Sunday 11 March 2012

கத்தோலிக்க செய்திகள்: 10 மார்ச் 2012

1. உலகில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏறக்குறைய 17.5 விழுக்காடாக இருந்து வருகிறது

2. “தண்ணீர் வாழ்வுக்கு முக்கிய ஆதாரம் : திருப்பீடக் கையேடு

3. ஓரினச்சேர்க்கையாளரை அங்கீகரிப்பது, திருமணத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகும் - திருப்பீட அதிகாரி

4. கடந்த ஆண்டு சுனாமியில் இறந்தவர்களுக்காகச் செபிக்குமாறு ஜப்பான் பேராயர் வேண்டுகோள்

5. சர்வதேச காரித்தாஸ், குடியேற்றதாரப் பெண்களுக்கான கையேட்டைத் தயாரித்துள்ளது

6. கியுபாவில் சமய சுதந்திர மீறல்கள் அதிகரித்து வருகின்றன - CSW அறிக்கை

7. உலகில் சுமார் 8 இலட்சம் சிறார் சட்டத்துக்குப் புறம்பான வேலையில் பயன்படுத்தப்படுகின்றனர்

8. கடல்சார் பறவையினங்கள் அருகிவருகின்றன: புதிய ஆய்வு

-------------------------------------------------------------------------------------------

1. உலகில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏறக்குறைய 17.5 விழுக்காடாக இருந்து வருகிறது

மார்ச் 10,2012. உலகில் திருமுழுக்குப் பெற்ற கத்தோலிக்கரின் எண்ணிக்கை, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏறக்குறைய 17.5 விழுக்காடாக இருந்து வருகிறது என்று, இச்சனிக்கிழமை திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்ட L’Annuario Pontificio 2012 என்ற ஏடு கூறுகிறது.
2009ம் ஆண்டில் 118 கோடியே 10 இலட்சமாக இருந்த கத்தோலிக்கரின் எண்ணிக்கை, 2010ம் ஆண்டில் 119 கோடியே 60 இலட்சமாக உயர்ந்தது எனவும் இவ்வேடு கூறுகிறது.
திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே தலைமையிலான குழு, L’Annuario Pontificio 2012 என்ற கத்தோலிக்கத் திருஅவையின் அனைத்துப் புள்ளி விபரங்கள் அடங்கிய இந்த ஆண்டுப் புத்தகத்தைத் திருத்தந்தையிடம் சமர்ப்பித்தது.
2009க்கும் 2010க்கும் இடைப்பட்ட காலத்தில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை, தென் அமெரிக்காவில் 0.20 விழுக்காடும், ஐரோப்பாவில் 0.22 விழுக்காடும் குறைந்துள்ளது என்றும், அதேசமயம் ஆப்ரிக்காவில் 0.40 விழுக்காடும், தென்கிழக்கு  ஆசியாவில் 0.46விழுக்காடும் அதிகரித்துள்ளது என்றும் அவ்வேடு கூறுகிறது.
இதே காலக்கட்டத்தில் உலகில் ஆயர்களின் எண்ணிக்கை 5,065லிருந்து 5,104 ஆக உயர்ந்து அவ்வெண்ணிக்கை 0.77 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
2000மாம் ஆண்டில் அதிகரிக்கத் தொடங்கிய அருட்பணியாளர்களின் எண்ணிக்கை, 2010ம் ஆண்டில் 4,12,236 ஆக இருந்தது என்றும், இவர்களில் மறைமாவட்ட குருக்கள் 2,77,009 என்றும், இவ்வெண்ணிக்கை ஆசியாவில் அதிகம் என்றும் L’Annuario Pontificio 2012 தெரிவிக்கிறது.
ஆயினும், 2009ம் ஆண்டில் உலகில் 7,29,371 ஆக அருட்சகோதரிகளின் எண்ணிக்கை, 2010ம் ஆண்டில் 7,21,935 ஆகக் குறைந்துள்ளது எனவும், இவ்வெண்ணிக்கை ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஓசியானியாவில் குறைந்து ஆப்ரிக்காவிலும் ஆசியாவிலும் அதி்கரித்துள்ளது எனவும் அவ்வேடு கூறுகிறது.  
L’Annuario Pontificio 2012 என்ற புள்ளி விபர ஏட்டைத் தயாரித்தவர்களுக்குத் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

2. “தண்ணீர் வாழ்வுக்கு முக்கிய ஆதாரம் : திருப்பீடக் கையேடு

மார்ச்10,2012. பிரான்சின் Marseilleலில் வருகிற திங்களன்று தொடங்கும் ஆறாவது உலகத் தண்ணீர் மாநாட்டிற்குத் தனது பங்களிப்பாக, தண்ணீர் வாழ்வுக்கு முக்கிய ஆதாரம் என்ற தலைப்பில் ஒரு சிறிய கையேட்டை வெளியிட்டுள்ளது திருப்பீடம்.
உலகத் தண்ணீர் அவையினால் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இவ்வுலக மாநாட்டில், தண்ணீர் தொடர்புடைய பல்வேறு விவகாரங்கள் குறித்து, பல்வேறு தனிப்பட்ட மற்றும் பொது நிறுவனப் பிரதிநிதிகள் கலந்து பேசுவார்கள்.
Marseilleல் இம்மாதம் 12 முதல் 17 வரை நடைபெறவிருக்கும் இம்மாநாட்டிற்கென கையேடு ஒன்றை வெளியிட்டுள்ள திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை, உலகில் அனைவருக்கும் சுத்தக் குடிநீர் கிடைப்பதற்கும், நீர் வளங்கள் பொறுப்புடன் நிர்வகிக்கப்படுவதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், உலகின் பாதி மக்கள் சுத்தக் குடிநீர் கிடைப்பதற்கு இன்னும் போதுமான வசதிகளைப் பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

3. ஓரினச்சேர்க்கையாளரை அங்கீகரிப்பது, திருமணத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகும் - திருப்பீட அதிகாரி

மார்ச் 10,2012. ஒரே பாலினச்சேர்க்கை மனிதர்க்கெதிரான வன்முறையையும் பாகுபாட்டையும் கத்தோலிக்கத் திருஅவை கண்டிக்கிறது, அதேநேரம், ஒரே பாலினத்தவர் சேர்ந்து வாழ்வதைத் திருமணம் போன்று அங்கீகரிப்பது, ஓர் ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வாழும் திருமணப்பந்தத்தைக் குறைத்து மதிப்பிடுகின்றது என்று திருப்பீட அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் எடுத்துரைத்தார்.
பாலியல் அடிப்படையில் மனிதர்க்கெதிரான வன்முறை மற்றும் பாகுபாடுகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் அவையில் இவ்வெள்ளியன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா.நிறுவனங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி, மனிதர்க்கெதிராக நடத்தப்படும் வன்முறை மற்றும் பாகுபாட்டைக் கண்டித்துப் பேசினார்.
மேலும், போதுமான குடியிருப்பு வசதிகள் குறித்தும் ஐ.நா.கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் தொமாசி, போதுமான குடியிருப்பு வசதிகளைக் கொண்டிருப்பது அனைவருக்கும் அடிப்படை உரிமை என்று பேசியதோடு, குழந்தைகளை வளர்ப்பதற்குப் பொறுப்பான பெண்களுக்கு குடியிருப்பு வசதிகள் முக்கியமானவை என்று கூறினார்.
இவ்வெள்ளியன்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களைச் சந்தித்தத் திருத்தந்தை 16ம் பெனடிக்டும், ஓரே பாலினத் திருமணத்திற்கெதிராகக் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

4. கடந்த ஆண்டு சுனாமியில் இறந்தவர்களுக்காகச் செபிக்குமாறு ஜப்பான் பேராயர் வேண்டுகோள்

மார்ச்10,2012. உலக வரலாற்றில் இடம் பெற்றுள்ள மிகக் கொடூரமான இயற்கைப் பேரிடர்களில் ஒன்றான ஜப்பானில் கடந்த ஆண்டு இடம் பெற்ற நிலநடுக்கம், சுனாமி ஆகியவற்றில் இறந்தவர்களுக்காகச் செபிக்குமாறு கத்தோலிக்கரைக் கேட்டுள்ளார் ஜப்பான் பேராயர் Leo Jun Ikenaga.
ஜப்பானில் 2011ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி நடைபெற்றதை நம் வாழ்நாளில் மறக்க முடியாது என்று ஜப்பானிய கத்தோலிக்கருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் பேராயர் Ikenaga.
நிலநடுக்கம், சுனாமி ஆகியவற்றில் பாதிக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் கட்டி எழுப்பப்படுமாறு செபிப்பதோடு, இப்பேரிடரில் இறந்தவர்களுக்கு இறைவன் நித்திய சாந்தியை அளித்தருளுமாறு செபிக்கவும் கேட்டுள்ளார் பேராயர் Ikenaga.
கடந்த ஆண்டு ஜப்பானில் இடம் பெற்ற இயற்கைப் பேரிடரில் ஏறக்குறைய இருபதாயிரம் பேர் இறந்தனர்.  

5. சர்வதேச காரித்தாஸ் குடியேற்றதாரப் பெண்களுக்கான கையேட்டைத் தயாரித்துள்ளது

மார்ச் 10,2012. குடியேற்றதாரப் பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு உதவும் நோக்கத்தில் கையேடு ஒன்றைத் தயாரித்துள்ளது சர்வதேச காரித்தாஸ் நிறுவனம்.
இவ்வாண்டு உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு, குடியேற்றதாரப் பெண்கள் என்ற தலைப்பில், வழிகாட்டி கையேட்டை வெளியிட்டுள்ளது சர்வதேச காரித்தாஸ் நிறுவனம்.
உலகில் அதிகரித்து வருவதாக நம்பப்படும் மனித வியாபாரம் குறித்தும் விளக்கும் இக்கையேடு, குடியேற்றம் பற்றிய தற்போதையச் சிந்தனைகளில் மாற்றம் தேவை என்பதையும் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசின் புள்ளி விபரங்களின்படி, உலகில் ஒரு கோடியே 20 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வியாபாரம் செய்யப்படுகின்றனர். இவர்களில் சுமார் 60 விழுக்காட்டினர் பெண்கள் எனத் தெரியவந்துள்ளது.

6. கியுபாவில் சமய சுதந்திர மீறல்கள் அதிகரித்து வருகின்றன - CSW அறிக்கை

மார்ச் 10,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இம்மாதம் 23 முதல் 29 வரை மெக்சிகோவுக்கும் கியுபாவுக்கும் திருப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் வேளை, கியுபாவில் சமய சுதந்திர மீறல்கள் அதிகரித்து வருகின்றன என்று CSW என்ற உலகளாவிய கிறிஸ்தவ தோழமை அமைப்பு கூறியது.
2011ம் ஆண்டு முழுவதும் 28 சமய சுதந்திர மீறல் விவகாரங்கள் இடம் பெற்றவேளை, இவ்வாண்டு தொடக்க முதல் இதுவரை 20 விவகாரங்கள் இடம் பெற்றுள்ளன என்று CSW அறிக்கை கூறுகிறது.
மக்கள் ஆலய வழிபாடுகளில் கலந்து கொள்வதைத் தடை செய்தல், திருஅவைக்குரிய நிலங்களைப் பறிமுதல் செய்தல், அதிகாரப்பூர்வமான நச்சரிப்புகள், அடிகள், திருஅவைத் தலைவர்களின் கைதுகள் எனச் சமய சுதந்திர மீறல்களைப் பட்டியலிட்டுள்ளது கிறிஸ்தவ தோழமை அமைப்பு.
வெள்ளை இயக்கத்தைச் சேர்ந்த பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்த கத்தோலிக்க மனித உரிமை ஆர்வலர்கள் ஆலய வழிபாடுகளில் கலந்து கொள்வது வலுவந்தமாகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது எனவும் அவ்வறிக்கை கூறுகிறது. 

7. உலகில் சுமார் 8 இலட்சம் சிறார் சட்டத்துக்குப் புறம்பான வேலையில் பயன்படுத்தப்படுகின்றனர்

மார்ச் 10,2012. உலகில் சுமார் 8 இலட்சம் சிறார் நாட்கணக்காய் வேலை செய்வதோடு, இளம் வயதில் தாங்க முடியாத அனைத்து விதமான துன்பங்களையும் எதிர்கொள்கின்றனர் என்று மத்ரித்திலுள்ள சிறார் அமைப்பு ஒன்று கூறுகிறது.
இவ்வுலகில், அமெரிக்க ஐக்கிய நாடும், சொமாலியாவும் மட்டுமே, அனைத்துலக சிறார் உரிமைகள் குறித்த ஒப்பந்தத்தை இன்னும் அமல்படுத்தாத நாடுகளாக உள்ளன எனக் கூறும் Camino Juvenil Solidario என்ற அமைப்பு, வயல்களில் வேலை செய்யும் சிறார் நச்சு கலந்த வேதியப் பூச்சிக் கொல்லி மருந்துகளைச் சுவாசிக்கின்றனர் என்று தெரிவித்தது.
ஈக்குவதோர் நாட்டில், விபச்சாரம், பிச்சையெடுத்தல், வீடுகளில் கொத்தடிமை போன்ற சட்டத்துக்குப் புறம்பான வேலைகளில், 5க்கும் 14 வயதுக்கும் உட்பட்ட 3,67,000 சிறார் பயன்படுத்தப்படுகின்றனர் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
தாய்லாந்து போன்ற நாடுகளில் 12 விழுக்காட்டுக்கு மேற்பட்ட சிறார் வயல்களிலும், மற்ற சிறார் இறால் மற்றும் மீன்பண்ணைகளிலும், விபச்சாரத் தொழிலிலும், வீடுகளில் கொத்தடிமைகளாகவும் பயன்படுத்தப்படுகின்றனர் என்று Camino Juvenil Solidario அமைப்பு கூறியது. 

8. கடல்சார் பறவையினங்கள் அருகிவருகின்றன: புதிய ஆய்வு

மார்ச் 10,2012. கடற்கரையை அண்டி வாழும் பறவையினங்களின் எண்ணிக்கை, பாதி அளவாகக் குறைந்து வருவதாக புதிய ஆய்வொன்று கண்டறிந்துள்ளது.
மோசமாக அழிவடைந்து வரும் விலங்கினங்களின் பட்டியலின் உச்சத்தில் இந்தப் பறவையினங்களில் 28 விழுக்காடு இருப்பதாக, Bird Conservation International என்ற பறவைகள் பற்றிய இதழில் வெளியான ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால், ஆல்பட்ரோஸ் குடும்பத்தைச் சேர்நத பறவையினங்களே வேகமாக அழிந்து வருவதாக பறவைகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பெரும் வர்த்தக ரீதியான நவீன மீன்பிடி முறைகளாலும், பெருச்சாளிகள், காட்டுப் பூனைகள் போன்ற உயிரினங்களால் இப்பறவைகளின் இனப்பெருக்கத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளுமே இந்த அழிவுக்கு காரணம் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
கடல் மற்றும் கடல்சார்ந்த பகுதிகளின் நலவாழ்வை உறுதி செய்வதற்கும், அவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகளை எச்சரிப்பதற்கும் இந்தக் கடல்சார் பறவைகள் மிகவும் அவசியமானவை. ஆனால் உலகின் மொத்தப் பறவையினங்களில் இவை வெறும் 3.5 விழுக்காடுதான் எனவும் சொல்லப்படுகிறது.
அடையாளம் காணப்பட்டுள்ள 346 வகையான கடல்சார் பறவையினங்களில் 47 விழுக்காட்டில் இந்த அழிவைக் காணமுடிவதாக கூறப்படுகிறது.
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...