Thursday 1 March 2012

கத்தோலிக்க செய்திகள்: 01மார்ச் 2012

1. புனித பூமியின் சார்பில் உலக ஆயர்களுக்கு கர்தினால் சாந்த்ரியின் கடிதம்

2. இஸ்ரேல் நாட்டின் அழைப்பின்பேரில், புனித பூமியில் இந்தியத் திருஅவையின் தலைவர்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள்

3. அருளாளர் இரண்டாம் ஜான்பால் அறக்கட்டளையின் மூலம் ஆப்ரிக்காவில் மிகவும் பின்தங்கிய நாடுகளுக்கு உதவிகள்

4. மனித உரிமைகள் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதை விவிலியத்தின் மூலம் கற்றுக் கொண்டேன் - க்யூபா நாட்டின் புரட்சியாளர்

5. திருத்தந்தையின் மூத்த சகோதரர் எழுதியுள்ள புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பு வெளியிடப்பட்டது

6. இந்திய நகரங்களின் சேரிப் பகுதிகளில் பிறக்கும் குழந்தை ஓராண்டு நிறைவுக்கு முன் மரணம் UNICEF இந்தியப் பிரதிநிதி

7. தமிழ்நாட்டில் சூரிய சக்தியின் மூலம் 3 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க திட்டம்

8. அணுசக்திச் சோதனைகள் அனைத்தையும் வடகொரிய அரசு நிறுத்திவைக்கப் போவதாக அறிவிப்பு

------------------------------------------------------------------------------------------------------
 
1. புனித பூமியின் சார்பில் உலக ஆயர்களுக்கு கர்தினால் சாந்த்ரியின் கடிதம்

மார்ச்,01,2012. செபம் மற்றும் பிறரன்பு நடவடிக்கைகள் மூலம் புனித பூமிக்கு ஆதரவான கத்தோலிக்க திருஅவையின் உணர்வுகளைத் தட்டி எழுப்பவேண்டிய நேரம் இது என உலகின் ஆயர்களுக்கு, திருப்பீடத்தின் கீழைரீதி திருப்பேராயத் தலைவர் கர்தினால் லியனார்தோ சாந்த்ரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
புனித பூமியிலும் அதையொட்டிய பகுதிகளிலும் வாழும் தலத் திருஅவைகளுக்கென ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தில் புனித வெள்ளியன்று நிதி திரட்டப்படுவதையொட்டி ஆயர்களுக்கு செய்தி அனுப்பியுள்ள கர்தினால் சாந்த்ரி, எருசலேம், இஸ்ராயேல், பாலஸ்தீனம் மற்றும் யோர்தான், சிரியா, லெபனன், சைப்ரஸ், எகிப்து ஆகிய பகுதிகளின் மேய்ப்புப்பணி நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டிய உலக ஆயர்களின் கடமையைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
புனிதபூமிப் பகுதியில், குறிப்பாக சிரியாவிலும், எருசலேமிலும் இடம்பெறும் பதட்டநிலைகள் குறித்தும் தன் செய்தியில் கவலையை வெளியிட்டுள்ள கர்தினால் சாந்த்ரி, மன்னிப்பு மற்றும் ஒப்புரவின் தேவையை வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, கடந்த ஆண்டு புனித பூமி பகுதியில் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டது, துறவு இல்லங்கள் கட்டப்பட்டது, பல்கலைக்கழக மாணவர்களின் படிப்புக்கென நிதியுதவிகள் வழங்கப்பட்டது, சிறுவர்களுக்கு கல்வி உதவி வழங்கியது, விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்பட்டது, பள்ளிகள் கட்டப்பட்டது, ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது போன்ற விவரங்கள் அடங்கிய அறிக்கையை, புனித பூமி பகுதிக்குப் பொறுப்பாயிருக்கும் பிரான்சிஸ்கன் துறவு சபை வெளியிட்டுள்ளது.


2. இஸ்ரேல் நாட்டின் அழைப்பின்பேரில், புனித பூமியில் இந்தியத் திருஅவையின் தலைவர்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள்

மார்ச்,01,2012. புனித பூமியில் இந்தியர்கள் திருப்பயணங்களை மேற்கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு முயற்சியாக, இஸ்ரேல் நாட்டின் சுற்றுலாத் துறை விடுத்த அழைப்பின்பேரில், இந்தியத் திருஅவையின் தலைவர்கள் இஞ்ஞாயிறு முதல் வியாழன் வரை அந்நாட்டில் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளச் சென்றனர்.
இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ், அண்மையில் கர்தினாலாக உயர்த்தப்பட்ட சீரோமலபார் திருஅவைத் தலைவர் ஜார்ஜ் ஆலஞ்சேரி, கோவா மற்றும் டாமன் தலைமைப் பேராயர் Felipe Neri Serrao, திருவனந்தபுரம் பேராயர் சூசை பாக்கியம் ஆகியோர் உட்பட பல கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர்களையும், இன்னும் பிற கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களையும் இஸ்ரேல் நாடு அழைத்திருந்தது.
இயேசு பாடுபட்டு இறந்த கல்வாரிக் குன்று, அவரது கல்லறை, மற்றும் அவர் இரவு உணவு நடத்திய அறை ஆகிய அனைத்தையும் தரிசித்த இக்குழுவினர், ஒரு சில யூத வழிபாட்டு தலங்களையும் பார்வையிட்டனர். இக்குழுவினர் இஸ்ரேல் அரசுத் தலைவர்களுடனும், மற்ற யூத மதத் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவிலிருந்து புனித பூமிக்கு ஆயிரக்கணக்கனோர் ஒவ்வோர் ஆண்டும் புனித பயணங்களை மேற்கொள்வதால், அந்தப் பழக்கத்தை இன்னும் தீவிரப்படுத்தும் திட்டங்கள் இந்தக் குழுவினர் மேற்கொண்ட பயணத்தில் விவாதிக்கப்பட்டதெனத் தெரிகிறது.


3. அருளாளர் இரண்டாம் ஜான்பால் அறக்கட்டளையின் மூலம் ஆப்ரிக்காவில் மிகவும் பின்தங்கிய நாடுகளுக்கு உதவிகள்

மார்ச்,01,2012. ஆப்ரிக்காவின் சஹாரா பாலைநிலப் பகுதிகளில் Sahel என்றழைக்கப்படும் மிகவும் பின்தங்கிய நாடுகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு அருளாளர் இரண்டாம் ஜான்பால் அறக்கட்டளையின் மேல்மட்டக் கூட்டம் ஒன்று அண்மையில் உரோம் நகரில் முடிவடைந்தது.
இந்த வறுமைப்பட்ட நாடுகளில் 200க்கும் அதிகமான செயல்திட்டங்களை நிறைவேற்ற 20 இலட்சம் டாலர்கள், அதாவது 90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று "Cor Unum" என்ற பாப்பிறைக் கழகத்தின் செயலர் பேரருள்திரு Giampietro Dal Toso, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
இப்பகுதிகளில் மீண்டும் நிலவும் வறட்சியும், அதன் விளைவாக ஏற்படும் பட்டினிச் சாவுகளும் இந்த அவசர உதவிகளை செய்யத் தூண்டியுள்ளன என்று கூறினார் அருள்தந்தை Toso.
Sahel பகுதியில் திருஅவை சிறுபான்மையான மக்களையே கொண்டிருந்தாலும், இந்த மனிதாபிமான செயல்களால், மற்ற மதத்தினருடன், சிறப்பாக அப்பகுதியில்  பெரும்பான்மையாக உள்ள இஸ்லாமியருடன் இன்னும் இணக்க வாழ்வை மேம்படுத்த உதவும் என்று கூறினார் அருள்தந்தை Toso.
1980ம் ஆண்டு அருளாளர் இரண்டாம் ஜான்பால் ஆப்ரிக்காவுக்கு மேற்கொண்ட முதல் திருப்பயணத்தைத் தொடர்ந்து, அவர் பெயரால் இந்தப் பிறரன்பு அறக்கட்டளை உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.


4. மனித உரிமைகள் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதை விவிலியத்தின் மூலம் கற்றுக் கொண்டேன் - க்யூபா நாட்டின் புரட்சியாளர்

மார்ச்,01,2012. மனிதர்களின் உரிமைகளும் சுதந்திரமும் எப்போதும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதை தான் விவிலியத்தின் மூலம் கற்றுக் கொண்டதாக க்யூபா நாட்டின் புரட்சியாளர்களில் ஒருவரான Jose Daniel Ferrer கூறினார்.
2003ம் ஆண்டு க்யூபா நாட்டில் கம்யூனிச ஆட்சிக்கு எதிராக எழுந்த புரட்சியைத் தலைமை ஏற்று நடத்தியவர்களில் ஒருவரான Ferrer உட்பட 75 பேருக்கு க்யூபா அரசு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கியது.
கத்தோலிக்கத் திருஅவை க்யூப அரசுடன் மேற்கொண்ட முயற்சிகளால் 2011ம் ஆண்டு இந்த அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் Ferrer, ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று குடியேறும் வாய்ப்பை மறுத்துவிட்டு, க்யூபாவிலேயே தங்கி அங்கு அரசியல் மாற்றத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால், மீண்டும் கைது செய்யப்பட்டு, இச்செவ்வாயன்று விடுதலை செய்யப்பட்டார்.
தனது நாட்டை கம்யூனிச ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க முயற்சிகளைத் தொடர்வதே தனக்கு விவிலியம் தரும் அழைப்பு என்றும், அருளாளர் இரண்டாம் ஜான்பால் கூறியுள்ள பல கருத்துக்கள் தன் வாழ்வை வழிநடத்துகின்றன என்றும் Ferrer கூறினார்.
அருளாளர் இரண்டாம் ஜான்பால் தனிமனித விடுதலையைப் பற்றி தெளிவாகக் கூறியிருந்தாலும், அவரோ, வேறு திருத்தந்தையர்களோ க்யூபா நாட்டுக்கு விடுதலைக் கொணர முடியாது என்றும், இந்நாட்டின் விடுதலையைப் பெறுவது நாட்டு மக்களின் முக்கிய கடமையே என்றும் Jose Daniel Ferrer சுட்டிக்காட்டினார்.
இம்மாதம் இறுதியில் 25 முதல் 28 வரை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் க்யூபா நாட்டிற்கு திருப்பயணம் மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத் தக்கது.


5. திருத்தந்தையின் மூத்த சகோதரர் எழுதியுள்ள புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பு வெளியிடப்பட்டது

மார்ச்,01,2012. கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுடன் தனக்குள்ள உறவை விவரித்து, திருத்தந்தையின் மூத்த சகோதரர் பேரருள் தந்தை Georg Ratzinger எழுதியுள்ள ஒரு புத்தகம் மார்ச் 1ம் தேதி, இவ்வியாழனன்று ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.
"என் சகோதரர், பாப்பிறை" “My Brother the Pope” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் இந்த நூல், Michael Hesemann என்ற ஜெர்மன் நாட்டு எழுத்தாளர், அருள்தந்தை Georg Ratzinger அவர்களுடன் மேற்கொண்ட பல நேர்காணல்களின் தொகுப்பாக சென்ற ஆண்டு ஜெர்மன் மொழியில் வெளியாகியிருந்தது.
இயேசு சபையினரால் நடத்தப்படும் இக்னேசியஸ் அச்சகம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எழுதிய நூல்களை ஆங்கிலத்தில் வெளியிடும் தனி உரிமை பெற்ற ஓர் அச்சகம். இவ்வச்சகத்தின் மற்றுமொரு நூலாக Georg Ratzinger எழுதிய "என் சகோதரர், பாப்பிறை" இவ்வியாழனன்று வெளியிடப்பட்டது.
1927ம் ஆண்டு பிறந்த திருத்தந்தை தனக்கு மூன்றாண்டுகள் முன்பு பிறந்த Georg பற்றி பல நேரங்களில் தன் உரைகளில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். தனது அண்ணன், பல வழிகளிலும் தனக்கு நண்பராகவும், வழிகாட்டியாகவும் இருந்துள்ளார் என்று திருத்தந்தை இவரைக் குறித்து பேசியுள்ளார்.
1924ம் ஆண்டு பிறந்த Georg Ratzinger, குருத்துவ வாழ்வைத் தேர்ந்தெடுத்து, அவரும், தன் தம்பி Joseph Ratzinger உடன் இணைந்து, 1951ம் ஆண்டு திருநிலைபடுத்தப்பட்டார். இசையில் அதிக ஈடுபாடு கொண்ட Georg, தன் வாழ்வின் 30 ஆண்டுகளைப் புகழ்பெற்ற “Regensburger Domspatzen” என்ற இசைக்குழுவை வழிநடத்துவதில் கழித்தார். அதே வேளையில், Joseph Ratzinger தன் வாழ்வை இறையியலைப் படிப்பதிலும் கற்றுத்தருவதிலும் செலவிட்டார்.
குருத்துவப் பயிற்சியாளராக பல ஆண்டுகள் உழைத்தாலும், திருத்தந்தையின் மனம் எல்லாம் மேய்ப்புப் பணியில் அதிகம் ஈடுபட்டிருந்தது என்பதை "என் சகோதரர், பாப்பிறை" என்ற புத்தகத்தின் 7வது பிரிவில் விளக்கியுள்ளதாக, Georg Ratzinger, CNA கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.


6. இந்திய நகரங்களின் சேரிப் பகுதிகளில் பிறக்கும் குழந்தை ஓராண்டு நிறைவுக்கு முன் மரணம் UNICEF இந்தியப் பிரதிநிதி

மார்ச்,01,2012. இந்திய நகரங்களின் சேரிப் பகுதிகளில் பிறக்கும் ஒரு குழந்தை ஓராண்டு நிறைவுக்கு முன் மரணம், அல்லது, அக்குழந்தை 18 வயதை அடைவதற்குள் திருமணம் ஆகிய பிரச்சனைகளைச் சந்திக்கிறது என்று, குழந்தைகளின் கல்வி மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கென உருவாக்கப்பட்டுள்ள UNICEF என்ற ஐ.நா. அமைப்பின் இந்தியப் பிரதிநிதி Karen Hulshof கூறினார்.
2012ம் ஆண்டில் உலகக் குழந்தைகளின் நிலைஎன்ற அறிக்கையை UNICEF இச்செவ்வாயன்று வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் குழந்தைகள் நிலை குறித்த ஓர் அறிக்கை, புதுடில்லியில் இப்புதனன்று வெளியிடப்பட்டபோது, ஐ.நா.அதிகாரி இவ்வாறு கூறினார்.
இந்தியாவின் பெருநகரங்களில் 50,000க்கும் அதிகமான சேரிகளில் 9 கோடியே 70 இலட்சம் வறியோர் வாழ்கின்றனர் என்று ஐ.நா.வின் அறிக்கை கூறுகிறது.
மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, குஜராத் ஆகிய ஐந்து மாநிலங்களில் நகர்வாழ் ஏழைகள் அதிகம் உள்ளனர் என்று இவ்வறிக்கைச் சுட்டிக் காட்டுகிறது.
இதே நிலை நீடித்தால், 2026ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள்தொகையில் 40 விழுக்காடு மக்கள் நகர்ப்புறங்களில் வாழ நேரிடும் என்றும் இவ்வறிக்கை கணிக்கிறது.
நகர்வாழ்  ஏழைகளில் மிக அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது குழந்தைகளே என்பதை வலியுறுத்தும் இவ்வறிக்கை, உடல் அளவிலும், மனதளவிலும் பல்வேறு எதிர்மறையான விளைவுகளைச் சந்திக்கும் இக்குழந்தைகளைக் காப்பது இன்றைய இந்திய சமுதாயத்தின் கடமை என்பதையும் வலியுறுத்துகிறது.


7. தமிழ்நாட்டில் சூரிய சக்தியின் மூலம் 3 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க திட்டம்

மார்ச்,01,2012. சூரியசக்தியின் மூலம் மின்சாரத் தேவைகளை நிறைவு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை உருவாக்கி தந்துள்ள தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டுக் குழு, அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக, 2000 அரசு அலுவலகங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாகவும், நடப்பு ஆண்டின் இறுதிக்குள், இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 1000 மெகாவாட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 1000 அரசு அலுவலகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு 1கிலோவாட் சூரிய ஒளியை மின் ஆற்றலாக மாற்றும் சூரியஒளித் தகடுகள் அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டுக் குழுவின் பொது மேலாளர் ஸ்ரீனிவாஸ் சங்கர் கூறினார்.
சூரிய ஒளியின் மூலம் தயாரிக்கப்பட உள்ள மின்சாரத்தை 3 லட்சம் வீடுகள் மற்றும் 1 லட்சம் தெருவிளக்குகளுக்கு பயன்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்றும், தங்களது நிறுவனம் இவ்வாண்டு இறுதிக்குள், 60 ஆயிரம் வீடுகள் மற்றும் 20 ஆயிரம் தெருவிளக்குகளுக்கு சூரியஒளித் தகடுகளை நிறுவ தீர்மானித்துள்ளது என்றும் ஸ்ரீனிவாஸ் சங்கர் கூறினார்.
சூரிய சக்தியைப் பயன்படுத்தும் முயற்சிகளை ஒரு சில முன்னணி வர்த்தக நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. மார்ச் 12 மற்றும் 13 தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்த சர்வதேச மாநாட்டில், இதுகுறித்து விவாதிக்க இருப்பதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


8. அணுசக்திச் சோதனைகள் அனைத்தையும் வடகொரிய அரசு நிறுத்திவைக்கப் போவதாக அறிவிப்பு

மார்ச்,01,2012. வடகொரியாவும், அமெரிக்க ஐக்கியநாடும் அண்மையில் Beijing நகரில் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் நேர்மறையான, நடைமுறைக்கேற்ற விளைவுகளைத் தந்திருப்பது குறித்து தன் மகிழ்வை வெளியிட்டுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.
Uranium உலோகத்தின் பரிசோதனைகள், மற்றும் அணுசக்திச் சோதனைகள் அனைத்தையும் தனது அரசு நிறுத்திவைக்கப் போவதாகவும், தங்களது அணுசக்தி செயல்பாடுகளை சர்வதேச கண்காணிப்புக் குழு பார்வையிட அனுமதிப்பதாகவும் வடகொரிய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி இப்புதனன்று வெளியிடப்பட்டது.
அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், வடகொரியாவுக்கும் இடையே அண்மையில் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, தன் அணுசக்தி செயல்பாடுகளை நிறுத்திவைக்கப் போவதாக வடகொரியா அறிவித்துள்ளதை தென்கொரியா மகிழ்வுடன் வரவேற்றுள்ளது.
வடகொரியாவுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, வடகொரியாவுக்கு 2,40,000 டன் அளவில் உணவுப் பொருட்களை வழங்க அமெரிக்க ஐக்கிய நாடு முன்வந்துள்ளது.
அமெரிக்காவின் இந்த முடிவு, வடகொரியாவில் உணவின்றி வாடும் பல்லாயிரம் மக்களின் துயர் துடைக்கும் ஒரு முக்கிய முடிவு என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் தெரிவித்தார்.
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...