Tuesday 6 March 2012

கத்தோலிக்க செய்திகள்: 03 மார்ச் 2012

1. தியானச் சிந்தனைகளை வழங்கிய கர்தினாலுக்குத் திருத்தந்தை நன்றியும் பாராட்டும்

2. கராச்சி பேராயர் - Shahbaz Bhatti யின் தியாகம் வீண் போகாது

3. பாகிஸ்தானில் வகுப்புவாத வன்முறைகள் நிறுத்தப்பட்டு சிறுபான்மை மதத்தவர் பாதுகாக்கப்படுவதற்கு ஐ.நா.மனித உரிமை

4. உலகில் 200 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்குச் சமய சுதந்திரம் மறுக்கப்படுகின்றது - வத்திக்கான் உயர் அதிகாரி
       வல்லுனர்கள் வலியுறுத்தல்

5. இலங்கையில் காவல்துறையின் வன்முறைக்குப் பலியானவர்களுக்கு ஆதரவாக மாதந்தோறும் அமைதிப் போராட்டம்

6. CAFOD  - தவக்காலம்,நோன்பு காலம்

7. சிரிய அதிகாரிகள் குடிமக்களுக்கு எதிராகக் குற்றமிழைக்கிறார்கள் ஐ.நா.பொதுச் செயலர்

8. சிரியா: செஞ்சிலுவைச் சங்க உதவிப் பணியாளர்களுக்கு அனுமதி மறுப்பு


-------------------------------------------------------------------------------------------

1. தியானச் சிந்தனைகளை வழங்கிய கர்தினாலுக்குத் திருத்தந்தை நன்றியும் பாராட்டும்

மார்ச்03,2012. நாம் திருமுழுக்கில் இறைவனோடு ஒன்றிப்பு அடைந்த பேருண்மையை மீண்டும் கண்டுணருவதற்கு, அமைதி, செபம், குறிப்பாக, திருநற்கருணை ஆராதனை வழியாக இந்தத் தியான நாட்களில் தங்களை வழிநடத்திச் சென்றதற்கு கர்தினால் Laurent Monsengwo Pasinya வுக்கு நன்றி தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீடத் தலைமையக அதிகாரிகளுடன் வத்திக்கானில் ஒரு வாரம் தியானம் செய்து இச்சனிக்கிழமை காலை அதனை முடித்துள்ள திருத்தந்தை, தங்களுக்குத் தியானச் சிந்தனைகளை வழங்கிய Congo நாட்டு Kinshasa கர்தினால் Monsengwo Pasinya வுக்கு எழுதிய நன்றிக் கடிதத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தத் தியானச் சிந்தனைகளை, கர்தினால் வழங்கிய விதம், ஆப்ரிக்கத் திருஅவையின் விசுவாசத்திற்குச் சிறப்பான சாட்சியத்தை உணர முடிந்தது எனவும் பாராட்டிய திருத்தந்தை, இத்தியானச் சிந்தனைகளுக்கு ஏற்ப, அவ்வப்போது அவர் உரைத்த அழகிய கதைகள், குறிப்பாக பெரும்பாலான ஆப்ரிக்கக் கதைகள் சிந்திக்கக்கூடியதாகவும், தியானத்திற்கு உதவியதாகவும் இருந்தன என்றார். 

           
2. கராச்சி பேராயர் - Shahbaz Bhatti யின் தியாகம் வீண் போகாது

மார்ச்03,2012. பாகிஸ்தானில் ஓராண்டுக்கு முன்னர் கொல்லப்பட்ட Shahbaz Bhatti யின் தியாகம், அந்நாட்டின் சிறுபான்மை மதத்தவர், மற்றவர்களைப் போலவே உரிமைகளையும் மாண்பையும் முழுமையாய் அனுபவிக்க வேண்டுமென்ற ஆவலின் வெளிப்பாடாக இருக்கின்றது என்று கராச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ் கூறினார்.
பாகிஸ்தானில் சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சராகப் பணியாற்றிய கத்தோலிக்கரான Shahbaz Bhatti, 2011ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி காலையில் தனது பணிக்குச் சென்று கொண்டிருந்த சமயம் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். 42 வயதான இவரது உடலை 30 குண்டுகள் துளைத்திருந்தன. பாகிஸ்தானின் அமைச்சரவையில் ஒரே கிறிஸ்தவராகப் பணியாற்றிய Shahbaz Bhatti, அந்நாட்டின் தேவநிந்தனை சட்டத்துக்கு எதிராகக் குரல் எழுப்பியவர்.
Shahbaz Bhatti கொல்லப்பட்டதன் ஓராண்டு நினைவுத் திருப்பலியை இவ்வெள்ளிக்கிழமை நிறைவேற்றிய பேராயர் கூட்ஸ், சிறுபான்மையினர் சமத்துவத்தை விரும்புகின்ற ஒரு நாட்டிற்கு Shahbaz Bhatti சாட்சியாக இருக்கிறார் என்று கூறினார்.
Shahbaz Bhatti இறக்கவில்லை, ஆனால் அவர் கிறிஸ்துவில் வாழ்கிறார் எனவும், இவரது தியாகம் வீணாய்ப் போகாது எனவும் உரைத்தார் பேராயர்.
மேலும், Shahbaz Bhatti மறைசாட்சியாக அறிவிக்கப்பட வேண்டுமென்று இந்த ஓராண்டு நினைவு நாளில் பல இடங்களில் பல குரல்கள் வேண்டுகோள்களை முன்வைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

3. பாகிஸ்தானில் வகுப்புவாத வன்முறைகள் நிறுத்தப்பட்டு சிறுபான்மை மதத்தவர் பாதுகாக்கப்படுவதற்கு ஐ.நா.மனித உரிமை வல்லுனர்கள் வலியுறுத்தல்

மார்ச்03,2012. பாகிஸ்தானில் இடம் பெறும் வகுப்புவாத வன்முறை நிறுத்தப்பட்டு சிறுபான்மை மதத்தவர் பாதுகாக்கப்படுவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்நாட்டு அரசைக் கேட்டுள்ளனர் ஐ.நா.மனித உரிமை வல்லுனர்கள்.
இரண்டு வாரங்களுக்குள் இரண்டு வன்முறை நிகழ்வுகள் இடம் பெற்றதையும், அவை சிறுபான்மை மதத்தவரையே குறி வைத்து நடத்தப்பட்டதையும் சுட்டிக் காட்டிய, ஐ.நா.மனித உரிமை வல்லுனர்கள் குழு ஒன்று, இவ்வன்முறைகள் அதிர்ச்சியூட்டுகின்றன என்று குறிப்பிட்டுள்ளது.
இச்செவ்வாயன்று குறைந்தது 18 ஷியா முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர் என்றுரைத்த அக்குழு, குற்றவாளிகள் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டுமென பாகிஸ்தான் அரசைக் கேட்டுள்ளது.

4. உலகில் 200 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்குச் சமய சுதந்திரம் மறுக்கப்படுகின்றது - வத்திக்கான் உயர் அதிகாரி

மார்ச்03,2012. உலகில் 200 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்குச் சமய சுதந்திரம் மறுக்கப்படுகின்றது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவிலுள்ள ஐ.நா. தலைமை அலுவலகங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி, ஐ.நா.மனித உரிமைகள் அவையில் பேசிய போது இவ்வாறு தெரிவித்தார்.
உலகில் அதிகரித்து வரும் மதங்கள் மீதான கட்டுப்பாடுகள் 220 கோடிக்கு அதிகமான மக்களைப் பாதித்துள்ளன என்றுரைத்த பேராயர் தொமாசி, பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கைகளுக்கும் அவை அன்றாடம் அமல்படுத்தப்படும் விதத்திற்குமான இடைவெளி அதிகரித்து வருகிறது எனவும் குறிப்பிட்டார்.
சமுதாயத்துக்கு மதங்கள் அச்சுறுத்தலாக இல்லை, மாறாக அவை வளங்களாக இருக்கின்றன, அவை குடிமக்களின் வளர்ச்சிக்கும் ஒவ்வொருவரின் நன்மைக்கும் உதவுகின்றன என்றும் பேராயர் தொமாசி தெரிவித்தார்.

5. இலங்கையில் காவல்துறையின் வன்முறைக்குப் பலியானவர்களுக்கு ஆதரவாக மாதந்தோறும் அமைதிப் போராட்டம்

மார்ச்03,2012. இலங்கையின் Katunayake வில் கடந்த ஆண்டு மே 30ம் தேதி காவல்துறைக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே இடம் பெற்ற மோதல்கள் குறித்து புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளன்று கத்தோலிக்கக் குருக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் பொது இடத்தில் கூடி அமைதிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இம்மோதலில் 21 வயது Roshen Chanaka என்ற இளம் தொழிலாளி கொல்லப்பட்டார் மற்றும் பலர் காயமடைந்தனர்.
காவல்துறையின் இவ்வன்முறைக்குப் பலியானவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றும் இவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
Roshen Chanaka கொல்லப்பட்டதையடுத்து, அரசுத்தலைவர் மகிந்த இராஜபக்ஷாவும் காவல்துறையும் 30 இலட்சம் ரூபாயை அவரது குடும்பத்துக்குக் கொடுத்துள்ளனர். ஆனால், அக்குடும்பத்தினருக்கு வேலை கொடுக்கவும், அவர்களது வீட்டைக் கட்டி முடிக்கவும் உதவுவதாகக் கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று அக்குடும்பத்தினர் குறை கூறுகின்றனர். 

6. CAFOD  - தவக்காலம்,நோன்பு காலம்

மார்ச்03,2012. சுத்தமற்றத் தண்ணீரால் ஒவ்வொரு 20 வினாடிகளுக்கும் ஒரு குழந்தை இறக்கின்றது என்று பிரிட்டன் பிறரன்பு நிறுவனம் CAFOD கூறியது.
உலகில் 88 கோடியே 40 இலட்சம் பேர் சுத்தத் தண்ணீரும் நலவாழ்வு வசதிகளின்றியும் வாழ்கின்றனர் என்றுரைத்த CAFOD நிறுவனம், இத்தவக்காலத்தில் இம்மக்களோடு ஒருமைப்பாட்டுணர்வு கொண்டு இவர்களுக்கு உதவுமாறு கேட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவையின் பிறரன்பு நிறுவனம் CAFOD, இந்த 2012ம் ஆண்டில் அது ஆரம்பிக்கப்பட்டதன் 50 ம் ஆண்டைச் சிறப்பித்து வருகிறது. வளரும் நாடுகளின் துன்பங்களையும் ஏழ்மையையும் அகற்றுவதற்கு உழைத்து வருகிறது CAFOD 

7. சிரிய அதிகாரிகள் குடிமக்களுக்கு எதிராகக் குற்றமிழைக்கிறார்கள் ஐ.நா.பொதுச் செயலர்

மார்ச்03,2012. சிரியாவில் ஹோம்ஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கொடூரமானது என்று விவரித்து, அரசு தனது சொந்த மக்களையே திட்டமிட்டு தாக்குகின்றது என்று குறை கூறியுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.
சிரிய அதிகாரிகள் தங்களது குடிமக்களுக்கு எதிராகவே பரவலாகவும் வெளிப்படையாகவும் குற்றங்களைச் செய்துள்ளனர் என்றுரைத்த பான் கி மூன், சர்வதேச சமூகமும் தனது கடமையிலிருந்து தவறியுள்ளது என்று கவலை தெரிவித்தார்.
ஹோம்ஸ் நகரில் குண்டு வைத்து தாக்கப்பட்ட பகுதிக்குச் செஞ்சிலுவை சங்கம் செல்வதற்கு அனுமதிக்காகக் காத்துக் கொண்டிருந்த வேளை, இவ்வாறு கூறினார் பான் கி மூன்.

8. சிரியா: செஞ்சிலுவைச் சங்க உதவிப் பணியாளர்களுக்கு அனுமதி மறுப்பு

மார்ச்03,2012. சிரியாவின் ஹோம்ஸ் நகரத்தில், புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்கள் இருந்த Baba Amr பகுதிக்குள் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவிப் பணியாளர்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.
அந்தப் பகுதிக்குள் நிறையப் பேர், உதவியை பெரிதும் நம்பிக் காத்திருக்கிறார்கள் என்பதால், தங்களுக்கு அனுமதி மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு முடிவு என செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாத காலமாக சிரிய அரசுப் படைகளால் கடுமையானத் தாக்குதலுக்கும் ஆக்ரமிப்புக்கும் உள்ளாகியிருக்கும் பகுதி பாபா அம்ர் ஆகும்.
சிரியாவின் செம்பிறை சங்கத்துடன் இணைந்து இப்பகுதியில் இருக்கின்ற காயம்பட்ட மற்றும் நோய்வாய்ப்பட்ட மக்களை வெளியே கொண்டுவந்து உதவிகள் வழங்குவது செஞ்சிலுவைச் சங்கத்தின் நோக்கமாகும்.
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...