1. "புறவினத்தார் முற்றம்" என்ற உரையாடல் முயற்சி இத்தாலியின் பலெர்மோ நகரில் மார்ச் மாதம் 29, 30 தேதிகளில் நடைபெறும்
2. அயர்லாந்து திருஅவையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவுகளும், பரிந்துரைகளும்
3. எகிப்தின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் திருத்தந்தை, 3ம் Shenoudaவின் நல்லடக்கம்
4. பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் இரு இத்தாலியர்களை விடுவிக்குமாறு அருளாளர் அன்னை தெரேசா சபையின் அருட்சகோதரிகள் விண்ணப்பம்
5. கந்தமால் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் குழு ஐ.நா. அதிகாரியுடன் சந்திப்பு
6. பாக்தாத் நகரில் புனித மத்தேயு கோவில் உட்பட 20 இடங்களில் குண்டு வெடிப்புக்கள்
7. சிரியாவில் சமாதான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியது மனித சமுதாய மனச்சான்றின் கட்டாயமாக உள்ளது - ஐ.நா. பொதுச் செயலர்
8. அதிகம் பேர் வேலை செய்யும் நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. "புறவினத்தார் முற்றம்" என்ற உரையாடல் முயற்சி இத்தாலியின் பலெர்மோ நகரில் மார்ச் மாதம் 29, 30 தேதிகளில் நடைபெறும்
மார்ச்,21,2012. பாப்பிறைக் கலாச்சாரக் கழகம் "புறவினத்தார் முற்றம்" ("Courtyard of the Gentiles") என்ற பெயரில் நிகழ்த்தி வரும் ஓர் உரையாடல் முயற்சி, இம்முறை இத்தாலியின் பலெர்மோ நகரில் மார்ச் மாதம் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெறும் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது.
பாப்பிறைக் கலாச்சாரக் கழகத்தின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi, இந்நிகழ்வைக் குறித்து இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கலாச்சாரங்கள் மற்றும் மதங்கள் இடையே உரையாடலை வளர்க்கும் ஒரு முயற்சியாக, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் தூண்டுதலால் பாப்பிறை கலாச்சாரக் கழகம் மேற்கொண்டு வரும் இம்முயற்சி இதுவரை Bologna, Paris, Bucharest, Florence, Rome, Tirana, ஆகிய நகரங்களில் நடத்தப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியில் Sicilyயின் பலெர்மோ நகரில் நடைபெற உள்ள 'புறவினத்தார் முற்றம்' கூட்டத்தில், திட்டமிட்டு நடைபெறும் குற்றங்கள் கலாச்சாரத்திற்கு ஒரு சவாலாக இருக்கின்றது என்பது பற்றி விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'சட்டங்கள் வழி அமைக்கப்பட்டுள்ள கலாச்சாரம் மற்றும் பல்சமயச் சமுதாயம்' என்ற தலைப்பில் நடைபெற உள்ள இவ்வாண்டு கூட்டத்தில், பல்கலைக் கழக மாணவ, மாணவியருக்கும் சிறப்பு அமர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2. அயர்லாந்து திருஅவையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவுகளும், பரிந்துரைகளும்
மார்ச்,21,2012. திருத்தந்தை அறிவித்துள்ள 'விசுவாச ஆண்டு' மற்றும் 50வது அகில உலக திருநற்கருணை மாநாடு ஆகியவற்றைச் சிறப்பிக்க அயர்லாந்து தன்னையே தயாரித்து வருகிறது என்று கர்தினால் Sean Brady கூறினார்.
அயர்லாந்து குருக்களில் சிலர் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டை அடுத்து, திருத்தந்தையால் விசாரணைக் குழு ஒன்று அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டிருந்தது. இக்குழுவினர் அயர்லாந்து திருஅவையில் மேற்கொண்ட விசாரணைகளின் முடிவுகளையும், பரிந்துரைகளையும் திருப்பீடம் இச்செவ்வாயன்று வெளியிட்டது.
திருப்பீடத்தின் இந்த முயற்சிக்குத் தன் நன்றியைத் தெரிவித்த அயர்லாந்து ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் Brady, குருக்களின் குற்றங்களால் பாதிக்கப்பட்டோர் மீது திருத்தந்தை காட்டிவரும் தனிப்பட்ட அக்கறை இந்த முயற்சியால் பெரிதும் வெளியாகிறது என்று கூறினார்.
விரைவான சமுதாய மற்றும் கலாச்சார மாற்றங்களைக் கண்டு வரும் அயர்லாந்தில் திருஅவையும் மாற்றங்களைக் கொணர வேண்டும் என்ற உந்துதலை திருப்பீடத்தின் அறிக்கை இந்நாட்டிற்குத் தந்துள்ளது என்று கூறிய கர்தினால் Brady, விசாரணைக் குழு வெளியிட்டுள்ள பரிந்துரைகளையும் விளக்கினார்.
3. எகிப்தின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் திருத்தந்தை, 3ம் Shenoudaவின் நல்லடக்கம்
மார்ச்,21,2012. கடந்த சனிக்கிழமை இறைபதம் அடைந்த எகிப்தின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் திருத்தந்தையும், அலெக்சாந்திரியாவின் முதுபெரும் தலைவருமான 3ம் Shenoudaவின் நல்லடக்கம் இச்செவ்வாயன்று நடைபெற்றது.
இஞ்ஞாயிறு, மற்றும் திங்கள் ஆகிய இரு நாட்கள் கெய்ரோவில் உள்ள புனித மாற்கு பேராலயத்தில், மக்களின் வணக்கத்திற்கு வைக்கப்படிருந்த முதுபெரும் தலைவரின் உடல், கெய்ரோவில் இருந்து 100 கி.மீ தூரத்தில், Wadi Natroun நகரில் உள்ள புனித Bishoy துறவு மடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இவ்வடக்கச் சடங்கில் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
40 ஆண்டுகளுக்கும் மேல் முதுபெரும் தலைவராக பணியாற்றிய 3ம் Shenoudaவின் மறைவுக்கு, திருத்தந்தை உட்பட பல மதத் தலைவர்களும், நாட்டுத் தலைவர்களும் அனுதாபச் செய்திகளை அனுப்பியுள்ளனர்.
அலெக்சாந்திரியாவின் முதுபெரும் தலைவர் 3ம் Shenoudaவின் அடக்க நாள் எகிப்தில் ஒரு துக்க நாளாக கடைபிடிக்கப்பட்டதால், அங்குள்ள கட்டிடங்களில் நாட்டுக் கோடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.
4. பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் இரு இத்தாலியர்களை விடுவிக்குமாறு அருளாளர் அன்னை தெரேசா சபையின் அருட்சகோதரிகள் விண்ணப்பம்
மார்ச்,21,2012. இந்தியாவின் ஒடிஸா மாநிலத்தில் மாவோயிஸ்ட் குழுவினரால் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் இரு இத்தாலியர்களை விடுவிக்குமாறு அருளாளர் அன்னை தெரேசா சபையின் அருட்சகோதரிகள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இவ்விரு இத்தாலியர்களின் குடும்பத்தினரும், நண்பர்களும் சொல்லொண்ணா வேதனைகள் அடைந்துள்ளனர், எனவே, ஒடிஸாவின் ஏழைகள் மத்தியில் உழைத்து வரும் சகோதரிகளாகிய நாங்கள் உங்களிடம் கேட்டுக் கொள்கிறோம், இவர்களை எந்த நிபந்தனையும் இன்றி விடுவியுங்கள் என்று பிறரன்புச் சகோதரிகளின் ஒடிஸா மாநிலத் தலைவியான அருள்சகோதரி Suma கூறியுள்ளார்.
மாவோயிஸ்ட் குழுவினர் இவ்விரு இத்தாலியர்களையும் விடுவிப்பதற்கு இணையாக 13 கோரிக்கைகளை ஒடிஸா அரசுக்கு விதித்துள்ளது என்றும், இவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவது கடினம் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவோயிஸ்ட் குழுவினருடன் பேசுவதற்கு மூவர் குழுவொன்றை அனுப்ப ஒடிஸா அரசு முடிவு செய்துள்ளதாக ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
5. கந்தமால் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் குழு ஐ.நா. அதிகாரியுடன் சந்திப்பு
மார்ச்,21,2012. எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், உலகின் உயர்ந்ததொரு அமைப்பிடம் முறையிட புதுடில்லி வந்துள்ளோம் என்று கந்தமால் வன்முறையில் பாதிக்கப்பட்ட ஒருவர் கூறினார்.
2008ம் ஆண்டு ஒடிஸா மாநிலத்தில் கந்தமால் பகுதியில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளாக எழுவர் அடங்கிய குழு ஒன்று இச்செவ்வாயன்று ஐ.நா.வின் அதிகாரியைச் சந்திக்க புதுடில்லி சென்றது.
ஐ.நா.வின் நீதி விவாகரங்களை கண்காணிக்கும் Christof Heyns அவர்களைச் சந்தித்த இப்பிரதிநிதிகள், இந்து அடிப்படைவாதக் குழுவினரால் தங்களுக்கு நேர்ந்த வன்முறைகளையும், காவல் துறையினர் அந்த நேரத்தில் நடவடிக்கைகள் எடுக்கத் தவறியதையும் வலியுறுத்திக் கூறினர்.
கடந்த சனிக்கிழமை புதுடில்லி வந்து சேர்ந்த ஐ.நா.அதிகாரி Christof Heyns, இப்பிரதிநிதிகளின் முறையீடுகளைக் கவனமாகக் கேட்டார் என்றும், தன் கருத்துக்களை அவர் ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பிடம் சமர்ப்பிப்பார் என்றும் இக்குழுவிற்குத் தலைமையேற்ற தலித் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் S.D.J.M பிரசாத் கூறினார்.
6. பாக்தாத் நகரில் புனித மத்தேயு கோவில் உட்பட 20 இடங்களில் குண்டு வெடிப்புக்கள்
மார்ச்,21,2012. ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில் உள்ள புனித மத்தேயு பெயர் கொண்ட சிரிய ஆர்த்தடாக்ஸ் கோவில் உட்பட 20 இடங்களில் குண்டு வெடிப்புக்கள் இச்செவ்வாயன்று இடம் பெற்றன.
ஈராக் நாட்டில் சதாம் ஹுசெயின் ஆட்சியைக் கவிழ்க்கவும், அவரைக் கைது செய்யவும் அமெரிக்கப் படைகள் 2003ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி அந்நாட்டில் நுழைந்தன. அமெரிக்கப் படைகள் நுழைந்த நாளின் ஒன்பதாம் ஆண்டு நிறைவை நினைவுப்படுத்தும் வண்ணம் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன என்று ஊடகங்கள் கணிக்கின்றன.
புனித மத்தேயு கோவிலில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் இருவர் இறந்தனர், மற்றும் ஐந்து பேர் காயமுற்றனர் என்றும், ஏனைய இருபதுக்கும் அதிகமான குண்டு வெடிப்புக்களில் 39 பேர் இறந்துள்ளனர் மற்றும் 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
2003ம் ஆண்டிலிருந்து அந்நாட்டை விட்டு 2011ம் ஆண்டு அமெரிக்கப் படைகள் விலகிச் செல்லும் வரை, ஈராக்கில் 4550 அமெரிக்க வீரர்கள் இறந்துள்ளனர் என்றும், 100000க்கும் அதிகமான அப்பாவி மக்கள் இறந்துள்ளனர் என்றும் தெரிகிறது.
7. சிரியாவில் சமாதான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியது மனித சமுதாய மனச்சான்றின் கட்டாயமாக உள்ளது - ஐ.நா. பொதுச் செயலர்
மார்ச்,21,2012. நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு மணி நேரமும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர் என்றும், இக்கொலைகளை நிறுத்துவது உலகச் சமுதாயத்தின் அவசரக் கடமை என்றும் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
சிரியாவில் தொடர்ந்து வரும் வன்முறைகளைச் சுட்டிக் காட்டி, இச்செவ்வாயன்று இந்தோனேசியாவில் செய்தியாளர்களிடம் பேசிய பான் கி மூன் இவ்வாறு கூறினார்.
சிரியாவின் பிரச்சனைகளைத் தீர்க்க பல நாடுகள் முயன்று வருவதைப் பாராட்டிப் பேசிய ஐ.நா. பொதுச் செயலர், அனைத்துலக நாடுகளும் ஒன்றிணைந்து முயற்சி செய்தால் மட்டுமே இப்பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்றும் கூறினார்.
ஐ.நா. சார்பாகவும், அரபு நாடுகள் சார்பாகவும் சிரியாவின் தமாஸ்கு நகரில் முயற்சிகள் மேற்கொண்டுவரும் இரு குழுக்களின் செயல்பாடுகளை விளக்கிய பான் கின் மூன், இன்னும் பல நாடுகளில் இருந்து சமாதான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியது மனித சமுதாய அரசியல், மற்றும் மனச்சான்றின் கட்டாயமாக உள்ளது என்று கூறினார்.
8. அதிகம் பேர் வேலை செய்யும் நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு
மார்ச்,21,2012. உலகில் அதிகம் பேரை வேலைக்கு அமர்த்தியுள்ள நிறுவனம் எது என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. சுமார் 32 இலட்சம் பேர் அமெரிக்க இராணுவத்தில் வேலை பார்க்கின்றனர்.அடுத்த இடத்தில் இருப்பது சீன இராணுவம். இதில் இருப்பவர்களோ 23 இலட்சம் பேர்.
பல்பொருள் அங்காடிகளை நடத்தும் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்தில் மொத்தம் 21 இலட்சம் பேரும், துரித உணவு விடுதிகளை உலகெங்கும் நடத்திவரும் McDonald’s நிறுவனத்தில் 19 இலட்சம் பேரும் வேலை பார்க்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ள பிரிட்டனில் உள்ள தேசிய சுகாதார சேவையில் 17 இலட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். சீனாவின் தேசிய பெட்ரோலிய நிறுவனத்தில் 16 லட்சம் பேரும், மற்றொரு அரச நிறுவனமான மின்தொகுப்பு நிறுவனத்தில் 15 இலட்சம் பேர் வேலை பார்க்கின்றனர்.
இந்தப் பட்டியலில் 14 இலட்சம் ஊழியர்களைக் கொண்ட இந்திய இரயில்வேக்கு எட்டாவது இடமும், 13 இலட்சம் பேர் கொண்ட இந்திய இராணுவத்துக்கு 9வது இடமும் கிடைத்துள்ளன.
ஆப்பிள் ஐ போன், ஐ பேட் போன்றவைகளைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள Taiwan நாட்டைச் சேர்ந்த பாக்ஸ்கான் (Foxconn) பத்தாவது இடத்தில் இருக்கிறது. அதன் ஊழியர்களின் எண்ணிக்கை 12 இலட்சம்.
No comments:
Post a Comment