Thursday, 1 March 2012

கத்தோலிக்க செய்திகள்: 27 பெப்ரவரி 2012

1. திருத்தந்தையின் மூவேளை செப உரை

2. வாழ்வைப் பாதுக்காக்க அழைப்பு விடுக்கும் ஹொன்டுராஸ் ஆயர்களின் அறிக்கை

3. திருப்பீடத்திற்கும் வியட்நாமுக்கும் இடையே அதிகாரப்பூர்வமான உறவுகளை நிறுவுவது குறித்த பேச்சு வார்த்தை ஆரம்பம்

4. கோவாவில் அருட்பணியாளர், மற்றும் 1500 கத்தோலிக்கர்கள் மீது கொலைமுயற்சி வழக்கு

5. நைஜீரியாவில் ஞாயிறு திருவழிபாடு நடைபெற்ற கிறிஸ்துவக் கோவிலில் தாக்குதல்

6. டெல்லியின் தூய இதய பேராலயம், நற்செய்தி அறிவிப்புப்பணியில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது

7. ஜாம்பியா நாட்டு வருங்காலம் குறித்து நம்பிக்கை பிறந்துள்ளதாக ஐ.நா. பொதுச்செயலர்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் மூவேளை செப உரை

பிப்.27,2012. யோர்தான் ஆற்றில் தூய திருமுழுக்கு யோவானிடமிருந்து திருமுழுக்கு பெற்றபின், இயேசு பாலைவனத்தில் சோதிக்கப்பட்டதை இத்தவக்காலத்தின் முதல் ஞாயிறு திருப்பலி வாசகத்தில் காண்கிறோம் என தன் ஞாயிறு மூவேளை செப உரையைத் துவக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பாலைவனம் என்பது பல்வேறு அர்த்தங்களை நமக்குத் தரலாம் என்ற பாப்பிறை, கைவிடப்படல், தனிமை என்ற நிலைகளைக் குறிப்பதாகவும், சோதனை, பலம்பெறும் மனிதனின் பலவீனத்தைக் குறிப்பதாகவும் காட்டப்படலாம் என்றார்.
பாலைவனத்தை ஒரு புகலிடமாகவும் நோக்கலாம் என்ற பாப்பிறை, எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து தப்பிய இஸ்ரயேல் மக்கள், பாலைவனத்தில் அடைக்கலம் தேடியதைச் சுட்டிக்காட்டி, அங்கு இறைப்பிரசன்னத்தை நாம் தனிப்பட்ட விதத்தில் உணரமுடியும் என்றார்.
இயேசு பாலைவனத்தில் சாத்தானால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இந்த நிகழ்வு, நமக்குக் கற்றுத்தருவது என்ன என்ற கேள்வியையும் முன்வைத்த திருத்தந்தை, பொறுமை மற்றும் உண்மையான தாழ்ச்சி மூலம் நாம் நம் எதிரிகளைவிட பலம்பொருந்தியவர்களாக மாறமுடியும் என்றார்.
இஞ்ஞாயிறு திருப்பலி வாசகத்தில் இயேசு விடுக்கும் 'மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்' என்ற அழைப்பு, நாம் இத்தவக்காலத்தில் தினசரி செபம், ஒறுத்தல் மற்றும் சகோதரத்துவ பிறரன்பு செயல்கள் மூலம் இறைவனுடன் நாம் கொள்ளும் உறவை புதுப்பித்து மேம்படுத்த அழைப்பு விடுப்பதாக உள்ளது என தன் ஞாயிறு மூவேளை செப உரையில் மேலும் கூறினார் திருத்தந்தை.


2. வாழ்வைப் பாதுக்காக்க அழைப்பு விடுக்கும் ஹொன்டுராஸ் ஆயர்களின் அறிக்கை

பிப்.27,2012. இறைவனிடமிருந்து வரும் கொடையாக வாழ்வை ஏற்றுக்கொள்ளவும், வாழ்வை அச்சுறுத்தும் அனைத்தையும் ஒதுக்கித் தள்ளவும் இயேசு கிறிஸ்து நமக்கு அழைப்பு விடுக்கிறார் என்கிறது ஹொண்டுராஸ் ஆயர்களின் வாழ்வுக்கு ஆதரவான அண்மை அறிக்கை.
'வாழ்வைப் பாதுகாப்பதற்கு' என்ற தலைப்பில் ஆயர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை, மனித வாழ்வும் மாண்பும் எவராலும் மீறமுடியாத அடிப்படை உரிமை என்கிறது.
அண்மையில் ஹொண்டுராஸ் சிறையில் இடம்பெற்ற பெருவிபத்தில் எறத்தாழ 360 பேர் இறந்தது குறித்து தங்கள் அறிக்கையில் கவலையை வெளியிட்டுள்ள ஆயர்கள், இது குறித்த முழுவிசாரணைகள் இடம்பெற வேண்டும் எனவும், சிறையில் பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படவேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, போதிய சுகாதாரமின்மை, உணவின்மை ஆகியவைகளையும் தாண்டி, வன்முறை, கொலை, இலஞ்ச ஊழல், சித்ரவதை, மனஅழுத்தம், போதைப்பொருள் அடிமைத்தனம், ஒழுக்கமின்மை, சட்டத்திற்கு புறம்பானவை ஆகிய பிரச்னைகளும் நோக்கப்படவேண்டும் எனவும் ஆயர்களின் அறிக்கை அழைப்பு விடுக்கிறது.
இன்றைய ஹொண்டுராஸ் சமூகத்தின் உண்மை நிலைகளை எதிர்நோக்கும் தலத்திருஅவை, வாழ்விற்கான மதிப்பு மற்றும் அமைதிக் கலாச்சாரத்திற்காக உழைப்பதற்கு ஏற்ற பரிந்துரைகளை ஏற்கனவே முன்வைத்துள்ளதையும் ஆயர்களின் அறிக்கைச் சுட்டிக்காட்டுகிறது.


3. திருப்பீடத்திற்கும் வியட்நாமுக்கும் இடையே அதிகாரப்பூர்வமான உறவுகளை நிறுவுவது குறித்த பேச்சு வார்த்தை ஆரம்பம்

பிப்.27,2012. திருப்பீடத்திற்கும் வியட்நாம் நாட்டிற்கும் இடையே அதிகாரப்பூர்வமான உறவுகளை நிறுவுவது குறித்த பேச்சு வார்த்தை இத்திங்களன்று வியட்நாம் நாட்டின் Hanoi நகரில் ஆரம்பமாகியது.
பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீட அவையின் துணைச் செயலர் பேராயர் Ettore Balestrero, திருப்பீடத்தின் சார்பில் அந்நாட்டிற்குச் சென்றுள்ள பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமை வகிக்கிறார். பன்னாட்டு உறவுகளின் இணை அமைச்சர் Bui Thanh Son, வியட்நாம் அரசுக் குழுவின் தலைவராகச் செயல்படுகிறார்.
இத்திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இருநாட்கள் நடைபெறும் இக்கூட்டம் வெற்றிகரமாக அமைவதற்கு தலத் திருஅவை சிறப்பான செபங்களை எழுப்பி வருகிறதென்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
வியட்நாமில் பெரும்பாலான பகுதிகளில் அரசுக்கும் திருஅவைக்கும் நேரடி மோதல்கள் இல்லையெனினும், மலைப் பகுதிகளிலும் இன்னும் பிற கிராமங்களிலும் பணியாற்றும் இறைபணியாளர்களுக்கு அரசு பல வழிகளில் பிரச்சனைகளை உருவாக்கி வருகிறதென்றும், இறைபணியாளர்களுக்கு எதிராக அரசே நேரடியாகச் செயல்படாமல், உள்ளூர் ரௌடிகளின் வழியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றது என்றும் ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
பிப்ரவரி 26, தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று வியட்நாமின் பல்வேறு கோவில்களில் மக்கள் கூடிவந்து, அந்நாட்டில் அமைதியும், நீதியும் நிலைநிறுத்தப்படவும், வத்திக்கானுடன் ஆரம்பமாகியுள்ள பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக அமையவும் செபங்களை எழுப்பினர் என்று இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.


4. கோவாவில் அருட்பணியாளர், மற்றும் 1500 கத்தோலிக்கர்கள் மீது கொலைமுயற்சி வழக்கு

பிப்.27,2012. காவல்துறை குழு ஒன்றை கொலைச் செய்ய முயற்சித்ததாக அருட்பணியாளர் ஒருவர் மீதும், ஏறத்தாழ 1500 கத்தோலிக்கர்கள் மீதும் வழக்கு ஒன்றைப் பதிவுச் செய்துள்ளது கோவா காவல்துறை.     
ஏற்கனவே தவறான தகவலின் அடிப்படையில் வெலிம் நகர் புனித பிரான்சிஸ் சேவியர் பங்குத்தளத்தில் சோதனை நடத்தி பின்னர் மன்னிப்பு கேட்ட வரிவிதிப்புத்துறையின் செயலால் கோபமுற்றிருந்த மக்கள், சனியன்று இரவு அப்பங்குதளத்தில் புகுந்த காவல்துறை குழு ஒன்றைத் தாக்கியுள்ளது.
ஐந்து காவல்துறையினரும் ஒரு பொதுநிலையினரும் படுகாயமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அப்பங்குத்தள குரு மீதும் ஏறத்தாழ 1500 பங்குதள மக்கள் மீதும் கொலைமுயற்சி வழக்கொன்றைப் பதிவுச் செய்துள்ளது கோவா காவல்துறை.
கோவா தலைநகர் பனாஜிக்கு அருகேயுள்ள வெலிம் பங்குதளக்குரு ரொமானோ கொன்சால்வசை சனி இரவு 9மணிக்கு மேல் சந்திக்க வந்த இந்த காவல்துறை குழு, அந்த பங்குதள மக்கள், வரும் மார்ச் 3ந்தேதி தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவளிக்கப் போகிறார்கள் என்பதை அறிய விரும்பியதாகவும் அதனைத் தொடர்ந்து இந்த மோதல் இடம்பெற்றதாகவும் அந்த பங்குத்தள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


5. நைஜீரியாவில் ஞாயிறு திருவழிபாடு நடைபெற்ற கிறிஸ்துவக் கோவிலில் தாக்குதல்

பிப்.27,2012. ஆப்ரிக்காவின் நைஜீரியாவில் ஞாயிறு திருவழிபாடு நடைபெற்ற கோவிலில் தற்கொலைப் படையினரால் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட, மூவர் கொல்லப்பட்டனர், மற்றும் 38 பேர் காயமுற்றனர்.
வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ஒரு வாகனத்தை Jos என்ற ஊரில் உள்ள கிறிஸ்துவின் ஆலயத்தில் இடித்து, இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு குழுவும் பொறுப்பு ஏற்கவில்லை எனினும், இத்தாக்குதலின் அம்சங்களை நோக்கும்போது, இது Boko Haram குழுவினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
இத்தாக்குதலைத் தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த இளையோர் வன்முறைகளில் ஈடுபட்டதால், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன என்றும் செய்திகள் கூறுகின்றன.


6. டெல்லியின் தூய இதய பேராலயம், நற்செய்தி அறிவிப்புப்பணியில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது

பிப்.27,2012. டெல்லியில் உள்ள இயேசுவின் தூய இதய பேராலயம், நற்செய்தி அறிவிப்புப்பணியில் மிக முக்கியப் பங்கை ஆற்றியுள்ளது என தன் பாராட்டுக்களை வெளியிட்டார் டெல்லி பெருமறைமாவட்டப் பேராயர் வின்சென்ட் கொன்செசாவோ.
டெல்லி பேராலயம் திருநிலைப்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளதையொட்டி, இந்தியாவிற்கான திருப்பீடத்தூதுவர் பேராயர் சால்வத்தோரே பென்னாக்கியோ, பிஜ்னோரின் ஓய்வு பெற்ற ஆயர் கிரேசியன் முண்டாடன், ஆக்ரா பேராயர் ஆல்பர்ட் டி சூசாடெல்லி துணை ஆயர் ஃபிராங்கோ மூலக்கல் ஆகியோருடன் இணைந்து 75ம் ஆண்டு விழாத்திருப்பலியை நிறைவேற்றிய பேராயர் கொன்செசாவோ, நம் முன்னோர்களிடமிருந்து நமக்கு விசுவாசம் வழங்கப்பட்டதன் அடையாளமாக நிற்கும் டெல்லி தூய இதய பேராலயம், விசுவாசத்தை, அடுத்த தலைமுறைக்கும் வழங்கவேண்டும் என்பதனை நினைவுறுத்தி நிற்கின்றது என்றார்.
வழிபடவும் உண்மையான மன அமைதியைப் பெறவும் எண்ணற்றோர் ஒவ்வொரு நாளூம் இப்பேராலயத்திற்கு வந்துசெல்வதாக அதன் பங்குரு மரிய சூசை தெரிவித்தார்.
1929ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இப்பேராலயம், 1935ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.


7. ஜாம்பியா நாட்டு வருங்காலம் குறித்து நம்பிக்கை பிறந்துள்ளதாக ஐ.நா. பொதுச்செயலர்

பிப்.27,2012. மக்களாட்சிக் கொள்கைகள், மனித உரிமைகள் மற்றும் கல்வியில் ஜாம்பியா நாட்டு இளைஞர்களின் ஆர்வத்தைக் காணும்போது, அந்நாட்டு வருங்காலம் குறித்த புது நம்பிக்கைகள் பிறந்துள்ளதாக அறிவித்தார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
ஜாம்பியா நாட்டிற்கான தன் முதல் பயணத்தை இஞ்ஞாயிறன்று முடித்து, அங்கோலா செல்லும் முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஐ.நா. பொதுச்செயலர், ஜாம்பியாவில் இளையதலைமுறை மீது நம்பிக்கைக்கொண்டு அரசு அதிக அளவில் முதலீடு செய்துள்ளதைக் காணமுடிகிறது என்றார்.
நாட்டின் குழந்தைகள் மீது அக்கறை காட்டி, அவர்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தும்போது, அந்நாடு எப்படியும் வலிமை மிக்கதாகவே இருக்கும் என்றார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...