Friday, 16 March 2012

கத்தோலிக்க செய்திகள்: 16 மார்ச் 2012

1. புனிதவெள்ளி சிலுவைப்பாதைச் சிந்தனைகளை முதன்முறையாகத் திருமணத் தம்பதியர் தயாரிக்கின்றனர்

2. திருத்தந்தையின் மெக்சிகோ மற்றும் கியூபாவுக்கானத் திருப்பயணம்

3. அணுசக்திக்கு எதிரான உணர்வை இத்தவக்காலத்தில் வளர்த்துக் கொள்ளுமாறு ஜப்பான் ஆயர் பேரவைத் தலைவர் வலியுறுத்தல்

4. சிரியாவில் கிறிஸ்தவர்கள் சக்தியற்றவர்களாக இருக்கிறார்கள் தமாஸ்கஸ் பேராயர் நாசர்

5. மத்திய கிழக்குப் பகுதியின் நிலை குறித்து அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் கவலை

6. புகையிலை தொடர்புடைய நோய்களால் ஒவ்வோர் ஆண்டும் முப்பது வயதுக்கு மேற்பட்ட ஐம்பது இலட்சம் பேர் இறக்கின்றனர் - ஐ.நா.

7. குறுநில விவசாயிகளின் திறமைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் - பான் கி மூன்


------------------------------------------------------------------------------------------------------

1. புனிதவெள்ளி சிலுவைப்பாதைச் சிந்தனைகளை முதன்முறையாகத் திருமணத் தம்பதியர் தயாரிக்கின்றனர்

மார்ச்16,2012. இவ்வாண்டு புனிதவெள்ளிக்கிழமையன்று உரோம் கொலோசேயத்தில் நடைபெறும் சிலுவைப்பாதை பக்திமுயற்சி தியானச் சிந்தனைகளைத் தயாரிப்பதற்கு திருமணமான ஒரு தம்பதியரிடம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுள்ளதாகத் திருப்பீடம் அறிவித்தது.
பன்னாட்டு Focolare பக்த இயக்கத்தில், புதிய குடும்பங்கள் என்ற அமைப்பை ஆரம்பித்துள்ள தம்பதியர் Danilo மற்றும் Annamaria Zanzucchiவை இவ்வாண்டு புனிதவெள்ளி சிலுவைப்பாதைத் தியானங்களைத் தயாரிக்குமாறு திருத்தந்தை கேட்டுள்ளார் எனவும் திருப்பீடம் அறிவித்தது.
புனிதவெள்ளி சிலுவைப்பாதை தியானச் சிந்தனைகளைத் தயாரிக்குமாறு திருமணமான தம்பதியரிடம் கேட்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை என்றும் கூறப்பட்டது.
வருகிற ஏப்ரல் 6ம் தேதி உரோம் கொலோசேயத்தில் திருத்தந்தையின் பங்கேற்புடன் நடைபெறும் இச்சிலுவைப்பாதை தியானங்கள், குடும்பத்தை மையப்படுத்தியதாக இருக்கும்.
புனிதவெள்ளி சிலுவைப்பாதைச் சிந்தனைகளைத் தயாரிப்பதற்கு மக்களைக் கேட்கும் பழக்கத்தை 1985ம் ஆண்டு அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் தொடங்கி வைத்தார்.
Focolare இயக்கத்தில் 1967ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புதிய குடும்பங்கள் என்ற அமைப்பில் தற்போது உலக அளவில் எட்டு இலட்சத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
மேலும், சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலாப் பேருந்து விபத்தில் இறந்த 22 பெல்ஜிய நாட்டுப் பள்ளிச் சிறார் உட்பட 28 பேரின் குடும்பங்களுக்குத் தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். 52 பேர் பயணம் செய்த இந்தப் பேருந்து விபத்தில் 24பேர் காயமடைந்துள்ளனர்.


2. திருத்தந்தையின் மெக்சிகோ மற்றும் கியூபாவுக்கானத் திருப்பயணம்

மார்ச்16,2012. இம்மாதம் 23 முதல் 29 வரை மெக்சிகோ, கியூபா ஆகிய நாடுகளுக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் மேற்கொள்ளும் திருப்பயணம் குறித்து நிருபர் கூட்டத்தில் இவ்வெள்ளியன்று விளக்கினார் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி.
மெக்சிகோ சுதந்திரம் அடைந்ததன் 200வது ஆண்டு மற்றும் கியூபாவின் பாதுகாவலியான கோப்ரே பிறரன்பு மாதா திருவுருவம் கண்டுபிடிக்கப்பட்டதன் 400ம் ஆண்டு நிறைவு ஆகிய இவற்றைக் கொண்டாடுவது இத்திருப்பயணத்தின் முக்கிய நோக்கங்கள் என்று விளக்கினார் அருள்தந்தை லொம்பார்தி.
திருத்தந்தை மேற்கொள்ளும் இந்த 23வது வெளிநாட்டுத் திருப்பயணம், அமெரிக்கா அனைத்திற்குமான ஒரு பயணமாக கருதப்படுவதால் இப்பயணத்தின்போது அமெரிக்காவின் ஏறக்குறைய அனைத்து ஆயர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கியூபாவின் முன்னாள் அரசுத்தலைவர் ஃபிடெல் காஸ்ட்ரோ, திருத்தந்தையைச் சந்திப்பதற்கு விருப்பம் தெரிவித்தால் திருத்தந்தையும் அவரை மனமுவந்து சந்திப்பார் எனவும் திருப்பீடப் பேச்சாளர் நிருபர்களிடம் கூறினார். 
இம்மாதம் 23 முதல் 26 வரை மெக்சிகோவிலும் பின்னர் 28ம் தேதி வரை கியூபாவிலும் திருப்பயணத் திட்டங்களை நிகழ்த்துவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.


3. அணுசக்திக்கு எதிரான உணர்வை இத்தவக்காலத்தில் வளர்த்துக் கொள்ளுமாறு ஜப்பான் ஆயர் பேரவைத் தலைவர் வலியுறுத்தல்

மார்ச்16,2012. அணுசக்தி உட்பட உலகப் பொருட்களில் அதிகம் சார்ந்து இருப்பதை விலக்கி நடப்பதற்கு தவக்காலம் விசுவாசிகளை வழிநடத்திச் செல்ல வேண்டுமென்று ஜப்பான் ஆயர் பேரவைத் தலைவர் கூறினார்.
இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்கு விசுவாசிகளைத் தயாரிக்கும் விதமாக மேய்ப்புப்பணி அறிக்கையை வெளியிட்டுள்ள பேராயர் Leo Jun Ikenaga, செபமும் அன்பும் மட்டுமே மக்களை இறைவனிடம் இட்டுச் செல்லும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Fukushima அணுமின்நிலைய விபத்து நடந்த ஓராண்டுக்குப் பின்னர், ஜப்பான் சமுதாயம் மீண்டும் சிந்திக்கத் தொடங்கியுள்ளது, ஆயினும் இச்சிந்தனையானது மிகுந்த வேதனைக்கு ஊற்றான அணுசக்தியைச் சார்ந்து இருப்பதில் முடிவடைகின்றது என்று கூறியுள்ளார் பேராயர்.
இந்த உலகப் பொருள்களின் மீது கொண்டிருக்கும் அதீதப் பற்றுக்களிலிருந்து தங்களை விடுவிக்குமாறு இத்தவக்காலத்தில் கத்தோலிக்கர்களை வலியுறுத்துவதாகக் கூறியுள்ளார் பேராயர் Ikenaga.


4. சிரியாவில் கிறிஸ்தவர்கள் சக்தியற்றவர்களாக இருக்கிறார்கள் தமாஸ்கஸ் பேராயர் நாசர்

மார்ச்16,2012. சிரியாவில் அரசு ஆதரவாளர்களுக்கும் எதிர் தரப்பினருக்கும் இடையே மோதல்கள் கட்டுக்கடங்காமல் இடம் பெற்றுவரும்வேளை, கிறிஸ்தவர்கள் சக்தியற்றவர்களாக இருக்கிறார்கள் என்று தமாஸ்கஸ் மாரனைட்ரீதி கத்தோலிக்கப் பேராயர் சமிர் நாசர் கூறினார்.
சிரியாவில் மக்கள் கொந்தளிப்பு தொடங்கி ஓராண்டு முடிந்துள்ளதையொட்டி ஃபீதெஸ் செய்தி நிறுவனத்துக்குச் செய்தி அனுப்பியுள்ள பேராயர் நாசர், 2011ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி சிரியாவின் தென் பகுதியில் ஒரு சிறிய போராட்டமாக தொடங்கிய இப்பிரச்சனை, இன்று அந்நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும் வளர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.
இக்கடும் மோதல்களால் சிரியா எதிர்கொள்ளும் பொருளாதாரத்தடை, பணவீக்கம், உள்நாட்டுப்பணத்தின் மதிப்புக் குறைவு போன்றவை அந்நாட்டில் அழிவையும் வேலைவாய்ப்பின்மையையும் புலம் பெயர்வுகளையும் இறப்புக்களையும் அதிகரித்துள்ளன என்றும் பேராயரின் செய்தி கூறுகின்றது.
சிரியாவில் இப்போதைக்கு பிரச்சனை முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை எனக் குறிப்பி்ட்டுள்ள பேராயர் நாசர், தவக்காலத்தைத் தொடங்கியிருக்கும் கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவின்மீது தங்கள் நம்பிக்கையை வைத்துள்ளார்கள்  என்று கூறியுள்ளார்.


5. மத்திய கிழக்குப் பகுதியின் நிலை குறித்து அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் கவலை

மார்ச்16,2012. மத்திய கிழக்குப் பகுதியில் இடம் பெறும் மோதல்கள் குறித்த தங்களது கவலையை வெளியிட்டுள்ளனர் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் நிர்வாகப் பணிக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து தினமும் வெளியாகும் வன்முறை, இரத்தம் சிந்தல், துன்பங்கள் போன்ற செய்திகள் எவரையும் அக்கறையின்றி இருக்கச் செய்யாது என்று கூறப்பட்டுள்ளது.
பிளவையும் வெறுப்பையும் விதைக்கும் மக்கள் மனம் மாற வேண்டுமென்றும், தங்களது குடிமக்களின் உரிமைகளையும் மாண்பைும் அந்தந்த நாடுகளின் தலைவர்கள் மதிக்க வேண்டுமென்றும் அவ்வறிக்கை வலியுறுத்துகிறது.
அரசியலில் நிச்சயற்றதன்மை, பொருளாதாரத்தில் நெருக்கடி, சமூகத்திலும் கலாச்சாரத்திலும் பிரச்சனை போன்ற காலங்களில், வேற்றுமைகளைக் கடந்து அமைதியைக் கட்டி எழுப்புமாறு நன்மனம் கொண்ட அனைவருக்கும் அமெரிக்க ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


6. புகையிலை தொடர்புடைய நோய்களால் ஒவ்வோர் ஆண்டும் முப்பது வயதுக்கு மேற்பட்ட ஐம்பது இலட்சம் பேர் இறக்கின்றனர் - ஐ.நா.

மார்ச்16,2012. உலகில் ஒவ்வோர் ஆண்டும் முப்பது வயதுக்கு மேற்பட்ட ஐம்பது இலட்சம் பேர் புகையிலை தொடர்புடைய நோய்களால் இறக்கின்றனர் என்று ஐ.நா.நலவாழ்வு நிறுவனம் இவ்வியாழனன்று வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகின்றது.
இவ்வறிக்கையின்படி, முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்புக்களில் 12 விழுக்காட்டு இறப்புக்களுக்குப் புகையிலைப் பயன்பாடே காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.
புகைப்பிடிப்பவரின் புகையை சுவாசிப்பதால் மேலும் ஆறு இலட்சம் பேர் இறக்கின்றனர் என்றும், காசநோய், எய்டஸ், மலேரியா ஆகிய நோய்களால் இறப்பவர்களைவிட புகையிலை தொடர்பான நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் WHO நிறுவனம் கூறியது.
இதயநோயால் இடம் பெறும் 30க்கும் 44 வயதுக்கும் இடைப்பட்டவர்களின் மரணங்களில் 38 விழுக்காட்டுக்கும், நுரையீரல்புற்றுநோய் இறப்புகளில் 71 விழுக்காட்டுக்கும் புகையிலைப் பயன்பாடு காரணம் என அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.
2005ம் ஆண்டில் அமலுக்கு வந்த அனைத்துலக புகையிலை ஒப்பந்தத்தின்படி, புகையிலை விளம்பரம், அதற்குப் பொறுப்பு ஏற்பவர்கள் மற்றும் அதனை ஊக்குவிப்பவர்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 
புகையிலை தொடர்பான நோய்களால் 20ம் நூற்றாண்டில் சுமார் 10 கோடிப் பேர் இறந்தனர்.


7. குறுநில விவசாயிகளின் திறமைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் - பான் கி மூன்

மார்ச்16,2012. உணவுப் பாதுகாப்பை அனைவருக்கும் உறுதிப்படுத்தும் நோக்கத்தில், குறுநில விவசாயிகள் மற்றும் உணவு உற்பத்தியாளர்களின் திறமைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.
ஏறக்குறைய 20 கோடிச் சிறார், ஊட்டச்சத்துப் பற்றாக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளவேளை, சிறாருக்கும் பெண்களுக்கும் சத்துணவு கிடைக்க வழிசெய்யப்பட வேண்டுமெனவும் கேட்டுள்ள பான் கி மூன், சந்தைகள் நியாயமானதாகவும் எல்லாருக்கும் உதவக்கூடியதாகவும் இருக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
உணவைப் பெறுவதற்கு எல்லாருக்கும் இருக்கும் உரிமையை அனைவரும் அனுபவிக்க வேண்டுமென்றும் கூறிய அவர், ஒவ்வொரு வீட்டிற்கும் சத்துணவு கிடைப்பதற்கு வசதி செய்யப்படுமாறும் கேட்டுக் கொண்டார்.
சத்துணவு குறித்து நடைபெற்று வரும் உயர்மட்டக் குழு கூட்டத்திற்கு அனுப்பிய செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...