Monday, 29 April 2013

Catholic News in Tamil - 29/04/13

1. திருத்தந்தை - நம்மை அடித்துத் துவைக்கக் காத்திருக்கும் துப்புரவுத் தொழிலாளி அல்ல இயேசு

2. திருத்தந்தை :  தூய ஆவி, நம்மையும், நம் வழியாக இவ்வுலகையும் புதுப்பிக்க விரும்புகிறார்

3. பங்களாதேசில் தொழில்கூடம் இடிபாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருத்தந்தையின் செபம்

4. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்று  நூலின் ஆசிய பதிப்பு வெளியீடு

5. மன்னார் ஆயருடன் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

6. தாயின் கருவறையிலேயே இறந்த குழந்தைகளுக்கு சிறப்புச் செபம்

7. Kazakhstan நாட்டில் ம‌த‌ச்சிறுபான்மை ச‌மூக‌ங்க‌ளுக்கு எதிரான‌ சித்ர‌வ‌தைக‌ள் அதிக‌ரிப்பு

8. 976 குழந்தை திருமணங்கள் நிறுத்தம். இன்னும் விழிப்புணர்வு தேவை

9. புது வகை மலேரியா ஒட்டுண்ணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை - நம்மை அடித்துத் துவைக்கக் காத்திருக்கும் துப்புரவுத் தொழிலாளி அல்ல இயேசு

ஏப்.29,2013.  ஒப்புரவு அருள்சாதனம் பெறும் இடம், நம் பாவங்கள் தானாகவே சுத்தம் செய்யப்படும் ஓர் உலர் சலவையகம் அல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இத்திங்கள் காலை புனித மார்த்தா இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில், திருப்பீட மேலாளர்கள் பணியில் ஈடுபட்டிருப்பவருக்குத் திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மன்னிப்பதற்குக் காத்திருக்கும் இறைவனை மையப்படுத்தி தன் மறையுரையை வழங்கினார்.
புனித யோவான் எழுதிய முதல் திருமுகத்தில் காணப்படும் "கடவுள் ஒளியாய் இருக்கிறார்; அவரிடம் இருள் என்பதே இல்லை" என்ற வார்த்தைகளை மையமாகக் கொண்டு மறையுரை வழங்கியத் திருத்தந்தை, நம் அனைவரின் வாழ்விலும் இருள் உள்ளது எனினும், நாமும் ஒளியில் வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்று எடுத்துரைத்தார்.
நம்மில் இருக்கும் இருளையும், நாம் ஒளிக்குச் செல்லவேண்டும் என்ற தேவையையும் உணராமல் வாழ்வோர் சந்திக்கும் ஆபத்துகளையும் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒப்புரவு அருட்சாதனத்தில் நம்மை அடித்துத் துவைக்கக் காத்திருக்கும் துப்புரவுத் தொழிலாளி அல்ல, இயேசு என்பதைக் கூறியத் திருத்தந்தை, இவ்வருட் சாதனத்தின் வழியாக நம்மை எப்போதும் மன்னிக்கக் காத்திருக்கும் இயேசுவை நாம் திரும்பத் திரும்ப அணுகிச் செல்ல தயங்கக்கூடாது என்பதையும் தன் மறையுரையில் வலியுறுத்தினார்.
இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட Twitter செய்தியில், "இன்று நான் பிறருக்கு ஓர் உதவி செய்துள்ளேன் என்று ஒவ்வொரு நாள் முடிவிலும் நாம் ஒவ்வொருவரும் சொல்ல முடிந்தால், எவ்வளவு அற்புதமாக இருக்கும்!" என்று கூறியுள்ளார். ஆங்கிலம், இத்தாலியம், பிரெஞ்ச், ஸ்பானியம், அரேபியம் உட்பட 9 மொழிகளில் @Pontifex எனப்படும் Twitter பக்கத்தில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

SeDoc                   Pope: Being ashamed of our sins helps prepare us for God’s forgiveness
SeDoc                   Pope’s Twitter message


2. திருத்தந்தை :  தூய ஆவி, நம்மையும், நம் வழியாக இவ்வுலகையும் புதுப்பிக்க விரும்புகிறார்

ஏப்.29,2013.  உலகம் தரும் புதியவை, வந்து போகும், ஆனால் தூய ஆவி கொணர்வதோ என்றும் நிலைத்திருக்கக்கூடியது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தியா, இலங்கை, லெபனன், பெலாருஸ், டோங்கா, கோங்கோ, சீனா, பிலீப்பீன்ஸ் என பல நாடுகளிலிருந்து வந்திருந்த 44 இளையோருக்கு, புனித பேதுரு வளாகத்தில் உறுதிப்பூசுதல் என்ற திருவருட்சாதனத்தை வழங்கிய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, தூய ஆவி நம்மை புதுப்பிப்பதுடன் நம் வழியாக இவ்வுலகையும் புதுப்பிக்க விரும்புகிறார் என்றார்.
நம் இதயக் கதவுகளை இறைவனுக்குத் திறந்து, அவரால் நாம் வழிநடத்தப்பட அனுமதிப்போம் என்று கூறியத் திருத்தந்தை, கடவுள் நமக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கி நம்மை புதுப்படைப்புகளாக மாற்றுவார் என்றார்.
ஒவ்வொரு நாள் மாலையும் நாம் சிறிதுநேரம் அமர்ந்து, இன்று நான் என் நண்பர்களுக்கு, என் பெற்றோருக்கு, ஏதாவது ஒரு முதியவருக்கு, என்ன பிறரன்புச் செயலை ஆற்றினேன் என சிந்திப்பது எத்தனை சிறப்பாக இருக்கும் எனவும் அவ்வாளகத்தில் கூடியிருந்த ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட திருப்பயணிகளிடம் கூறினார் திருத்தந்தை.
நீரோட்டத்தை எதிர்த்து நீந்துவதற்கான பலத்தை இறைவன் நமக்கு வழங்குகிறார், ஆகவே எதைக்குறித்தும் அச்சம் கொள்ளவேண்டாம் எனவும் கூறிய திருத்தந்தை, சிறிய விடயங்களுக்காக கிறிஸ்தவர்கள் தேர்வுச்செய்யப்படவில்லை, ஆகவே பெரிய கொள்கைகளைக் கட்டியெழுப்பி அதற்காகவே வாழக்கற்றுக்கொள்ளுங்கள் எனவும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. பங்களாதேசில் தொழில்கூடம் இடிபாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருத்தந்தையின் செபம்

ஏப்.29,2013. பங்களாதேசில் தொழில்கூடம் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்ப அங்கத்தினர்களுக்கு தன் அனுதாபத்தை வெளியிடுவதோடு, அவர்களுடன் ஒருமைப்பாட்டை தெரிவிப்பதாகவும் அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறன்று காலை உரோம் நகர் தூய பேதுரு வளாகத்தில் நிறைவேற்றிய உறுதிப்பூசுதல் திருப்பலிக்குப்பின், அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை, பங்களாதேசில் தொழிற்சாலை கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக சிறப்பான விதத்தில் செபிப்பதாகவும் உறுதிகூறினார்.
தொழிலாளர்களின் பாதுகாப்பும் மாண்பும் எச்சூழலிலும் மதிக்கப்படவேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவுக்கு மேற்கே சாவர் எனுமிடத்தில் ரானா பிளாசா என்ற எட்டுமாடிக் கட்டிடம்  இம்மாதம் 24ம் தேதி இடிந்து விழுந்ததில் குறைந்தபட்சம் 380 பேர் உயிரிழந்துள்ளனர், ஆயிரம்பேர் வரை காணாமல்போயுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்று  நூலின் ஆசிய பதிப்பு வெளியீடு

ஏப்.29,2013.  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய நூலின் ஆசிய பதிப்பை பெங்களூருவில் வெளியிட்டார் மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ்.
Asian Trading Corporation பதிப்பகத்தாரால் 'பிரான்சிஸ், புதிய உலகின் திருத்தந்தை' என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம், அந்திரேயா தொரினெல்லி என்பவரால் எழுதப்பட்டதாகும்.
பெங்களூருவின் இரட்சகர் துறவு சபை பயிற்சி இல்லத்தின் வளாகத்திலுள்ள தூய ஆவி கோவிலின் வைர விழாவின் போது இப்புத்தகம் வெளியிடப்பட்ட வைபவத்தில் இந்தியாவின் திருஅவைத் தலைவர்களுடன் நாட்டின் நான்கு கர்தினால்களும் பெங்களூரு பேராயரும் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : CBCI

5. மன்னார் ஆயருடன் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

ஏப்.29,2013.  மகிந்த ராஜபக்ச அரசால் நாட்டில் தமிழர் பிரச்சனை உட்பட எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வைக் காணமுடியாது என, மன்னாருக்கு இஞ்ஞாயிறன்று சென்று ஆயர் இராயப்பு ஜோசப்பைச் சந்தித்த இலங்கை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று, அங்கு மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், மன்னார் மறை மாவட்ட குருகுல முதல்வர் ஆன்டனி விக்டர், காணாமல்போன உறவுகளைத் தேடும் குடும்பங்களின் அமைப்பின் பிரதிநிதிகள்  ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியபின், உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அதிபர் மகிந்த ராஜபக்ச அரசின் காலத்தில்தான் அதிகமான தமிழ் மக்கள் காணாமல் போயுள்ளனர், ஆனால், அரசோ காணாமல் போனவர்கள் என்று எவரும் இல்லை எனப் பொய்களைக் கூறி நாட்டையும், உலகையும் ஏமாற்ற முனைகிறது எனக் குற்றஞ்சாட்டினார்.
ஆயருடன் இடம்பெற்ற சந்திப்பில் பலதரப்பட்ட விடயங்கள் ஆராயப்பட்ட நிலையில், மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் காணாமல்போன சுமார் 472 பேருடைய விவரங்களைக் காணாமல்போன உறவுகளைத் தேடும் குடும்பங்களின் அமைப்பு, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தது.

ஆதாரம் : TamilWin

6. தாயின் கருவறையிலேயே இறந்த குழந்தைகளுக்கு சிறப்புச் செபம்

ஏப்.29,2013. தாய்மார்களுக்கும், மண்ணில் பிறக்காமல் தாயின் கருவறையிலேயே இறந்த குழந்தைகளுக்கும் செபிப்பதற்கென தேசிய அளவிலான மாலை செபவழிபாட்டை, இச்சனிக்கிழமை நடத்த உள்ளது அயர்லாந்து திருஅவை.
அயர்லாந்தின் புகழ்பெற்ற Knock ம‌ரிய‌ன்னை திருத்த‌ல‌த்தில் இட‌ம்பெற‌வுள்ள‌ இத்திருவழிபாட்டு செப‌த்திற்கு அந்நாட்டு ஆய‌ர் பேர‌வை ஏற்பாடுச் செய்துள்ள‌து.
பிற்ப‌க‌ல் ஒரு ம‌ணிக்கு செப‌மாலை ஊர்வ‌ல‌த்துட‌ன் துவ‌ங்கும் இவ்வ‌ழிபாடு, மாலை மூன்று ம‌ணிக்குத் துவ‌ங்கும் திருப்ப‌லியுட‌ன் நிறைவுபெறும்.
Armagh பேராயர் கர்தினால் Seán Brady  த‌லைமையில் இட‌ம்பெறும் இத்திருப்ப‌லியில், க‌ருவுற்றிருக்கும் தாய்மார்க‌ளுக்கு சிற‌ப்பு ஆசீர் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் என‌வும் அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. Kazakhstan நாட்டில் ம‌த‌ச்சிறுபான்மை ச‌மூக‌ங்க‌ளுக்கு எதிரான‌ சித்ர‌வ‌தைக‌ள் அதிக‌ரிப்பு

ஏப்.29,2013.  Kazakhstan நாட்டில் ம‌த‌ச்சிறுபான்மை ச‌மூக‌ங்க‌ளுக்கு எதிரான‌ சித்ர‌வ‌தைக‌ள் அதிக‌ரிப்ப‌தாக‌வும், ம‌த‌ச் சுத‌ந்திர‌ம் என்ப‌து அங்கு இல்லை என‌வும் குறை கூறியுள்ள‌ன‌ர் ம‌னித‌ உரிமை ஆர்வலர்க‌ள்.
ம‌த‌ப் புத்த‌க‌ங்க‌ளைக் கொண்டிருப்ப‌த‌ற்கு க‌ட்டுப்பாடுக‌ள் அதிக‌ரித்துள்ள‌தாக‌வும், ம‌த‌ம் குறித்த‌ விட‌ய‌ங்க‌ளைப் பொதுவில் விவாதிப்ப‌த‌ற்குத் த‌டைக‌ள் இட‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌வும் தெரிவித்த‌ன‌ர் அவ‌ர்க‌ள்.
ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ங்க‌ளின் நூல‌க‌ங்க‌ளில் வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ புத்த‌க‌ங்க‌ள் குறித்து அர‌சின் ஆய்வுக‌ள் துவ‌க்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌வும், ம‌னித‌ உரிமை ம‌ற்றும் ம‌த‌ ந‌ட‌வ‌டிக்கையாள‌ர்க‌ள் தெரிவித்துள்ள‌ன‌ர்.
இஸ்லாமிய குழுக்கள், பாப்டிஸ்ட் கிறிஸ்தவ சபை மற்றும் Jehovahவின் சாட்சிகள் ஆகிய குழுக்கள் மீது இவ்வாண்டு துவக்கத்திலிருந்தே அரசின் சித்ரவதைகள் அதிக அளவில் இடம்பெற்றுவருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதத்தைப் போதிக்க அனுமதிக்கப்படுவதில்லை எனவும், பேச்சு சுதந்திரம் என்பது மதத்தை போதிக்கும் சுதந்திரத்தை உள்ளடக்கவில்லை எனவும், உரிமை நடவடிக்கையாளர்கள் குறைகூறியுள்ளனர்.

ஆதாரம் : Asia News

8. 976 குழந்தை திருமணங்கள் நிறுத்தம். இன்னும் விழிப்புணர்வு தேவை

ஏப்.29,2013.  தமிழகத்தில், கடந்த, ஐந்து ஆண்டுகளில், 976 குழந்தை திருமணங்கள், சமூகநலத் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கிராமப்புறங்களில், குழந்தை திருமணங்கள் நடந்து வருகின்றன எனக்கூறும் சமூகநலத் துறை அதிகாரிகள், கடந்த 2008 முதல் 2013 பிப்ரவரி வரை, 976 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன என்றனர்.
குழந்தை திருமணங்களைத் தடுப்பதற்கு, தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றபோதிலும், பொதுமக்கள் முழுமையான விழிப்புணர்வு பெற்றால் மட்டுமே, குழந்தை திருமணங்களை முற்றிலும் தடுக்கமுடியும்' எனவும் தெரிவித்தனர் சமூகநலத் துறை அதிகாரிகள்.
சமூகநலத் துறையின் கீழ் செயல்படும், மாவட்ட நல அலுவலர்கள், அந்தந்த மாவட்டங்களில், குழந்தை திருமண தடுப்பு அதிகாரிகளாக செயல்படுவதுடன், ஊராட்சித் தலைவரின் தலைமையில், ஊராட்சி அளவிலான கண்காணிப்பு குழுவும், தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.

ஆதாரம் : Dinamalar

9. புது வகை மலேரியா ஒட்டுண்ணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

ஏப்.29,2013.  மலேரியா நோயைத் தரும் ஒட்டுண்ணிக் கிருமிகளில், அந்நோயைக் கட்டுப்படுத்த உதவும் முக்கிய மருந்தான அர்டெமிஸினின் என்ற மருந்துக்குக் கட்டுப்படாத மூன்று பிரிவுகளை தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாக அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். இந்த மூன்று பிரிவு ஒட்டுண்ணியுமே கம்போடியாவின் மேற்குப் பகுதியில் ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது இவை அண்டையிலுள்ள பகுதிகளுக்கும் பரவி வருவதாகத் தெரிகிறது.
தங்களுடைய இந்தக் கண்டுபிடிப்பு பொதுமருத்துவத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆதாரம் : BBC
 

No comments:

Post a Comment