Monday, 1 October 2012

Catholic News in Tamil - 27/09/12

1. திருத்தந்தை : இலண்டன் ஒலிம்பிக்ஸ் மக்களை ஒன்றிணைத்ததில் சிறப்பான பங்காற்றியுள்ளது

2. ஆன்மீக மற்றும் கலாச்சார நெருக்கடிகளின் அறிகுறிகளாக பொருளாதார நெருக்கடிகள் உள்ளன

3. சமூகத் தொடர்புத்துறையில் ஏற்பட்டுள்ள புரட்சி, புரிந்துகொள்ளுதலில் ஒன்றிணைந்து வருவதற்கான நல்லதொரு வாய்ப்பு

4. திருஅவை : அனைத்துலக கடல்சார் தினம்

5. மெனிக்பாம் முகாமில் இருந்த மக்கள் காட்டுப் பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி துன்புறுகின்றனர்

6. உலகம் வெப்பமயமாவதால் 2030க்குள் 10 கோடி பேர் உயிரிழக்கும் அபாயம்

7. இந்தியாவில் 5 ஆண்டுகளில் 36 ஆயிரம் டன் உணவுத் தானியம் வீண்

8. கோவை மாவட்டத்தில், மின்தடை நீடிப்பால் தொழில் உற்பத்தி இழப்பு மாதம் ஒன்றுக்கு 5,500 கோடி ரூபாய்

9. அண்டார்டிக் கடலில் பிளாஸ்டிக் கழிவுத் துகள்களால் மாசு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : இலண்டன் ஒலிம்பிக்ஸ் மக்களை ஒன்றிணைத்ததில் சிறப்பான பங்காற்றியுள்ளது

செப்.27,2012. போட்டிகளை அமைதியான வழிகளில் பொதுவில் நடத்துவதற்கு மக்களை ஒன்றிணைக்க முடியும் என்பதற்கு இவ்வாண்டில் இலண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்ஸ் தெளிவான எடுத்துக்காட்டுகளாய் இருக்கின்றன என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி தொடர்புடைய FIMS என்ற பன்னாட்டு Sports Medicine நிறுவனம் நடத்தும் 32வது அனைத்துலக மாநாட்டில் கலந்து கொள்வோரை காஸ்தெல் கந்தோல்ஃபோவில் இவ்வியாழனன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இந்நிறுவனத்தின் மாநாடு முதன்முறையாக உரோமையில் நடத்தப்படுவது பற்றியும் குறிப்பிட்டார்.   
மனிதர், விளையாட்டு வீரராகவோ அல்லது மாற்றுத்திறனாளியாகவோ, யாராக இருந்தாலும் ஒவ்வொரு மனிதரின் அழகு, ஆற்றல், பேருண்மை ஆகியவற்றை விளையாட்டு விளக்குகிறது என்றும் கூறினார் திருத்தந்தை.
விளையாட்டுக்கு ஒரு சரியான, அர்ப்பணிக்கப்பட்ட அணுகுமுறை இருக்கும்போது விளையாட்டு வீரர்கள் மத்தியில் அது அறநெறி மற்றும் ஆன்மீகப் புத்துணர்ச்சியை வளர்க்க உதவும் என்று இதனாலேயே கூற முடிகின்றது திருத்தந்தை கூறினார்.
இந்த மாநாட்டில் ஐந்து கண்டங்களின் 117 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்வதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, கலாச்சாரங்கள், நாடுகள், சூழ்நிலைகள் ஆகியவற்றையும் கடந்து மக்களைத் தூண்டுவதற்கு விளையாட்டு, எவ்வாறு சக்தியைக் கொண்டுள்ளது என்பது பற்றியும் பேசினார்.
எனினும், விளையாட்டு, போட்டியை மட்டும் கொண்டிருக்கவில்லை என்பதால், விளையாட்டு வீரர்களைக் கண்காணிப்பவர்கள் அவர்களது உடல் தேவைகளையும் கடந்து அவர்களின் ஒழுக்கநெறி மற்றும் ஆன்மீகத்திலும் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Sports medicine என்பது, விளையாட்டு வீரர்களின் உடல்தகுதி, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி தொடர்புடைய காயங்களுக்குச் சிகிச்சை, காயங்கள் ஏற்படாதவண்ணம் தடுத்தல் போன்றவற்றைக் கவனிக்கும் மருத்துவப் பிரிவு ஆகும். இந்தப் பிரிவு 20ம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில்தான் உருவானது.

2. ஆன்மீக மற்றும் கலாச்சார நெருக்கடிகளின் அறிகுறிகளாக பொருளாதார நெருக்கடிகள் உள்ளன
செப்.26, 2012.  உலக அளவிலான பொருளாதார நெருக்கடிகள் மேற்கத்திய மதம் சாரா கொள்கைகளின் வெளிப்பாடாக உள்ளன எனத் தெரிவித்தார் உக்ரைன் திரு அவையின் தலைவர் பேராயர் Sviatoslav Shevchuk.
கானடாவில் அந்நாட்டு ஆயர்களுக்கு உரையாற்றிய உக்ரைன் பேராயர், ஆழமான ஆன்மீக மற்றும் கலாச்சார நெருக்கடிகளின் அறிகுறிகளாகவே தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் உள்ளன எனவும், இவை உக்ரைன் நாட்டின் வருங்காலத்திற்குப் பெரும் சவாலாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்றைய நவீன சமூகத்திற்கு ஒரு நங்கூரமாகவும் திசைகாட்டியாகவும் செயல்படும் வண்ணம் திருஅவை புதிய பலத்துடன் நற்செய்தி உண்மைகளை எடுத்துரைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் பேராயர் Shevchuk.

3. சமூகத் தொடர்புத்துறையில் ஏற்பட்டுள்ள புரட்சி, புரிந்துகொள்ளுதலில் ஒன்றிணைந்து வருவதற்கான நல்லதொரு வாய்ப்பு
செப்.27,2012. இக்காலத்தில் சமூகத் தொடர்புத்துறையில் ஏற்பட்டுள்ள புரட்சி, புரிந்துகொள்ளுதலில் ஒன்றிணைந்து வருவதற்கான நல்லதொரு வாய்ப்பை நவீன மக்களுக்கு வழங்கியுள்ளது என ஐ.நா. அவைக்கூட்டத்தில் அறிவித்தார் கர்தினால் Edward Egan.
ஐ.நா. பொது அவையின் 67வது கூட்டத்தொடரின் துவக்க விழாவில் செப உரையாற்றிய கர்தினால், நாடுகளிடையே அமைதியையும் பேச்சுவார்த்தைகளையும் ஊக்குவிக்க சமூகத்தொடர்புச் சாதனங்களின் முழுப்பயன்பாட்டையும் நாம் கைக்கொள்ள வேண்டும் என்றார்.
எக்காலமும் காணாத அளவுக்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், அவைகளைப் பயன்படுத்தி உலகில் அமைதியைக் கொணர உழைப்பது ஒவ்வொருவரின் கடமை எனவும் கேட்டுக்கொண்டார் கர்தினால் Egan.

4. திருஅவை : அனைத்துலக கடல்சார் தினம்

செப்.27,2012. கடலில் பாதுகாப்பு என்ற தலைப்பில் அனைத்துலக கடல்சார் தினத்தை இவ்வியாழனன்று சிறப்பித்தது திருஅவை.
அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால், கடல்சார்ந்த தொழில்செய்வோர்க்கென மேய்ப்புப்பணி அமைப்பை உருவாக்கியதிலிருந்து,  கடல்பயணம் செய்வோர் மற்றும் கடல்சார்தொழில் செய்வோரின் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வு நடவடிக்கைகளில் ஆண்டுதோறும் இந்த உலக தினத்தன்று திருஅவை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.
மேலும், செப்டம்பர் 27, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக கடல்சார் தினத்திற்கென செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், புதிதாக உருவாக்கப்படும் பயணியர் கப்பல்கள் மிகுந்த பாதுகாப்புக்களைக் கொண்டிருக்குமாறு வலியுறுத்தினார். 
1912ம் ஆண்டில் டைட்டானிக் பயணிகள் கப்பல் பனிப்பாறையில் மோதிக் கடலில் மூழ்கியதன் நூறாம் ஆண்டு இந்த 2012ம் ஆண்டில் நினைவுகூரப்படுகின்றது, இதில் 1500க்கும் அதிகமானோர் இறந்தனர், 1914ம் ஆண்டு சனவரியில் இலண்டனில் நடைபெற்ற கூட்டத்தில் கடல்பயணம் செய்வோர் மற்றும் கடல்சார்தொழில் செய்வோரின் பாதுகாப்பு குறித்த ஒப்பந்தம் உருவாக இந்த டைட்டானிக் கப்பல் விபத்தே காரணமானது என்றும் பான் கி மூன் கூறினார்.

5. மெனிக்பாம் முகாமில் இருந்த மக்கள் காட்டுப் பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி துன்புறுகின்றனர்
செப்.26, 2012. மெனிக்பாம் முகாமில் இருந்த கேப்பாப்புலவு பகுதி மக்களை வேறிடத்தில் எல்லா வசதிகளுடனும் குடியேற்றப் போவதாகத் தெரிவித்து அழைத்துச் சென்ற அதிகாரிகள், சீனியாமோட்டை காட்டுப்பகுதியில் கொண்டு சென்று அடிப்படை வசதிகள் ௭துவுமின்றி, குடிப்பதற்குத் தண்ணீர்கூட இல்லாத நிலையில் வெட்ட வெளியில் இறக்கிவிட்டுள்ளதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
மெனிக்பாம் முகாமில் இருந்த கேப்பாப்புலவு, சீனியாமோட்டை, புலக்குடியிருப்பு ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 314 குடும்பங்கள் தங்களைத் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் ௭ன்று கடந்த இரண்டு வருடங்களாக வேண்டுகோள் விடுத்து வந்துள்ளபோதிலும், கேப்பாப்புலவில் இராணுவத்தினர் குடியிருப்பதால், காட்டுப்பகுதியில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
இங்கு நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுப்பத­ற்கும் ஏற்பா­டுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என முல்லைத்¬தீவு அரசு அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ள அதேவேளையில், மெனிக்பாம் முகாமில் இருந்து குடும்பங்களைக் கொண்டு வருவதற்கு முன்னால், இங்கு தங்குவதற்கான அடிப்படை வசதிகளையாவது இந்த அரசும் அதிகாரிகளும் செய்துவிட்டு ௭ங்களை மெனிக்பாம் முகாமில் இருந்து கொண்டு வந்திருக்கலாமே என அரசை குறைகூறியுள்ளனர் மக்கள்.

6. உலகம் வெப்பமயமாவதால் 2030க்குள் 10 கோடி பேர் உயிரிழக்கும் அபாயம்
செப்.26, 2012. உலக வெப்பமயமாதல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால் 2030ம் ஆண்டுக்குள் உலகளவில் 10 கோடிக்கும் அதிகமானவர்கள் இறக்க நேரிடும் என்று கவலை வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் வாயுக்கள் அதிகளவில் வெளியிடப்படுவதால் உலகில் வெப்பநிலை அதிகரித்து வருவதன் காரணமாக, துருவப் பகுதிகளில் பனி உருகுவது அதிகரித்துள்ளது எனக்கூறும் டாரா என்ற மனிதஇனநலம் சார்ந்த ஆய்வு நிறுவனம், தற்போது காற்று, மாசு, பசி, நோய் போன்றவற்றால் 50 இலட்சம் பேர் ஆண்டுதோறும் இறக்கின்ற நிலையில், பெட்ரோலியப் பொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் 2030ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 60 இலட்சமாக உயரும் எனவும் எச்சரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழப்பவர்களுள் 90 விழுக்காட்டினர், வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

7. இந்தியாவில் 5 ஆண்டுகளில் 36 ஆயிரம் டன் உணவுத் தானியம் வீண்
செப்.26, 2012.  எட்டுக் கோடி மக்களின் பசியைப் போக்கி இருக்க வேண்டிய 36 ஆயிரம் டன் உணவுத் தானியங்கள் கடந்த ஐந்தாண்டுகளில், இந்தியாவில் உள்ள அரசு சேமிப்புக் கிடங்குகளில் வீணடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள இந்திய உணவுக் கழகத்துக்குச் சொந்தமான சேமிப்புக் கிடங்குகளில், சேமித்து வைக்க முடியாமல், 2008ம் ஆண்டிலிருந்து இதுவரை 36 ஆயிரம் டன் உணவுத் தானியங்கள், பயன்படுத்த முடியாத அளவுக்கு கெட்டுப் போயின எனத் தெரிவித்துள்ளது இக்கழகம்.
பூச்சி அரிப்பு, தரமற்ற உணவுத் தானியங்களைச் சேமித்து வைத்தல், போக்குவரத்தில் ஏற்படும் கசிவு மற்றும் வெள்ளம், மனித கவனக்குறைவு போன்றவை, உணவுத் தானியங்கள் கெட்டுப் போவதற்கும், வீணடிக்கப்படுவதற்கும் காரணமாக உள்ளன.

8. கோவை மாவட்டத்தில், மின்தடை நீடிப்பால் தொழில் உற்பத்தி இழப்பு மாதம் ஒன்றுக்கு 5,500 கோடி ரூபாய்
செப்.26, 2012. தினமும் 12.00 மணி நேரம் முதல் 14.00 மணி நேரம்வரை மின்தடை நீடிப்பதால், கோவை மாவட்டத்தில் மின்சாரத்தை நம்பியுள்ள தொழில்கள் பாதிக்கப்பட்டு, இப்பகுதியின் உற்பத்தி இழப்பு, மாதம் ஒன்றுக்கு 5,500 கோடி ரூபாய் இருக்கும் எனத் தொழில் துறையினர் மதிப்பிட்டுள்ளனர்.
தொழில் நகரமாக விளங்கும் கோவையில் தினமும் 10.00-12.00 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு நீடிப்பதால், உற்பத்தி இழப்பு 40 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ளது என உரைத்த தென்னிந்திய மில்கள் சங்கத்தின் தலைவர் தினகரன், கைத்தறித்துணித் துறை, மாதந்தோறும், 3,000 கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி இழப்பை சந்தித்து வருகிறது என்று கூறினார்.
மேலும், கோவையில் மின்சாரப் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள ஒரு மாதத்துக்கான உற்பத்தி இழப்பு நகைத் தயாரிப்புத்துறையில் 100 கோடி ரூபாய், விவசாயத்தில் 150 கோடி ரூபாய் என, கோவை மண்டலத்தில், மின்பற்றாக்குறையால் ஏற்படும் உற்பத்தி அளவு 5,500 கோடியாக இருக்கும் என, தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

9. அண்டார்டிக் கடலில் பிளாஸ்டிக் கழிவுத் துகள்களால் மாசு
செப்.26,2012.  அண்டார்டிக் பெருங்கடல் பகுதி மிகவும் அதிகமான அளவில் பிளாஸ்டிக் பொருட்களால் மாசடைந்திருப்பதாகவும், ஒரு சதுர கிலோமிட்டர் பரப்பளவுக்கு சுமார் 40,000 பிளாஸ்டிக் கழிவுத் துகள்கள்வரை மிதந்து கொண்டிருப்பதைக் கண்டறிந்ததாகவும் அங்குச் சென்று வந்த தனியார் ஆராய்ச்சிக் குழு ஒன்று கவலையை வெளியிட்டுள்ளது.
இந்தக் கழிவு, இயற்கையாகக் கரைய முடியாதது என்று கூறும் அக்குழு, பல நூறாயிரம் ஆண்டுகள் வரை இந்தத் துகள்கள் கடலிலேயே தங்கியிருக்கும் என்றும், கடைசியாக அவை உணவுச் சங்கிலித்தொடரில் சேர்ந்துவிடும் என்றும் கூறியுள்ளது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...