகளுக்கு எதிர்ப்பாக, கடந்த வெள்ளி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் கராச்சியில் உள்ள  புனித பிரான்சிஸ் சேவியர் கத்தோலிக்கக் கோவிலும், பைசலாபாதில் உள்ள ஒரு கிறிஸ்தவ கோவிலும் தாக்கப்பட்டுள்ளன.
குரான் பக்கங்களை எரித்து, சிறுமி Rimsha Masihயின் பையில் வைத்த இஸ்லாமிய போதகர் பிணையத்தில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளது, பாகிஸ்தானில் நிலவும் தேவநிந்தனை என்ற கறுப்புச் சட்டத்தின் அநீதியை வெளிப்படுத்தும் அடையாளம் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு தற்போது இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று வரும் Malala Yousafzai என்ற பெண்ணுக்காக நடைபெற்ற சிறப்பு வழிபாட்டின்போது கிறிஸ்தவக் கோவில் தாக்கப்பட்டது பெரும் வேதனையைத் தருகிறது என்று கிறிஸ்தவ வழக்கறிஞர் Joel Aamir கூறினார்.
சில அடிப்படைவாத இஸ்லாமிய மதத் தலைவர்களால் மக்கள் தவறான பாதையில் வழிநடத்தப்படுவதால், பாகிஸ்தானில் சகிப்புத்தன்மை வெகுவாகக் குறைந்து வருகிறது என்று பைசலாபாத் நீதி, அமைதி குழுவின் இயக்குனர் அருள்தந்தை Nisar Barkat ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார்.


7. ஆயர்கள் மாமன்றத்திற்கு சீனாவின் 90 வயது ஆயர் Lucas Li Jingfeng அனுப்பியுள்ள செய்தி

அக்.18,2012. சீனாவில் நிலவும் அரசியல் சூழல் நிரந்தரமற்றது, ஆனால், மக்களிடம் காணப்படும் நம்பிக்கை ஆழமானது, நிரந்தரமானது என்று சீனாவின் 90 வயது ஆயர் Lucas Li Jingfeng கூறினார்.
உரோமையில் இம்மாதம் துவங்கியுள்ள ஆயர்கள் மாமன்றத்தில் கலந்து கொள்ள இயலாமல் சீன அரசால் தடுக்கப்பட்டுள்ள ஆயர்கள் சார்பில் மாமன்றத்திற்கு ஆயர் Li அனுப்பியுள்ள ஒரு செய்தியில் அவர் இவ்விதம் கூறியுள்ளார்.
ஆயர் Li அனுப்பிய செய்தியினை மாமன்றத்தின் பொது அமர்வில் இச்செவ்வாயன்று மாமன்றச் செயலர் பேராயர் Nikola Eterovic வாசித்தார்.
ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் கிறிஸ்தவ மதத்தின் மீது தற்போது நிலவி வரும் ஆர்வமற்ற போக்கிற்கு ஒரு மாற்றாக, சீனத் திருஅவையில் மக்களிடையே நிலவும் நம்பிக்கை ஒரு பாடமாக அமைந்துள்ளது என்று ஆயர் Li தன் செய்தியில் சுட்டிக் காட்டியுள்ளார்.
சீன அரசுக்கும் கத்தோலிக்கத் திருஅவைக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாய் கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதால் 1998, 2005, 2008 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு ஆயர்கள் மாமன்றங்களுக்கு சீன ஆயர்கள் அழைக்கப்பட்ட போதிலும், அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.


8. வத்திக்கான் பிரதிநிதிகள் குழு சிரியாவுக்கு வருகை தருவது அதிக நம்பிக்கை தரும் ஒரு செய்தி - Aleppo ஆர்மீனிய கத்தோலிக்கப் பேராயர்

அக்.18,2012. வத்திக்கானிலிருந்து கர்தினால்கள், ஆயர்கள் அடங்கிய ஒரு பிரதிநிதிகள் குழு சிரியாவுக்கு வருகை தருவது அதிக நம்பிக்கை தரும் ஒரு செய்தி என்று Aleppo வில் உள்ள ஆர்மீனிய கத்தோலிக்கப் பேராயர் Boutros Marayati கூறியுள்ளார்.
வத்திக்கானிலிருந்து வெளிவந்துள்ள இச்செய்தி மிகவும் சக்தி வாய்ந்த செய்தி என்று கூறிய பேராயர் Marayati, மோதல்களில் ஈடுபட்டுள்ள பல்வேறு குழுக்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்க இப்பிரதிநிதிகள் குழுவின் வருகை உதவும் என்று கூறினார்.
தேவையற்ற மரணங்கள், அழிவுகள், புலம்பெயர்தல் என்ற பல பிரச்சனைகளைச் சந்தித்துள்ள Aleppo மக்கள், இப்பிரதிநிதிகளின் வருகையால் நம்பிக்கை பெறவேண்டும் என்ற தன் ஆவலை பேராயர் Marayati, Fides செய்தி நிறுவனத்திடம் வெளிப்படுத்தினார்.
அடிப்படை மனித மாண்பை வலியுறுத்தும் விழுமியங்கள் கிறிஸ்தவம், யூதம், இஸ்லாமியம் ஆகிய மதங்களில் காணப்படுவதால், நிரந்தர அமைதி இப்பகுதியில் திரும்புவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என்று பேராயர் Marayati சுட்டிக்காட்டினார்.


9. பசுவின் பால் அருந்தினால் எய்ட்ஸ் நோயைத் தடுக்கலாம்

அக்.18,2012. பசுவின் பால் அருந்தினால் எச்.ஐ.வி., எய்ட்ஸ் நோயைத் தடுக்கலாம் என ஆஸ்திரேலிய அறிவியலாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழக அறிவியலாளரான மாரிட் கிராம்ஸ்கி (Marit Kramski) இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார்.
அவர் சோதனையின்படி, கருவுற்றிருந்த பசு ஒன்றில், எச்.ஐ.வி., புரோட்டீன்களை உட்செலுத்தி, அந்த பசு கன்று ஈன்ற பின் தந்த சீம்பாலை (colostrum) சோதனை செய்து பார்த்தில், எச்.ஐ.வி.,யைத் தடுக்கக்கூடிய ஏராளமான எதிர் உயிரிகள் (antibodies) இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்.
இந்த முறை எந்த அளவு சாத்தியம் என்பது குறித்து அறிவியலாளர்கள் தற்போது ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். இம்முறை சாத்தியப்படும் பட்சத்தில் இவ்வகை பால், பதப்படுத்தப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதையச் சூழலில், ஆணுறைகளை அடுத்து, மிகவும் எளிமையாக எச்.ஐ.வி.,யை தடுக்கும் வழியாக இது அமையும் என கிராம்ஸ்கி தெரிவித்துள்ளார். இம்முறை செயல்பாட்டிற்கு வர இன்னும் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது ஆகும் என்று கூறப்படுகிறது.


10. உலகத்தரப் பட்டியலில் டில்லி, மும்பை

அக்.18,2012.  ஐ.நா., வெளியிட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் டில்லியும், மும்பையும் இடம்பெற்றுள்ளன.
95 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் மும்பை 52வது இடத்திலும், டில்லி 58வது இடத்திலும் உள்ளன.
ஷங்காய், பீஜிங் மற்றும் பாங்காக் ஆகிய நகரங்கள் இப்பட்டியலில் முன்னணியில் உள்ளன. இருப்பினும் காத்மண்டு மற்றும் டாக்கா ஆகியன இந்திய நகரங்களுக்கு கீழாகவே உள்ளன.
உற்பத்தி, உள்கட்டமைப்பு, வாழ்க்கைத்தரம், சுற்றுசூழல் மற்றும் அதனைப் பேணும் முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...