1. உலக இளையோர் தினத்திற்கான திருத்தந்தையின் செய்தி
2. ஹெயிட்டி நாட்டில் நிலநடுக்கத்தால் அழிவுக்குள்ளான கோவில்களை மீண்டும் கட்டியெழுப்ப
கத்தோலிக்க உதவி
3. சிரியாவின் Homs நகரிலிருந்து கிறிஸ்தவர்கள் பெருமெண்ணிக்கையில் வெளியேறி
வருகின்றனர்
4. பகைமைப் பிரச்சாரங்களை நிறுத்த இலங்கை அரசுக்கு, மத மற்றும் மனித உரிமை
அமைப்புகள் வேண்டுகோள்
5. தமிழகத்தில் நகர்ப்புற வறுமையை ஒழிக்க ரூ.200 கோடியில் புதிய திட்டம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. உலக இளையோர் தினத்திற்கான திருத்தந்தையின் செய்தி
மார்ச்,27,2012. கிறிஸ்தவ அனுபவத்தின் இதயமாக மகிழ்வே இருப்பதால் 'ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்' என்பது இவ்வாண்டு இளையோர் தினக்கொண்டாட்டங்களுக்கு தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாளுக்கான தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வரும் வாரத்துவக்கத்தில் குருத்து ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உலக இளையோர் தினத்திற்கென இச்செவ்வாயன்று செய்தி வெளியிட்ட திருத்தந்தை, துன்பமும் பதட்ட நிலைகளும் நிரம்பியுள்ள இவ்வுலகில் கிறிஸ்தவ விசுவாசத்தின் நம்பகத்தன்மை மற்றும் அழகின் முக்கிய சாட்சியம் மகிழ்வே என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இயேசு பிறந்தபோது வானதூதர்கள் வழி இடையர்களுக்கு அறிவிக்கப்பட்ட உண்மையான, நீடித்த மகிழ்வை இவ்வுலகின் மக்களுக்கு எடுத்துச் செல்வதே கிறிஸ்தவர்கள் பெற்றிருக்கும் அழைப்பு எனவும் தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.
நம் ஒவ்வொருவர் இதயமும் மகிழ்வால் உருவாக்கப்பட்டுள்ளது, அந்த இதயத்திற்குள் மகிழ்விற்கான ஏக்கம் இருந்து கோண்டேயிருக்கிறது, அது முழுமையான, நீடித்த மகிழ்வு மட்டுமல்ல, நம் இவ்வுலக இருப்புக்கு மேலும் சுவை சேர்க்கக் கூடியது எனக்கூறும் திருத்தந்தையின் செய்தி, உண்மையான மகிழ்வின் ஆதாரம் கடவுளே என்பதையும் உதாரணங்களுடன் விளக்குகிறது.
கிறிஸ்தவ மகிழ்வை நம் இதயங்களில் தக்கவைத்தல், அன்பினால் பெறப்படும் மகிழ்வு, மனமாற்றத்திலிருந்து பிறக்கும் மகிழ்வு, துன்ப காலத்தில் விசுவாச பலத்திலிருந்து பெறப்படும் மகிழ்வு, மகிழ்வின் சாட்சியங்களாகச் செயல்படுதல் போன்ற தலைப்புகளையும் ஆராய்ந்து, இவ்வாண்டின் உலக இளையோர் தினத்திற்கான தன் செய்தியை வழங்கியுள்ளார் பாப்பிறை.
2. ஹெயிட்டி நாட்டில் நிலநடுக்கத்தால் அழிவுக்குள்ளான கோவில்களை மீண்டும் கட்டியெழுப்ப கத்தோலிக்க உதவி
மார்ச்,27,2012. ஹெயிட்டி நாட்டில் 2010ம் ஆண்டு நிலநடுக்கத்தால் அழிவுக்குள்ளான கத்தோலிக்கக் கோவில்களை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு 31 இலட்சம் டாலர்களை வழங்குகின்றனர் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், கத்தோலிக்கத் துயர்துடைப்புப்பணி மையங்கள் மற்றும் ஹெயிட்டி ஆயர்கள்.
அழிவுக்குள்ளான கோவிலகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பணிகள் இவ்வாண்டில் துவக்கப்படும் எனக்கூறும் ஆயர்கள், திருத்தந்தையின் மெக்சிகோ மற்றும் கியூபா நாட்டு திருப்பயணம் இடம்பெறும் வெளையில் இவ்வுதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் நிறைந்தது எனவும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் மற்றும் உலகக் கத்தோலிக்க உதவி நிறுவனங்களின் இந்த நன்கொடை குறித்து ஹெயிட்டிக்கான திருப்பீடத்தூதுவர் பேராயர் Bernardito Auza, தன் நன்றியையும் மகிழ்ச்சியையும் வெளியிட்டுள்ளார்.
3. சிரியாவின் Homs நகரிலிருந்து கிறிஸ்தவர்கள் பெருமெண்ணிக்கையில் வெளியேறி வருகின்றனர்
மார்ச்,27,2012. சிரியாவின் Homs நகரிலுள்ள கிறிஸ்தவர்களுள் பெரும்பான்மையினோர் அந்நகரைவிட்டு வெளியேறயுள்ளதாக அப்பகுதியில் பணிபுரியும் இயேசு சபையினர் அறிவிக்கின்றனர்.
அச்சுறுத்தல் மற்றும் மோதல் காரணமாகவே இவர்கள் வெளியேறுகிறார்களேயன்றி, இஸ்லாமிய தீவிரவாதிகளின் கட்டாயத்தால் அல்ல என்றனர் இயேசு சபையினர். அண்மை நாட்களில் ஏறத்தாழ 50,000 கிறிஸ்தவர்கள் Homs நகரிலிருந்து அண்மை கிராமங்களுக்கு குடிபெயர்ந்துள்ளதாகக் கூறும் செய்தி நிறுவனங்கள், Homs நகரின் 90 விழுக்காட்டு கிறிஸ்தவர்கள் ஏற்கனவே வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.
அச்சத்தின் காரணமாக இவ்வாறு குடிபெயரும் மக்களிடையே Aid to the Church in Need என்ற கத்தோலிக்க உதவி நிறுவனம் சேவையாற்றி வருகின்றது.
கத்தோலிக்க செய்தி நிறுவனமான Fidesன் கூற்றுப்படி, ஓராண்டிற்கு முன்வரை ஒரு இலட்சத்து அறுபதாயிரம் கிறிஸ்தவர்கள் வாழ்ந்த Homs நகரில் தற்போது ஆயிரம் கிறிஸ்தவர்களே உள்ளனர்.
4. பகைமைப் பிரச்சாரங்களை நிறுத்த இலங்கை அரசுக்கு, மத மற்றும் மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள்
மார்ச்,27,2012. மனித உரிமைகள் குறித்த ஐ.நா. தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இலங்கையில் பரப்பப்படும் பகைமைப் பிரச்சாரங்களிலிருந்து அந்நாட்டு அரசு தன்னை விலக்கிக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளன மத மற்றும் சமூகக் குழுக்கள்.
கிறிஸ்தவ மதத்தலைவர்கள், மனிதஉரிமை நடவடிக்கையாளர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பல சமூக அமைப்புகளைச் சார்ந்தவர்கள் இணைந்து அரசுக்கு விடுத்துள்ள விண்ணப்பத்தில், பகைமையை ஊட்டும் பிரச்சாரங்களிலிருந்து அரசு ஒதுங்கியிருப்பதோடு, மனித உரிமைகளுக்காக போராடுபவர்களைப் பாதுகாக்கவும் முன்வர வேண்டும் என கேட்டுள்ளனர்.
இதற்கிடையே, இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்த ஐநா தீர்மானத்தை ஆதரித்த இலங்கை பத்திரிகையாளர்களுக்கு ஏற்கனவே அச்சுறுத்தல்கள் வந்துள்ள நிலையில், வெளிநாட்டில் அரசுக்கு எதிராகப் பேசும் பத்திரிகையாளர்களின் கால்களை முறிப்பேன் என இலங்கை மக்கள்தொடர்பு அமைச்சர் மெர்வின் சில்வா கூறியுள்ளது மேலும் பதட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது.
5. தமிழகத்தில் நகர்ப்புற வறுமையை ஒழிக்க ரூ.200 கோடியில் புதிய திட்டம்
மார்ச்,27,2012. திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, வீட்டுவசதி, அடிப்படை கட்டமைப்பு, அனைவருக்கும் கல்வி, சுகாதாரம், சமுதாய மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியதாக "தமிழக நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம்' என்ற புதிய திட்டம், வரும் நிதியாண்டில் துவக்கப்படும். என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தெருக்குழந்தைகள், வீடற்றவர்கள் ஆகியோருக்கான சிறப்பு இல்ல வசதிகள் செய்து தரப்படுவதுடன், தற்போதுள்ள பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து, பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து, இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்காக, தமிழக அரசின் வரவு - செலவு திட்டத்தில், 200 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment