Wednesday, 10 April 2013

Catholic News in Tamil - 09/04/13

1. திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய Twitter செய்தி

2. கர்தினால் Lorenzo Antonetti இறைபதம் சேர்ந்ததையொட்டி, திருத்தந்தையின் அனுதாபத் தந்தி

3. திருத்தந்தை தேர்ந்தெடுத்துள்ள பிரான்சிஸ் என்ற பெயர் பல்வேறு சக்திவாய்ந்த அடையாளங்களை நினைவுறுத்துகிறது - ஐ.நா. பொதுச் செயலர்

4. கர்தினால் Bras de Aviz தைவான் நாட்டில் பத்து நாள் மேய்ப்புப்பணி பயணம்

5. ஏப்ரல் 10, 11 அயர்லாந்து தலத் திருஅவையில் சிறப்பான நினைவு நாட்கள்

6. உரோம் நகரில் இயேசு சபையினர் நடத்திவரும் Astalli மையத்தை திருத்தந்தை பிரான்சிஸ் விரைவில் பார்வையிடுவார்

7. வடகொரியா விடுத்துவரும் கூற்றுகள் தென் கொரிய ஆயர்களுக்குப் பெரும் மனவேதனையை அளிக்கிறது - ஆயர் பேரவையின் தலைவர்

8. சுற்றுச் சூழல் குறித்த கனடா நாட்டு ஆயர்கள் அறிக்கை

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய Twitter செய்தி

ஏப்.10,2013. கட்டளைகளைக் கடைபிடிப்பதால் மட்டும் ஒருவர் கிறிஸ்தவர் என்ற நிலையை அடையமுடியாது, மாறாக, கிறிஸ்து நமது வாழ்வை முற்றிலும் ஏற்று, அதனை மாற்றியமைக்கும்போது மட்டுமே நாம் அந்நிலையை அடைகிறோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று தான் வழங்கிய Twitter செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் ஒரு செய்தியை Twitter வழியே வெளியிட்டுள்ளார். இச்செய்தியில், "இறைவன் நம்மீது அன்பு கொண்டுள்ளார் என்பதை உணர்ந்து, அவருடைய குழந்தைகளாக நாம் நடந்துகொண்டால், நம் வாழ்வு அமைதியாலும், மகிழ்வாலும் நிறைந்து, முற்றிலும் புதியதோர் வாழ்வாக மாறும்" என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. கர்தினால் Lorenzo Antonetti இறைபதம் சேர்ந்ததையொட்டி, திருத்தந்தையின் அனுதாபத் தந்தி

இத்தாலி நாட்டின் Novara மறைமாவட்டத்தைச் சேர்ந்த கர்தினால் Lorenzo Antonetti இப்புதன் அதிகாலை இறைபதம் சேர்ந்ததையொட்டி, தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
இத்தாலியின் Novara மறைமாவட்ட ஆயர் Franco Giulio Brambilla அவர்களுக்கு அனுப்பியுள்ள இத்தந்தியில், கர்தினாலின் உறவினர்களை தான் நன்கு அறிவேன் எனக் கூறியுள்ளத் திருத்தந்தை, அவரின் உறவினர்களுக்கும், மறைமாவட்ட விசுவாசிகள் அனைவருக்கும் தன் உணர்வுபூர்வமான அனுதாபங்களை தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
90 வயது நிரம்பிய கர்தினால் Antonetti, பல நாடுகளில் திருப்பீடப் பிரதிநிதியாகவும், திருப்பீடச் செயலகத்தின் பல்வேறு பணிகளில் ஈடுபட்டவராகவும், அசிசி நகர் புனித பிரான்சிஸ் பேராலயத்தில் திருத்தந்தையின் பிரதிநிதியாகப் பணியாற்றியாவராகவும், நற்செய்திக்குச் சான்று பகர்ந்ததை தன் தந்திச் செய்தியில் குறிப்பிட்டு, பாராட்டியுள்ளார் திருத்தந்தை.
இத்தாலியின் Romagnano Sesia எனுமிடத்தில் 1922ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி பிறந்த கர்தினால் Antonetti, 1945ம் ஆண்டு குருவாகவும், 1968ம் ஆண்டு பேராயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். 1998ம் ஆண்டு திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற இரண்டாம் ஜான் பால் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை தேர்ந்தெடுத்துள்ள பிரான்சிஸ் என்ற பெயர் பல்வேறு சக்திவாய்ந்த அடையாளங்களை நினைவுறுத்துகிறது - ஐ.நா. பொதுச் செயலர்

ஏப்.10,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிக்கோள் கொண்டவர், அமைதியானவர் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
இச்செவ்வாய் காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடிய பான் கி மூன், தன் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார்.
மில்லென்னிய முன்னேற்றங்களை அடைவதற்கான இலக்காக ஐ.நா. எண்ணியிருக்கும் காலம் வருவதற்கு சரியாக 1000 நாட்கள் மீதம் இருக்கும் இத்தருணத்தில் திருத்தந்தையைச் சந்தித்தது தனக்குக் கிடைத்த ஒரு அறிய வாய்ப்பு என்று பான் கி மூன் தெரிவித்தார்.
திருத்தந்தை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள பிரான்சிஸ் என்ற பெயர் பல்வேறு சக்திவாய்ந்த அடையாளங்களை நினைவுறுத்துகிறது என்று கூறிய ஐ.நா. பொதுச்செயலர், ஏழ்மைக்கு எதிரான போராட்டம், இயற்கையைப் பேணுதல் ஆகிய திட்டங்களில் ஐ.நா.வும் திருஅவையும் இணைந்து செயல்படும் நம்பிக்கை இந்த சந்திப்பின் வழியாக தன்னிடம் அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் ஐ.நா. அவைக்கு வந்து உரையாற்றியதுபோல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் விரைவில் ஐ.நா. பொது அவைக்கு வருவார் என்ற நம்பிக்கையையும் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. கர்தினால் Bras de Aviz தைவான் நாட்டில் பத்து நாள் மேய்ப்புப்பணி பயணம்

ஏப்.10,2013. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வைத் தேர்ந்தோர், மற்றும் திருத்தூதுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்பினரை ஒருங்கிணைக்கும் திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Bras de Aviz அவர்கள், தைவான் நாட்டில் பத்து நாள் மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இத்திங்களன்று தைவான் நாட்டைச் சென்றடைந்த கர்தினால் Aviz அவர்கள், ஏப்ரல் 18ம் தேதி முடிய அந்நாட்டில் உள்ள பல்வேறு துறவு இல்லங்களையும், திருத்தூதுப்பணி அமைப்பு நிறுவனங்களையும் பார்வையிடுவார்.
தைவான் நாட்டில் பணியாற்றும் அனைத்துத் துறவுச் சபைகளின் உயர் தலைவர்கள் மேற்கொண்டுள்ள ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கென அந்நாட்டிற்குச் சென்றுள்ள கர்தினால் Aviz, Focolare இயக்கத்தை உருவாக்கிய Chiara Lubich அவர்களின் ஐந்தாம் ஆண்டு மரண நினைவையொட்டி, Fu Jen கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், ஏப்ரல் 12ம் தேதி ஏற்பாடு செய்துள்ள  நிகழ்வில், கலந்து கொள்வார்.
கர்தினால் Aviz அவர்கள் மேற்கொண்டுள்ள இப்பயணத்தின் ஓர் உச்ச நிகழ்ச்சியாக, ஏப்ரல் 14, ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காக ஒப்புக்கொடுக்கப்படும் நன்றித் திருப்பலி அமையும் என்று வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romano குறிப்பிட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. ஏப்ரல் 10, 11 அயர்லாந்து தலத் திருஅவையில் சிறப்பான நினைவு நாட்கள்

ஏப்.10,2013. உலக அமைதியைக் கொணரும் முயற்சிகளைச் சிறப்பிக்கும் விதமாக, அயர்லாந்து தலத் திருஅவை ஏப்ரல் 10, 11 ஆகிய இரு நாட்களைக் கடைபிடிக்கிறது என்று அயர்லாந்து ஆயர் பேரவையின் நீதிப் பணிக்குழு அறிவித்துள்ளது.
உலக அமைதிக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் உருவான கியூபா ஏவுகணை நெருக்கடி சூழல் முடிந்து ஆறு மாதங்கள் சென்று1963ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற 23ம் ஜான் அவர்கள் வெளியிட்ட Pacem in Terris, அதாவது, 'உலகில் அமைதி' என்ற சுற்று மடலின் 50ம் ஆண்டு நிறைவு இவ்வியாழனன்று கடைபிடிக்கப்படுகிறது.
அயர்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையே அமைதியை உருவாக்க 1998ம் ஆண்டு, ஏப்ரல் 10ம் தேதி, புனித வெள்ளி ஒப்பந்தம் என்ற பெயரில் அமைதி ஒப்பந்தம் ஒன்று வெளியானது.
இவ்விரு நிகழ்வுகளின் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வகையில் ஏப்ரல் 10, 11 ஆகிய இரு நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது என்று அயர்லாந்து ஆயர்கள் பேரவையின் சார்பில் அறிக்கை ஒன்று இச்செவ்வாயன்று வெளியானது.

ஆதாரம் : Zenit

6. உரோம் நகரில் இயேசு சபையினர் நடத்திவரும் Astalli மையத்தை திருத்தந்தை பிரான்சிஸ் விரைவில் பார்வையிடுவார்

ஏப்.10,2013. இயேசு சபையினரின் புலம்பெயர்ந்தோர் பணிக்குழு, உரோம் நகரில் நடத்திவரும் Astalli மையத்தை திருத்தந்தை பிரான்சிஸ் விரைவில் பார்வையிடுவார் என்று இந்த மையத்தின் இயக்குனர் அருள் பணியாளர் Giovanni La Manna கூறினார்.
சரியான ஆவணங்கள் ஏதுமின்றி இத்தாலி நாட்டுக்குள் நுழையும் பல்வேறு நாட்டினருக்குத் தகுந்த ஆலோசனைகள் வழங்கி, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வரும் Astalli மையத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் பார்வையிட விழைவதாக இத்திங்கள் தொலைபேசியில் கூறினார் என்று அருள் பணியாளர் Manna CNA செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
மத்திய கிழக்குப் பகுதியிலும், ஆப்ரிக்காவின் பல நாடுகளிலும் நிலவும் அமைதியற்றச் சூழல்களிலிருந்து தப்பி இத்தாலி நாட்டுக்குள் நுழையும் அகதிகளுக்கு Astalli மையம் உதவிகள் செய்கிறது என்று கூறிய அருள் பணியாளர் Manna, திருத்தந்தையின் வருகை பற்றிய செய்தி தங்களுக்கு நம்பிக்கையும் ஊக்கமும் தருகிறது என்று குறிப்பிட்டார்.

ஆதாரம் : CNA

7. வடகொரியா விடுத்துவரும் கூற்றுகள் தென் கொரிய ஆயர்களுக்குப் பெரும் மனவேதனையை அளிக்கிறது - ஆயர் பேரவையின் தலைவர்

ஏப்.10,2013. உலக அமைதியைக் குலைக்கும் வண்ணம் வடகொரியா விடுத்துவரும் கூற்றுகள் தென் கொரிய ஆயர்களுக்குப் பெரும் மனவேதனையை அளிக்கிறது என்று தென் கொரிய ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் Peter Kang U-Il கூறினார்.
வடகொரியா விடுக்கும் எச்சரிக்கைகளுக்கு தென் கொரிய மக்கள் பழக்கமானவர்கள் என்றாலும், இவ்விரு நாடுகளின் அமைதிக்குப் பெரும் ஆபத்தை உருவாக்கும் சூழல் இவ்வகையில் தொடர்வது நல்லதல்ல என்று ஆயர் Kang U-Il தெளிவுபடுத்தினார்.
வடகொரிய அரசியல் தலைவர்களால் கடந்த 60 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளால் அந்நாட்டின் பொதுமக்கள் வெளி உலகினின்று முற்றிலும் பிரிக்கப்பட்டு, பல்வேறு வேதனைகளை அனுபவித்து வருவதைத் தடுக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று ஆயர் கூறினார்.
ஏனைய நாடுகளின் தூதரகங்களுக்கு வடகொரிய அரசு விடுத்துள்ள பாதுகாப்புக் கெடு ஏப்ரல் 10 இப்புதனுடன் முடிகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

ஆதாரம் : CNS

8. சுற்றுச் சூழல் குறித்த கனடா நாட்டு ஆயர்கள் அறிக்கை

ஏப்.10,2013. இயற்கையை இறைவன் உருவாக்கியதில் உள்ள திட்டத்தையும், அதில் மனிதர்கள் பெறும் முக்கியமான இடத்தையும் உணர்ந்தால் பல்வேறு நன்னெறி கோட்பாடுகள் தெளிவாகும் என்று கனடா நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.
"புதியதோர் கலாச்சாரத்தை உருவாக்குதல்: சுற்றுச்சூழல் குறித்த திருஅவையின் அண்மைய படிப்பினைகள்" என்ற தலைப்பில் கனடா நாட்டு ஆயர்கள் பேரவையின் நீதி, அமைதிப் பணிக்குழு இத்திங்களன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இவ்வறிக்கை சுற்றுச் சூழல் குறித்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு அல்ல என்றும், இந்தப் பிரச்சனைகளை அறிவு சார்ந்த முறையில் வாதாட உதவும் ஓர் அறிக்கையே இது என்று இப்பணிக் குழுவின் உறுப்பினரான ஆயர் Donald Bolen, CNS செய்தியிடம் கூறினார்.
எட்டு அம்சங்களைக் கொண்ட இந்த அறிக்கையில் மறைந்த திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற இரண்டாம் ஜான் பால், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆகியோர் இயற்கையைப் பேணுதல் பற்றி கூறிய பல கூற்றுகள் இடம்பெற்றுள்ளன என்று ஆயர் Bolen விளக்கினார்.

ஆதாரம் : CNS

No comments:

Post a Comment