Friday, 19 October 2012

Catholic News in Tamil - 15/10/12

1. திருத்தந்தை : செல்வர்கள் இறையாட்சியில் நுழைவது கடினமாக இருந்தாலும் அது இயலக்கூடியதே

2. மாமன்றத் தந்தையர் மாலி நாட்டில் அமைதிக்கு அழைப்பு

3. ஆயர்கள் மாமன்றத்தில் தவாவோ பேராயர் : பிலிப்பீன்சில் அடிப்படைக் கிறிஸ்தவக் குழுக்களின் வளர்ச்சி

4. உரோமையில் Taizé கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டம்

5. உலகில் கத்தோலிக்கர் அதிகரித்து வருகின்றனர்

6. செபவழிபாட்டில் ஈடுபட்ட ஏழு கிறிஸ்தவர்கள் இரானில் கைது

7. மிசோராமில் சிறுவர்கள் பெருமளவில் போதைப்பொருள்களுக்கு அடிமை

8. போருக்குப் பின்னர் இலங்கையில் போதைப்பொருள் விநியோகம் அதிகரிப்பு
9. பொருளாதாரத்திற்கு நொபெல் விருது அறிவிப்பு  

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : செல்வர்கள் இறையாட்சியில் நுழைவது கடினமாக இருந்தாலும் அது இயலக்கூடியதே

அக்.15,2012. இறையாட்சிக்குப் பணிபுரிவதற்குச் செல்வங்கள் தடைகளை முன்வைக்காவிட்டாலும், மனித சமுதாயத்தின் உள்ளார்ந்த தேவைகளை நிறைவேற்றும் வழிகளில் செல்வம் செய்ய இயலாததை கிறிஸ்துவின் அன்பு நிறைவேற்றுகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏறத்தாழ முப்பதாயிரம் விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை நிகழ்த்திய திருத்தந்தை, நிறைய செல்வங்கள் வைத்திருக்கும் மனிதரின் இதயத்தைக் கடவுளால் வெல்ல முடியும் என்றும் கூறினார்.
கிறிஸ்துவைப் பின்செல்ல விரும்பிய இளம் செல்வர் ஒருவர் முகம்வாடி வருத்தத்தோடு திரும்பிச்சென்றதை விளக்கும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மூவேளை செப உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
கடவுளின் கட்டளைகள் அனைத்தையும் இளமைமுதல் கடைப்பிடித்துவந்த அந்த இளைஞர் உண்மையான மகிழ்ச்சியைக் கண்டடையாததால் இயேசுவிடம் வந்து நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டார் என்றும் திருத்தந்தை கூறினார்.
ஒவ்வொருவரையும் போலவே இந்தச் செல்வரும் ஒருபக்கம் நிலைவாழ்வின் முழுமை நோக்கிக் கவரப்பட்டார், மறுபக்கம், தனது செல்வத்தைச் சார்ந்து வாழ்ந்த அந்த இளைஞர் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன்மூலம் நிலைவாழ்வை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தார், எனவேதான் தனக்கு உள்ளவற்றையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டுத் தன்னைப் பின்செல்லுமாறு இயேசு சொன்னபோது அதைப் புறக்கணித்தார் என்றும் திருத்தந்தை கூறினார்.
செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட, ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது என்று எச்சரித்த திருத்தந்தை, இது மனிதரால் இயலாதது, ஆனால் கடவுளுக்கு எல்லாம் இயலக்கூடியதே என்றும் கூறினார்.

2. மாமன்றத் தந்தையர் மாலி நாட்டில் அமைதிக்கு அழைப்பு

அக்.15,2012. மாலி நாட்டில் தற்போதைய இடைக்கால அரசுக்கும் புரட்சிக்குழுவுக்கும் இடையே இடம்பெற்றுவரும் சண்டை மதத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது என்று இத்திங்கள் காலை பொது அமர்வில் 13வது உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர் கூறினர்.
ஆப்ரிக்காவின் மாலி நாடு தற்போது எதிர்கொள்ளும் சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகள், புதிய நற்செய்தி அறிவிப்புப்பணிக்குத் தடைகளாக இருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டிய மாமன்றத் தந்தையர், அந்நாட்டுக்கு அமைதி மற்றும் உரையாடலின் முக்கியத்துவம் குறித்துப் பேசினர்.
ஆப்ரிக்காவைத் தவிர, ஐரோப்பாவிலும், உலகமயமாக்கல் இரத்தம்சிந்தாத புதியவடிவ மறைசாட்சித்தன்மைகளை உருவாக்கியிருக்கின்றன, கடவுள் மறுக்கப்பட்டவராக மட்டுமல்லாமல், அறியப்படாதவராகவும் இருக்கிறார் என்றும் மாமன்றத் தந்தையர் பேசினர்.
பொதுநிலை விசுவாசிகளின் உருவாக்குதல், குடும்பங்களைப் பாதுகாத்தல், பல்வேறு கிறிஸ்தவ மற்றும் பல்சமயங்களுக்கு இடையே உரையாடலை ஊக்குவித்தல் போன்ற தலைப்புக்களில் இம்மாமன்றத் தந்தையர் உரையாற்றினார்கள்.
திருஅவையின் மறைவல்லுனராகிய புனித அவிலாத் தெரேசாள் திருவிழாவாகிய இத்திங்கள் காலை திருத்தந்தையின் முன்னிலையில் செபத்துடன் தொடங்கிய 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் 11வது பொது அமர்வில் 251 மாமன்றத் தந்தையர் கலந்து கொண்டனர்.
ஹாங்காங் ஆயர் கர்தினால் John TONG HON தலைமையில் ஆரம்பித்த இந்தப் பொது அமர்வில் குரோவேஷியாவின் Zagreb பேராயர் கர்தினால் Josip BOZANI, திருப்பீட குடியேற்றதாரர் மர்றும் புலம்பெயர்வோர்க்கான அவைத் தலைவர் கர்தினால் Antonio Maria VEGLIÒ, இத்தாலியின் San Marino-Montefeltro ஆயர் Luigi NEGRI போன்ற மாமன்றத் தந்தையர் உரையாற்றினர்.
இந்தப் பொது அமர்வின் இறுதியில் உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச்செயலர் பேராயர் நிக்கொலா எத்ரோவிச், ஆயர் : உலகின் நம்பிக்கைக்கு இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியின் பணியாளர் என்ற தலைப்பில் நடந்த 10வது உலக ஆயர்கள் மாமன்றம் குறித்த தொகுப்பு ஒன்றைத் திருத்தந்தையிடம் கொடுத்தார். திருத்தந்தையும் அனைவருக்கும் ஒவ்வொரு பிரதியை வழங்கினார். 

3. ஆயர்கள் மாமன்றத்தில் தவாவோ பேராயர் : பிலிப்பீன்சில் அடிப்படைக் கிறிஸ்தவக் குழுக்களின் வளர்ச்சி

அக்.15,2012. இச்சனிக்கிழமை மாலை இடம்பெற்ற 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் 10வது பொது அமர்வில் 222 மாமன்றத் தந்தையர் கலந்து கொண்டனர்.
Kinshasa பேராயர் கர்தினால் Laurent MONSENGWO PASINYA தலைமையில் நடைபெற்ற இப்பொது அமர்வில் பிலிப்பீன்சின் Davao பேராயர் Romulo G. VALLES உட்பட 15 மாமன்றத் தந்தையர் உரையாற்றினர்.
இம்மான்றத்திற்கெனத் தயாரிக்கப்பட்டத் தொகுப்பில் பங்குகளில் அடிப்படைக் கிறிஸ்தவக் குழுக்கள் உருவாக்கப்படுவதன் நேர்த்தியான அனுபவம் மற்றும் அவைகளின் வளர்ச்சி குறித்துச் சொல்லப்பட்டிருந்தது என்று கூறிய Davao பேராயர் Romulo, பிலிப்பீன்சின் Mindanao மாநிலத்தில் இந்தக் கிறிஸ்தவக் குழுக்களின் வளர்ச்சியை அதிகம் காண முடிகின்றது என்றுரைத்தார். 
இந்த அடிப்படைக் கிறிஸ்தவக் குழுக்களின் உதவியுடன் புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்றும் கூறினார் பேராயர் ரோமுலோ.

4. உரோமையில் Taizé கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டம்

அக்.15,2012. பிரான்ஸ் நாட்டு Taizé கிறிஸ்தவ ஒன்றிப்புக்குழுவின் ஐரோப்பிய இளையோர் மற்றும் வயதுவந்தோர்க்கான கூட்டம் வருகிற டிசம்பர் 28 முதல் சனவரி 2 வரை உரோமையில் நடைபெறவிருக்கின்றது.
இக்கூட்டத்தின்போது திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சந்திப்பதும் இடம்பெறும்.
கத்தோலிக்கர், ஆர்த்தடாக்ஸ் மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபையினரைக் கொண்ட இந்த Taizé கிறிஸ்தவ ஒன்றிப்புக்குழு, உலகம் போரினால் பிளவுண்டிருந்த சமயம் 1940ம் ஆண்டில் சகோதரர் ரோஜெர் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.

5. உலகில் கத்தோலிக்கர் அதிகரித்து வருகின்றனர்

அக்.15,2012. 2010ம் ஆண்டு இறுதி வரை உள்ள புள்ளிவிவரங்களின்படி உலகில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டைவிட 0.04 விழுக்காடு அதிகரித்து உலக மக்கள்தொகையில் 17.46 விழுக்காடாக இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருஅவை புள்ளிவிவரப் புத்தகத்தை மேற்கோள்காட்டி இதனைத் தெரிவித்துள்ள ஃபிதெஸ் செய்தி நிறுவனம், உலகில் ஆயர்களின் எண்ணிக்கை 2010ம் ஆண்டின் இறுதியில் 5,104 ஆக இருந்தது எனவும் தெரிவிக்கிறது.
உலகில் குருக்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 12 ஆயிரத்து 236 ஆக இருந்தது எனவும், இதில் 2,77,009 பேர் மறைமாவட்ட குருக்கள் எனவும், 1,35,227 பேர் துறவு சபை குருக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைமாவட்ட குருக்களின் எண்ணிக்கை மிகச்சிறிய அளவில் அதிகரித்து வரும் வேளை, துறவறக்குருக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் திருஅவை புள்ளிவிவர ஏட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டில் பெண்துறவறத்தாரின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டைவிட 7,436 குறைந்து 7 இலட்சத்து 21 ஆயிரத்து 935 ஆக இருந்தது எனக்கூறும் திருஅவை ஏடு, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஓசியானியாவில் பெண்துறவுசபைகளில் இணைவோரின் எண்ணிக்கை குறைந்து வரும் வேளையில், ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் இது அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கிறது.
உலகில் பொதுநிலை மறைபோதகர்கள் மற்றும் வேதியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. செபவழிபாட்டில் ஈடுபட்ட ஏழு கிறிஸ்தவர்கள் இரானில் கைது

அக்.15,2012. இரானின் Shiraz என்ற நகரில் கூட்டுச்செபத்தில் ஈடுபட்டிருந்த குழுவிலிருந்து 7 கிறிஸ்தவர்களைக் கைது செய்துள்ளது அந்நாட்டுப் பாதுகாப்புத்துறை.
செபவழிபாடு நடந்துகொண்டிருந்த கிறிஸ்தவ வீடு ஒன்றிற்குள் புகுந்த இரான் பாதுகாப்புத்துறை, வயதானவர்களை எச்சரித்து அனுப்பிவிட்டு ஏனைய ஏழுபேரை கைது செய்து உளவுத்துறையின் தடுப்புக்காவல் மையத்தில் வைத்துள்ளது.
அண்மைக் காலங்களில் கிறிஸ்தவர்கள் இரானில் கைதுச்செய்யப்படுவது அதிகரித்து வருவதாகச் செய்தி நிறுவனங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

7. இந்தியாவின் மிசோராமில் சிறுவர்கள் பெருமளவில் போதைப்பொருள்களுக்கு அடிமை

அக்.15,2012. இந்தியாவின் மிசோராமில் போதைப்பொருள்களின் பிடியிலிருந்து சிறார்கள் காப்பாற்றப்படவேண்டிய தேவை உள்ளதாகவும், 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் சிறார்கள்வரை போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும், சிறார் உரிமை பாதுகாப்பிற்கான தேசிய அவையின் பிரதிநிதி கூறினார்.
சிறார்கள் போதைப்பொருளுக்கு அடிமையாக இருப்பதும், போதைப்பொருள்கள் எளிதாக கிட்டுவதும் மிசோரோம் மாநிலத்தில் மிகப்பெரும் பிரச்சனையாக இருப்பதாக தெரிவித்தார் அப்பிரதிநிதி மிஷ்ரா.
10 வயதிலேயே சிறார்கள் தங்கள் உடலில் ஊசி மூலம் போதைமருந்தை ஏற்றும் பழக்கம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் செயலல்ல, இது குறித்து மாநில அரசிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது எனவும் கூறினார் அவர்.
ஏற்கனவே மிஸ்ரா, அஸ்ஸாம், திரிபுரா மற்றும் மணிப்பூரில் போதைப்பொருள் பிரச்சனை குறித்து ஆராயும்நோக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

8. போருக்குப் பின்னர் இலங்கையில் போதைப்பொருள் விநியோகம் அதிகரிப்பு
அக்.15,2012. இலங்கையில் போர் நிறைவடைந்த மூன்று ஆண்டுகளில் சட்ட விரோத போதைப்பொருள் விநியோக நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் ஜுன் மாதம் வரையில் மட்டும்இவ்வாறு போதைப் பொருட்களைக் கடத்த முயன்ற 19 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் 40 ஆயிரம் பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
போர் நிறைவடைந்த பின்னர், போதைப்பொருள் விநியோகம் அதிகரித்துள்ளதாகக் கூறும் இத்திணைக்களம், இந்த ஆண்டில் மட்டும் 77 இலட்சம் டாலர்கள் மதிப்புடைய போதைப் பொருட்கள் பல்வேறு சமயங்களில் மீட்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது.

9. பொருளாதாரத்திற்கு நொபெல் விருது அறிவிப்பு  

அக்.15,2012. நொபெல் பொருளாதார விருது அமெரிக்கர்களான ஆல்வின் ஈரோத், லாய்டு எஸ்.ஷேப்லே ஆகிய இருவருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு நொபெல் விருது வழங்கப்பட்டுவரும் நிலையில், ஏற்கனவே அறிவியல், வேதியல், இலக்கியம், அமைதிப்பணி உள்ளிட்ட துறைகளுக்கான நொபெல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்களுடைய புதிய பொருளாதாரக் கொள்கைகள் மூலம் நலஆதரவு மற்றும் கல்வியில் நல்தாக்கங்களைக் கொண்டுவந்ததற்காக 89 வயது லாய்டு எஸ்.ஷேப்லே, 60 வயது ஆல்வின் ஈ.ரோத் ஆகிய இருவருக்கும் ‌பொருளாதாரத்திற்கான நொபெல் விருது வழங்கப்படுவதாக இவ்விருது அமைப்பு அறிவித்துள்ளது.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...