1. புனிதர்களாக அறிவித்தத் திருச்சடங்கில் திருத்தந்தையின் மறையுரை
2. திருத்தந்தை, வழங்கிய மூவேளை செப உரை
3. 13வது உலக ஆயர்கள் மாமன்றம் : இத்திங்கள் நிகழ்வுகள்
4. வெள்ளத்தால் சூழப்பட்டிருந்த லூர்து அன்னையின் திருத்தலம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புகிறது
5. அனைத்துலக திருவழிபாட்டு இசை மற்றும் கலை விழா உரோம் நகரில் நடைபெறும்
6.
கந்தமால் வன்முறையாளர்கள் தண்டனைகள் ஏதுமின்றி விடுவிக்கப்பட்டதற்கு
ஒடிஸ்ஸா மாநில அரசு விளக்கம் அளிக்கவேண்டும் - இந்திய உச்சநீதி மன்றம்
7. அயர்லாந்தில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிக அளவு கூடியுள்ளது
8. இலங்கையில், ஒன்பது லட்சம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதற்கு அமெரிக்க விருது
9. இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த செங்கற் கட்டடக் கலையின் நுட்பங்கள்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. புனிதர்களாக அறிவித்தத் திருச்சடங்கில் திருத்தந்தையின் மறையுரை
அக்.22,2012. “மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்ற நற்செய்தி வார்த்தைகள் ஏழு புனிதர்களின் வாழ்விலும் வெளிப்பட்டது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
நற்செய்திப்
பரப்புப் பணியின் உலக நாள் சிறப்பிக்கப்பட்ட இஞ்ஞாயிறன்று வத்திக்கான்
புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் ஏழு அருளாளர்களைப் புனிதர்களாக
அறிவித்தத் திருச்சடங்கை நிகழ்த்திய திருத்தந்தை, தன மறையுரையில் இவ்வாறு கூறினார்.
Jacques
Berthieu, Pedro Calungsod, Giovanni Battista Piamarta, Maria del
Carmelo Sallés y Barangueras, Marianne Cope, Kateri Tekakwitha, Anna
Schäffer என்ற ஏழு அருளாளர்களின் வாழ்வுக் குறிப்புக்களை கூடியிருந்த 80000க்கும் அதிகமான விசுவாசிகளுக்கு நினைவுறுத்தியத் திருத்தந்தை, இப்புனிதர்கள் பல்வேறு நாடுகளைச் சார்ந்தவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டி, மறைபரப்புப் பணியின் உலக நாளன்று இவர்கள் புனித நிலை பெறுவது பொருத்தமானது என்பதையும் எடுத்துரைத்தார்.
தொன்றுதொட்டு திருஅவை பறைசாற்றி வரும் நற்செய்திப் பணிக்கும், தற்போது
நாம் சிந்திக்கும் புதிய நற்செய்திப் பணிக்கும் இன்றைய ஏழு புனிதர்கள்
சிறந்த வழிகாட்டிகளாக அமைந்துள்ளனர் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
2. திருத்தந்தை, வழங்கிய மூவேளை செப உரை
அக்.22,2012. அனைத்துப் புனிதர்களின் அரசியான மரியன்னையின் தாயன்புள்ள பரிந்துரைக்கு இன்றைய நற்செய்திப் பணியாளர்களையும், சிறப்பு மாமன்றத்தில் கலந்துகொள்ளும் ஆயர்களையும் நாம் ஒப்புக்கொடுப்போம் என்று திருத்தந்தை கூறினார்.
இஞ்ஞாயிறன்று ஏழு அருளாளர்களைப் புனிதர்களாக உயர்த்திய திருச்சடங்கையும், திருப்பலியையும் நிறைவேற்றிய திருத்தந்தை, இறுதியில் வழங்கிய மூவேளை செப உரையில் இவ்வாறு கூறினார்.
பிரான்ஸ்
நாட்டு லூர்து அன்னைத் திருத்தலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கைக்
குறித்து மூவேளை செப உரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை, இவ்வெள்ளப்பெருக்கால் துன்புறும் மக்களையும் அன்னை மரியின் பாதுகாவலில் ஒப்படைப்பதாகக் கூறினார்.
ஏழு அருளாளர்கள் புனிதர்களாக உயர்த்தப்பட்ட திருச்சடங்கில் கலந்து கொண்ட பன்னாட்டவரையும் வெவ்வேறு மொழிகளில் வாழ்த்தியத் திருத்தந்தை, மூவேளை செப உரைக்குப் பின், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.
3. 13வது உலக ஆயர்கள் மாமன்றம் : இத்திங்கள் நிகழ்வுகள்
அக்.22,2012.
புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்
தந்தையர் கடந்த இரண்டு வாரங்களாக முன்வைத்த பரிந்துரைகளைத் தொகுக்கும்
பணியில் இத்திங்களன்று ஈடுபட்டது ஒரு சிறப்புக் குழு.
உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுத் தொகுப்பாளரான வாஷிங்டன் கர்தினால் Donald Wuerl, இம்மாமன்றத்தின் சிறப்புச் செயலரான பிரான்சின் Montpellier பேராயர் Pierre-Marie Carrè, சிறிய குழுக்களின் தொகுப்பாளர்கள் ஆகியோர் சேர்ந்து இப்பணியில் ஈடுபட்டனர்.
இவர்கள் தயாரிக்கும் இந்தத் தொகுப்பு, இவ்வுலக ஆயர்கள் மாமன்றத் தந்தையரின் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட பின்னர், இந்த ஆயர்கள் மாமன்றத்தின் இறுதியில் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்படும்.
13வது
உலக ஆயர்கள் மாமன்றம் நிறைவடைந்த பின்னர் திருத்தந்தை வெளியிடும்
அப்போஸ்தலிக்க ஏட்டுக்கு இந்தத் தொகுப்புப் பயன்படுத்தப்படும் என
சொல்லப்படுகிறது.
இம்மாதம் 7ம் தேதி தொடங்கிய 13வது உலக ஆயர்கள் மாமன்றம் வருகிற ஞாயிறன்று திருத்தந்தையின் திருப்பலியோடு நிறைவடையும்.
மேலும், 1800களின்
தொடக்க காலத்தில் மறைசாட்சிகளான இரண்டு இளம் கொரியத் தம்பதியர் பற்றிய
திரைப்படத்தைப் பார்ப்பதற்கு திருப்பீடத்துக்கான தென்கொரியத் தூதரகம்
மாமன்றத் தந்தையர்க்கு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தது.
“John மற்றும் Rugalda, இரண்டு கன்னிமைத் தம்பதியர்” என்ற இத்திரைப்படம் திரையிடப்படுவது இத்திங்கள் மாலை இவ்வுலக ஆயர்கள் மாமன்றத் திட்டத்தில் உள்ளது.
4. வெள்ளத்தால் சூழப்பட்டிருந்த லூர்து அன்னையின் திருத்தலம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புகிறது
அக்.22,2012. வெள்ளத்தால் சூழப்பட்டிருந்த லூர்து அன்னையின் திருத்தலம் மீண்டும் திருப்பயணிகளுக்கு இத்திங்கள் திறந்துவிடப்படுகிறது என்றும், இத்திங்கள் மாலையில் மெழுகுதிரி ஏந்திய ஊர்வலம் வழக்கமான முறையில் நடைபெறும் என்றும் லூர்து மற்றும் Tarbes ஆயர் Nicolas Brouwet அறிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகப் பெய்த பெருமழை காரணமாக, லூர்து அன்னைத் திருத்தலத்தையொட்டிச் செல்லும் Gave நதியின் கரைகள் இச்சனிக்கிழமை உடைந்த்தால், மரியன்னை கேபியைச் சுற்றி மூன்றடி அளவு வெள்ளம் நிறைந்தது.
இஞ்ஞாயிறன்று நீர்மட்டம் குறைந்தபின், தீயணைப்பு வீர்களும், திருத்தலத் தன்னார்வத் தொண்டர்களும் மேற்கொண்ட தீவிர முயற்சிகளால் வெள்ளத்தின் பாதிப்புக்கள் விரைவில் நீக்கப்பட்டு, இத்திங்களன்று அன்னையின் கேபி திருப்பயணிகளுக்குத் திறக்கப்பட்டுள்ளது என்று ஆயர் Brouwet கூறினார்.
நம்பிக்கை ஆண்டின் ஓர் அங்கமாக, அக்டோபர்
21 முதல் 27ம் தேதி முடிய அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களின் இரத்தம்
அடங்கியத் திருப்பொருள் லூர்து அன்னையின் திருத்தலத்தில் திருப்பயணிகள்
பார்வைக்கு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது நிகழ்ந்துள்ள வெள்ளப்பெருக்கு 25 ஆண்டுகளாக நிகழாத ஒரு சம்பவம் என்று கூறப்படுகிறது.
5. அனைத்துலக திருவழிபாட்டு இசை மற்றும் கலை விழா உரோம் நகரில் நடைபெறும்
அக்.22,2012.
அனைத்துலக திருவழிபாட்டு இசை மற்றும் கலை விழா வருகிற நவம்பர் மாதம் 2ம்
தேதி முதல் 13ம் தேதி முடிய உரோம் நகரில் நடைபெறும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவழிபாட்டு இசை மற்றும் கலை அறக்கட்டளையின் தலைவரான கர்தினால் Angelo Comastri இவ்விழாவைக் குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, நம்பிக்கை எனும் அடிப்படை உணர்விலிருந்து வெளிப்படும் திருவழிபாட்டு இசை, மக்கள் மனதில் நம்பிக்கையை இன்னும் ஆழப்படுத்துகிறது என்று கூறினார்.
இவ்விழா நாட்களில் ஏழு இசைக் கச்சேரிகள் நடைபெறும் என்றும், இவ்வாண்டின் இசை மற்றும் கலை வெளிப்பாடுகள் நம்பிக்கை ஆண்டு என்ற மையக் கருத்துடன் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 2ம் தேதி புனித லொயோலா இஞ்ஞாசியார் பேராலயத்தில் நடைபெறும் இசைக் கச்சேரியுடன் ஆரம்பமாகும் இவ்விழா, உரோம் நகரில் உள்ள பல்வேறு முக்கிய பேராலயங்களில் தொடரும் என்றும், நவம்பர் 13ம் தேதி நடைபெறும் இறுதி இசை நிகழ்ச்சிக்கும், இறுதித் திருப்பலிக்கும் கர்தினால் Comastri தலைமை ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
6. கந்தமால் வன்முறையாளர்கள் தண்டனைகள் ஏதுமின்றி விடுவிக்கப்பட்டதற்கு ஒடிஸ்ஸா மாநில அரசு விளக்கம் அளிக்கவேண்டும் - இந்திய உச்சநீதி மன்றம்
அக்.22,2012.
இந்தியாவின் ஒடிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந்த கந்தமால் பகுதியில் 2008ம் ஆண்டு
கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறைகளில் ஈடுபட்ட பலர் தண்டனைகள்
ஏதுமின்றி விடுவிக்கப்பட்டதற்கு ஒடிஸ்ஸா மாநில அரசும், காவல் துறையும் விளக்கம் அளிக்கவேண்டும் என்று இந்திய உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
"Initiative for justice, peace and human rights" என்ற ஓர் அரசு சாரா அமைப்பு அளித்த புகாரின் அடிப்படையில் உச்சநீதி மன்றம் இந்த உத்தவைப் பிறப்பித்துள்ளது என்று சொல்லப்படுகிறது.
இந்த வன்முறைகளின்போது பதிவான 185 புகார்களில், 121 புகார்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சரியான விசாரணைகள் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று இவ்வமைப்பினர் கூறியதைத் தொடர்ந்து, ஒடிஸ்ஸா முதல்வர் Naveen Patnaik மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் விளக்கம் அளிக்கவேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளது.
வன்முறைகளுக்குப் பலியான கிறிஸ்தவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு நம்பிக்கை தரும் ஒரு பதிலாக, உச்சநீதி மன்றத்தின் இந்த ஆணை அமைந்துள்ளது என்று அகில உலக இந்தியக் கிறிஸ்தவர்கள் அமைப்பின் தலைவர் Sajan George கூறியுள்ளார்.
7. அயர்லாந்தில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிக அளவு கூடியுள்ளது
அக்.22,2012.
அயர்லாந்தில் இதுவரை இல்லாத அதிக அளவு கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை
கூடியுள்ளது என்று ஓர் அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரம் கூறியுள்ளது.
அயர்லாந்து அரசின் மத்திய புள்ளிவிவர மையம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின்படி, தற்போது அந்நாட்டில் 38 இலட்சத்து 60 ஆயிரம் கத்தோலிக்கர்கள் உள்ளனர் என்றும், இது அந்நாட்டின் அனைத்து மக்கள் தொகையில் 84 விழுக்காடு என்றும் தெரிய வந்துள்ளது.
1961ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணிப்பின்போது 96 விழுக்காடு கத்தோலிக்கர்கள் இருந்தனர் என்றும், தற்போது ஏனைய மதத்தினரின் வருகையால் இந்த விழுக்காடு 84ஆக்க் குறைந்துள்ளது என்றும் இவ்வறிக்கை கூறியது.
அண்மைக் காலங்களில் அயர்லாந்து கத்தோலிக்கத் திருஅவை சந்தித்துள்ள பல்வேறு பிரச்சனைகளையும் கடந்து, இன்னும்
பெரும்பான்மையானவர்கள் தங்களைக் கத்தோலிக்கர்கள் என்று அறிவிப்பது
ஆச்சரியத்தை வரவழைக்கிறது என்று புள்ளிவிவர மையத்தின் அலுவலர் David Quinn கூறினார்.
8. இலங்கையில், ஒன்பது லட்சம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதற்கு அமெரிக்க விருது
அக்.22,2012. இலங்கையில், விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற உள்நாட்டுப் போர் 2009ம் ஆண்டில் முடிவுற்றபின், ஒன்பது லட்சம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.
இந்தக் கடின பணியை மேற்கொண்ட குழுவுக்கு, அமெரிக்காவில், "மார்ஷல் லெகசி இன்ஸ்டிடியூட்' (Marshall Legacy Institute) என்ற நிறுவனம், விருது வழங்கி கௌரவித்தது.
25 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த சண்டையின் போது, விடுதலைப் புலிகள், இராணுவத்தை தடுக்க, தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில், கண்ணி வெடிகளை புதைத்தனர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த, 5,000 சதுர கி.மீ., பரப்பளவில், 80 சதவீத கண்ணி வெடிகள், அகற்றப்பட்டு விட்டதாக, இலங்கை இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
வாகனங்களை சிதைக்கும், ஐந்து இலட்சம் கண்ணி வெடிகளும், பீரங்கிகளை தகர்க்கும், 1,500 கண்ணி வெடிகளும், தொட்ட உடனே வெடிக்கும், நான்கு இலட்சம் கண்ணி வெடிகளும் அகற்றப்பட்டுள்ளன. கண்ணி வெடி அகற்றும் குழுவில், இந்திய நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.
உயிருக்கு அச்சுறுத்தலான, இந்த கடினப் பணியை செய்ததற்காக, டி.கே.என்.ரோகன் தலைமையிலான கண்ணி வெடி அகற்றும் குழுவுக்கு, அமெரிக்காவில், "மார்ஷல் லெகசி இன்ஸ்டிடியூட்' என்ற நிறுவனம், விருது வழங்கி கௌரவித்தது.
அத்துடன், கண்ணி வெடிகளைக் கண்டறியும் பயிற்சி பெற்ற, 26 மோப்ப நாய்களும், இந்த குழுவுக்கு, அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
9. இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த செங்கற் கட்டடக் கலையின் நுட்பங்கள்
அக்.22,2012. பழமைவாய்ந்த செங்கற் கட்டடக் கலையின் நுட்பங்களை, இன்றையக் கட்டடங்களில் பயன்படுத்தினால், காலத்தால் அழியாத உறுதியான கட்டடங்களை உருவாக்கமுடியும் என, தொல்லியல் அறிஞர் சத்தியமூர்த்தி கூறினார்.
பழமைவாய்ந்த செங்கற் கட்டட கலை பற்றிய கருத்தரங்கம் தொல்லியல் துறையில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய, தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர், முனைவர். சத்தியமூர்த்தி, பேசியபோது, சங்க காலம் முதலே, செங்கற்களை கொண்டு கட்டடங்கள் கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று கூறினார்.
கட்டடங்களுக்குத் தகுந்த வகையில் செங்கற்கள் தயாரிக்கப்பட்டு கட்டுவதே பண்டைய தொழில் நுட்பம். இதனால், பல வடிவங்களில், விதவிதமான செங்கற்கள் தயாரிக்கப்பட்டன என்றும் அவர் விளக்கினார்.
தற்போது, நாம் பயன்படுத்தும் செங்கற்களை, கட்டடத்தின் வளைவு பகுதிகளுக்கு ஏற்ப, உடைத்து தான் பயன்படுத்துகிறோம். இம்முறையினால் தான், வீடுகள் உறுதி தன்மையின்றி, விரிசல் விடுகின்றன என்றும், பண்டைய செங்கற் கட்டடக் கலையின் நுணுக்கங்களை, இன்றையக் கட்டடங்களில் பயன்படுத்தினால், அழியாத பல கட்டடங்களை உருவாக்கலாம். இவ்வாறு, சத்தியமூர்த்தி எடுத்துரைத்தார்.
No comments:
Post a Comment