Monday 22 October 2012

Catholic News in Tamil - 20/10/12


1. இராட்சிங்கர் இறையியல் விருதை வழங்கினார் திருத்தந்தை

2. பெய்ரூட்டில் குண்டு வெடிப்பில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்குத் திருத்தந்தை அனுதாபம்

3. உலக ஆயர்கள் மாமன்றத்தில் : கிறிஸ்தவர்கள் நம்பிக்கையால் பயத்தை மேற்கொள்கின்றனர்
4. ஏழு அருளாளர்களைப் புனிதர்கள் என அறிவிக்கவுள்ளார் திருத்தந்தை

5. மங்கோலியாவில் நம்பிக்கை ஆண்டு

6. உலகில் அடிமைத் தொழிலாளர் எண்ணிக்கை முன்பிருந்ததைவிட தற்போது அதிகம்

7. வறுமையில் 80 இலட்சம் இந்தியர்கள்:ஐ.நா

------------------------------------------------------------------------------------------------------

1. இராட்சிங்கர் இறையியல் விருதை வழங்கினார் திருத்தந்தை

அக்.20,2012. திருஅவைத் தந்தையர்யியலில் புகழ்பெற்ற அமெரிக்க இயேசு சபை அருள்தந்தை Brian E. Daley, ப்ரெஞ்சு மெய்யியல் மற்றும் கலாச்சார வரலாற்றுப் பேராசிரியர் Rémi Brague ஆகிய இருவருக்கும் இவ்வாண்டுக்கான இராட்சிங்கர் இறையியல் விருதை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் நடைபெற்ற இவ்விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஏறக்குறைய 400 பேருக்கு உரையாற்றிய திருத்தந்தை, இக்காலத்தில் திருஅவைக்குத் தேவையான இரண்டு முக்கிய கூறுகளில் இவ்விருவரும் ஈடுபட்டுள்ளனர் என்று பாராட்டினார்.
உண்மையான கத்தோலிக்க இறையியல் சார்ந்த முயற்சிகளில் இறைவன் பற்றிய அறிவுசார்ந்த கோட்பாட்டுக்கும், வாழ்வில் ஏற்படும் இறையனுபவத்துக்கும் இடையேயுள்ள ஆழமான மற்றும் அவசியமான தொடர்பு குறித்துப் பேசினார் திருத்தந்தை.
இறையியலுக்கும் கலாச்சாரத்துக்கும் இடையே தொடர்பை உருவாக்குவதற்கு அயராது உழைப்பவர்க்கென வழங்கப்படும் நொபெல் இறையியல் விருதுஎன அழைக்கப்படும் இவ்விருதை, “ஜோசப் இராட்சிங்கர் 16ம் பெனடிக்ட்என்ற வத்திக்கான் நிறுவனம் வழங்கி வருகிறது.
பிரான்சில் 1947ம் ஆண்டு பிறந்த Rémi Brague , நான்கு குழந்தைகளுக்குத் தந்தையாவார். இவர் ஒரு மெய்யியல் பேராசிரியர் மற்றும் இயேசு சபை அருள்தந்தை Brian E. Daley  ஓர் இறையியல் பேராசிரியர் ஆவார்.
நூல்களை வெளியிடுவதிலும் அறிவியல் ஆய்வுகளிலும் சிறப்பாகப் பங்காற்றி வரும் வல்லுனர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
87 ஆயிரம் டாலர் ரொக்கப் பரிசைக் கொண்ட இவ்விருது 2011ம் ஆண்டில் முதன்முறையாக வழங்கப்பட்டது.


2. பெய்ரூட்டில் குண்டு வெடிப்பில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்குத் திருத்தந்தை அனுதாபம்

அக்.20,2012. லெபனன் தலைநகர் பெய்ரூட்டில் இவ்வெள்ளி பிற்பகலில் இடம்பெற்ற சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பங்களுக்குத் திருத்தந்தை தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் செபங்களையும் தெரிவித்துள்ளார்.
லெபனன் மாரனைட்ரீதி முதுபெரும் தலைவர் Béchara Boutros Raïக்குத் திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில் திருத்தந்தையின் செபங்களும் அனுதாபங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மக்களுக்குப் பெருந்துயரங்களை ஏற்படுத்தும் வன்முறைக்கு எதிராக லெபனன் நாட்டுக்கான அண்மைத் திருப்பயணத்தின்போது கண்டனம் தெரிவித்தது போல, இப்போது இடம்பெற்றுள்ள இந்த வன்முறைக்குத் திருத்தந்தை கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும், லெபனனிலும் மத்திய கிழக்குப் பகுதி முழுவதிலும் அமைதியும் ஒப்புரவும் ஏற்பட வேண்டுமென மீண்டும் வலியுறுத்துவதாகவும் அச்செய்தி கூறுகிறது.
பெய்ரூட்டில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் Ashrafiya பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தபோது அங்கு நின்றிருந்த காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு திடீரென வெடித்துச் சிதறியதில் எட்டுப்பேர் உயிரிழந்தனர் மற்றும் 78க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும், இந்தக் குண்டுவெடிப்பு வன்முறை அறிவற்ற செயல் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தியும் இவ்வெள்ளியன்று கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை இத்தாக்குதலில் லெபனனின் உள்நாட்டுப் பாதுகாப்புப் படைகளின் புலனாய்வுத் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போர் காரணமாக லெபனனிலும் பதட்டம் அதிகரித்திருப்பதும், கடந்த நான்கு ஆண்டுகளில் லெபனனில் இடம்பெற்றிருக்கும் மிகப்பெரிய கார் குண்டுத் தாக்குதல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வன்முறைக்குச் சிரியா காரணம் என, லெபனனிலுள்ள சிரியாவுக்கு எதிரான அரசியல்வாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.


3. உலக ஆயர்கள் மாமன்றத்தில் : கிறிஸ்தவர்கள் நம்பிக்கையால் பயத்தை மேற்கொள்கின்றனர்

அக்.20,2012. கிறிஸ்தவர்கள், மனித இதயத்தில் கடவுளுக்கானத் தாகம் இருப்பதை உணர்ந்தவர்களாய், நம்பிக்கையால் பயத்தை மேற்கொண்டு, இவ்வுலகில் துணிவுடன் நற்செய்தியை எடுத்துச் செல்கின்றனர் என்பது உலக ஆயர்கள் மாமன்றத்தின் இறுதியில் வெளியிடப்படும் முன்வரைவுச் செய்தியின் சுருக்கம் எனக் கூறப்பட்டுள்ளது.
இச்சனிக்கிழமை காலை தொடங்கிய, புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் 18வது பொது அமர்வில் இந்த முன்வரைவு சமர்ப்பிக்கப்பட்டு அது குறித்த கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்றன.
இந்தக் கருத்துப் பரிமாற்றங்களை வைத்து இச்செய்தியில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, புதிய செய்தி வரைவு ஒன்று வருகிற வெள்ளிக்கிழமையன்று வாக்கெடுப்புக்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்வுதரும் சுத்தமான நீரால் நிரப்பப்படுவதற்குக் காத்திருக்கும் ஒரு காலியான தண்ணீர் ஜாடி என்பது, இந்தச் செய்தியின் உருவகமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த உலக ஆயர்கள் மாமன்றத்தின் மூன்று தலைவர் பிரதிநிதிகளில் ஒருவராகிய கர்தினால் ROBLES தலைமையில் தொடங்கிய இச்சனிக்கிழமை காலை பொது அமர்வில் 250 மாமன்றத் தந்தையர் கலந்து கொண்டனர்.


4. ஏழு அருளாளர்களைப் புனிதர்கள் என அறிவிக்கவுள்ளார் திருத்தந்தை

அக்.20,2012. பல்வேறு நாடுகளில் பல்வேறு காலங்களில் வாழ்ந்த ஏழு அருளாளர்களை இஞ்ஞாயிறன்று புனிதர்கள் என அறிவிக்கவுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இந்த அருளாளர்களில் நான்கு பேர் பெண்கள் மற்றும் மூன்று பேர் ஆண்கள். இவர்களில், 1896ம் ஆண்டில் மடகாஸ்கரில் கொல்லப்பட்ட பிரான்ஸ் நாட்டு இயேசு சபை அருள்தந்தை Jacques Berthieu மற்றும் Guam தீவில் 1672ம் ஆண்டில் கொல்லப்பட்ட பிலிப்பீன்ஸ் நாட்டு 17 வயது வேதியர் Peter Calungsod ம் மறைசாட்சிகள்.
இன்னும் இரண்டு அருளாளர்கள் கல்விக்கென தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்கள். 1911ம் ஆண்டில் இறந்த இஸ்பெயின் நாட்டு அன்னை Carmen Sallés, அமலமரி மறைபோதகச் சபையை ஆரம்பித்தவர். இவர் பெண்களுக்குக் கல்வி அளிப்பதற்குத் தனது வாழ்வை அர்ப்பணித்தவர். 1913ம் ஆண்டில் இறந்த இத்தாலியரான அருள்பணி Giovanni Piamarta Battista ஓரங்கட்டப்பட்ட இளைஞர்களுக்குக் கல்வி வழங்குவதில் அக்கறை எடுத்தவர்.
இன்னும், அமெரிக்கப் பழங்குடிப் பெண்ணான Kateri Tekakwitha, ஹவாய்த் தீவில் தொழுநோயாளர் மத்தியில் பணிசெய்த அன்னை Marianne Cope, தனது வாழ்வில் அதிகக் காலம் நோயால் துன்புற்ற ஜெர்மனியின்  Anna Schäffer ஆகிய மூன்று அருளாளர்களும் தங்களது துன்பங்களை கடவுளுக்காகத் தாங்கிக் கொண்டவர்கள்.
உலக மறைபரப்பு தினமான இஞ்ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருப்பலியைத் தொடங்குவதற்கு முன்னர் இவர்கள் எழுவரையும் புனிதர்கள் என அறிவிப்பார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.


5. மங்கோலியாவில் நம்பிக்கை ஆண்டு

அக்.20,2012. நம்பிக்கை ஆண்டு, மங்கோலியாவின் இளம் திருஅவைக்குத் திருமறைக்கல்வியைப் பகிர்ந்து கொள்வதற்கு ஒரு சவாலாகவும், ஓர் அழைப்பாகவும் அமைந்துள்ளது என்று தென்கொரியத் திருப்பீடத் தூதரும் மங்கோலியாவின் Ulaanbaatar ஆயருமான Wenceslao Padilla கூறினார்.
மங்கோலியத் தலைநகரான Ulaanbaatarவில் வேதியர்களுக்கு ஒருமாத மறைக்கல்விப் பயிற்சி வகுப்பை ஆரம்பித்து வைத்த ஆயர் Padilla, அந்நாட்டுக்கு மறைக்கல்வி ஆசிரியர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள் என்று கூறினார்.
மங்கோலியாவின் Ulaanbaatarவில் 1992ம் ஆண்டில் முதல் மறைப்பணித்தளம் தொடங்கப்பட்டது. மரியின் தூய இதய சபையைச் சார்ந்த இரண்டு அருள்சகோதரர்களுடன் அங்குச் சென்று மறைப்பணியை ஆரம்பித்தார் ஆயர் Padilla.
தற்போது அந்நாட்டில் 18 நாடுகளைச் சேர்ந்த 64 மறைபோதகர்கள் பணியாற்றுகின்றனர். 415 கத்தோலிக்கர்கள் உள்ளனர்.
கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவிலுள்ள மங்கோலியாவின் தலைநகர் Ulaanbaatarவில் அந்நாட்டின் 45 விழுக்காட்டு மக்கள் வாழ்கின்றனர்.


6. உலகில் அடிமைத் தொழிலாளர் எண்ணிக்கை முன்பிருந்ததைவிட தற்போது அதிகம்

அக்.20,2012. உலகில் தற்போது 2 கோடியே 70 இலட்சம் பேர் அடிமைத் தொழிலாளிகளாய் இருப்பதாக Free the Slaves என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆப்ரிக்கக் கண்டத்திலிருந்து அமெரிக்காவுக்கும், கரீபியன் தீவுகளுக்கும் அடிமைகளாக ஏற்றுமதியானவர்களின் மொத்த எண்ணிக்கையைவிட இது இரண்டு மடங்குக்கும் அதிகம் என்று இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சொத்துக்களை அடமானம் வைத்துவிட்டு, கள்ளத்தோணி ஏறி வெளிநாட்டுக்கு வந்த பின்னர், பயண ஆவணங்களையும் பறிகொடுத்த நிலையில், வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக ஓர் அடுப்படியில் ஓய்வு உறக்கம் இன்றி வேலைபார்க்கும் வெளிநாட்டுத் தொழிலாளியும்கூட இந்தக் காலத்து அடிமைதான் என்கிறது இந்த அமைப்பு.
16ம் நூற்றாண்டு தொடங்கி 19ம் நூற்றாண்டின் ஆரம்பம்வரை ஆப்ரிக்காவிலிருந்து பிற கண்டங்களுக்கு கப்பல்களில் ஏற்றி அனுப்பப்பட்ட மக்களின் மொத்த எண்ணிக்கை ஏறக்குறைய ஒரு கோடியே 25 இலட்சம் என்று மதிப்பிடப்படுகிறது.
ஆகவே தற்போதைய அடிமைகளின் எண்ணிக்கை இதனைவிட இரு மடங்குக்கும் அதிகம் என்று தெரியவருகிறது.


7. வறுமையில் 80 இலட்சம் இந்தியர்கள்:ஐ.நா

அக்.20,2012. உணவுப் பொருள்களின் கடுமையான விலையேற்றம் காரணமாக 80 இலட்சம் இந்தியர்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
விவசாய உற்பத்தி பாதிப்பு, உரங்களின் விலை ஏற்றம், விவசாய நிலங்கள் போதிய அளவில் இல்லாதது, வறட்சி, எண்ணெய்விலை ஏற்றம் உள்ளிட்டவைகளும் இந்த வறுமை நிலைக்கு முக்கிய காரணங்கள் என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மைக் கழகம் தெரிவித்துள்ள தகவலின்படி, ஒரு குடும்பத்தின் வருமானத்தில் 65 விழுக்காட்டுக்கும் அதிகமான பணம் உணவிற்காகச் செலவிடப்படுகிறது.
பங்களாதேஷ், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் உணவுப் பொருள்களின் விலை குறைவாகவே உள்ளதாகவும், அதனால் அவர்கள் உணவிற்காகச் செலவழிக்கும் தொகை குறைவானது எனவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...