Wednesday 14 March 2012

கத்தோலிக்க செய்திகள்: 12 மார்ச் 2012

1. திருத்தந்தையின் மூவேளை செப உரை

2. திருத்தந்தை - கடவுள் வழங்கும் அருளுக்கு ஏற்றவாறு முழுமனதோடும், முழு வலிமையோடும் வாழ்வதே நம் வாழ்வின் மறைபொருள்

3. ஒன்றிப்பை நோக்கி உழைக்க கர்தினால் ஆலஞ்சேரி அழைப்பு

4. நைஜீரியாவில் மீண்டும் ஒரு கத்தோலிக்கக் கோவில் தாக்கப்பட்டது

5. வவுனியாவில் மாதாவின் திருஉருவச்சிலை அகற்றப்பட்டமைக்கு, இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் கண்டனம்

6. ஆப்ரிக்க வளர்ச்சித் திட்டங்களுக்கு ஸ்லோவாக்கிய நாட்டு கிறிஸ்தவச் சிறார்கள் நிதி திரட்டல்

7. பாகிஸ்தானில் கடத்தப்பட்ட இரு கிறிஸ்தவர்களின் விடுதலை முயற்சிகளுக்கு புது குழு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் மூவேளை செப உரை

மார்ச்,12,2012. வன்முறை என்பது இறையரசிற்கு எதிரானது மற்றும் அது எதிர்கிறிஸ்துவின் ஆயுதம் என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது விசுவாசிகளுக்கு எடுத்துரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தவக்கலத்தின் மூன்றாம் ஞாயிறன்று, இயேசு எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்திய நிகழ்வை எடுத்துரைக்கும் திருப்பலி வாசகத்தைச் சுட்டிக்காட்டி தன் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை, வன்முறை ஒரு நாளும் மனித குலத்திற்கு சேவையாற்றுவதில்லை, மாறாக, மனிதனைக் கீழ்நிலைப்படுத்தவே உதவுகிறது என்றார்.
இயேசு, கோவிலில் வியாபாரிகளைச் சாட்டையால் அடித்து விரட்டியதைக் குறிப்பிடும் சில இறையிலாளர்கள், சமூகப்புரட்சிக்கு வன்முறையைக் கைக்கொள்ளலாம் என விவாதிப்பதையும் பற்றி குறிப்பிட்டத் திருத்தந்தை, இயேசுவை ஒரு வன்முறையாளராக ஒரு நாளும் சித்தரிக்க முடியாது என்றார்.
இறைவன் இல்லத்தின் மீது தான் கொண்ட அன்பை இயேசு வெளிப்படுத்துகிறாரே ஒழிய, வன்முறை மூலம் இறைவனுக்குச் சேவையாற்ற முடியும் என்பதையல்ல எனவும் தன் மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை.
எருசலேம் கோவிலில் இருந்து வியாபாரிகளை விரட்டிய நிகழ்வைத் தொடர்ந்து இடம்பெற்ற உரையாடலில், இயேசு தன் உடலாகிய‌ கோவில் பற்றிப் பேசியதையும் சுட்டிக்காட்டிய பாப்பிறை, ஆன்மீக வீட்டின் கற்களாக ஒவ்வொரு கிறிஸ்தவனும் மாற வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.


2. திருத்தந்தை - கடவுள் வழங்கும் அருளுக்கு ஏற்றவாறு முழுமனதோடும், முழு வலிமையோடும் வாழ்வதே நம் வாழ்வின் மறைபொருள்

மார்ச்,12, 2012. கடவுளின் அருளை நம் வாழ்வில் வரவேற்று, அவ்வருளுக்கு ஏற்றவாறு முழுமனதோடும் முழு வலிமையோடும் வாழ்வதே நம் வாழ்வின் மறைபொருள். உண்மையான மகிழ்வு, மற்றும் ஆழ்ந்த அமைதியை வாழ்வில் பெற இதுவே அடித்தளம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இச்சனிக்கிழமை மாலை உரோம் நகரில் உள்ள Celio குன்றில் அமைந்துள்ள புனித கிரகோரி ஆலயத்தில் Canterbury பேராயர் Rowan Williams அவர்களுடன் மாலை செப வழிபாட்டை திருத்தந்தை நடத்தியபோது இவ்வாறு கூறினார்.
Celio குன்றில் அமைந்துள்ள Camaldoli மௌனத் துறவு குழுமத்தின் 1000மாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, திருத்தந்தையும், பேராயர் Williamsம் கலந்து கொண்ட இந்த மாலைச் செப வழிபாட்டில், கிறிஸ்தவ மறையில் உள்ள பல்வேறு சபைகளின் ஒருங்கிணைப்பை அருளாளர் இரண்டாம் ஜான்பால் மிக ஆர்வமாக வரவேற்றார் என்பதைச் சுட்டிக் காட்டிய திருத்தந்தை, இதே பாதையில் கிறிஸ்தவர்கள் செல்வது கடவுளின் அரசை வளர்க்கும் ஒரு வழி என்று எடுத்துரைத்தார்.
கத்தோலிக்க திருஅவை மற்றும் ஆங்கலிக்கன் சபையைச் சேர்ந்த அனைத்து மக்களும் கிறிஸ்தவ சபைகளின் ஒற்றுமைக்கென செபிக்கவும், உழைக்கவும் இன்னும் தீவிரமாக தங்களையே அர்ப்பணிக்க வேண்டும் என்ற அழைப்பை விடுத்தார் திருத்தந்தை.
திருத்தந்தையின் மறையுரையைத் தொடர்ந்து, தன் மறையுரையை வழங்கிய பேராயர் வில்லியம்ஸ், வர்த்தகங்களின் அவசரத் தேவைகளால் நிறைந்துவரும் உலகில் வாழும் அனைவரும், நமது சுயநலம், பேராசை இவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு, கிறிஸ்துவைப் போல, பிறர்பணிக்கு நம்மையே வழங்க முன்வரவேண்டும் என்று எடுத்துரைத்தார்.
திருத்தந்தையும் பேராயர் வில்லியம்ஸ் அவர்களும் இக்கோவிலை விட்டு வெளியேறும் முன், திருத்தந்தை புனித கிரகோரி வாழ்ந்ததாகச் சொல்லப்படும் ஒரு எளிய அறையில் மெழுகு திரிகளை ஏற்றிவைத்து சிறிது நேரம் செபித்தனர்.


3. ஒன்றிப்பை நோக்கி உழைக்க கர்தினால் ஆலஞ்சேரி அழைப்பு

மார்ச்,12,2012. இந்திய நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்ல ஒவ்வோர் இந்தியனும் ஒன்றிப்பிற்காக தீவிரமாக உழைக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார் இந்தியாவின் புதிய கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி.
கொச்சியின் புனித கன்னிமரி பேராலயத்தில் தனக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய கர்தினால் ஆலஞ்சேரி, எல்லா மதங்களுக்கும் மையப்பொருளாக இருக்கும் உண்மை என்பது உயர்வாக மதிக்கப்படுவதுடன், கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் வழி அதற்கு உயர்வான இடம் வழங்கப்படவேண்டும் என்றார்.
பன்முக நிலைகளால் வளப்படுத்தப்பட்டுள்ள இந்தியாவில் ஒவ்வொருவரும் ஒன்றிப்பை நோக்கி உழைப்பதன் மூலமே நாட்டை முன்னோக்கி எடுத்துச்செல்ல முடியும் என்றார் கர்தினால்.
நாட்டில் காணப்படும் சமூக மற்றும் கலாச்சார வேறுபாடுகள் எவரையும் பிரிக்கக்கூடாது, ஏனெனில் அனைவரையும் இணைக்கவல்ல பொது விடயங்கள் நிறையவே உள்ளன என மேலும் உரைத்தார் கர்தினால் ஆலஞ்சேரி.
புதிய கர்தினாலுக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில், இந்தியாவிற்கான திருப்பீடத்தூதுவர் சல்வத்தோரே பென்னாக்கியோ, வேராப்பொளி பேராயர் பிரான்சிஸ் கல்லறக்கல், திருவல்லா பேராயர் தாமஸ் மார் குரிலோஸ் உட்பட ஏறத்தாழ 40 ஆயர்களும், அரசு சார்பில் அமைச்சர்கள் கே.வி. தாமஸ் மற்றும் கே. பாபுவும் கலந்து கொண்டனர்.


4. நைஜீரியாவில் மீண்டும் ஒரு கத்தோலிக்கக் கோவில் தாக்கப்பட்டது

மார்ச்,12,2012. நைஜீரியாவின் Jos நகரின் கத்தோலிக்கக் கோவிலுக்கு எதிராக நடத்தப்பட்ட தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஞாயிறு திருப்பலி துவங்கிய சிறிது நேரத்திலேயே புனித Finbar கோவிலுக்குள் நுழைய முயன்ற ஒரு வாகனத்தைக் காவலாளிகள் தடுத்து நிறுத்தியவுடன், வெடிகுண்டை இயக்கச்செய்து தன்னையும் மாய்த்துக் கொண்டார் அந்த வாகன ஓட்டுனர்.
பத்து பேரின் உயிரிழப்புக்கு காரணமான இத்தாக்குதலில் கோவிலின் கூரையும் ஜன்னல்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளன. கோவிலில் காவலுக்கு நின்ற சில படைவீரர்களும் எண்ணற்ற விசுவாசிகளும் இவ்வெடிகுண்டு தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே, அண்மைக்காலங்களில் தொடர்ந்து வரும் மோதல்களின் ஒரு பகுதியாக இத்தாக்குதல் நோக்கப்படுகிறது.
கடந்த மாதம் இதே Jos நகரின் கோவில் ஒன்று ஞாயிறு வழிபாட்டின்போது தாக்கப்பட்டதில் ஒரு குழந்தை உட்பட மூவர் உயிரிழந்ததும் பலர் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.


5. வவுனியாவில் மாதாவின் திருஉருவச்சிலை அகற்றப்பட்டமைக்கு, இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் கண்டனம்

மார்ச்,12,2012. வவுனியா இளமருதங்குளம் கார்மேல் மாதா தேவாலயத்தில் உள்ள, மடு மாதாவின் திருஉருவச்சிலை சனியன்று அதிகாலை அகற்றப்பட்டமை, இன நல்லுறவை சீர் குலைக்கும் செயல் எனவும், இது குறித்த செயற்பாட்டை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
கார்மேல் மாதா தேவாலயத்தினுள் புகுந்தவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த மடுமாதாவினுடைய திருஉருவச்சிலையை எடுத்து, ஆலயத்தின் மத்திய பகுதியில் நிலத்தில் வைத்து திருஉருவச்சிலை மீது நீரை ஊற்றியுள்ளனர். மேலும், கார்மேல் மாதாவின் திருஉருவச்சிலை வைக்கப்பட்டிருந்த கூட்டினை உடைத்து மாதாவின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த மாலைகளை கழற்றி வீசி எறிந்துள்ளனர்.
இச்சம்பவம் மிகவும் வேதனையினை ஏற்படுத்தியுள்ளது என்றும், இன, மத வேறுபாடு எவையும் இன்றி அனைவரும் வழிபடும் அன்னை மடுமாதா திருஉருவச்சிலைக்கு அவமரியாதைச் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்.
நாட்டின் பல பாகங்களிலும் வீதிகளில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்ற நிலையில், ஆலையத்தினுள் உள்ள மடுமாதா திருஉருவச்சிலைக்கு இப்படி ஒரு பாதுகாப்பற்ற நிலமை ஏற்பட்டுள்ளது, அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ மக்கள் மத்தியில் கடும் சீற்றத்தை ஏற்பட்டுத்தியுள்ளது எனக் கூறும் எம்.பி. செல்வம் அடைக்கலநாதனின் அறிக்கை, பாதுகாப்புத் தரப்பினர் இச்சம்பவம் தொடர்பில் உடன் விசாரணைகளை மேற்கொண்டு, சம்பவத்தில் தொடர்புடையவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் விண்ணப்பிக்கிறது.


6. ஆப்ரிக்க வளர்ச்சித் திட்டங்களுக்கு ஸ்லோவாக்கிய நாட்டு கிறிஸ்தவச் சிறார்கள் நிதி திரட்டல்

மார்ச்,12,2012. சஹாராவை அடுத்த ஏழை நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும் நோக்கில் ஸ்லோவாக்கிய நாட்டு கிறிஸ்தவச் சிறார்கள் ஒன்றிணைந்து 9 இலட்சம் யூரோக்களைத் திரட்டியுள்ளனர்.
கடந்த டிசம்பர் 25க்கும் ஜனவரி 7க்கும் இடைப்பட்ட காலத்தில் ஸ்லோவாக்கியாவின் 1286 நகர்களைச் சேர்ந்த 2719 சிறார் குழுக்கள் 80 ஆயிரம் குடும்பங்களைச் சந்தித்து கிறிஸ்து பிறப்புப் பாடல்களைப் பாடி 9 இலட்சத்து எட்டாயிரத்து 150 யூரோக்களைத் திரட்டியுள்ளன.
26,000க்கும் மேற்பட்ட சிறார்கள் பங்குபெற்று ஆப்ரிக்காவின் ஏழைநாடுகளுக்கென திரட்டியுள்ள இத்தொகை, தென் சூடான், கென்யா, உகாண்டா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு என செலவழிக்கப்படும்.


7. பாகிஸ்தானில் கடத்தப்பட்ட இரு கிறிஸ்தவர்களின் விடுதலை முயற்சிகளுக்கு புது குழு

மார்ச்,12,2012. பாகிஸ்தானில் கடந்த மாதம் கடத்தப்பட்ட இரு கிறிஸ்தவ அதிகாரிகளின் விடுதலையைப் பெறும் நோக்கில் கிறிஸ்தவ சபைகளின் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவால் பாகிஸ்தானில் நடத்தப்படும் நல்ல சமாரியன் மருத்துவமனையின் அதிகாரிகள் Inderias Jawaid மற்றும் Issac Samson ஆகியோரைக் கடத்தியவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளாக இருக்கலாம் என காவல்துறை தன் சந்தேகத்தை வெளியிட்டுள்ள வேளை, இவர்களின் விடுதலைக்கான முயற்சிகளை மேற்கொள்ள ஒரு கத்தோலிக்க  குரு,  சில கிறிஸ்தவ சபை குருக்கள் மற்றும் அரசியல்வாதிகளை உள்ளடக்கிய 13 பேர் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இக்குழு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்விரு கிறிஸ்தவர்களின் விடுதலைக்காக வரும் வெள்ளியன்று பாகிஸ்தானின் அனைத்து கிறிஸ்தவ சபைகளும் உண்ணா நோன்பை கடைபிடிக்க வேண்டும் என விண்ணப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...