1. அனைவருக்கும் சம உரிமைகளை வழங்கும்போது, அமைதி, சமுதாய முன்னேற்றம் ஆகியவை உறுதி செய்யப்படும் - பேராயர் சில்வானோ தொமாசி
2. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் அருளாளராக உயர்த்தப்பட்ட நிகழ்வு முப்பரிமாணத் திரைப்படமாக வெளியிடப்படும்
3. சிரியாவின் மக்களுக்கு எவ்வாறு உதவிகள் செய்வது என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டிய தேவை ஒவ்வொரு நாளும் கூடி வருகிறது - திருப்பீடத் தூதர்
4. நேபாளத்தில் நிலவும் ஊழலை வேரோடு களையும் முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் - அப்போஸ்தலிக்க நிர்வாகி பேராயர் ஷர்மா
5. மரண தண்டனை, கருக்கலைப்பு, ஓரின திருமணங்கள் ஆகிய அம்சங்களைக் குறித்து Zimbabwe ஆயர்கள் வெளியிட்டுள்ள மடல்
6. மதச் சுதந்திரத்திற்குப் பாதகமாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு அமெரிக்க ஆயர்கள் எதிர்ப்பு
7. மியான்மாரில் கத்தோலிக்க குருவும் புத்தத் துறவியும் இணைந்து துவக்கியுள்ள இலவச மருத்துவமனை
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. அனைவருக்கும் சம உரிமைகளை வழங்கும்போது, அமைதி, சமுதாய முன்னேற்றம் ஆகியவை உறுதி செய்யப்படும் - பேராயர் சில்வானோ தொமாசி
மார்ச்,15,2012. குலம், மதம், மொழி என்ற அடிப்படையில் சிறுபான்மை நிலையில் இருக்கும் பல்வேறு சமுதாயங்கள் தங்கள் உரிமைகளைப் பற்றிய புரிதலில் வளர்ந்து வரும் இன்றைய காலக் கட்டத்தில், அவ்வுரிமைகளைத் தர மறுக்கும் அதிகார அமைப்புக்களும் தொடர்ந்து வருகின்றன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பு, ஜெனீவாவில் தற்போது நடத்தி வரும் 19வது அமர்வில் திருப்பீடத்தின் சார்பில் இவ்வமைப்பில் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி, இப்புதனன்று இக்கூட்டத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
சிறுபான்மை, பெரும்பான்மை என்ற அடிப்படையில் அரசுகள் பாகுபாடுகளை வலுப்படுத்துவதற்குப் பதில், அனைவருக்கும் சம உரிமைகளை வழங்கும்போது, ஒவ்வொரு நாட்டிலும் அமைதி, சமுதாய முன்னேற்றம் ஆகியவை உறுதி செய்யப்படும் என்று பேராயர் தொமாசி எடுத்துரைத்தார்.
ஒவ்வொரு சமுதாயக் குழுவுக்கும் உரிய தனிப்பட்ட கலாச்சாரம், மொழி, மதம் என்ற பாரம்பரியங்களை வளர்ப்பதற்கு நாடுகள் முன்வரும்போது, வளம் நிறைந்த சமுதாயம் உவுவாகும் என்பதில் ஐயமில்லை என்று பேராயர் சுட்டிக் காட்டினார்.
சகிப்புத் தன்மை, சமமான மதிப்பு ஆகிய உணர்வுகளுடன் வருங்காலத் தலைமுறையினர் வளர்வதற்கு கல்வித் திட்டத்தில் மாற்றங்களை உருவாக்குவது, ஒவ்வோர் அரசின் முக்கிய கடமையாக இருக்க வேண்டும் என்று வத்திக்கான் அதிகாரி பேராயர் தொமாசி வேண்டுகோள் விடுத்தார்.
"குலம், மதம், மொழி - சிறுபான்மையினரின் உரிமைகள்" என்ற தலைப்பில் ஜெனீவாவில் நடைபெற்று வரும் 19வது அமர்வில் 80க்கும் அதிகமான நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
2. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் அருளாளராக உயர்த்தப்பட்ட நிகழ்வு முப்பரிமாணத் திரைப்படமாக வெளியிடப்படும்
மார்ச்,15,2012. தொடர்புத் துறையில் ஒவ்வொரு புதிய தொழில் நுட்பமும் வளரும்போது, அவற்றுடன் இணைந்து செல்ல திருஅவை முயன்று வருகிறது என்று திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi கூறினார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் அருளாளராக உயர்த்தப்பட்ட நிகழ்வை முப்பரிமாணத் திரைப்படமாக வெளியிடும் முதல் முயற்சியாக இப்புதனன்று பத்திரிக்கையாளர்களுக்கு இத்திரைப்படம் காட்டப்பட்டபோது, இயேசு சபை அருள்தந்தை லொம்பார்தி இவ்வாறு கூறினார்.
இத்தாலிய தொலைக்காட்சி நிறுவனமான RAI வெளியிடவிருக்கும் இந்த முப்பரிமாணத் திரைப்படம் 22 நிமிடங்கள் ஓடக்கூடியது. இத்திரைப்படம் RAI நிறுவனத்தால் வருகிற ஏப்ரல் முதல் தேதி முதல் திரையிடப்படும்.
RAI தொலைக்காட்சி நிறுவனமும், வத்திக்கானும் இதுவரைத் தொடர்ந்து வந்துள்ள பயணத்தில் இன்னும் பல புதிய கண்டுபிடிப்புக்கள் இன்னும் வெளிவரும் வாய்ப்புக்கள் உள்ளன என்று அருள்தந்தை லொம்பார்தி செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தார்.
3. சிரியாவின் மக்களுக்கு எவ்வாறு உதவிகள் செய்வது என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டிய தேவை ஒவ்வொரு நாளும் கூடி வருகிறது - திருப்பீடத் தூதர்
மார்ச்,15,2012. சிரியாவின் Baba Amr மாவட்டத்தில் செஞ்சிலுவை அமைப்பைச் சார்ந்தவர்கள் பணிகளை ஆரம்பித்தபின், அங்கிருந்து தொலைக்காட்சி மூலம் வெளியாகும் காட்சிகள் பொது மக்களைப் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகின்றன என்று சிரியாவில் பணிபுரியும் திருப்பீடத் தூதர் கூறினார்.
ஊடகங்களில் வெளியாகும் காட்சிகளில் காணப்படும் துன்பங்களுக்கு அரசும், புரட்சிக் குழுக்களும் காரணம் என்று ஒருவரை ஒருவர் குறைகூறி வரும் போக்கும் அதிகரித்து வருகிறது என்று திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari, MISNA செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
பழிவாங்கும் உணர்வுகளில் புதைந்துள்ள இரு தரப்பினரும் தங்கள் உணர்வுகளிலிருந்து வெளியேறி, பன்னாட்டு நிறுவனங்களின் உதவியுடன் மக்களுக்கு எவ்வாறு உதவிகள் செய்வது என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டிய தேவை ஒவ்வொரு நாளும் கூடி வருகிறது என்று பேராயர் Zenari எடுத்துரைத்தார்.
அரசுக்கும் போராட்டக் குழுக்களுக்கும் இடையே வலுப்பெற்றிருக்கும் மோதல்களால் அப்பாவி மக்கள் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 18,000 முதல் 30,000 பேர் வரையிலான மக்கள் அண்மைய நாடுகளுக்கு அகதிகளாகத் தப்பித்துள்ளனர் என்றும் MISNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
அமெரிக்க ஐக்கிய நாடு, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, இத்தாலியும் சிரியாவில் உள்ள தூதரகத்தின் பணிகளை நிறுத்தி வைப்பதாக இப்புதனன்று அறிவித்துள்ளது.
சிரியா அரசு தன் மக்கள் மீது காட்டிவரும் கட்டுக்கடங்காத அடக்கு முறையை வன்மையாகக் கண்டிப்பதாகவும், சிரியாவில் அமைதி நிலைநாட்டப்படுவதற்கு அந்நாட்டு மக்களுக்குத் தங்கள் அரசு எல்லா வகையிலும் உதவ தயாராக இருப்பதாகவும் இத்தாலிய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
4. நேபாளத்தில் நிலவும் ஊழலை வேரோடு களையும் முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் - அப்போஸ்தலிக்க நிர்வாகி பேராயர் ஷர்மா
மார்ச்,15,2012. நாட்டின் சட்டங்களைச் சீர்திருத்த முனைந்திருக்கும் நேபாள அரசு, அனைவருக்கும் உரிமைகளையும், சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தும் வழிகளை ஆராய்வது அவசியம் என்று நேபாளத்தில் பணிபுரியும் அப்போஸ்தலிக்க நிர்வாகி பேராயர் Anthony Sharma, SJ கூறினார்.
நாட்டின் சட்டங்களில் மாற்றங்களைக் கொணர்வதற்கு நேபாள அரசின் பாராளுமன்றம் ஈடுபட்டுள்ள இவ்வேளையில், நாட்டில் நிலவும் ஊழலை வேரோடு களையும் முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இயேசு சபையைச் சேர்ந்த பேராயர் ஷர்மா வலியுறுத்தினார்.
தற்போது பிரதமாராகப் பணியாற்றும் Baburam Bhattarai, கிறிஸ்தவ கல்வி நிலையங்களில் கல்வி பயின்றவர் என்றும், வலுவான நன்னெறி கோட்பாடுகள் உள்ளவர் என்றும் சுட்டிக்காட்டிய பேராயர் ஷர்மா, இவரது தலைமையில் நேபாள அரசு நல்ல முயற்சிகளை எடுக்கும் என்ற தன் நம்பிக்கையையும் வெளியிட்டார்.
மேமாதத்திற்குள் சட்டமாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் கூடியிருக்கும் பாராளு மன்றத்தில், பல்வேறு கட்சிகளின் கோரிக்கைகளுக்கு வளைந்து கொடுப்பதே சட்டத் தீர்திருத்தங்களைத் தாமதிக்கிறது என்று கூறிய பேராயர், இதனால், மக்கள் சிறிது சிறிதாக நம்பிக்கை இழந்து வருவதையும் காண முடிகிறது என்று கூறினார்.
மதச் சுதந்திரம், மதச் சார்பற்ற அரசு, அனைவரின் அடிப்படை உரிமைகளுக்கும் மதிப்பு ஆகிய கொள்கைகளை திருஅவை எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது என்று அப்போஸ்தலிக்க நிர்வாகி பேராயர் ஷர்மா மேலும் கூறினார்.
5. மரண தண்டனை, கருக்கலைப்பு, ஓரின திருமணங்கள் ஆகிய அம்சங்களைக் குறித்து Zimbabwe ஆயர்கள் வெளியிட்டுள்ள மடல்
மார்ச்,15,2012. ஒப்புரவு, நீதி மற்றும் அமைதிக்கென ஆப்ரிக்கத் திருஅவை உழைக்க வேண்டும் என்று ஆப்ரிக்க சிறப்பு மாமன்றமும், திருத்தந்தையும் கூறியுள்ளதற்கு இணங்க, Zimbabwe நாட்டில் உள்ள கத்தோலிக்கர்கள் நீதி, ஒப்புரவு, அமைதிக்கு எவ்வகையில் உழைக்க முடியும் என்ற கேள்வியை அந்நாட்டு ஆயர்கள் எழுப்பியுள்ளனர்.
தவக்காலத்தையொட்டி, இவ்வாரம் Zimbabwe ஆயர்கள் வெளியிட்டுள்ள ஒரு சுற்று மடலில், திருத்தந்தை கடந்த நவம்பர் மாதம் Benin நாட்டிற்கு வந்தபோது, ஆயர்களுக்கு அளித்த சிறப்பு அப்போஸ்தலிக்க அறிவுரையான Africae Munus என்ற மடலை தங்கள் சுற்றுமடலின் துவக்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளனர் ஆயர்கள்.
Zimbabwe பாராளு மன்றம், தற்போது அந்நாட்டின் புதிய சட்டங்களைக் குறித்து விவாதங்களை மேற்கொண்டுள்ள வேளையில், மரண தண்டனை, கருக்கலைப்பு, ஓரின திருமணங்கள் ஆகிய அம்சங்களைக் குறித்து ஆயர்கள் தங்கள் மடலில் எடுத்துரைத்துள்ளனர்.
சாவுக்குப் பதில் வாழ்வைத் தேர்ந்தெடுத்தல், நீதியும் அமைதியும் இணைதல், அன்பு செய்யவே படைக்கப்படுதல் ஆகிய முக்கிய பகுதிகளாக விளங்கும் இம்மடலில் ஆங்காங்கே மக்கள் சிந்திக்க வேண்டும் என்ற கருத்துடன், அமைதி இடைவெளிகளும் வழங்கப்பட்டுள்ளன.
6. மதச் சுதந்திரத்திற்குப் பாதகமாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு அமெரிக்க ஆயர்கள் எதிர்ப்பு
மார்ச்,15,2012. மதச் சுதந்திரத்திற்குப் பாதகமாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு எடுத்துவரும் முயற்சிகளை எதிர்க்க அமெரிக்க ஆயர்கள் முழு வலிமையோடு போராடுவர் என்று ஆயர்களின் மேல்மட்டக் குழு கூறியுள்ளது.
அமெரிக்க ஐக்கிய அரசின் மனித வளம் மற்றும் நலத்துறை அண்மையில் சட்டமாக்கியுள்ள நலவாழ்வு காப்பீட்டு அம்சங்கள் கத்தோலிக்கர்களின் மனச்சான்றுக்கு எதிராக உள்ளது என்பதை வலியுறுத்தி வரும் அமெரிக்க ஆயர்கள், இப்புதனன்று வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், தங்கள் எதிர்ப்பை இன்னும் வலுவாகத் தெரிவித்துள்ளனர்.
ஆயர்களின் இந்த எதிர்ப்பு, கருத்தடை சாதனங்கள், மற்றும் கருகலைப்பு ஆகியவை குறித்த விவாதங்கள் அல்ல, மாறாக, மனசாட்சிக்கு எதிரான இந்த முறைகளை கத்தோலிக்க நிறுவனங்களும் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்துவதையே தாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம் என்று ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
மதங்களின் பண்பு, பணிகள் ஆகியவற்றை வரையறுப்பது அரசின் உரிமை கிடையாது என்பதைத் தெளிவுபடுத்தும் இந்த அறிக்கை, அரசின் இந்தப் போக்கு தொடர்ந்தால், மத உரிமைகளுக்குத் தகுந்த மரியாதை வழங்கும் அமெரிக்க நாட்டின் பெருமை சீர்குலையும் என்று வலியுறுத்துகிறது.
7. மியான்மாரில் கத்தோலிக்க குருவும் புத்தத் துறவியும் இணைந்து துவக்கியுள்ள இலவச மருத்துவமனை
மார்ச்,15,2012. மியான்மாரில், ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவ உதவிகள் செய்யவேண்டும் என்று விழைந்த கத்தோலிக்க குரு ஒருவரது கனவு புத்தத் துறவிகளின் துணையுடன் அண்மையில் நனவானது.
மியான்மாரின் மண்டலே பகுதியில் தூய இருதயப் பேராலய பங்குத் தந்தையாகப் பணிபுரியும் John Aye Kyaw, தன் எண்ணத்தை பல்சமயக் கூட்டம் ஒன்றில் வெளியிட்டார். அக்கூட்டத்திற்கு வந்திருந்த புத்தத் துறவி Seinnita, அருள்தந்தை Aye Kyawவுக்கு உதவி செய்ய முன்வந்தார்.
புத்தத் துறவிகள் நடத்தி வந்த ஒரு சமுதாய மையத்தில் மருத்துவமனை அமைக்கும் இடம் ஒதுக்கப்பட்டது. அருள்தந்தை Aye Kyaw மருத்துவமனைக்காகச் சேகரித்து வைத்திருந்த தொகையைக் கொண்டு இந்த மருத்துவமனை கட்டப்பட்டு, அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த மருத்துவமனையில் ஊதியம் ஏதும் பெறாமல் பணிபுரிய 15 மருத்துவர்கள் முன்வந்துள்ளனர் என்றும், 13 புத்தத் துறவிகள் மருத்துவமனையின் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்த மருத்துவமனை திறக்கப்பட்ட ஒரு சில நாட்களில் இங்கு 300க்கும் அதிகமான வறியோருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment