Friday, 24 January 2014

செய்திகள் - 24.01.14

செய்திகள் - 24.01.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ், ப்ரெஞ்ச் அரசுத்தலைவர் சந்திப்பு

2. திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவை நீதிபதிகள் முதலில் ஆன்மாக்களின் மேய்ப்புப்பணியாளர்கள்

3. திருத்தந்தை பிரான்சிஸ் : நாம் பிறரோடு மனக்கசப்புச் சுவர்களை அல்ல, உரையாடல் பாலங்களை எப்போதும் கட்டுவோம் 

4. திருத்தந்தை : ஒவ்வொரு நாளும் நமது திருமுழுக்கை வாழ அழைக்கப்பட்டுள்ளோம்

5. பிரேசில் நாட்டுச் சிறைகளின் நிலைமைகள் கவலையளிக்கின்றன, ரியோ டி ஜெனெய்ரோ பேராயர்

6. மத்திய கிழக்கிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேறிவருவது குறித்து திருப்பீடம் கவலை

7. பிப்ரவரி 5-12, கேரளாவில் இந்திய ஆயர்கள் பேரவையின் கூட்டம்

8. இலங்கையில் 12,000 சீனா மற்றும் இந்தியப் பணியாளர்கள்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ், ப்ரெஞ்ச் அரசுத்தலைவர் சந்திப்பு

சன.24,2014. ப்ரெஞ்ச் அரசுத்தலைவர் Francois Hollande அவர்களை இவ்வெள்ளி உள்ளூர் நேரம் காலை 10.30 மணிக்கு, திருப்பீடத்தில் சந்தித்து ஏறக்குறைய 35 நிமிடங்கள் கலந்துரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் பேராயர் பியத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கிடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் ப்ரெஞ்ச் அரசுத்தலைவர் Hollande.
பிரான்சுக்கும் திருப்பீடத்துக்கும் இடையே நிலவும் நல்லுறவு, பொதுநலனைக் காப்பதில் மதங்களின் பங்கு, மனித மாண்பைப் பாதுகாத்து ஊக்குவித்தல், குடும்ப நலன், வழிபாட்டுத்தலங்கள் பாதுகாக்கப்படல் போன்ற விவகாரங்கள் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என திருப்பீடப் பத்திரிகை அலுவலகம் கூறியது.
மேலும், அனைத்துலக அளவில் வறுமை ஒழிப்பு, குடியேற்றதாரர் நலன், மத்திய கிழக்குப் பகுதியிலும், சில ஆப்ரிக்க நாடுகளிலும் இடம்பெறும் சண்டை போன்ற விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டதாக அறிவித்த அப்பத்திரிகை அலுவலகம், சண்டைகள் இடம்பெறும் பகுதிகளில், ஒவ்வொரு மனிதரின் உரிமைகள் மதிக்கப்பட்டு, சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் பங்குகொள்ளும் உரையாடல் மூலம் அமைதியைக் காணுமாறு ப்ரெஞ்ச் அரசுத்தலைவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாகக் கூறியது.  
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திப்பதற்கு ப்ரெஞ்ச் அரசுத்தலைவருடன் சென்ற குழுவில், காமரூன் நாட்டில் கடத்தப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்ட ஓர் அருள்பணியாளரும் இருந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவை நீதிபதிகள் முதலில் ஆன்மாக்களின் மேய்ப்புப்பணியாளர்கள்

சன.24,2014. திருஅவை நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள், தாங்கள் ஆன்மாக்களின் மேய்ப்புப்பணியாளர்கள் என்பதை முதலில் நினைவில் இருத்துமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கத்தோலிக்கத் திருஅவையின் உச்ச நீதிமன்றமாகிய ரோமன் ரோத்தா, புதிய ஆண்டைத் தொடங்கியுள்ளதையொட்டி, அதன் உறுப்பினர்கள் மற்றும் அதன் மாணவர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், ஒவ்வொரு வழக்குக்குப் பின்னும் மக்கள் நீதிக்காகக் காத்திருக்கின்றனர் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்தினார்.
திருஅவையில் நீதித்துறையின் பணி, நீதியில் உண்மைக்கு ஆற்றும் பணி என்றும், விசுவாசிகளின் நலன் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய ஆழமான மேய்ப்புப்பணியை இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை.
மனிதமும், நீதியும், மேய்ப்புப்பணி ஆர்வமும் நிறைந்த பண்புகளைத் திருஅவையில் நீதிபதிகளாய் இருப்பவர்கள் கொண்டிருக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இந்த நீதிபதிகள் தங்களது தொழிலில் திறமையும் நுட்பமும் கொண்டிருந்தாலும் அவர்கள் முதலில், நல்ல ஆயராம் கிறிஸ்துவின் வழியில் பின்செல்ல வேண்டிய ஆன்மாக்களின் மேய்ப்பர்கள் என்பதையும் நினைவுபடுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் : நாம் பிறரோடு மனக்கசப்புச் சுவர்களை அல்ல, உரையாடல் பாலங்களை எப்போதும் கட்டுவோம் 

சன.24,2014. நாம் பிறரோடு எப்போதும், குறிப்பாக, காழ்ப்புணர்வு நம்மைப் பிறரிடமிருந்து பிரிக்கும்போது உரையாடலைக் கட்டியெழுப்புவது எளிதானது அல்ல என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆயினும், கிறிஸ்தவர்கள் தாழ்ச்சியோடும் பணிவோடும், செவிமடுத்தல் மற்றும் ஒப்புரவின் பாதையை எப்பொழுதும் தேடுகின்றனர், ஏனெனில் இதுவே இயேசு கற்பித்த பாதையாகும் என, இவ்வெள்ளி காலை வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை.
மன்னர் சவுலுக்கும் தாவீதுக்கும் இடையே நடந்த உரையாடல் பற்றிக் கூறும் இந்நாளின் முதல் வாசகத்தை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், உரையாடல் பாதை சமாதானத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.
குடும்பத்தில், குழுக்களில் பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்படலாம், ஆயினும் அச்சமயங்களில் சுவர்களை எழுப்பாமல், விரைவில் அமைதியைத் தேடுவது முக்கியமானது என்றும், குரல்களை உயர்த்திப் பேசாமல் சாந்தத்தோடும் உரையாடல் நடத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
பெர்லினை பல ஆண்டுகளாகப் பிரித்து வைத்திருந்த சுவரைப் போல இல்லாமல், நாம் பாலத்தைக் கட்ட வேண்டும், நம் இதயங்களும் நம்மைப் பிறரிடமிருந்து பிரிக்கும் பெர்லின் சுவர்போல் மாறக்கூடும் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், புனித பிரான்சிஸ் சலேசியாரின் விழாவாகிய இன்று, இனிமையின் வல்லுனராகிய அவரிடம் பிறரோடு சுவர்களை அல்ல, பாலங்களைக் கட்டுவதற்கு வரம் கேட்போம் என்றும் மறையுரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை : ஒவ்வொரு நாளும் நமது திருமுழுக்கை வாழ அழைக்கப்பட்டுள்ளோம்

சன.24,2014. புதிய படைப்புக்களாக, கிறிஸ்துவை அணிந்துகொண்டு, ஒவ்வொரு நாளும் நமது திருமுழுக்கை வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று இவ்வெள்ளியன்று Twitter செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் நிறைவு நாளாகிய இச்சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு, உரோம் புனித பவுல் பசிலிக்காவில் மாலைத் திருப்புகழ்மாலைச் செபிப்பார் திருத்தந்தை பிரான்சிஸ். 
இத்திருவழிபாட்டில், Bosse கிறிஸ்தவ ஒன்றிப்பு நிறுவனத்தின் மாணவர்கள் கலந்து கொள்வார்கள்.
ஆண்டுதோறும் சனவரி 18 முதல், பனித பவுல் மனந்திரும்பிய விழாவான சனவரி 25 வரை கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் சிறப்பிக்கப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி


5. பிரேசில் நாட்டுச் சிறைகளின் நிலைமைகள் கவலையளிக்கின்றன, ரியோ டி ஜெனெய்ரோ பேராயர்

சன.24,2014. பிரேசில் நாட்டுச் சிறைகள் பேரச்சம் ஏற்படுத்தக்கூடிய நெருக்கடி நிலைகளை எதிர்நோக்கி வருவதாக, புதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருக்கும் அந்நாட்டின் ரியோ டி ஜெனெய்ரோ பேராயர் Orani João Tempesta கவலை தெரிவித்தார்.
அண்மையில் பிரேசில் அரசுத்தலைவர் Dilma Rousseff அவர்களைச் சந்தித்துப் பேசிய பேராயர் Tempesta, பிரேசில் நாட்டுச் சிறைகளிலுள்ள கைதிகளுக்கு மறுசீரமைப்புக் கல்வி வழங்கப்படுவதில்லை என்றும், அந்நாட்டின் சிறைகள் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார்.
பிரேசிலின் Maranhao மாநிலச் சிறைகளில் கடந்த ஆண்டில் இடம்பெற்ற வன்முறையில் 62 பேர் இறந்தனர். இவ்வாண்டும் இதே மாநிலத்தின் Pedrinhas சிறையில் ஏற்கனவே 3 பேர் இறந்துள்ளனர். இந்நாட்டில் அதிகமாக வன்முறைகள் இடம்பெறும் சிறைகளில் Pedrinhas மையம் முக்கியமானது என்று ஊடகங்கள் கூறுகின்றன.
அண்மையில் வெளியான ஓர் அதிகாரப்பூர்வ ஆய்வறிக்கையின்படி, பிரேசில் நாட்டுச் சிறைகளில் 3,06,497 கைதிகளே இருக்க முடியும். ஆனால் 2011ம் ஆண்டின் இறுதியில் 5,14,582 கைதிகள் இருந்தனர் எனத் தெரியவந்துள்ளது.

ஆதாரம் : Fides                         

6. மத்திய கிழக்கிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேறிவருவது குறித்து திருப்பீடம் கவலை

சன.24,2014. ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக, தங்களின் தாயகமாகக் கொண்டிருந்த மத்திய கிழக்கு நாடுகளைவிட்டு கிறிஸ்தவர்கள் வெளியேறிவருவது திருப்பீடத்துக்கு மிகுந்த கவலை தருகின்றது என, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் கூறினார்.
பாலஸ்தீனியப் பிரச்சனை உட்பட மத்திய கிழக்கில் மக்களின் நிலை என்ற தலைப்பில் ஐ.நா. பாதுகாப்பு அவையில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிகாட் இவ்வாறு கூறினார்.
மத்திய கிழக்குப் பகுதியில் அடிப்படைவாத மற்றும் தீவிரவாதச் சக்திகள் அடிக்கடி கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்குகின்றன என்றுரைத்த பேராயர் சுள்ளிகாட், அப்பகுதியில் புதியதொரு புரிந்துகொள்ளுதலையும், ஒருவர் ஒருவர் மீதான நம்பிக்கையையும் ஏற்படுத்த அனைத்து மதத்தினரும் எடுக்கும் முயற்சிகளுக்குத் திருப்பீடம் ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. பிப்ரவரி 5-12, கேரளாவில் இந்திய ஆயர்கள் பேரவையின் கூட்டம்

சன.24,2014. ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்திய ஆயர்கள் பேரவையின் கூட்டம் வருகிற பிப்ரவரி 5 முதல் 12 வரை கேரளாவின் பாளை நகரில் இடம்பெறவுள்ளது.
ஏறக்குறைய 235 ஆயர்கள் கலந்துகொள்ளவிருக்கும் இக்கூட்டத்தில், நாட்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்களில் திருஅவையின் அரசியல் நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, பாளை ஆயர் Joseph Kallarangatt தெரிவித்துள்ளார்.
இது தவிர, மேற்குத்தொடர்ச்சி மலை குறித்த கஸ்தூரிரங்கன் அறிக்கை மற்றும் பிற சமூக, அரசியல் விவகாரங்கள் இக்கூட்டத்தில் கலந்துபேசப்படும் எனவும் ஆயர் Kallarangatt கூறினார்.
மேலும், இந்தியாவில் 2013ம் ஆண்டில் நான்காயிரத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் நடத்தப்பட்டதாக, கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஓர் அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : Deccanchronicle

8. இலங்கையில் 12,000 சீனா மற்றும் இந்தியப் பணியாளர்கள்

சன.24,2014. இலங்கையில் ஏறத்தாழ 12,000 சீன மற்றும் இந்தியப் பணியாளர்கள் தொழில் செய்யும் அனுமதியைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு 6,600 சீனர்களும், 6,297 இந்தியர்களும் இலங்கையில் பணியாற்றினர். இந்தப் பணியாளர்கள், தொழில்நுட்ப மற்றும் ஏனையத் துறைகளில் ஒத்துழைப்பை வழங்கி வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
முதலீடுகள் அதிகரிக்கும்போது அந்தந்த நாடுகளின் பணியாளர்களும் இலங்கையில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படுகிறது எனவும், அதன் அடிப்படையிலேயே பெருமளவான சீன மற்றும் இந்தியப் பணியாளர்கள் இலங்கையில் இருப்பதாகவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில், இந்திய அரசினால் 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 32 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன என்றும் அமைச்சர் டி சில்வா தெரிவித்தார்.

ஆதாரம் : தமிழ்வின்

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...