Thursday, 22 March 2012

கத்தோலிக்க செய்திகள்: 20 மார்ச் 2012

1. திருத்தந்தையின் திருப்பயணம் மெக்சிகோ மக்களுக்கு ஒரு புது அனுபவத்தைக் கொடுக்கும் - திருப்பீடத் தூதர்

2. பிரான்சின் யூதமதப் பள்ளியில் இடம் பெற்ற வன்முறைக்கு கத்தோலிக்கத் தலைவர்கள் கண்டனம்

3. ஒடிசாவில் கடத்தப்பட்டுள்ள இத்தாலியர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுமாறு ஒடிசா கிறிஸ்தவத் தலைவர்கள் வலியுறுத்தல்

4. அமெரிக்க ஐக்கிய நாட்டில் சமய சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் நாடு தழுவிய செபம் - ஆயர்கள் அறிவிப்பு

5. கிறிஸ்தவர்களால் உள்தூண்டுதல் பெற்ற இந்து மாணவி ஒருவர் பெண் கைதிகளின் சிறாருக்கென இல்லம் அமைத்துள்ளார்

6. சாலமன் தீவுகள் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை நிறுத்தப்பட ஐ.நா. வலியுறுத்தல்

7. பங்களாதேஷில் சிறாருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும், ஊட்டச்சத்து வழங்குவதற்கு WFP திட்டம்

-------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் திருப்பயணம் மெக்சிகோ  மக்களுக்கு ஒரு புது அனுபவத்தைக் கொடுக்கும் - திருப்பீடத் தூதர்

மார்ச்20,2012. போதைப்பொருள் வியாபாரிகளால் ஏற்பட்ட வன்முறைகளால் சில ஆண்டுகளாகத் துன்புற்று வரும் மெக்சிகோவுக்குத் திருத்தந்தையின் திருப்பயணம் உண்மையிலேயே ஒரு புது அனுபவத்தைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார் மெக்சிகோவுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Christophe Pierre.
இவ்வெள்ளியன்று திருத்தந்தை தொடங்கும் மெக்சிகோ மற்றும் கியூபாவுக்கானத் திருப்பயணம் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த பேராயர் Pierre, இப்பயணம் குறைந்த நாள்களைக் கொண்டிருந்தாலும், துன்பம் நிறைந்த சூழலில் வாழும் மெக்சிகோ மக்களுக்கு திருத்தந்தையின் வார்த்தைகள் நம்பிக்கையை ஊட்டுவதாக இருக்கும் என்று கூறினார்.
குடியேற்றதார மெக்சிகோ மக்கள் குறித்தும் பேசிய பேராயர், அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் பெருமளவான மெக்சிகோ மக்களில் பலர், அந்நாட்டுக் குடியுரிமை இல்லாமல் மறைவாக  வாழ்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
வறுமை காரணமாகவும், பொருளாதார வாழ்வை மேம்படுத்தும் நோக்கத்திலும் மெக்சிகோ மக்களில் பலர், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் செல்கின்றனர் எனவும் பேராயர் கூறினார்.
மேலும், திருத்தந்தை திருப்பயணம் மேற்கொள்ளும் மெக்சிகோ நாட்டு Guanajauto நகர மேயர் Edgar Castro Cerrillo, அந்நகரத்தின் அடையாளச் சாவிகளைத் திருத்தந்தைக்கு வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளார். 
வன்முறை அதிகரித்துள்ள ஒரு சமுதாயத்தில் திருத்தந்தையின் செய்தி அமைதியும் ஊக்கமும் தருவதாய் இருக்குமென்றும் மேயர் தெரிவித்தார்.

2. பிரான்சின் யூதமதப் பள்ளியில் இடம் பெற்ற வன்முறைக்கு கத்தோலிக்கத் தலைவர்கள் கண்டனம்

மார்ச்20,2012. பிரான்சின் Toulouse நகரின் யூதமதப் பள்ளி வளாகத்தில் இடம் பெற்ற துப்பாக்கிச்சூடு வன்முறை தாக்குதல் குறித்து தங்களது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் கத்தோலிக்கத் தலைவர்கள்.
பிரான்ஸ் மற்றும் இத்தாலியத் திருஅவைத் தலைவர்களும், திருப்பீடப் பேச்சாளரும் தங்களது வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவிக்கும் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
இரண்டு சக்கர மோட்டார் வாகனத்தில் வந்த மனிதர் ஒருவர், Toulouse நகரின் Ozar Hatorah பள்ளி வளாகத்தில் இத்திங்கள் காலை 8 மணிக்குத் துப்பாக்கியால் சுட்டதில் யூதமத குரு, அவரது இரண்டு மகன்கள், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மகள், பள்ளி ஆசிரியர் ஆகியோர் இறந்தனர் மற்றும் 17 வயதுச் சிறுவன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இப்பள்ளியில் 11க்கும் 18 வயதுக்கும் உட்பட்ட 200 மாணவ மாணவியர் படிக்கின்றனர்.
இத்துப்பாக்கிச்சூடு சம்பவம் மிகக் கொடுமையானது மற்றும் வெட்கத்துக்குரிய செயல் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
இத்தாலியின் தூரின் பேராயர் வெளியிட்டுள்ள செய்தியில், தூரின் நகர மக்கள், யூத மதத்தினருடன் எப்பொழுதும் நல்லுறவுடன் வாழ்வதாகவும், இவ்வன்முறை தங்களுக்கு மிகுந்த வேதனையைக் கொடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ப்ரெஞ்ச் ஆயர் பேரவை வெளியிட்டுள்ள செய்தியில், பாதுகாப்பற்ற மக்களுக்கு எதிரான கண்மூடித்தனமான இவ்வன்முறையை அனைத்துக் கத்தோலிக்கரும் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. ஒடிசாவில் கடத்தப்பட்டுள்ள இத்தாலியர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுமாறு ஒடிசா கிறிஸ்தவத் தலைவர்கள் வலியுறுத்தல்

மார்ச்20,2012. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் கடத்தி வைத்துள்ள இரண்டு இத்தாலியர்கள் எவ்விதக் காயங்களுமின்றி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென்று ஒடிசா மாநிலக் கிறிஸ்தவத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த புதனன்று கடத்தப்பட்டுள்ள இரண்டு இத்தாலியர்களும் விடுதலை செய்யப்படுவதற்கு அரசும் நன்மனம் கொண்ட அனைவரும் அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்கள் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார் Cuttack-Bhubaneshwar பேராயரும் ஒடிசா ஆயர் பேரவைத் தலைவருமான பேராயர் John Barwa.
அதேசமயம், இவ்விரண்டு இத்தாலியரின் குடும்பங்களுக்குத் தங்களது செபங்களையும் தெரிவித்துள்ளார் பேராயர் John Barwa.
இதற்கிடையே, இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக 14 கோரிக்கைகளை முன்வைத்து ஒலிச் செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளனர் மாவோயிஸ்ட்கள்.
புதிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்குதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், பழங்குடிஇன மக்கள் வாழும் பகுதிகளுக்குச் சுற்றுலாக்களைத் தடை செய்தல் உட்பட்ட கோரிக்கைகள் அச்செய்தியில் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. 
கடத்தப்பட்டுள்ள இவ்விரண்டு இத்தாலியரும், ஆதிவாசிப் பெண்களை மிருகங்கள் போல் கருதி புகைப்படம் எடுத்தார்கள் என்று மாவோயிஸ்ட் புரட்சியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
ஆயினும், கடத்தப்பட்டுள்ள 54 வயதாகும் Paolo Bosusco என்ற இத்தாலியர், பழங்குடி இன மக்கள் வாழும் பகுதிகளுக்கென, இந்திய-இத்தாலிய சுற்றுலா நிறுவனத்தை நடத்தி வருகிறார். பணத்திற்காக ஒருபோதும் பழங்குடி இன மக்களை நடனமாடுமாறு கேட்டதில்லை எனவும் Bosusco சொல்லியிருக்கிறார்.

4. அமெரிக்க ஐக்கிய நாட்டில் சமய சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் நாடு தழுவிய செபம் - ஆயர்கள் அறிவிப்பு

மார்ச்20,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள கருத்தடைக்குச் சார்பான விதிமுறை போன்ற அண்மை அச்சுறுத்தல்களுக்கு எதிராக, சமய சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில், நாடு தழுவிய செப பக்தி முயற்சி ஒன்றை அறிவித்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
சமய சுதந்திரத்திற்குச் செபம்என்ற தலைப்பில் தொடங்கப்பட்டுள்ள இந்நடவடிக்கை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர்கள், அமெரிக்காவில் மனச்சான்றின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு செபமும் தபமும் செய்யுமாறு அனைத்து விசுவாசிகளையும் கேட்டுள்ளனர்.
நமது வலிமையின் கடைசி ஆதாரம் செபமே என்றுரைக்கும் ஆயர்கள், கடவுளின்றி நம்மால் எதுவும் செய்ய இயலாது என்றும் கூறியுள்ளனர்.
கருத்தடை செய்தல், கருவுறாமல் இருப்பதற்கான மருத்துவம், கருக்கலைப்புக்கான மருந்துகள் ஆகியவற்றுக்கு நலவாழ்வு காப்பீட்டுத் திட்டங்களை வழங்குவதற்கு மருத்துவப் பணியாளர்களுக்கு விதிமுறைகளை அறிவித்துள்ளது ஒபாமா நிர்வாகம். இப்பணியாளரின் சமய நம்பிக்கைக்கு எதிராக இருந்தால்கூட அவர்கள் அதனைச் செய்யுமாறு கூறப்பட்டுள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.  

5. கிறிஸ்தவர்களால் உள்தூண்டுதல் பெற்ற இந்து மாணவி ஒருவர் பெண் கைதிகளின் சிறாருக்கென இல்லம் அமைத்துள்ளார்

மார்ச்20,2012. நேபாளத்தில் கிறிஸ்தவர்களின் செயல்களால் உள்தூண்டுதல் பெற்று அந்நாட்டிலுள்ள பெண் கைதிகளின் சிறாருக்கென இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார் Pushpa Basnet.
காத்மண்டுவின் புனித சேவியர் கல்லூரியில் சமூகவியல் பயின்ற போது இயேசு சபை அருள்தந்தையரின் போதனைகள் மற்றும் தனது சக மாணவரியரிடமிருந்து ஏழைகளுக்குச் சமூகப்பணி செய்வதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டதாகத் தெரிவித்தார் Pushpa Basnet.
நேபாளச் சிறைகளில் பல சிறார் தங்களது கைதித் தாய்களோடு வாழ வேண்டிய கட்டாய நிலை உள்ளது மற்றும் வெளியில் வாழும் சிறாரில் பலர் எவ்வித அரசு உதவியுமின்றி தெருக்களில் வாழ்கின்றனர்.
இச்சிறார்க்கென Pushpa Basnet தொடங்கியுள்ள Butterfly Home என்ற இல்லம், தாய்மாருடன் சிறையில் வாழும் சிறாருக்கு உணவு, உறைவிடம் மற்றும் கல்வி வசதிகளை அளித்து வருகிறது.
தற்சமயம் நேபாளச் சிறைகளில் சுமார் 80 சிறார் தங்கள் தாய்மாருடன் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும், நேபாள மக்களில் 55 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழ்ந்து வருகின்றனர் என்று ஐ.நா. கூறுகிறது.

6. சாலமன் தீவுகள் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை நிறுத்தப்பட ஐ.நா. வலியுறுத்தல்

மார்ச்20,2012. சாலமன் தீவுகள் நாட்டில் வன்முறையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கும் நீதி விசாரணையில் பாலினப் பாகுபாட்டினால் பாதிக்கப்படுவோருக்கும் பாதுகாப்பு அளிக்கப்படுமாறு ஐ.நா.மனித உரிமைகள் வல்லுனர் ஒருவர் வலியுறுத்தினார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து கண்காணிக்கும் ஐ.நா.வின் சிறப்புத் தூதர் Rashida Manjoo, பசிபிக் பெருங்கடலிலுள்ள சாலமன் தீவுகள் நாட்டில் 5 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர் வெளியிட்ட அறிக்கையில், இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
15க்கும் 49 வயதுக்கும் உட்பட்ட பெண்களில் 64 விழுக்காட்டினர் உடல்ரீதியான அல்லது பாலியல் ரீதியான வன்முறைகளை அனுபவித்துள்ளனர் என்று தெரிவித்தார் Manjoo.
ஏறக்குறைய ஆயிரம் தீவுகளைக் கொண்ட சாலமன் தீவுகள் நாட்டில் உள்கட்டமைப்பு, மனித மற்றும் நிதி வளங்கள் பற்றாக்குறை, நன்கு படித்த நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் குறைபடுதல் போன்றவைகளால் பெண்களுக்குப் போதுமான பாதுகாப்பு இல்லை என்று Rashida Manjoo மேலும் கூறினார்.

7. பங்களாதேஷில் சிறாருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும், ஊட்டச்சத்து வழங்குவதற்கு WFP திட்டம்

மார்ச்20,2012. பங்களாதேஷில் சிறாருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும், தாய்மாருக்கும் ஊட்டச்சத்து வழங்கும் புதிய திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளது WFP என்ற ஐ.நா.வின் உணவுத் திட்ட அமைப்பு.
ஏறக்குறைய 5 வயதுக்குட்பட்ட 20 விழுக்காட்டுச் சிறார் ஊட்டச்சத்துக் குறைவால் வாடும் Cox’s Bazar மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கப்படுவதாகவும், அம்மாவட்டத்தில் பரவலாக கல்வியறிவை வழங்க முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் WFP அமைப்பின் பங்களாதேஷ் நாட்டுக்கானப் பிரதிநிதி Christa Räder கூறினார்.
இத்திட்டத்தின் மூலம் 14,800 சிறாருக்கும் 2,000 கர்ப்பிணித் தாய்மாருக்கும் உதவுவதற்கு WFP திட்டமிட்டுள்ளது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...