Friday 19 October 2012

Catholic News in Tamil - 17/10/12

1. வறுமையால் துன்புறும் மக்களின் மாண்பும் உரிமைகளும் காக்கப்படுவதற்குத் தொடர்ந்து உழைக்குமாறு திருத்தந்தை வலியுறுத்தல்

2. மாமன்றத் தந்தையர்கள் : திருஅவையின் பக்த இயக்கங்கள் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணிக்குப் புது வசந்தம்

3. சிரியாவுக்குச் செல்லவுள்ள உலக ஆயர்கள் மாமன்றப் பிரதிநிதிகள் குழு

4. சிரியாவில் வெளிநாட்டு இசுலாம் தீவிரவாதிகள் இருப்பது, சண்டையை மேலும் தீவிரப்படுத்தக்கூடும், ஐ.நா.அச்சம்

5. புனிதர் பட்டமளிப்பு திருவழிபாட்டுச் சடங்கில் மாற்றம்

6. நம்பிக்கை ஆண்டில் அவரவர் தனிப்பட்ட வாழ்வையும், பொது வாழ்வையும் உயர்த்தும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும் - இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித்

7. இலங்கை பிரச்சினைக்கு விரைவாக அரசியல் தீர்வு காண வேண்டும்பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தல்

8. நம்பிக்கைக் கதவுகள் நமக்கு எப்போதும் திறந்தே உள்ளன - பாங்காக் கர்தினால் Kitbunchu

9. பிலிப்பின்ஸ் அரசுக்கும் MILF என்ற புரட்சிக் குழுவுக்கும் இடையே உடன்பாடு

10. நான்கு சூரியன்களால் ஒளிபெறும் புதிய கோளம் - ஆச்சரியமான கண்டுபிடிப்பு

------------------------------------------------------------------------------------------------------
1. வறுமையால் துன்புறும் மக்களின் மாண்பும் உரிமைகளும் காக்கப்படுவதற்குத் தொடர்ந்து உழைக்குமாறு திருத்தந்தை வலியுறுத்தல்

அக்.17,2012. வறுமையை ஒழிப்பதற்கு மனித சமுதாயம் ஓய்வின்றி போராட வேண்டிய அதேவேளை, வறுமையால் துன்புறும் மக்களின் மாண்பும்  உரிமைகளும் காக்கப்படுவதற்குத் தொடர்ந்து உழைக்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இப்புதனன்று அனைத்துலக வறுமை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி இப்புதன் பொது மறைபோதகத்தில் கலந்து கொண்ட, ATD என்ற நான்காம் உலகில் அனைவருக்கும் மாண்பு என்ற அனைத்துலக இயக்கத்தின் இத்தாலிய உறுப்பினர்களை வாழ்த்திய திருத்தந்தை, வறுமை ஒழிப்புக்கு இவ்வியக்கத்தினர் எடுத்துவரும் முயற்சிகளை  ஊக்குவிப்பதாகக் கூறினார்.
வறுமையால் உருவாகும் வன்முறைக்கு முடிவு: தேவையை பூர்த்தி செய்து அமைதியை உருவாக்குதல் என்ற மையக்கருத்துடன் இப்புதனன்று அனைத்துலக வறுமை ஒழிப்பு தினம் ஐ.நா.வால் கடைப்பிடிக்கப்பட்டது.
மேலும், இவ்வுலக தினத்தையொட்டி செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், உலகில் இன்றும் நூறு கோடிக்கு மேற்பட்ட மக்கள் வறுமையில் வாழ்கின்றனர், உணவு, கல்வி, நலவாழ்வு ஆகியவற்றைப் பெறுவதற்கான அடிப்படை உரிமைகள் இவர்களுக்கு மறுக்கப்படுகின்றன என்று கூறியுள்ளார்.
இன்னும், இந்நாளையொட்டி ஹைதராபாத்தில் நிருபர்களிடம் பேசிய உலக வங்கியின் உதவித் தலைவர் Rachel Kyte,  உலகில் கடந்த 20 ஆண்டுகளில் வறுமையை ஒழிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுகின்றபோதிலும், இன்னும் உலகில் 130 கோடிப் பேருக்கு மின்சார  வசதியும், 260 கோடிப் பேருக்கு நலவாழ்வு வசதியும், 90 கோடிப் பேருக்குச் சுத்த்மான குடிநீர் வசதியும் கிடையாது, ஏறத்தாழ 80 கோடிப் பேர் இன்றும் தினமும் பசியோடு படுக்கைக்குச் செல்கின்றனர் என்று கூறினார்.
வறுமையற்ற உலகத்தை உருவாக்குவதே உலக வங்கியின் இலக்கு என்றும்  Kyte கூறினார்.


2. மாமன்றத் தந்தையர்கள் : திருஅவையின் பக்த இயக்கங்கள் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணிக்குப் புது வசந்தம்

அக்.17,2012. திருஅவையின் அருங்கொடை இயக்கங்களும், அடிப்படைக் கிறிஸ்தவச் சமூகங்களும், பக்தசபைகளும் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணிக்குப் புது வசந்தங்களாக இருக்கின்றன என்று ஆயர்கள் மாமன்றத் தந்தையர் இப்புதன் காலையின் 15வது பொது அமர்வில் கூறினர்.
திருஅவையில் இந்த இயக்கங்கள் நன்கு வரவேற்கப்பட்டு ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறிய மாமன்றத் தந்தையர்,  தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணப்படுமாறும் கேட்டுக்கொண்டனர்.
வத்திக்கானில் இரண்டாவது வாரமாக நடைபெற்றுவரும் 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் 15வது பொது அமர்வு Kinshasa பேராயர் கர்தினால் Laurent Mosengwo Pasinya தலைமையில் தொடங்கியது. 252 மாமன்றத் தந்தையர்கள் கலந்து கொண்ட இப்பொது அமர்வில் 22 மாமன்றத் தந்தையர்கள் உரையாற்றினர்.  
இப்புதன் மாலை 16வது பொது அமர்வில், இந்த ஆயர்கள் மாமன்றத்தின் பொதுத் தொடர்பாளர் வாஷிங்டன் பேராயர் கர்தினால் Donald Wuerl சமர்ப்பிக்கும் அறிக்கை குறித்த விவாதங்கள் இடம் பெற்றன.
மேலும், புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்து வத்திக்கானில் நடைபெற்றுவரும் பேசிய, பங்குத்தளங்களே, புதிய நற்செய்தி அறிவிப்புப்பணிக்கு முக்கிய இயக்கிகளாக இருப்பவை என்று பேசிய நைஜீரிய ஆயர் Emmanuel Badejo, பங்குகளைத் துடிப்புடன் வைக்கவேண்டியது தலத்திருஅவைகளின் கடமை என்பதை வலியுறுத்தினார்.


3. சிரியாவுக்குச் செல்லவுள்ள உலக ஆயர்கள் மாமன்றப் பிரதிநிதிகள் குழு

அக்.17,2012. சிரியாவில் இடம்பெற்றுவரும் கடும் சண்டையினால் துன்புறும் மக்களுக்குப் பாதுகாப்பும் பரிவும் வழங்கப்படுமாறு திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே கேட்டுக்கொண்டார்.
இச்செவ்வாய் மாலை இடம்பெற்ற 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் 14வது பொது அமர்வின் தொடக்கத்தில் பேசிய கர்தினால் பெர்த்தோனே, சிரியாவில் இடம்பெற்றுவரும் அச்சமூட்டும் கொடுமைகள் நிறுத்தப்படுவதற்கு அரசியல்ரீதியாகத் தீர்வு காணப்படுமாறு வலியுறுத்தினார்.
இந்த ஆயர்கள் மாமன்றத்தில் சிரியா குறித்து சில மாமன்றத் தந்தையர் பகிர்ந்து கொண்டதைக் குறிப்பிட்ட கர்தினால் பெர்த்தோனே, இந்தப் பிரச்சனைக்கு அரசியல்ரீதியாக மட்டுமே தீர்வு காண முடியும் எனினும்,  துன்புறும் இம்மக்களுடன் திருத்தந்தையும், ஆயர்கள் மாமன்றத் தந்தையரும், மற்ற பிரதிநிதிகளும் கொண்டுள்ள ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதற்காக அந்நாட்டுக்கு ஒரு பிரதிநிதிக் குழுவை அனுப்புவதற்குத் திருத்தந்தை தீர்மானித்துள்ளார் என்று அறிவித்தார்.
மாமன்றத் தந்தையரைக் கொண்ட இந்தப் பிரதிநிதிகள் குழு இன்னும் சில நாள்களில் தமாஸ்கு சென்று துன்புறும் இம்மக்களுடன் திருத்தந்தையும், ஆயர்கள் மாமன்றத் தந்தையரும், மற்ற பிரதிநிதிகளும் கொண்டுள்ள ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் என்றும் அறிவித்தார் கர்தினால் பெர்த்தோனே.
Kinshasa பேராயர் கர்தினால்  Mosengwo, திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, நியுயார்க் பேராயர் திமோத்தி டோலன், கொலம்பிய இராணுவ ஆன்மீக ஆலோசகர் ஆயர் Fabio Suescun Mutis, Phat Diem ஆயர் Joseph Nguyen Nang,  திருப்பீட நாடுகளுடனான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி, திருப்பீடச் செயலகத்தின் பேரருட்திரு ஆல்பெர்த்தோ ஒர்த்தேகா ஆகியோரைக் கொண்ட குழு அடுத்த வாரத்தில் சிரியா செல்லும் என கர்தினால் பெர்த்தோனே அறிவித்தார்.


4. சிரியாவில் வெளிநாட்டு இசுலாம் தீவிரவாதிகள் இருப்பது, சண்டையை மேலும் தீவிரப்படுத்தக்கூடும், ஐ.நா.அச்சம்

அக்.17,2012. "jihadists" எனப்படும் இசுலாம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் சிரியாவில் இருப்பது, அந்நாட்டில் ஏற்கனவே இடம்பெற்றுவரும் சண்டையை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என்ற கவலையை வெளியிட்டுள்ளார், மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா. புலன்விசாரணையாளர் Paulo Sergio Pinheiro.
இதற்கிடையே, கடந்த 18 மாதங்களில் 16,500க்கு மேற்பட்ட சிரியா நாட்டினர் ஐரோப்பிய சமுதாய அவை நாடுகளில் புகலிடம் கேட்டு விண்ணப்பித்திருப்பதாக  UNHCR என்ற ஐ.நா.அகதிகள் நிறுவனம் கூறியது.
இதுவரை ஏறக்குறைய 3,50,000 சிரியா மக்கள், ஈராக், ஜோர்டன், லெபனன், துருக்கி ஆகிய நாடுகளின் அகதிகள் முகாம்களிலும் குடும்பங்களிலும் வாழ்ந்து வருகின்றனர் என்றும் UNHCR நிறுவனம் கூறியது.


5. புனிதர் பட்டமளிப்பு திருவழிபாட்டுச் சடங்கில் மாற்றம்

அக்.17,2012. திருப்பலியின் ஒருங்கிணைந்த தன்மையைக் காக்கும் நோக்கத்திலும், புனிதர் பட்டமளிப்பு நிகழ்வின் பொருளைச் சிறப்பாகக் காட்டும் எண்ணத்திலும் புனிதர் பட்டமளிப்பு திருவழிபாட்டுச் சடங்கில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக, திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பான பேரருட்திரு Guido Marini கூறினார்.
அக்டோபர் 21ம் தேதி வருகிற ஞாயிற்றுக்கிழமையன்று ஏழு அருளாளர்கள் புனிதர்களாக அறிவிக்கப்படும் நிகழ்வு அன்றையத் திருப்பலிக்கு முன்னர் இடம்பெறும் என அவர் அறிவித்தார்.
இந்த மாற்றத்தைக் கொண்டுவந்துள்ள திருத்தந்தை, திருப்பலியின்போது புதிய கர்தினால்களுக்கு மோதிரம் வழங்கும் சடங்கையும், புதிய பேராயர்களுக்குப் பால்யம் வழங்கும் சடங்கையும் நிறுத்திவிட்டார் என்றும் பேரருட்திரு Marini கூறினார்.
இதற்கு முன்னர் புனிதர் பட்டமளிப்புத் திருவழிபாட்டுச் சடங்கு திருப்பலியின்போது இடம்பெற்றது.


6. நம்பிக்கை ஆண்டில் அவரவர் தனிப்பட்ட வாழ்வையும், பொது வாழ்வையும் உயர்த்தும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும் - இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித்

அக்.17,2012. நாம் வாழும் சமுதாயத்தை உயர்த்துவதில் கத்தோலிக்கர்களின் பொறுப்பை மீண்டும் நமக்கு நினைவுறுத்தும் ஒரு காலம் இந்த நம்பிக்கை ஆண்டு என்று இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித் கூறினார்.
கொழும்புவின் Kotahena பேராலயத்தில் நம்பிக்கை ஆண்டைத் துவக்கிவைக்கும் திருப்பலியில் மறையுரையாற்றிய கொழும்புப் பேராயர் கர்தினால் இரஞ்சித், கூடியிருந்த குருக்கள், இருபால் துறவியர், பொது நிலையினர் அனைவரும் இந்த நம்பிக்கை ஆண்டில் அவரவர் தனிப்பட்ட வாழ்வையும், பொது வாழ்வையும் உயர்த்தும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
திரு அவை வழங்கியுள்ள இந்த அருள் நிறைந்த தருணத்தில், கருக்கலைப்பு, போதைப் பொருள்களுக்கு அடிமையாதல் போன்ற பல்வேறு சவால்களுக்குத் தீர்வுகள் காணவும், வளரும் குழந்தைகளுக்குத் திருஅவையின் தெளிவான போதனைகளைக் கற்றுத்தரவும் இந்த நம்பிக்கை ஆண்டு நம்மை அழைக்கிறது என்று கர்தினால் இரஞ்சித் கூறினார்.


7. இலங்கை பிரச்சினைக்கு விரைவாக அரசியல் தீர்வு காண வேண்டும்பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தல்

அக்.17,2012. இலங்கையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போருக்கு அடிப்படைக் காரணமாக விளங்கிய பிரச்சினைக்கு, விரைவாக அரசியல் தீர்வு காணவேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின்  மனித உரிமை விவகாரங்களுக்கென அரசுத் தலைவரின் சிறப்புத் தூதராகப் பணியாற்றும் அமைச்சர் மகிந்த சமரசிங்க (Mahinda Samarasinghe), இச்செவ்வாயன்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூனை நியுயார்க்கில் சந்தித்தபோது, பான் கி மூன் இவ்விதம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் வாழும் அனைவருக்கும் நீதியையும், சமத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்த சுதந்திரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பான் கி மூன் வலியுறுத்திக் கூறியுள்ளார்.


8. நம்பிக்கைக் கதவுகள் நமக்கு எப்போதும் திறந்தே உள்ளன - பாங்காக் கர்தினால் Kitbunchu

அக்.17,2012. இறைவனுடன் ஒன்றித்து வாழும் வகையில், நம்பிக்கைக் கதவுகள் நமக்கு எப்போதும் திறந்தே உள்ளன என்று பாங்காக் முன்னாள் பேராயர் கர்தினால் Michael Mechai Kitbunchu கூறினார்.
தாய்லாந்து நாட்டின் அருளாளர் Nicholas Boonkerd Kitbamrung அவர்களின் திருத்தலத்தில்      நம்பிக்கை ஆண்டைத் துவக்கிவைக்கும் திருப்பலியை நிகழ்த்தி, மறையுரையாற்றிய முன்னாள் பேராயர் கர்தினால் Kitbunchu, அருளாளர் Kitbamrung நம்பிக்கை நிறைந்த வாழ்வின் எடுத்துகாட்டாக இருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
நம்பிக்கை ஆண்டினைத் துவக்கும் வகையில் அருளாளர் Kitbamrung திருத்தலக் கோவிலின் முகப்பு வாயிலைத் திறந்துவைத்த கர்தினால் Kitbunchu, பாங்காக் உயர்மறைமாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்களுக்கு நம்பிக்கை ஆண்டின் அடையாளம் பதித்த கொடிகளை வழங்கினார்.
அக்டோபர் மாதம் செபமாலை அன்னையின் மாதமாக இருப்பதால், தாய்லாந்து திருஅவைக்கும், நாட்டுக்கும் செபங்களை எழுப்பும் நேரம் இது என்று கர்தினால் Kitbunchu எடுத்துரைத்தார்.


9. பிலிப்பின்ஸ் அரசுக்கும் MILF என்ற புரட்சிக் குழுவுக்கும் இடையே உடன்பாடு

அக்.17,2012. பிலிப்பின்ஸ் அரசுக்கும் Mindanao பகுதியில் உள்ள MILF என்ற புரட்சிக் குழுவுக்கும் இடையே இத்திங்களன்று கையொப்பமான ஓர் உடன்பாட்டை அப்பகுதி ஆயர்கள் மகிழ்வுடன் வரவேற்றுள்ளனர்.
பிலிப்பின்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள Mindanao என்ற தீவைத் தனி நாடாக உருவாக்க வேண்டுமென்று அப்பகுதியில் உள்ள MILF என்ற இஸ்லாம் புரட்சிக் குழுவுக்கும், அரசுக்கும் இடையே கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மோதல்கள் நிகழ்ந்து வந்துள்ளன. இதுவரை இந்த மோதல்களில் 1,50,000க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.
இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொணரும் ஒரு முயற்சியாக, அப்பகுதிக்கு தனிப்பட்ட உரிமைகளை வழங்க பிலிப்பின்ஸ் அரசு சம்மதம் வழங்கியதைத் தொடர்ந்து, புரட்சிக் குழுவினர் தங்கள் போராட்டங்களைக் கைவிடுவதாகத் தெரிவித்து ஓர் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர்.
இவ்வுடன்பாடு நல்லதொரு ஆரம்பம் என்று கூறிய அப்பகுதி ஆயர்கள், தொடர்ந்து இந்த ஒப்புரவு முயற்சி  வளர்வதற்கு இருதரப்பினரும் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.
அரசுக்கும் MILF புரட்சி குழுவுக்கும் இடையே உருவாகியுள்ள இந்த உடன்பாட்டை, அப்பகுதியில் வாழும் இஸ்லாமியரும், கிறிஸ்தவர்களும் மகிழ்வுடன் வரவேற்றுள்ளனர். இந்த அமைதி உடன்பாடு 2016ம் ஆண்டிற்குள் முழு வடிவம் பெறும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


10. நான்கு சூரியன்களால் ஒளிபெறும் புதிய கோளம் - ஆச்சரியமான கண்டுபிடிப்பு

அக்.17,2012. நான்கு சூரியன்களால் ஒளிபெறும் புதிய கோளத்தை வானியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இவ்வகையான கோளம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்று வானியலாளர்கள் அறிவித்துள்ளனர்.
பிளானட் ஹண்டர்ஸ் (Planet Hunters) என்கிற அமைப்பைச் சார்ந்த வானியலாளர்களும், பிரித்தானியா, மற்றும் அமெரிக்காவில் உள்ள வானியல் ஆய்வு மையங்களும் இணைந்து இந்த கண்டுபிடிப்பை செய்திருக்கின்றன. பிளானட் ஹண்டர்ஸ் இணையத்தின் பெயரைக் குறிக்கும் வகையில் இதற்கு PH1 என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
பூமியிலிருந்து ஏறத்தாள ஐந்தாயிரம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் இந்தக் கோளம் இரண்டு சூரியன்களைச் சுற்றிவருகிறது. அதேசமயம் வேறு இரு சூரியன்களும் இவ்விரு சூரியன்களைச் சுற்றிவருகின்றன. எனவே PH1 என்ற இக்கோளத்திற்கு நான்கு சூரியன்களின் ஒளியும் கிடைக்கும்.
இதுவரை ஒரு சூரியனால் ஒளி பெறும் கிரகங்கள், இரண்டு சூரியன்களால் ஒளி பெறும் கிரகங்களை மட்டுமே வானியலாளர்கள் கண்டறிந்திருக்கும் பின்னணியில், நான்கு சூரியன்களால் ஒளிபெறும் இப்புதிய கோளம் வானியலாளர்கள் மத்தியில் ஆச்சரியமான கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.
இப்புதிய கோளம் கொஞ்சம் நெப்டியூனைவிட பெரிய அளவில் இருப்பதாகவும் மதிப்பிட்டிருக்கிறார்கள்.
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...