செய்திகள் - 02.01.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செயின்ட் மேரி மேஜர் பசிலிக்காவில் செபம்
2. திருத்தந்தை பிரான்சிஸ் : வலுவற்ற ஒரு குழந்தையின் வழியாக இறைவன் தன்னை வெளிப்படுத்துகிறார்
3. சனவரி 3 காலையில் உரோம் Gesu ஆலயத்தில் திருத்தந்தை திருப்பலி
4. உலகில் பட்டினியை முற்றிலும் அகற்ற திருத்தந்தை விடுத்துள்ள அழைப்பை நடைமுறைப்படுத்துவோம், அயர்லாந்து கர்தினால்
5. சிரியாவில் கிறிஸ்துவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே வளர்ந்துவரும் பிணைப்பு நம்பிக்கை அளிக்கிறது, அலெப்போ பேராயர்
6. சிறையிலுள்ள ஆசியா பீபி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குக் கடிதம்
7. வத்திக்கான் நாளிதழில் "பெண்கள், திருஅவை, உலகம்" என்ற ஒரு புதிய பகுதி
8. தமிழகத்தில் புத்தாண்டு நாளன்று ரூ.250 கோடி மதுவிற்பனை
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செயின்ட் மேரி மேஜர் பசிலிக்காவில் செபம்
சன.02,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புத்தாண்டு நாள் பிற்பகலில் உரோம் நகரில் உள்ள செயின்ட் மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயம் சென்று, அன்னையின் திரு உருவத்திற்கு முன் 20 நிமிடங்களுக்கு மேல் செபத்தில் ஈடுபட்டார்.
சனவரி 1, புத்தாண்டு நாளன்று, கொண்டாடப்பட்ட அன்னை மரியா இறைவனின் தாய் என்ற பெருவிழாவையொட்டி, உரோம் நகரில் புகழ்பெற்ற திருத்தலமான அன்னை மரியாவின் பசிலிக்காவிற்கு திருத்தந்தை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சென்றபோது, அப்பேராலயத்தில் கூடியிருந்த பலர் வியப்படைந்தனர்.
கடந்த மார்ச் 13ம் தேதி திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அடுத்தநாள் அன்னையின் பசிலிக்காவிற்குச் சென்று வேண்டியதும், அதற்குப்பின் வேறு பல தருணங்களில் அங்கு சென்று செபித்ததும் குறிப்பிடத்தக்கது.
"உரோம் நகர் மக்களுக்கு நலமாக" விளங்கும் அன்னை மரியாவைப் பற்றி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 1ம் தேதியன்று நிகழ்த்திய திருப்பலியில் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசியதைத் தொடர்ந்து, தனிப்பட்ட முறையில் அன்னையைச் சென்று தரிசித்து வந்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் : வலுவற்ற ஒரு குழந்தையின் வழியாக இறைவன் தன்னை வெளிப்படுத்துகிறார்
சன.02,2014. 2013ம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டு வந்த Twitter செய்திகளின் ஒரு தொடர்ச்சியாக, சனவரி 2, இவ்வியாழனன்று - வலிமை, சக்தி ஆகியவற்றில் இறைவன் தன்னையே வெளிப்படுத்துவதில்லை; மாறாக, சக்தியற்ற, வலுவற்ற ஒரு குழந்தையின் வழியாக இறைவன் தன்னை வெளிப்படுத்துகிறார் – என்ற செய்தியை இவ்வாண்டின் முதல் Twitter செய்தியாக வெளியிட்டுள்ளார்.
மேலும், புத்தாண்டு நாளன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இத்தாலிய
அரசுத் தலைவர் நப்போலித்தானோ அவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு
வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டனர் என்று இத்தாலிய அரசுத்தலைவர் அலுவலகம்
அறிவித்துள்ளது.
சனவரி 1, இப்புதனன்று திருத்தந்தை வழங்கிய நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த வாழ்த்துப் பகிர்வைக் குறிப்பிட்டு, இத்தாலிய அரசுத் தலைவருக்கு தன் புத்தாண்டு வாழ்த்துக்களை மக்கள் முன் அறிவித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. சனவரி 3 காலையில் உரோம் Gesu ஆலயத்தில் திருத்தந்தை திருப்பலி
சன.02,2014. சனவரி 3, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற Gesu ஆலயத்தில் இயேசு சபை சகோதரர்களுடனும் உடன் உழைப்பவர்களுடனும் இணைந்து கூட்டுத் திருப்பலியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வெள்ளியன்று கொண்டாடப்படும் புனிதம் மிகுந்த இயேசுவின் பெயர் என்ற திருவிழாவன்று, திருத்தந்தை ஆற்றும் இத்திருப்பலி, முத்திப்பேறுபெற்ற Peter Faber அவர்கள் அண்மையில் புனிதராக உயர்த்தப்பட்டதற்கு நன்றித் திருப்பலியாகவும் கொண்டாடப்படுகிறது.
சனவரி 3, இவ்வெள்ளி
காலை 9 மணிக்குத் துவங்கும் இத்திருப்பலியை வத்திக்கான் தொலைக்காட்சி
நிலையம் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இந்திய நேரம் பிற்பகல் 1.20 முதல்
ஆரம்பமாகும் இந்த நேரடி ஒளிபரப்பு, ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடிக்கும்.
இதற்கிடையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித
மார்த்தா இல்லத்தில் ஆற்றும் திருப்பலியில் இந்தச் சனவரி மாதத்திலிருந்து
உரோம் நகரைச் சார்ந்த பங்கு மக்கள் கலந்து கொள்வதற்கு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள் பணியாளர் Federico Lombardi அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருத்தந்தையின் சார்பில் உரோமைய ஆயராகப் பணியாற்றும் கர்தினால் Agostino Vallini அவர்கள் இந்த ஏற்பாடுகள் குறித்து உரோம் நகரில் உள்ள பங்குகளுக்கு அறிவிப்புக்கள் அனுப்பியுள்ளார்.
ஆதாரம் : Jesuit Info / VIS
4. உலகில் பட்டினியை முற்றிலும் அகற்ற திருத்தந்தை விடுத்துள்ள அழைப்பை நடைமுறைப்படுத்துவோம், அயர்லாந்து கர்தினால்
சன.02,2014. உலகிலிருந்து பட்டினியை முற்றிலும் அகற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள அழைப்பை முழுமனதோடு ஏற்று, இந்த இலக்கை 2025ம் ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்துவோம் என்று அயர்லாந்து கர்தினால் கூறியுள்ளார்.
2014ம் ஆண்டு துவக்கத்தில் புத்தாண்டு செய்தியை வெளியிட்டுள்ள அயர்லாந்து நாட்டின் தலைமை ஆயர், கர்தினால் Sean Brady அவர்கள், உலகிலிருந்து பட்டினியை அகற்றுவதில் மக்கள் தலைவர்கள் ஆர்வமாக ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
"ஒரே மனித குடும்பம், அனைவருக்கும்
உணவு" என்ற விருதுவாக்குடன் திருத்தந்தை அவர்கள் ஆரம்பித்துள்ள ஒரு
முயற்சி 2025ம் ஆண்டுக்குள் முழுமையடைய அனைவரும் இணைந்து உழைக்கவேண்டும்
என்று கர்தினால் Brady அவர்கள் கூறியுள்ளார்.
கிறிஸ்து பிறப்பு நாள் ஒரு சிறப்பு மிக்க வரலாற்று நிகழ்வு என்று குறிப்பிடும் கர்தினால் Brady அவர்கள், இந்தப் பிறப்பு, ஒரு விழாவாக முடிந்துபோகாமல், பசித்தோருக்கு உணவு படைக்கும் ஒரு தொடர் நிகழ்வாக மாறவேண்டும் என்று தன் செய்தியில் விண்ணப்பித்துள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. சிரியாவில் கிறிஸ்துவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே வளர்ந்துவரும் பிணைப்பு நம்பிக்கை அளிக்கிறது, அலெப்போ பேராயர்
சன.02,2014. போர், பசி, குளிர் என்ற பல காரணிகளால் மக்கள் மனம் தளர்ந்து போனாலும், கிறிஸ்துவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே வளர்ந்துவரும் பிணைப்பு நம்பிக்கை அளிக்கிறது என்று இயேசு சபையைச் சார்ந்த, கல்தேய வழிபாட்டு முறை அலெப்போ பேராயர் Antoine Audo அவர்கள் கூறினார்.
கிறிஸ்மஸ்
வாரம் முழுவதும் தொடர்ந்து விழுந்த குண்டுகளின் தாக்குதல்களில் 500க்கும்
அதிகமான உறவினர்களை இழந்து தவிக்கும் கிறிஸ்தவர்கள், தங்கள் நம்பிக்கையை இழக்காமல் இருப்பது ஆறுதலான அடையாளம் என்று பேராயர் Audo அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.
முடிவே தெரியாமல் நீண்டு வரும் சிரியாவின் உள்நாட்டுப் போரினால் மக்கள் மனம் தளர்ந்துள்ள போதிலும், பல இஸ்லாமிய குடும்பங்கள் கிறிஸ்தவர்களுக்கு உதவிகள் செய்ய முன்வருவது நம்பிக்கை அளிக்கிறது என்று பேராயர் Audo அவர்கள் எடுத்துரைத்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவரும் இந்தப் போர் காலத்தில், மதப் பாகுபாடுகள் ஏதுமின்றி, கிறிஸ்தவர்கள் ஆற்றிவரும் பணிகளைக் காணும் இஸ்லாமியர்களில் பலர், தன்னிடம் நேரடியாக வந்து நன்றி சொல்வதையும் காணமுடிகிறது என்று கல்தேய வழிபாட்டுமுறை பேராயர் Audo அவர்கள் சுட்டிக்காட்டினார்.
ஆதாரம் : AsiaNews
6. சிறையிலுள்ள ஆசியா பீபி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குக் கடிதம்
சன.02,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே, பல சிறைக் கைதிகளைப் போல நானும் பாகிஸ்தான் முல்தான் சிறையில் கிறிஸ்மஸ் கொண்டாடினேன் என்று ஆசியா பீபி என்ற பெண் கூறியுள்ளார்.
தேவ நிந்தனை குற்றம் என்ற பழி சுமத்தப்பட்டு, பாகிஸ்தான் சிறையில் துன்புறும் ஆசியா பீபி என்ற பெண், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அனுப்பியுள்ள மடலில் இவ்வாறு கூறியுள்ளார் என்று இத்தாலிய நாளிதழ் Tempi கூறியுள்ளது.
புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருத்தந்தை ஆற்றும் கிறிஸ்மஸ் திருப்பலியைக் காண தான் கொண்டிருக்கும் ஆர்வம், அடுத்த ஆண்டிலாவது நிறைவேறும் என்ற நம்பிக்கையை, ஆசியா பீபி அவர்கள் தன் மடலில் வெளியிட்டுள்ளார்.
தனக்காக திருத்தந்தை அவர்கள் செபித்து வருகிறார் என்பதை தான் அறிந்துள்ளதாகவும், இறைவன் தன்னை எப்படியும் விடுவிப்பார் என்றும் ஆசியா பீபி அவர்கள் இம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.
2009ம்
ஆண்டு ஜூன் மாதம் ஆசியா பீபி மீது சுமத்தப்பட்ட தேவ நிந்தனை குற்றம்
இதுவரை தெளிவாக நிரூபணம் ஆகாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : Zenit
7. வத்திக்கான் நாளிதழில் "பெண்கள், திருஅவை, உலகம்" என்ற ஒரு புதிய பகுதி
சன.02,2014. "பெண்கள், திருஅவை, உலகம்" என்ற ஒரு புதிய பகுதியை வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano, சனவரி 2, இவ்வெள்ளி முதல் துவக்கியுள்ளது.
பெண்களைக் குறித்த இறையியலை நாம் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதைத் தொடர்ந்து, வத்திக்கான் நாளிதழ் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது என்று Zenit செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இறையியலில் புலமை பெற்ற பெண்களும், ஆண்களும் எழுதும் கட்டுரைகள் இப்பகுதியில் இடம்பெறும் என்றும், இதன் முதல் கட்டுரை, பேரருள்பணியாளர் Pierangelo Sequeri அவர்களால் எழுதப்பட்டுள்ளது என்றும் L'Osservatore Romano இதழின் இணை ஆசிரியர் அருள் பணியாளர் Lucetta Scaraffia அவர்கள் கூறினார்.
2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கவிருக்கும் ஆயர்கள் சிறப்பு மாமன்றம் குடும்பங்களை மையப்படுத்தி அமைந்துள்ளதையொட்டி, திருஅவையில் பெண்களின் பங்கு குறித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள இப்பகுதி துவக்கப்படுகிறது என்று அருள்பணியாளர் Scaraffia அவர்கள் தெரிவித்தார்.
ஆதாரம் : Zenit
8. தமிழகத்தில் புத்தாண்டு நாளன்று ரூ.250 கோடி மதுவிற்பனை
சன.02,2014. தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் மூலம் ரூ.250 கோடி அளவுக்கு டாஸ்மாக் மதுவிற்பனை நடந்துள்ளது.
இந்த
புத்தாண்டுக்கு முதல் நாளான செவ்வாய்க்கிழமை (டிச.31) மட்டும் தமிழகம்
முழுவதும் ரூ.135 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இதுபோல், புத்தாண்டு தினமான புதன்கிழமை மாலை நிலவரப்படி மது விற்பனை ரூ.120 கோடியைத் தொட்டது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வழக்கமான நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.75 கோடிக்கும், வார இறுதி நாள்களில் ரூ.90 கோடி அளவுக்கும் மது விற்பனை ஆகிறது என்றும் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
புத்தாண்டுக்கென மதுவிற்பனைக்கு இலக்கு எதுவும் நிர்ணயிக்கவில்லையெனினும், எதிர்பார்த்தபடி இந்த ஆண்டு ரூ.250 கோடி அளவுக்கு விற்பனை ஆகியுள்ளது என்றும், கடந்த
புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களின்போது ரூ.200 கோடியும் பொங்கல்
பண்டிகையின்போது ரூ.300 கோடியும் தீபாவளியின்போது ரூ.300 கோடிக்கு
அதிகமாகவும் விற்பனை ஆனது என்றும் டாஸ்மாக் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பண்டிக்கைக்கால கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மது அருந்தும் பழக்கம் அதிகரித்து வருவது கவலை தரும் செயலாகும் என்றும், எப்போதாவது ஒரு முறை மது அருந்துவோர் கூட, பண்டிகைக் காலங்களில் நண்பர்களுடன் மதுஅருந்துவதாலேயே மது விற்பனை அதிகரிக்கிறது என்றும் 'தி இந்து' நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment