Tuesday, 27 March 2012

கத்தோலிக்க செய்திகள்: 24 மார்ச் 2012

திருத்தந்தையின் 23 வது வெளிநாட்டுத் திருப்பயணம் மெக்சிகோவில் திருத்தந்தை

மார்ச்24,2012. பற்றுறுதி, நம்பிக்கை, அன்பு ஆகியவற்றின் திருப்பயணியாக வந்துள்ளேன் என்ற நல்வார்த்தைகளுடன் மெக்சிகோ நாட்டுக்கானத் தனது முதல் திருப்பயணத்தைத் தொடங்கியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். ஆல் இத்தாலியா போயிங் 777ல் விமானப்பயணத்தைத் தொடங்கிய திருத்தந்தை, அப்பயணத்தின் போது பன்னாட்டு ஊடகங்களின் 72 பிரதிநிதிகளைச் சந்தித்து, நிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்னார். விடுதலை இறையியல் பற்றிய கேள்விக்குப் பதில் அளித்த போது,
இலத்தீன் அமெரிக்காவில் தனிமனிதருக்கும் பொதுவான அறநெறிகளுக்கும் இடையே சில முரண்பாடுகள் காணக்கூடியதாய் இருக்கின்றன, இப்படிக் காணப்படுவது சிறிய அளவிலானக் கத்தோலிக்கரிடம் மட்டுமல்ல. மேலும், திருஅவை சமூகநீதிக்கு போதுமானதைச் செய்து வருகிறதா? என்பதை எப்போதும் அது கேட்க வேண்டும். திருஅவை அரசியல் வல்லமை படைத்தது அல்ல, அரசியல் கட்சியுமல்ல, ஆனால், அது அறநெறித் தன்மை கொண்டது. இத்தன்மையில் கத்தோலிக்கரிடம் ஒரு முரண்பட்ட நிலை தென்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் கத்தோலிக்கராக இருப்பவர்கள், பொது வாழ்க்கையில் வேறுவிதமான பாதையைப் பின்பற்றுகிறார்கள், எனவே திருஅவையின் முதல் எண்ணமே மனச்சான்றுகளுக்குப் போதிப்பதாக இருக்க வேண்டும், திருஅவை தனிப்பட்டவருக்கும் மட்டுமல்லாமல், பொதுவாகவும் ஒழுக்கநெறிகளைப் போதிக்க வேண்டும், திருஅவையின் சமூகக் கோட்பாடுகளை வைத்து, இப்போதனையைச் செய்ய முயற்சிக்கிறோம்என்று பதில் சொன்னார் திருத்தந்தை.

மெக்சிகோவைப் பாதிக்கும் போதைப்பொருள் தொடர்புடைய வன்முறை பிரச்சனைகளுக்குப் பதில் சொன்ன போது...

மனிதரை அடிமைப்படுத்தும் பணத்தையும் அதிகாரத்தையும் வணங்குவதில் பெரும் ஆபத்துக்கள் உள்ளன. இவை போலி வாக்குறுதிகளையும் பொய்களையும் ஏமாற்றுக்களையும் முன்வைக்கின்றன. இந்த அச்சுறுத்தல்கள் குறித்து திருஅவை மக்களுக்குப் போதிக்க வேண்டும் என்று கூறினார்.

மெக்சிகோவில் போதைப்பொருள் தொடர்புடைய வன்முறைகளில், 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை, 47,600 பேருக்கு மேற்பட்டோர் இறந்தனர் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி பாப்பிறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக இலத்தீன் அமெரிக்காவுக்கு இம்மாதம் 23 முதல் 28 வரை பயணத்தை நடத்தி வருகிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இவர் மேற்கொள்ளும் இத்தாலிக்கு வெளியேயான இந்த 23வது திருப்பயணத்தில் மெக்சிகோவிலும் கியூபாவிலும் திருப்பயண நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். எனவே இந்த விமானப்பயணத்தில், நிருபர்கள் திருத்தந்தையிடம், கியூபா நாட்டின் சமூக-அரசியல் நிலவரம் குறித்துக் கேள்வி கேட்டனர். அதற்குப் பதில் சொன்ன திருத்தந்தை.....

14 ஆண்டுகளுக்கு முன்னர் அருளாளர் பாப்பிறை 2ம் ஜான் பால் கியூபாவுக்கு மேற்கொண்ட திருப்பயணத்தை நினைவுகூருகிறேன். இப்பயணம், ஒத்துழைப்பு மற்றும் உரையாடல் பாதையைத் திறந்து வைத்தது. இதற்குப் பொறுமை தேவை. எனினும் இவை தொடர்கின்றன. நீதியான சமுதாயத்தை உருவாக்குவதற்கு, உரையாடல் உணர்வில் திருஅவை உதவ விரும்புகின்றது. அது எப்போதும், மனச்சான்று மற்றும் மதத்தின் சுதந்திரத்துக்கு வாழ்வுக்கு ஆதரவாக இருக்கின்றதுஎன்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

வத்திக்கான் மற்றும் மெக்சிகோ நாடுகளின் கொடிகளை முகப்பில் பறக்கவிட்டுக் கொண்டு ஆல் இத்தாலியா விமானம் மெக்சிகோ நாட்டு Guanajuato பன்னாட்டு விமானநிலையத்தின் தரையைத் தொட்ட போது, இவ்விரு நாடுகளின் கொடிகளை ஆட்டிக் கொண்டு மக்கள் செய்த ஆரவாரம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 14 மணிநேரம் விமானப் பயணம் செய்த, 85 வயதை வருகிற மாதத்தில் எட்டப்போகும் திருத்தந்தை களைப்பாக இருப்பார் என்ற எதிர்பார்ப்பை விஞ்சுவதாக அவரது செயல்கள் இருந்தன. "Se ve, se siente, el Papa está presente!" அதாவது நம்மால் பார்க்க முடிகின்றது, நம்மால் உணர முடிகின்றது, திருத்தந்தை இங்கே இருக்கிறார் என்ற மக்களின் ஆரவார வரவேற்பில் மனமகிழ்ந்து, விமானப்படிகளில் இறங்கி வந்த போது கைககளை விரித்து வாழ்த்தினார்.

விமானப்படிகளில் காத்திருந்த மெக்சிகோ அரசுத்தலைவர் Felipe Calderón, அவரது மனைவி, திருப்பீடத் தூதர் ஆகியோரை வாழ்த்தினார். மூன்று சிறார் ஒரு சிறுபெட்டியில் கொடுத்ததை மகிழ்வோடு பார்த்து அச்சிறாரின் முகங்களைத் தடவிக் கொடுத்து வாழ்த்தினார். விமான நிலையத்தில் இடம் பெற்ற சிவப்புக்கம்பள வரவேற்பில் முதலில் அரசுத்தலைவர் Felipe Calderón பேசினார்.

பின்னர் உரையாற்றிய திருத்தந்தை, மெக்சிகோவுக்கு வந்திருப்பதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. மெக்சிகோவும் பெரும்பாலான இலத்தீன் அமெரிக்க நாடுகளும் அண்மை ஆண்டுகளாக தாங்கள் சுதந்திரம் பெற்றதன் 200வது ஆண்டைக் கொண்டாடி வருகின்றன. பல்வேறு நன்றித் திருவழிபாடுகளும் இடம் பெற்றன. பற்றுறுதி, நம்பிக்கை, அன்பு ஆகியவற்றின் திருப்பயணியாக வந்துள்ளேன். இயேசு கிறிஸ்துவை விசுவசிப்பவர்களை, அதில் உறுதிப்படுத்தி ஊக்கப்படுத்த விரும்புகிறேன். மதிப்பும் அமைதியும் கலந்த ஒருங்கிணைந்த நல்வாழ்வுக்கு உதவும் நோக்கத்தில்மெக்சிகோ கத்தோலிக்கர்கள் வேதபோதக மறைப்பணியாளர்களாகச் செயல்பட வேண்டும். ஒவ்வொரு மனிதனின் ஒப்பிடப்பட முடியாத மற்றும் இதனைப் புறக்கணிக்க எவருக்கும் உரிமையில்லாத மாண்பிலிருந்தும் இந்த ஒருங்கிணைந்த வாழ்வு பிறக்கின்றது. இந்த மாண்பு, மத சுதந்திரத்திற்குரிய அடிப்படை உரிமையில் குறிப்பாக வெளிப்படுத்தப்பட வேண்டும். நல்லதோர் உலகை அமைப்பதற்குத் தங்களைச் செயல்ரீதியாக அர்ப்பணிப்பதற்கு, மெக்சிகோ மற்றும் இலத்தீன் அமெரிக்க மக்கள் தங்களது நம்பிக்கையை இறைவனில் வைக்க வேண்டுமென, நம்பிக்கையின் திருப்பயணியாக வந்துள்ள நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

மேலும், தேவையில் இருப்போர், குறிப்பாக, அனைத்து வகையான வன்முறைகளாலும் பழைய புதிய பகைமைகளாலும் வெறுப்புக்களாலும் துன்புறுவோருக்காகச் சிறப்பாகச் செபித்த திருத்தந்தை, விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மெக்சிகோவில், தானும் அப்பண்பை உணர்வதாகத் தெரிவித்தார். அதேசமயம், இந்நாட்டில் எவரும் வரவேற்கப்படாமல் இருப்பதாக உணரக்கூடாது. இந்த மாபெரும் நாட்டிற்கு வரவேண்டுமென்ற எனது நீண்டகால ஆவலை நிறைவேற்றிய இறைவனுக்கு நன்றி. தங்களது தாயகத்தைவிட்டுத் தொலைவில் வாழ்வோரும், இந்நாடு நல்லிணக்கத்திலும் உண்மையான ஒருங்கிணைந்த வளர்ச்சியிலும் வளர்வதைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையில் ஆர்வம் இழக்கக்கூடாது. இந்நாட்டு மக்கள் தாங்கள் பெற்ற விசுவாசத்திற்கு எப்போதும் உண்மையுள்ளவர்களாக வாழ அன்னைமரியிடம் செபித்து

இம்முதல் உரையை நிறைவு செய்தார். இவ்விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி இளையோர் உட்பட பல இளையோரைத் தழுவினார், வாழ்த்தினார். சில சிறார் திருத்தந்தையைத் தொடுவதற்கு அரசுத்தலைவரின் மனைவி உதவி செய்தார். அவசரப்படாமல் நீண்ட நேரம் எடுத்து இவர்களை ஆசீர்வதித்தார். பின்னர் அங்கிருந்து 34 கிலோ மீட்டர் தூரம் திறந்த காரில் சென்றார். மெக்சிகோ, சுமார் 92 விழுக்காட்டுக் கத்தோலிக்கரைக் கொண்ட நாடு என்பது திருத்தந்தைக்கு மக்கள் கொடுத்த வரவேற்பில் தெளிவாகத் தெரிந்தது. லெயோன் நகரில் கப்புச்சின் அருட்சகோதரிகள் நடத்தும் Miraflores கல்லூரி சென்று இரவு உணவு அருந்தினார். இத்துடன் இந்த முதல் நாள் பயணத்திட்டம் நிறைவுக்கு வந்தது. திருத்தந்தை Miraflores கல்லூரியை அடைந்த போது இந்திய நேரம் இச்சனிக்கிழமை காலை 6 மணியாகும்.

வருகிற திங்களன்று மெக்சிகோவிலிருந்து கியூபா நாடு செல்லும் திருத்தந்தை, வருகிற வியாழனன்று உரோம் திரும்புவார். 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...