1. திருத்தந்தை : வத்திக்கானின் கலை, உலகுக்கு ஒருவகை உவமையாக இருக்கின்றது
2. உலக ஆயர்கள் மாமன்றத்தின் 20வது பொது அமர்வு
3. ஆயர்கள் மாமன்றத் தந்தையரின் செய்தி : புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி இன்றைய உலகுக்கு அவசரத் தேவை
4. சீனாவுக்கும் திருப்பீடத்துக்கும் இடையே பலனுள்ள உரையாடல் இடம்பெறும் நம்பிக்கை
5. சிரியாவிலுள்ள டிராப்பிஸ்ட் அருள்சகோதரிகள் நம்பிக்கையின் அடையாளம்
6. சிரியாவில் நான்கு நாள் போர் நிறுத்தம்
7. புதுக்குடியிருப்பில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளவர்களின் நிலை
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : வத்திக்கானின் கலை, உலகுக்கு ஒருவகை உவமையாக இருக்கின்றது
அக்.26,2012. வத்திக்கானின் கலைப் பாரம்பரியம் உலகுக்கு ஒருவகை உவமையாக இருக்கின்றது, இது வழியாக, உலகின் பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சார மனிதர்களிடம் திருத்தந்தையரால் பேச முடிகின்றது எனத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
“கலையும் நம்பிக்கையும் : வத்திக்கானில் அழகு” என்ற தலைப்பில் வத்திக்கான் அருங்காட்சியகம் பற்றிய போலந்து திரைப்படத்தை இவ்வியாழன் மாலையில் பார்த்த பின்னர் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
வத்திக்கான் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பொருள்களிலும் வெளிப்படும் கலைக்கும்
நம்பிக்கைக்கும் இடையே இருக்கும் தொடர்பு குறித்து விளக்குவதற்கு
எடுக்கப்பட்ட முதல் முயற்சியாக இத்திரைப்படம் இல்லாவிடினும், நம்பிக்கை ஆண்டின் தொடக்கத்தில் இத்திரைப்படம் வெளிவருவது சிறப்பான மதிப்பைப் பெறுகிறது என்றும் கூறினார் திருத்தந்தை.
உங்களுக்கு இறையாட்சியின் மறையுண்மைகள் விளக்கப்பட்டுள்ளன, மற்றவர்கள் இதனை உவமைகள் மூலம் புரிந்து கொள்வார்கள் என, இயேசு தமது சீடர்களுக்குக் கூறியதை இத்திரைப்படம் நினைவுகூர வைக்கின்றது எனவும் திருத்தந்தை கூறினார்.
2. உலக ஆயர்கள் மாமன்றத்தின் 20வது பொது அமர்வு
அக்.26,2012. புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் 20வது பொது அமர்வு இவ்வெள்ளி காலை தொடங்கியது.
258 மாமன்றத் தந்தையர் பங்கு பெற்ற இப்பொது அமர்வில், இந்த மாமன்றத்தின் இறுதியில் வெளியிடப்படும் செய்தி சமர்ப்பிக்கப்பட்டு அது குறித்த வாக்கெடுப்பும் நடைபெற்றது.
“இறைமக்களுக்குச் செய்தி” எனும் தலைப்பிலான இச்செய்தி, இத்தாலியம், ப்ரெஞ்ச், ஆங்கிலம், ஜெர்மானியம், இஸ்பானியம் ஆகிய மொழிகளில் சமர்ப்பிக்கப்பட்டது. பலத்த கரகோஷங்களுடன் வரவேற்பையும் அது பெற்றது.
மேலும், இம்மாமன்ற
விரிவுரையாளர் தலைமையில் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகள் குறித்த
ஆய்வுகளும் இடம்பெற்றன. 17 பேர் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து
கொண்டனர்.
இப்பரிந்துரைகளின் இறுதித் தொகுப்பு சமர்ப்பிக்கப்படுவது, இவ்வெள்ளி மாலையில் இடம்பெறும் 21வது பொது அமர்வின் கால அட்டவணையில் உள்ளது.
3. ஆயர்கள் மாமன்றத் தந்தையரின் செய்தி : புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி இன்றைய உலகுக்கு அவசரத் தேவை
அக்.26,2012. புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி இன்றைய உலகுக்கு அவசரத் தேவை எனவும், கிறிஸ்தவர்கள், நம்பிக்கையால் பயத்தை மேற்கொண்டு,
அமைதியுடன்கூடிய துணிச்சலுடன் இவ்வுலகில் நற்செய்தியை அறிவிக்க
வேண்டுமெனவும் உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையரின் செய்தி அழைப்பு
விடுக்கிறது.
“இறைமக்களுக்குச் செய்தி” எனும் தலைப்பில் 13வது உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர், உலகின் அனைத்து இறைமக்களுக்குமென 14 தலைப்புகளில் வழங்கிய செய்தி, இவ்வெள்ளிக்கிழமையன்று நிருபர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
நற்செய்தி அறிவிப்புப்பணியில் ஆயர்கள், குருக்கள், துறவிகள், குடும்பத்தினர், இளையோர் என ஒவ்வொரு பிரிவினருக்கும் இருக்கும் பொறுப்புகள் இச்செய்தியில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் திருஅவைகளைச் சிறப்பாகக் குறிப்பிட்டுச் செய்தி வழங்கியுள்ள மாமன்றத் தந்தையர், உலகின் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பகுதி மக்களைக் கொண்டுள்ள ஆசியாவில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையாக இருந்தாலும், அவர்களின் இருப்பு பலனுள்ளதாக இருக்கின்றது எனப் பாராட்டியுள்ளனர்.
ஆசியக் கண்டத்தில் பல இடங்களில் திருஅவை நசுக்கப்பட்டாலும், அது தனது உறுதியான நம்பிக்கையால், நீதி, வாழ்வு, நல்லிணக்கத்தை அறிவிக்கும் கிறிஸ்துவின் நற்செய்தியின் விலைமதிப்பில்லாத பிரசன்னத்தை உணர்த்தி வருகிறது எனவும், ஆசியாவிலுள்ள கிறிஸ்தவர்கள் உலகின் மற்ற நாடுகளிலுள்ள கிறிஸ்தவர்களின் சகோதரத்துவ அன்பை உணருமாறும் அச்செய்தி ஊக்குவித்துள்ளது.
யோவான் நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள, காலியான குடத்துடன் கிணற்றடியில் நின்ற சமாரியப் பெண் போன்று, இறைமக்கள் பல நேரங்களில் தடுமாற்றத்திலும் குழப்பத்திலும், சோர்வடைந்தும் இருக்கின்றனர், ஆயினும் அப்பெண்ணில் கடவுளுக்கான ஏக்கம் இருந்தது, அப்பெண் போன்று இயேசுவைச் சந்தித்தவர்கள் அமைதியாக இருக்க முடியாது, மாறாக அவரை அறிவித்து அவருக்குச் சான்றுகளாக வாழ வேண்டுமென அச்செய்தி வலியுறுத்துகிறது.
புதிய நற்செய்தி அறிவிப்புப்பணிக்கு ஒவ்வொருவரின் சொந்த மனமாற்றமும் முக்கியம் என்பதையும் அச்செய்தி கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த 13வது உலக ஆயர்கள் மாமன்றம் வருகிற ஞாயிறன்று திருத்தந்தையின் திருப்பலியோடு நிறைவடையும்.
4. சீனாவுக்கும் திருப்பீடத்துக்கும் இடையே பலனுள்ள உரையாடல் இடம்பெறும் நம்பிக்கை
அக்.26,2012.
வருங்காலத்தில் சீனாவுக்கும் திருப்பீடத்துக்கும் இடையே பலனுள்ள உரையாடல்
இடம்பெறும் என்ற தனது நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் திருப்பீட நற்செய்தி
அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni.
“சீனத் திருஅவைக்கெனத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எழுதிய கடிதம் வெளியிடப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர்” என்ற தலைப்பில் 2,500 வார்த்தைகளைக் கொண்ட செய்தி ஒன்றை, சீனக் கம்யூனிச அரசுக்கும் இலட்சக்கணக்கான சீனக் கத்தோலிக்கருக்குமென இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளார் கர்தினால் Filoni.
இத்தாலியம், ஆங்கிலம், சீனம்
ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள அச்செய்தியில் சீனாவுக்கும்
திருப்பீடத்துக்கும் இடையே பலனுள்ள புதிய உரையாடல் இடம்பெறும் என்ற
நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார் கர்தினால் Filoni.
சீனக் கத்தோலிக்கர் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளையும் குறிப்பிட்டுள்ள கர்தினால் Filoni, சீனாவில் சமய சுதந்திரம் குறைவாக இருப்பது குறித்த கவலையையும் தெரிவித்துள்ளார்.
சீனக் கம்யூனிசக் கட்சியின் தேசிய மாநாடு வருகிற நவம்பர் 8ம் தேதி தொடங்கவுள்ளவேளை, கர்தினால் Filoniயின் இச்செய்தி வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
5. சிரியாவிலுள்ள டிராப்பிஸ்ட் அருள்சகோதரிகள் நம்பிக்கையின் அடையாளம்
அக்.26,2012. சிரியாவில் மக்கள் துன்ப சோதனைகளை எதிர்கொள்ளும் இவ்வேளையில், தாங்கள் அந்நாட்டிலிருந்து செல்ல முடியாது என, அந்நாட்டில் மறைப்பணியாற்றும் இத்தாலிய டிராப்பிஸ்ட் அருள்சகோதரிகள் கூறினர்.
மேற்கு சிரியாவில் Homs மற்றும் Tartous நகரங்களுக்கு இடையே Azeir என்ற சிறிய மாரனைட் கிராமத்திலுள்ள டிராப்பிஸ்ட் துறவு இல்லத்தில் வாழும் ஐந்து அருள்சகோதரிகள், போரினால் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உதவி வருகின்றனர்.
செபங்கள் மற்றும் சகோதரத்துவ ஒன்றிப்பு மூலம் கடவுளின் உண்மையான பிரசன்னத்தை வழிபடும் இடமாகத் தங்களது துறவு இல்லம் இருக்கின்றது, இந்தத் துறவு இல்லம் ஓர் உறுதியான நம்பிக்கையின் அடையாளமாகவும் இருக்கின்றது எனவும் இச்சகோதரிகள் கூறியுள்ளனர்.
தங்களது இந்தச் சிறிய கிராமத்தில்கூட இளையோர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தங்களது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள இச்சகோதரிகள், சண்டை சமயத்தில் முஸ்லீம்களும் ஆறுதல்தேடி டிராப்பிஸ்ட் துறவு இல்லத்திற்கு வந்ததாகவும் கூறியுள்ளனர்.
6. சிரியாவில் நான்கு நாள் போர் நிறுத்தம்
அக்.26,2012. மேலும், முஸ்லீம்களின் Eid al-Adha விழாவையொட்டி இவ்வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 6 மணிக்குச் சிரியாவில் நான்கு நாள் போர் நிறுத்தம் தொடங்கியுள்ளது.
ஐ.நா. மற்றும் அரபுக் கூட்டமைப்பு பிரதிநிதி Lakhdar Brahimi முன்வைத்த பரிந்துரையின்பேரில் இந்தப் போர் நிறுத்தம் தொடங்கியுள்ளது.
இந்தப் போர் நிறுத்தம், அமைதிக்கான நடவடிக்கைகளுக்கு வழிஅமைக்கும் என்ற தனது நம்பிக்கையை வெளியிட்டார் Brahimi .
சிரியா அரசுத் தலைவர் Bashar al-Assad க்கு
எதிராக ஏறக்குறைய இருபது மாதங்களாக இடம்பெற்றுவரும் கிளர்ச்சியில்
இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 3 இலட்சத்து 40
ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அண்டை நாடுகளுக்குச் சென்றுள்ளனர். மேலும் 25
இலட்சம் மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன.
இந்தப் போர் நிறுத்தத்தை வரவேற்றுள்ள ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், போரிடும் எல்லாத் தரப்புகளுமே இதனைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.
7. புதுக்குடியிருப்பில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளவர்களின் நிலை
அக்.26,2012. இலங்கையில் போரின்போது இடம்பெயர்ந்து மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தஞ்சமடைந்திருந்து, இறுதியாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட புதுக்குடியிருப்புப் பகுதி மக்கள் பாம்புகள் மற்றும் வெடிப்பொருள்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருவதாக ஊடகங்கள் கூறுகின்றன.
மிகக் கடுமையாகப் போர் இடம்பெற்ற இப்பகுதிக் கிராமங்களில் அழிந்து கிடக்கின்ற வீடுகள் மற்றும் கட்டிடங்களிலும், அங்கு வளர்ந்துள்ள புதர்களிலும் பாம்புகள் நிறைந்திருப்பதாக மீள்குடியேறியுள்ள மக்கள் கூறுவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடும் வறட்சிக்குப் பின்னர் மழை பெய்யத் தொடங்கியிருப்பதையடுத்து பாம்புத் தொல்லை அதிகரித்துள்ளது, அதேவேளை, புல்புதர்கள் நிறைந்து காடுபோல இருக்கும் அவ்விடங்களில் கண்ணிவெடிகளும் பலதரப்பட்ட வெடிப்பொருள்களும் அகற்றப்படாமல் இருப்பதால், நிலங்களில் நடமாடுவது ஆபத்தானதாக இருக்கிறது என்றும் அம்மக்கள் கூறியுள்ளனர்.
கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னரே, இந்தப் பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளபோதிலும், கண்ணிவெடிகள் நிலங்களில் முழுமையாக அகற்றப்படவில்லை என்று அம்மக்கள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment