1. மதியிறுக்கம் என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவளிக்க பேராயர் Zimowski வேண்டுகோள்
2. நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே சகிப்புத்தன்மையை ஊக்குவித்து வருகிறார் கர்தினால் Tauran
3. சமய வாழ்விலிருந்து தொழிலைப் பிரித்துப் பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது – கர்தினால் டர்க்சன்
4. மரணதண்டனை ஐப்பானை அழிக்கக்கூடும் – நாகசாகி பேராயர்
5. சிலுவையில் அறையும் பாவக்கழுவாய் நடவடிக்கைக்கு பிலிப்பீன்ஸ் ஆயர்கள் எச்சரிக்கை
6. பிலிப்பீன்சில் பூமி நேரம் கடைப்பிடிக்கப்படுவதற்கு ஆயர்கள் ஆதரவு
7. 2013ம் ஆண்டின் உலக இளையோர் தினம், கிறிஸ்துவின் திறந்த கரங்களின் அனுபவத்தைப் பெறுவதாக இருக்கும்
8. BRICS நாடுகளின் புதிய முயற்சி
------------------------------ ------------------------------ ------------------------------ -
1. மதியிறுக்கம் என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவளிக்க பேராயர் Zimowski வேண்டுகோள்
மார்ச்30,2012. மூளையின் சாதாரண வளர்ச்சியின்மையால் ஏற்படும் Autism நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோர் மற்றும் அவர்களின் குடும்பங்களுடன் தோழமையுணர்வு கொண்டு அவர்களுக்கு ஆதரவாக இருக்குமாறு திருப்பீட நலவாழ்வுப் பணியாளர் அவைத் தலைவர் பேராயர் Zygmunt Zimowski கேட்டுள்ளார்.
ஏப்ரல் 2ம் தேதி வருகிற திங்களன்று கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக Autism என்ற மதியிறுக்கம் நோய் தினத்தையொட்டி செய்தி வெளியிட்ட பேராயர் Zimowski, இந்நோயின் பாதிப்பால் துன்புறுவோர் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நிலைகளை நோக்கினால் இந்நோயின் கொடுந்தன்மை குறித்து அறிந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இக்காலத்தில் தொழில்வளர்ச்சியடைந்த நாடுகளிலும் வளரும் நாடுகளிலும் Autism நோய் பரவி வருவதால், பன்னாட்டு அளவில் இதனைத் தடுப்பதற்கு மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறும், இம்முயற்சிக்குத் திருஅவைத் தனது ஆதரவை வழங்குவதாகவும் பேராயர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவில், ஒவ்வொரு பத்தாயிரம் சிறாருக்கு சுமார் 60 சிறார் வீதம் இந்நோயால் தாக்கப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது என்றும் பேராயரின் செய்தி கூறுகிறது.
ஒருவரின் மூளை வளர்ச்சி பாதிப்பால், அவரின் மக்கள் தொடர்புத் திறன், சமுதாயத்தில் அவரின் செயல்பாடுகள், அவர் ஆர்வம் கொள்ளும் துறைகள், அவரின் நடத்தை போன்றவை இயல்பிற்கு மாறாக அமைகின்றன. இத்தகைய பாதிப்பு, Autism அதாவது மதியிறுக்கம் நோய் என்று அழைக்கப்படுகின்றது. இந்நோய், பொதுவாக குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைவதற்குமுன் பாதிக்கும். இது ஒரு நோயல்ல, மாறாக ஒரே அறிகுறிகளைக் கொண்ட பல நோய்களால் ஏற்படக்கூடியது என்றும் சிலர் கருதுகின்றனர்.
2. நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே சகிப்புத்தன்மையை ஊக்குவித்து வருகிறார் கர்தினால் Tauran
மார்ச்30,2012. நைஜீரியாவில் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் ஒருவர் ஒருவர் மீது புரிந்து கொள்ளுதலை உருவாக்கவும், அந்நாட்டைப் பாதித்துள்ள வன்முறையை முடிவுக்குக் கொண்டு வரவும், ஒருவர் ஒருவருடன் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார் கர்தினால் Jean-Louis Tauran.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் இடம் பெற்று வருவதை முன்னிட்டு, அந்நாட்டுக்குப் பத்து நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Tauran, இவ்விரு மதத்தவருக்கும் இடையே உரையாடலை ஊக்குவித்து வருகிறார்.
நைஜீரியாவில் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் அமைதியுடன்கூடிய நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு அழைப்பு விடுக்கும் திருத்தந்தையின் செய்தியையும் அந்நாட்டினருக்கு வழங்கியுள்ளார் கர்தினால் Tauran.
பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள், அமைதியுடன்கூடிய நல்லிணக்கத்துடன் ஒன்றிணைந்து வாழ்வதற்குச் சகிப்புத்தன்மை என்ற பாதையில் சென்றால் மட்டுமே முடியும் என்று ஜோஸ் நகரில் நடைபெற்ற பல்சமயக் கூட்டத்தில் குறிப்பிட்டார் கர்தினால்.
மனித உறவுகள் அன்பையும் புரிந்துகொள்ளுதலையும் அடிப்படையாகக் கொண்டிருக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.
நைஜீரியாவின் Sokoto நகரில், இசுலாம் தீவிரவாதக் குழுவால் சுமார் 10 மாதங்களாகப் பிணையலில் வைக்கப்பட்டிருந்த ஒரு பிரித்தானியரும் ஓர் இத்தாலியரும் இம்மாதம் 8ம் தேதி கொல்லப்பட்டனர்.
3. சமய வாழ்விலிருந்து தொழிலைப் பிரித்துப் பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது – கர்தினால் டர்க்சன்
மார்ச்30,2012. தங்களது மத நம்பிக்கையிலிருந்து தொழிலைப் பிரித்துப் பார்க்கும் போக்கு, இக்காலத்தில் பொதுவான நோயாக, பல மக்களை, குறிப்பாக தொழிலதிபர்களைத் தாக்கியுள்ளது என்று கர்தினால் பீட்டர் டர்க்சன் கூறினார்.
UNIAPAC என்ற அனைத்துலக கிறிஸ்தவத் தொழிலதிபர்கள் கழகத்தின் 24 வது உலக மாநாட்டில் இவ்வெள்ளியன்று உரையாற்றிய, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் டர்க்சன், இந்நவீன காலத்தில் காணப்படும் இப்போக்கானது, வாழ்வைப் பிளவுபடுத்துகின்றது என்று கூறினார்
பிரான்சில் நடைபெற்று வரும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் இரண்டாயிரம் கிறிஸ்தவத் தொழிலதிபர்களுக்கு உரையாற்றிய கர்தினால் டர்க்சன், இவர்கள் தங்களது வேலையைப் பொது மக்களுக்குப் பயன்தரும் வகையில் செய்வதற்குத் திருஅவை உதவ விரும்புகிறது என்று கூறினார்.
திருஅவையின் சமூகக் கோட்பாடுகளின் அடிப்படையில் இந்த உதவியைச் செய்ய விரும்புகின்றது என்றார் கர்தினால் டர்க்சன்.
கிறிஸ்தவச் சமூகப் போதனைகளின் ஒளியில் உலகினருக்கு உதவும் நோக்கத்தில், ஐரோப்பிய கத்தோலிக்கத் தொழிலதிபர்களால் 1931ம் ஆண்டு உருவாக்கப்பட்டது UNIAPAC கழகம். இதற்குத் தற்போது ஆசியாவிலும் ஆப்ரிக்காவிலும் உறுப்பினர்கள் உள்ளனர்.
4. மரணதண்டனை ஐப்பானை அழிக்கக்கூடும் – நாகசாகி பேராயர்
மார்ச்30,2012. ஜப்பானில் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வியாழனன்று மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளவேளை, அந்நாடு மரணதண்டனை சட்டத்தை இரத்து செய்யுமாறு, ஜப்பான் ஆயர்கள் அரசைக் கேட்டுள்ளனர்.
பல கொலைகளைச் செய்த மூன்று குற்றவாளிகள் இவ்வியாழனன்று தூக்கிலிடப்பட்டதை முன்னிட்டு இவ்வாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்த நாகசாகி பேராயர் Joseph Mitsuaki Takami, கொலை செய்தவர், கொலையாளியாக இருந்த போதிலும்கூட, அந்தக் கொலையாளியைக் கொலை செய்வது மற்றொரு கொலையாக இருக்கின்றது என்று கூறினார்.
80 விழுக்காட்டுக்கு மேற்பட்ட ஜப்பானியர்கள் மரணதண்டனையை ஆதரிக்கிறார்கள் என்று அரசு அதிகாரிகள் சொல்கின்றபோதிலும், இது, சமுதாயத்தின் குருட்டுத்தன்மையைக் காட்டுகின்றது என்றும், இந்தப் போக்கு ஆன்மாவைக் கடினப்படுத்தும் எனவும் பேராயர் Takami எச்சரித்துள்ளார்.
ஜப்பானில், 2010ம் ஆண்டு ஜூலையில் இரண்டு பேருக்கு தூக்குத்தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. அதற்குப் பின்னர், இவ்வியாழனன்று மூன்று பேர் தனிப்பட்ட அறைகளில் தூக்கிலிடப்பட்டனர். அந்நாட்டில், இன்னும் 132 தூக்குத்தண்டனை கைதிகள் உள்ளனர் என்று Kyodo செய்தி நிறுவனம் கூறியது.
5. சிலுவையில் அறையும் பாவக்கழுவாய் நடவடிக்கைக்கு பிலிப்பீன்ஸ் ஆயர்கள் எச்சரிக்கை
மார்ச்30,2012. பிலிப்பீன்ஸில், புனித வாரத்தில் தங்கள் பாவங்களுக்குப் பிராயச்சித்தமாக தங்களைச் சிலுவையில் அறையும் கத்தோலிக்கரின் நடவடிக்கையை எச்சரித்துள்ளது அந்நாட்டு ஆயர் பேரவை.
பிலிப்பீன்ஸில் புனித வெள்ளியன்று மக்கள் தங்களைச் சிலுவையில் அறையும் பழக்கம் பல ஆண்டுகளாக இடம் பெற்று வருகிறது. வருகிற புனித வெள்ளியன்று அந்நாட்டின் Pampanga மாநிலத்தில் மரச்சிலுவைகளில் அறையப்படுவதற்கு ஏற்கனவே குறைந்தது 20 பேர் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இந்நிகழ்வைப் பார்ப்பதற்கு ஒவ்வோர் ஆண்டும் Pampanga மாநிலத்திற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பயணிகள் செல்கின்றனர்.
இந்நிகழ்வு குறித்துப் பேசிய Cebu பேராயர் Jose Palma, தங்கள் மீது வேதனைகளைச் சுமத்தும் மக்களைவிட, தங்களது விசுவாசத்தைப் புதுப்பிக்கும் மக்களையே திருஅவை விரும்புகிறது என்று கூறினார்.
சிலுவையில் அறையும் இந்தப் பழக்கம் குறித்து பிலிப்பீன்ஸ் ஆயர்கள் தீர்ப்புக் கூறவோ அல்லது கண்டனம் செய்யவோ இல்லை, மாறாக அதனை ஊக்கப்படுத்தவில்லை என்று பேராயர் Palma கூறினார்.
6. பிலிப்பீன்சில் பூமி நேரம் கடைப்பிடிக்கப்படுவதற்கு ஆயர்கள் ஆதரவு
மார்ச்30,2012. மார்ச் 31ம் தேதியான இச்சனிக்கிழமை ஒரு மணி நேரத்திற்கு மின் விளக்குகளை அணைப்பதற்கு ஊக்குவிக்கும் “பூமி நேரத்தை” பிலிப்பீன்ஸ் மக்கள் கடைப்பிடிக்குமாறு அந்நாட்டு ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இச்சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை, அவசியமற்ற விளக்குகளை அணைக்கும் உலகினரோடு பிலிப்பீன்ஸ் நாட்டவரும் இணையுமாறு ஆயர்கள் கேட்டுள்ளனர்
மேலும், இந்தப் பூமி நேரத்தில், நமது பூமித்தாயைப் பராமரிப்பதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு ஆயர்கள் கேட்டுள்ளதாக, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் இளையோர் பணிக்குழு செயலர் அருள்திரு Conegundo Garganta கூறினார்.
2007ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் “பூமி நேரம்” முதன் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது. அது தற்போது அனைத்துல நிகழ்வாக மாறியுள்ளது. 2012ம் ஆண்டு பூமி நேரம், மார்ச் 31ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
7. 2013ம் ஆண்டின் உலக இளையோர் தினம், கிறிஸ்துவின் திறந்த கரங்களின் அனுபவத்தைப் பெறுவதாக இருக்கும்
மார்ச்30,2012. 2013ம் ஆண்டில் பிரேசிலின் Rio de Janeiroவில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் தினம், கிறிஸ்துவின் திறந்த கரங்களின் அனுபவத்தைப் பெறுவதாக இருக்கும் என்று கர்தினால் Stanislaw Rylko கூறினார்.
ரியோ டி ஜெனீரோவின் புறநகர்ப் பகுதியிலுள்ள Corcovado மீட்பராம் கிறிஸ்துவின் திருவுருவத்தை வைத்தே இந்த உலக இளையோர் தின அனுபவத்தைச் சொல்ல முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இத்தாலியின் Rocca di Papa எனுமிடத்தில், திருப்பீட பொது நிலையினர் அவை நடத்தி வரும் இந்த இளையோர் தினத் தயாரிப்புக் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார் அந்த அவைத் தலைவர் கர்தினால் Rylko.
இவ்வெள்ளியன்று தொடங்கிய இக்கூட்டம் வருகிற ஞாயிறன்று நிறைவடையும். இதில், 98 நாடுகளிலிருந்து 45 சர்வதேச கத்தோலிக்க இளையோர் கழகங்களின் சுமார் 300 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
8. BRICS நாடுகளின் புதிய முயற்சி
மார்ச்30,2012. உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றோடு போட்டிப் போடக்கூடிய புதிய வங்கி ஒன்றைத் தொடங்குவதற்கு BRICS நாடுகள் திட்டமிட்டுள்ளன.
பிரேசில், இரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா ஆகிய வேகமாக வளரும் ஐந்து நாடுகள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய BRICS என்ற அமைப்பின் நான்காவது உச்சி மாநாடு புதுடெல்லியில் இவ்வியாழனன்று முடிந்துள்ளது.
இம்மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில், உலக நிதியகம், உலக வங்கி போன்ற சர்வதேச நிதி அமைப்புக்களில், BRICS நாடுகளின் குரல்களுக்கு மேலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதார நெருக்கடி குறித்து கவலை தெரிவித்துள்ள BRICS அமைப்பு, ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி களையப்படுவதற்குத் தாங்கள் உதவத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.
தற்போது உலகப் பொருளாதாரத்தில் 28 விழுக்காட்டையும், உலகப் பொருளாதார வளர்ச்சியில் 56 விழுக்காட்டையும் BRICS அமைப்பு கொண்டுள்ளது.
சிரியா மற்றும் இரான் குறித்த பிரச்சனைகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சமுதாய அவை கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு எதிராகவும் இவ்வமைப்பு தனது கருத்தை தெரிவித்திருக்கிறது.
இரானைப் பொறுத்தவரை, இரான் அமைதி நோக்கங்களுக்கு அணுசக்தியைப் பயன்படுத்திக்ள்வது அனுமதிக்கப்படவேண்டும் என்று BRICS கூறியுள்ளது.
No comments:
Post a Comment