Tuesday 27 March 2012

கத்தோலிக்க செய்திகள்: 23 மார்ச் 2012

1. உலக இளையோர் நாளைக் குறித்து ஆலோசனைகள் நடத்த, பொது நிலையினருக்கான திருப்பீட அவை ஏற்பாடு செய்துள்ள கூட்டம்

2. திருப்பீடக் கலாச்சாரக் கழகம் ஆப்ரிக்க நாட்டுத் தூதர்களுடன் சந்திப்பு

3. வேதனை நரகத்தில் தங்கி உழைத்து வரும் அருள்பணியாளர்களை விண்ணகத் தூதர்களாகப் பார்க்கத் தோன்றுகிறது - சிரியாவுக்கான திருப்பீடத் தூதர்

4. ஊடங்கள் வெளியிட்டு வரும் செய்திகளைப் பெரிதுபடுத்தாமல், பன்னாட்டு அமைப்புக்கள் லிபியாவுக்கு வருகை தர வேண்டும் - ஆயர் Martinelli

5. விருந்தினர்களுக்கு உயர்ந்த மரியாதை வழங்குவதே இந்திய மரபு - கட்டக் புபனேஸ்வர் பேராயர்

6. பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் உலகத் திருச்சபைகளின் அவை ஏற்பாடு செய்துள்ள மாநாடு

7. கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து பெற்ற பணத்தைப் பயன்படுத்தியதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை

------------------------------------------------------------------------------------------------------

1. உலக இளையோர் நாளைக் குறித்து ஆலோசனைகள் நடத்த, பொது நிலையினருக்கான திருப்பீட அவை ஏற்பாடு செய்துள்ள கூட்டம்

மார்ச்,23,2012. உலகின் பல நாடுகளில் மேய்ப்புப்பணியில் ஈடுபட்டுள்ள இளையோரை ஒன்று திரட்டி, வரும் ஆண்டு நடைபெற உள்ள உலக இளையோர் நாளைக் குறித்து ஆலோசனைகள் நடத்த பொது நிலையினருக்கான திருப்பீட அவை கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
மார்ச் 29ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை உரோம் நகருக்கருகே உள்ள Rocca di Papa எனுமிடத்தில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் 98 நாடுகளிலிருந்து இளம் பிரதிநிதிகளும், 2013ம் ஆண்டு ரியோவில் நடைபெற உள்ள உலக இளையோர் நாளை ஏற்பாடு செய்துவரும் குழுவினரும் கலந்துகொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிலையினருக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Stanislaw Rylko இக்கூட்டத்தைத் துவக்கி வைப்பார். 2011ம்  ஆண்டு மத்ரித் நகரில் நடைபெற்ற உலக இளையோர் நாளைக் குறித்த மறு ஆய்வும், 2013ம் ஆண்டில் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற உள்ள அடுத்த உலக இளையோர் நாளின் திட்டங்களும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி, குருத்து ஞாயிறன்று உலக இளையோர் நாள் கொண்டாடப்படும்போது, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நிகழ்த்தும் திருப்பலியில் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து இளையோரும் கலந்து கொள்வர்.


2. திருப்பீடக் கலாச்சாரக் கழகம் ஆப்ரிக்க நாட்டுத் தூதர்களுடன் சந்திப்பு

மார்ச்,23,2012. திருப்பீடத்திற்கென நியமிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாட்டுத் தூதர்களுடன் வருகிற திங்களன்று ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது திருப்பீடக் கலாச்சாரக் கழகம்.
பன்னாட்டுத் தூதர்களுடன் திருப்பீடக் கலாச்சாரக் கழகம் மேற்கொள்ளும் இரண்டாவது முயற்சி இது. சென்ற ஆண்டு இதே போன்றதொரு சந்திப்பு ஆசிய நாட்டுத் தூதர்களுடன் நடைபெற்றது.
திருப்பீடக் கலாச்சாரக் கழகத்தின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasiம், செயலர் ஆயர் Barthelemy Adoukonouம் இச்சந்திப்பில் உரையாற்றுவர் என்றும், புனித பிரான்சிஸ் சேவியர் துறவுச் சபையைச் சேர்ந்த அருள்தந்தை Theodore Mascarenhas இச்சந்திப்பின் கூட்டங்களை முன்னின்று நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பீடக் கலாச்சாரக் கழகத்திற்கும், பன்னாட்டுத் தூதரகங்களுக்கும் இடையே நல்லதொரு உறவு வளர்ந்துள்ளது என்றும், கலாச்சாரத்தின் அடிப்படையில் பல கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன என்றும் இக்கழகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை கூறுகிறது.
மார்ச் மாதம் 26ம் தேதி நடைபெற உள்ள இச்சந்திப்பில் ஆப்ரிக்காவைச் சேர்ந்த 23 நாடுகளின் தூதர்கள் கலந்து கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


3. வேதனை நரகத்தில் தங்கி உழைத்து வரும் அருள்பணியாளர்களை விண்ணகத் தூதர்களாகப் பார்க்கத் தோன்றுகிறது - சிரியாவுக்கான திருப்பீடத் தூதர்

மார்ச்,23,2012. சிரியாவில் நிலவும் மோதல்களைப் பற்றி ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கை உண்மை நிலையைத் தெளிவாகத் தருகிறது என்றும், இந்த அறிக்கையின் அடிப்படையில் சிரியாவில் வன்முறையை நீக்கும் வழிகளை அனைத்து நாடுகளும் இணைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
தமாஸ்கு நகரில் உள்ள புனித சிரில் ஆலயத்தில் இப்புதனன்று நடைபெற்ற ஒரு பல்சமய செப வழிபாட்டில் கலந்து கொண்ட கிறிஸ்தவ, இஸ்லாமியத் தலைவர்களிடம் பேசிய சிரியாவுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari, இவ்வாறு கூறினார்.
ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாய் இணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆறு அம்சங்கள் சிரியாவில் அமைதியைக் கொணரும் வழிகளைக் கூறுகின்றன என்று பேராயர் Zenari, Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
ஆயுதப் போராட்டத்தைக் கைவிடல், வன்முறைகளை நிறுத்துதல், மனிதாபிமான உதவிகளை வழங்குதல், காரணமின்றி கைது செய்யப்பட்டோரை விடுவித்தல், செய்தியாளர்கள் தடையின்றி நாட்டில் நடமாட அனுமதித்தல், அரசியல் ரீதியான உரையாடல்களை மேற்கொள்ளுதல் என்ற இந்த ஆறு பரிந்துரைகளை சிரியா செயல்படுத்த அனைத்து நாடுகளும் உதவி செய்ய வேண்டும் என்று பேராயர் Zenari வலியுறுத்திக் கூறினார்.
வன்முறைகளுக்குப் பயந்து நாட்டை விட்டு வெளியேறும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை கூடி வந்தாலும், இந்த வேதனை நரகத்தில் தங்கி உழைத்து வரும் அருள்பணியாளர்களை விண்ணகத் தூதர்களாகப் பார்க்கத் தோன்றுகிறது என்று பேராயர் தன் உரையில் சிறப்பாக நினைவு கூர்ந்தார்.


4. ஊடங்கள் வெளியிட்டு வரும் செய்திகளைப் பெரிதுபடுத்தாமல், பன்னாட்டு அமைப்புக்கள் லிபியாவுக்கு வருகை தர வேண்டும் - ஆயர் Martinelli

மார்ச்,23,2012. லிபியாவில் நிலவும் உண்மை நிலையைப் சரிவரப் புரிந்து கொள்ளாமல், ஊடகங்கள்  எதிர்மறையான செய்திகளையே வெளியிட்டு வருவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என்று Tripoliயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giovanni Innocenzo Martinelli, கூறினார்.
ஊடங்கள் வெளியிட்டு வரும் தவறான எண்ணங்களுக்கு நேர் மாறாக, லிபியா நாட்டு மக்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையுடன் இருக்கின்றனர் என்றும் அப்போஸ்தலிக்க நிர்வாகி எடுத்துரைத்தார்.
ஊடகங்களின் செய்திகளால் பல நாட்டைச் சார்ந்த பிறரன்பு அமைப்புக்கள் லிபியாவுக்கு வந்து உதவிகளை மேற்கொள்ள தயங்குகின்றனர் என்பதைக் குறிப்பிட்டுப் பேசிய ஆயர் Martinelli, இந்தச் செய்திகளைப் பெரிதுபடுத்தாமல், பன்னாட்டு அமைப்புக்கள் தங்கள் நாட்டுக்கு வருகை தர வேண்டும் என்று விண்ணப்பம் விடுத்தார்.
இன்னும் ஆங்காங்கே போராடிவரும் குழுக்களிடம் ஆயுதங்கள் இருப்பதால், அவ்வப்போது வன்முறைகள் வெடிக்கின்றன என்பதையும் எடுத்துரைத்த ஆயர் Martinelli, லிபிய அரசு போராட்டக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்பதையும் எடுத்துரைத்தார்.


5. விருந்தினர்களுக்கு உயர்ந்த மரியாதை வழங்குவதே இந்திய மரபு - கட்டக் புபனேஸ்வர் பேராயர்

மார்ச்,23,2012. விருந்தினர்களுக்கு உயர்ந்த மரியாதை வழங்குவதே இந்திய மரபு என்றும், இப்படிப்பட்ட கலாச்சாரத்திற்குப் புகழ்பெற்ற இந்தியாவில் இரு இத்தாலியர்கள் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என்றும் கட்டக் புபனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா கூறினார்.
மார்ச் 14ம் தேதியிலிருந்து ஓடிஸா மாநிலத்தில் மாவோயிஸ்ட் எனப்படும் போராட்டக் குழுவினரால் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் இரு இத்தாலியர்களை விடுவிக்கும் முயற்சியில் ஓடிஸா மாநில அரசு ஈடுபட்டுள்ளது.
பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் இருவரின் குடும்பங்கள் படும் வேதைனையில் நாங்களும் பங்கேற்கிறோம் என்று கூறிய பேராயர் பார்வா, ஓடிஸா மாநிலத்தில் நிகழும் போராட்டங்களில் எவ்வகையிலும் தொடர்பு இல்லாத இருவர் கைது செய்யப்பட்டிருப்பது முற்றிலும் தவறு, எனவே, அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் உடனே விடுவிக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
தலத் திருஅவையும், இன்னும் சில அரசுசாரா அமைப்புக்களும் மாவோயிஸ்ட் குழுவினருடன் சமரச முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று வெளியான செய்தியை மறுத்துப் பேசிய பேராயர் பார்வா, இந்தக் கடத்தலின் பின்னணியில் உள்ள முழு உண்மையை அறிந்து தீர்வு காண வேண்டியது அரசின் கடமை என்றும் எடுத்துரைத்தார்.


6. பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் உலகத் திருச்சபைகளின் அவை ஏற்பாடு செய்துள்ள மாநாடு

மார்ச்,23,2012. போட்டிகள், பிரிவுகள் பெருகியுள்ள உலகில் கிறிஸ்துவை மையமாக்கி எவ்வாறு ஒன்றிணைந்து உழைக்க முடியும் என்பதைத் தேடவே கிறிஸ்தவ சபைகள் கூடி வந்துள்ளன என்று மணிலாவின் பேராயர் Luis Antonio Tagle கூறினார்.  
இவ்வியாழனன்று பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் உலகத் திருச்சபைகளின் அவை ஏற்பாடு செய்துள்ள ஒரு மாநாட்டில் கலந்து கொண்ட 400க்கும் அதிகமான உறுப்பினர்களிடம் பேசிய மணிலா பேராயர் Tagle இவ்வாறு கூறினார்.
மார்ச் 27ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டின் முடிவில் நற்செய்தி பரப்புப் பணியில் உலகக் கிறிஸ்தவ சபைகள் எதிர்கொள்ளும் சவால்கள் தீர ஆய்வு செய்யப்படும் என்றும் எதிர்காலத்திற்குத் தேவையான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலகத் திருச்சபைகளின் அவை என்ற இந்த அமைப்பில் 349 கிறிஸ்தவ சபைகள் உறுப்பினர்களாக உள்ளன. உலகெங்கும் பரவியுள்ள 56 கோடி கிறிஸ்தவர்களின் ஒற்றுமைக்காக இந்த அமைப்பு உழைத்து வருகிறது என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


7. கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து பெற்ற பணத்தைப் பயன்படுத்தியதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை

மார்ச்,23,2012. கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு, அரசுசாரா அமைப்புக்கள் வெளிநாட்டிலிருந்து பெற்ற பணத்தைப் பயன்படுத்தின என்பதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை என்று இந்திய அரசின் அமைச்சர் ஒருவர் கூறினார்.
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டம், கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடந்து வரும் சூழலில், தூத்துக்குடி மறைமாவட்ட சமூகப்பணிக் குழுவின் வங்கிக் கணக்குகளையும், வேறு சில அரசுசாரா அமைப்புக்களின் வங்கிக் கணக்குகளையும் இந்திய அரசு முடக்கி வைத்துள்ளது.
இந்தச் சமுதாய நல அமைப்புக்கள், வெளிநாட்டிலிருந்து பெற்ற பணத்தை கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பயன்படுத்தினர் என்ற சந்தேகத்தின் பேரில் இந்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
இது குறித்து, பிரதமர் அலுவலகப் பணிகளின் மத்திய இணை அமைச்சராக இருக்கும் வி நாராயணசாமி, மேலவையில் இவ்வியாழனன்று பேசியபோது இவ்வாறு கூறினார்.
அரசுசாரா அமைப்புக்கள் என்று பொதுவில் குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர், இது குறித்த முழு விசாரணை முடியும் வரை இவ்வமைப்புக்களின் பெயர்களை வெளியிடப்போவதில்லை என்பதையும் கூறினார்.
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...