Thursday, 22 March 2012

கத்தோலிக்க செய்திகள்: 22 மார்ச் 2012

1. மெக்சிகோ மற்றும் கியூபாவுக்கானத் திருத்தந்தையின் திருப்பயணம்

2. திருத்தந்தையின் திருப்பயணம் மெக்சிகோ நாட்டில் உள்ள இளையோருக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தரும் - திருப்பீடச் செயலர்

3. சிரியாவிலிருந்து கிறிஸ்தவர்களை முற்றிலும் அகற்றும் முயற்சிகள் நடைபெற்றாலும், இயேசு சபையினர் பணிகளைத் தொடர முடிவு

4. பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் இறந்த நாளான, மார்ச் 24ம் தேதி, செபம் மற்றும் நோன்பு நாளாகக் கடைபிடிக்கப்படும்

5. இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் நீதி விசாரணைக்குக் கொண்டுவரப்பட வேண்டும் - ஐ.நா.மனித உரிமைகள் அவை

6. உலகில் மிகவும் அரிதான ஒரு பொருளாக நீர் மாறிவருவதால், நீரைப் பகிர்வதற்கு நாடுகளுக்குள் போர் மூளும் ஆபத்து

7. மார்ச் 21, இனப் பாகுபாடுகளைக் களைவதற்கு உருவாக்கப்பட்ட உலக நாளையொட்டி ஐ.நா. பொதுச்செயலர் வெளியிட்ட செய்தி

------------------------------------------------------------------------------------------------------

1. மெக்சிகோ மற்றும் கியூபாவுக்கானத் திருத்தந்தையின் திருப்பயணம்

மார்ச்22,2012. மெக்சிகோ மற்றும் கியூபாவுக்கு ஆறு நாள்கள் கொண்ட தனது மேய்ப்புப்பணி திருப்பயணத்தை இவ்வெள்ளியன்று தொடங்குகிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இவ்வெள்ளி உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்கு உரோம் ஃபியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து ஆல் இத்தாலியா விமானத்தில் புறப்படும் திருத்தந்தை, 14 மணி நேரம் விமானப்பயணம் செய்து மெக்சிகோ நாட்டு Guanajuato பன்னாட்டு விமான நிலையத்தை அடையும் போது அந்நாட்டு நேரம் இவ்வெள்ளி மாலை 4 மணி 30 நிமிடங்களாக இருக்கும். மெக்சிகோவுக்கும் இத்தாலிக்கும் இடையேயுள்ள கால இடைவெளி 7 மணியாகும்.
மெக்சிகோ நாட்டின் Guanajuato, Leon ஆகிய இரு நகரங்களில் திருப்பயணத் திட்டங்களை நிறைவேற்றும் திருத்தந்தை, மெக்சிகோ சுதந்திரம் அடைந்ததன் 200வது ஆண்டைச் சிறப்பிக்கும் திருப்பலி இப்பயணத்தின் முத்தாய்ப்பாக இருக்கும்.
Leon நகரத்தில் இந்த 200வது ஆண்டின் நினைவாக அமைக்கப்பட்டிருக்கும் தேசியப் பூங்காவில் இஞ்ஞாயிறு காலை 10 மணியளவில் விழாத் திருப்பலியை நிகழ்த்துவார் திருத்தந்தை.
வருகிற திங்களன்று, மெக்சிகோ நாட்டின் Guanajuato விலிருந்து கியூபா செல்லும் திருத்தந்தை, கியூபாவில், கோர்தோபா அன்னைமரி திருவுரும் கண்டுபிடிக்கப்பட்டதன் 400ம் ஆண்டைச் சிறப்பிக்கும் திருப்பலியை நிகழ்த்துவார்.
கியூபாவில் திருப்பயண நிகழ்வுகளை நிறைவு செய்து வருகிற வியாழன் காலை 10.15 மணியளவில் உரோம் வந்து சேர்வார் திருத்தந்தை.
இத்தாலிக்கு வெளியே திருத்தந்தை மேற்கொள்ளும் இந்த 23 வது வெளிநாட்டுத் திருப்பயணம் 23வது நாட்டுக்குச் செல்வதாக அமைகின்றது.


2. திருத்தந்தையின் திருப்பயணம் மெக்சிகோ நாட்டில் உள்ள இளையோருக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தரும் - திருப்பீடச் செயலர்

மார்ச்,22,2012. மெக்சிகோ நாட்டில் திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணம் அந்நாட்டில் உள்ள இளையோருக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தரும் நற்செய்தியாக அமையும் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே கூறினார்.
இவ்வெள்ளியன்று மெக்சிகோ மற்றும் க்யூபா நாடுகளில் திருத்தந்தை மேற்கொள்ளும் திருப்பயணம் குறித்து மெக்சிகோ தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கர்தினால் பெர்தோனே அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
சமுதாயத்தில் முன்னேறுவதற்கு ஆபத்து நிறைந்த குறுக்கு வழிகளைப் பின்பற்ற மெக்சிகோவில் வாழும் இளையோர் கவர்ந்திழுக்கப்படாமல், நேர்மையான வழிகளை அவர்கள் தேடும்படி திருத்தந்தை தன் திருப்பயணத்தின்போது அவர்களுக்கு சிறப்பான செய்திகளை வழங்க உள்ளார் என்று கர்தினால் பெர்தோனே தெரிவித்தார்.
போதைப்பொருள் வர்த்தகம், மற்றும் வன்முறை குழுக்களின் ஆதிக்கம் ஆகியவை மெக்சிகோ நாட்டில் பெற்றுள்ள இடத்தைப் பற்றி திருத்தந்தை நன்கு அறிந்துள்ளார் என்று கூறிய திருப்பீடச் செயலர், சமுதாயப் பிரச்சனைகள் மத்தியிலும், மெக்சிகோ மக்களிடம் வேரூன்றியிருக்கும் விசுவாசத்தையும் திருத்தந்தை நன்கு அறிந்துள்ளார் என்று கூறினார்.
ஒப்புரவுடன் வாழ்வது, நேரிய வழிகளில் வாழ்வது போன்ற கிறிஸ்தவ விழுமியங்களில் மெக்சிகோ மக்கள் உறுதி பெறுவதற்கு திருத்தந்தையின் திருப்பயணம் தூண்டுதலாக அமையும் என்று கர்தினால் பெர்தோனே வலியுறுத்திக் கூறினார்.


3. சிரியாவிலிருந்து கிறிஸ்தவர்களை முற்றிலும் அகற்றும் முயற்சிகள் நடைபெற்றாலும், இயேசு சபையினர் பணிகளைத் தொடர முடிவு

மார்ச்,22,2012. சிரியாவில் சித்திரவதைகளும், வன்கொடுமைகளும் நிகழ்வதற்கு, எதிர்கட்சியினரே பெருமளவில் காரணம் என்றும், கிறிஸ்தவர்களை அந்நாட்டிலிருந்து முற்றிலும் அகற்றும் முயற்சிகள் நடைபெறுகிறதென்றும் இச்செவ்வாயன்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
சிரியாவில் பணிபுரியும் 'மனித உரிமைகள் கண்காணிப்பு' (Human Rights Watch) என்ற அரசுசாரா அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில் அல் கெய்தா வுடன் நெருங்கியத் தொடர்பு கொண்ட 'பரூக் படையினர்' ("Brigade Faruq") என்ற குழுவினர் Homs நகரிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் வாழும் கிறிஸ்தவர்களின் இல்லங்களுக்குச்  சென்று அவர்களை விரட்டி அடிக்கின்றனர் என்றும், அத்துமீறி அவர்கள் இல்லங்களை ஆக்கிரமிக்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை எவ்வளவு தூரம் உண்மை என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், பிற நாடுகளின் ஊடகங்கள் சிரியாவில் நடைபெறும் வன்முறைகள் பற்றி மௌனம் காப்பதால், இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் செய்துவரும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன என்று Aleppo அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் Giuseppe Nazzaro, Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
சென்ற ஞாயிறன்று Aleppo நகரில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு குறித்துப் பேசிய ஆயர் Nazzaro, ஞாயிறன்று புனித பொனவெந்தூர் ஆலயத்தில் மறைகல்வி படித்து வந்த குழந்தைகளை அங்கிருந்த துறவியர் 15 நிமிடங்களுக்கு முன்னரே அனுப்பிவிட்டதால், அக்குழந்தைகள் அற்புத விதமாகக் காப்பாற்றப்பட்டனர் என்றும் எடுத்துரைத்தார்.
இதற்கிடையே, Homs நகரில் பணிபுரியும் இயேசு சபை துறவிகள், தாங்கள் தொடர்ந்து அந்நகரில் தங்கி, தங்களால் இயன்றவரை அம்மக்களுக்கு உதவிகளையும் ஆறுதலையும் வழங்க விருப்பதாக அறிவித்துள்ளனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


4. பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் இறந்த நாளான, மார்ச் 24ம் தேதி, செபம் மற்றும் நோன்பு நாளாகக் கடைபிடிக்கப்படும்

மார்ச்,22,2012. பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் இறந்த நாளான, மார்ச் 24ம் தேதி, இச்சனிக்கிழமை, செபம் மற்றும் நோன்பு நாளாகக் கடைபிடிக்கப்படும் என்று இத்தாலிய பாப்பிறை மறைபரப்புப்பணிக் கழகத்தின் இளையோர் அணி அறிவித்துள்ளது.
1980ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி கொலையுண்ட பேராயர் ரொமேரோவின் நினைவாக 1993ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த இளையோர் அணி, ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24ம் தேதியன்று நற்செய்திப் பணிக்கென தங்கள் உயிரை இழந்தோரை நினைவு கூர்ந்து, அந்நாளை ஒரு செப, நோன்பு நாளாகக் கடைப்பிடித்து வருகிறது. இவ்வாண்டு, இம்முயற்சி ஆரம்பித்து 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
"இறுதிவரை அன்பு கூர்தல்" என்ற மையப்பொருளுடன் கடைபிடிக்கப்படும் இந்த இருபதாம் ஆண்டு நிறைவில் கலந்து கொள்ள உலகின் அனைத்து மறைமாவட்டங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது இந்த இளையோர் அமைப்பு.


5. இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் நீதி விசாரணைக்குக் கொண்டுவரப்பட வேண்டும் - ஐ.நா.மனித உரிமைகள் அவை

மார்ச்22,2012. இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது கடும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அரசுத் துருப்புகள் நீதி விசாரணைக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்று ஐ.நா.மனித உரிமைகள் அவை இவ்வியாழனன்று வலியுறுத்தியது.
இலங்கையில் போர்க்காலச் சம்பவங்களின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரும் அமெரிக்காவின் தீர்மானம், ஐ.நா.வின் மனித உரிமைகள் அவையில் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு இலங்கை அரசின் 70 பேர் அடங்கிய வலுவான குழு கடும் முயற்சிகள் செய்ததையும் விடுத்து, அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் அவையில் இந்தத் தீர்மானம் தொடர்பில் இவ்வியாழனன்று நடந்த வாக்கெடுப்பில் இந்தியா உட்பட 24 நாடுகள் ஆதரவாக வாக்களித்ததையடுத்து இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
47 நாடுகள் கொண்ட மனித உரிமைகள் அவையில், சீனா, இரஷ்யா உள்ளிட்ட 15 நாடுகள் இத்தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன மற்றும் 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
போர்க்காலத்தில் இரு தரப்பினரும் புரிந்த குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடைபெறுவதன் மூலமே போருக்குப் பின்னான இலங்கையில் நீதியையும் சமத்துவத்தையும் நிலைநாட்ட முடியும் என்று, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து இத்தீர்மானத்தை ஆதரித்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.


6. உலகில் மிகவும் அரிதான ஒரு பொருளாக நீர் மாறிவருவதால், நீரைப் பகிர்வதற்கு நாடுகளுக்குள் போர் மூளும் ஆபத்து

மார்ச்,22,2012. உலகில் மிகவும் அரிதான ஒரு பொருளாக நீர் மாறிவருவதால், நீரைப் பகிர்வதற்கு நாடுகளுக்குள் போர் மூளும் சூழல்கள் உருவாகலாம் என்று பான் கி மூன் கூறினார்.
மார்ச் 22 உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், உலகில் 80௦ கோடி மக்கள் சுத்தமான நீர் இன்றியும், 100 கோடி பேர் உணவின்றியும் வாடிவருவதைத் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நாடுகளிடையிலும், நாட்டுக்குள் ஒவ்வொரு பகுதிகளுக்கிடையிலும் தண்ணீர் பங்கீடு குறித்து எழுந்துவரும் மோதல்களைக் குறிப்பிட்டுப் பேசிய ஐ.நா.பொதுச் செயலர், இந்தப் பிரச்சனைகள் போர்களாக உருவாகும் ஆபத்தும் உள்ளது என்று எடுத்துரைத்தார்.
இவ்வாண்டு கடைபிடிக்கப்படும் உலக தண்ணீர் தினத்திற்கு, "தண்ணீரும் உணவு பாதுகாப்பும்" என்ற மையப்போருளை ஐ.நா. அமைப்பு குறித்துள்ளது.
இவ்வாண்டு ஜூன் மாதம் Rio+20 என்று ரியோ டி ஜெநீரோவில் நடைபெற உள்ள உலக முன்னேற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் அனைத்து நாடுகளும், தண்ணீர், உணவு, எரிசக்தி ஆகிய அனைத்து வசதிகளும் உலக மக்கள் அனைவருக்கும் நீதியான முறையில் கிடைக்க உழைக்க வேண்டும் என்ற அழைப்பையும் ஐ.நா.பொதுச் செயலர் விடுத்துள்ளார்.


7. மார்ச் 21, இனப் பாகுபாடுகளைக் களைவதற்கு உருவாக்கப்பட்ட உலக நாளையொட்டி ஐ.நா. பொதுச்செயலர் வெளியிட்ட செய்தி

மார்ச்,22,2012. உலகின் பல நாடுகளில் உருவாகியுள்ள  மோதல்களில் இனப் பாகுபாடுகள் ஒரு முக்கிய அம்சமாக இருப்பது ஆபத்தான ஒரு போக்கு என்றும், இந்தப் போக்கைத் தடுக்காவிடில், பெரும் கலவரங்களாக மாறி, பல மனித உயிர்கள் பலியாகும் என்று ஐ.நா.வின் உயர் அதிகாரிகள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
மார்ச் 21 இப்புதனன்று இனப் பாகுபாடுகளைக் களைவதற்கு உருவாக்கப்பட்ட உலக நாளையொட்டி செய்தி வெளியிட்ட ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன், இன வெறியும், இனப் பாகுபாடுகளும் மனித சமுதாயத்தில் வெறுப்பையும் அச்சத்தையும் வளர்க்கும் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுவது மனித குலத்திற்கு நல்லதல்ல என்று கூறினார்.
இன வெறி ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமைக்கு எதிரான ஒரு குற்றம் என்றும், இதனால் தனிப்பட்டவர்கள், குடும்பங்கள்சமுதாயங்கள் அனைத்தும் தாறுமாறாகக் கிழித்தெறியப் படுகின்றன என்ற கவலையை வெளியிட்டார் பான் கி மூன்.
2007ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டுக்குள் நிகழ்ந்த பல மோதல்களில் 55 விழுக்காடு, இன அடிப்படையில், சிறுபான்மையினருக்கு எதிரான கொடுமைகளை உலகில் நிகழ்த்தியுள்ளன என்று ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் நவி பிள்ளை கூறினார்.
தென் ஆப்ரிக்காவில் நிறவெறி கொள்கையை எதிர்த்து, Sharpeville எனுமிடத்தில் அமைதியான முறையில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் சுட்ட நிகழ்ச்சி 1960ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி நிகழ்ந்தது. இந்த நாளை, இனப் பாகுபாடுகளைக் களைவதற்கு உருவாக்கப்பட்ட உலக நாளாக ஐ.நா. அறிவித்துள்ளது.
 

No comments:

Post a Comment

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை

  வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்தையும், அப்போஸ்தலிக்க நூல...