Friday, 30 March 2012

கத்தோலிக்க செய்திகள்: 29 மார்ச் 2012

1. குழந்தைகளுக்கு இவ்வுலகில் உரிய இடத்தையும் மதிப்பையும் வழங்கவேண்டும் - இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித்

2. உயிர்ப்புத் திருநாளுக்காக லிபியா மக்கள் நம்பிக்கையுடன் தாயரிப்பதைக் காண முடிகிறது - அப்போஸ்தலிக்க நிர்வாகி

3. மாவோயிஸ்ட் அமைப்புடன் உரையாடலை மேற்கொள்வதன் மூலம் பல பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் - கொல்கத்தா பேராயர்

4. திருத்தந்தை ஆற்றும் திருப்பலியில் திரட்டப்படும் காணிக்கைத் தொகையானது சிரியாவிலிருந்து புலம் பெயர்ந்தொருக்கென அனுப்பப்படும்

5. தலத் திருஅவையின் உதவியால், எல் சால்வதோர் நாட்டில் கொலைக் குற்றங்கள் பெருமளவில் குறைந்துள்ளன

6. நான்கு கத்தோலிக்க குருக்களுக்கு பங்களாதேஷ் நாட்டின் உயர்ந்த விருதுகள்

7. இந்தியாவில் புற்றுநோய் உள்ள ஆண்களில் 40 விழுக்காட்டினருக்கு புகையிலைப் பயன்பாடு இந்த நோயின் காரணம்

------------------------------------------------------------------------------------------------------

1. குழந்தைகளுக்கு இவ்வுலகில் உரிய இடத்தையும் மதிப்பையும் வழங்கவேண்டும் - இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித்

மார்ச்,29,2012. இலங்கையில் கருக்கலைப்பு அதிகரித்து வருகிறது என்றும், குழந்தைகளுக்கு இவ்வுலகில் உரிய இடத்தையும் மதிப்பையும் வழங்குவதற்கு அன்னையருக்கு அனைத்து வகையிலும் வழிகாட்ட வேண்டும் என்றும் இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித் கூறினார்.
கருவில் உருவானது முதல் அனைத்து உயிர்களும் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறிய கர்தினால் இரஞ்சித், தவக்காலத்தில் திரட்டப்படும் காணிக்கைகள் பிறக்காத குழந்தைகளுக்கான நிதி என்ற பெயரில் ஒதுக்கப்படும் என அறிவித்தார்.
"குழந்தைகளின் வாழ்வுரிமையைக் காப்பதற்கு" என்ற மையக் கருத்துடன் கொழும்பு உயர் மறைமாவட்டமும், காரித்தாஸ் அமைப்பும் தவக்காலத்தில் துவங்கியுள்ள இந்த முயற்சியால் பல உயிர்கள் காக்கப்படும் என்று உயர்மறைமாவட்டத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
இலங்கை அரசு கருக்கலைப்பைச் சட்டமயமாக்கும் முயற்சிகளை ஆரம்பித்துள்ள இந்த நிலையில், இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை மேற்கொண்டுள்ள எதிர்ப்பின் ஓர் அங்கமாக இந்த முயற்சியும் அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


2. உயிர்ப்புத் திருநாளுக்காக லிபியா மக்கள் நம்பிக்கையுடன் தாயரிப்பதைக் காண முடிகிறது - அப்போஸ்தலிக்க நிர்வாகி

மார்ச்,29,2012. லிபியா நாட்டில் இயல்பு நிலை திரும்புவதற்காக, தவக்காலத்தின் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் மக்கள் பெருமளவில் கோவில்களில் கூடிவந்து செபிப்பது நம்பிக்கை தரும் அடையாளமாக உள்ளது என்று Tripoliயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giovanni Innocenzo Martinelli கூறினார்.
42 ஆண்டுகள் நிகழ்ந்த சர்வாதிகார ஆட்சியாலும், கடந்த ஓராண்டளவாய் நிகழ்ந்துள்ள பல்வேறு போராட்டங்களாலும் மக்கள் மனம் தளர்ந்துள்ளனர் என்றாலும், உயிர்ப்புத் திருநாளுக்காக அவர்கள் நம்பிக்கையுடன் தாயரிப்பதைக் காணமுடிகிறது என்று ஆயர் Martinelli ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
பிலிப்பின்ஸ் மற்றும் சகாரா நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து, லிபியாவில் வாழும் கத்தோலிக்கர்கள், நாட்டில் உள்ள கிறிஸ்தவ சமுதாயத்திற்குப் பெரும் தூண்டுதலாக அமைந்துள்ளனர் என்றும் ஆயர் எடுத்துரைத்தார்.
கடந்த ஓராண்டளவாய் லிபியாவில் நிகழ்ந்துள்ள பல்வேறு கொடுமைகளின் மத்தியில் மருத்துவமனைகள் மூலம் கிறிஸ்தவர்கள் புரிந்த சேவை, கிறிஸ்துவத்திற்குச் சரியான ஒரு சாட்சியமாக லிபியாவில் விளங்குகிறது என்பதையும் Tripoliயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி சுட்டிக்காட்டினார்.


3. மாவோயிஸ்ட் அமைப்புடன் உரையாடலை மேற்கொள்வதன் மூலம் பல பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் - கொல்கத்தா பேராயர்

மார்ச்,29,2012. மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட் அமைப்புடன் உரையாடலை மேற்கொள்வதன் மூலம் பல பிரச்சனைகளைத் தீர்க்கமுடியும் என்று கொல்கத்தா பேராயர் தாமஸ் டிசூசா கூறினார்.
Asansol, Bagdogra, Baruipur, Kolkata, Darjeeling, Jalpaiguri, Krishnagar, Raigunj ஆகிய மறைமாவட்டங்களின் ஆயர்கள் மற்றும் குருக்கள் கலந்துகொண்ட ஒரு மறைபரப்புப் பணி மாநாட்டின்போது பேராயர் டிசூசா பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார்.
கம்யூனிசமும், கிறிஸ்தவமும் ஏழைகளுக்கு உதவுவது அவசியம் என்பதை வலியுறுத்தி வருகின்றன என்று கூறிய பேராயர் டிசூசா, ஏழைகளுக்கு உதவும் வழிகளில் கம்யூனிசக் கொள்கையாளர்கள் எடுக்கும் முடிவுகள் தற்காலத்திற்கு ஏற்றதாக அமையவில்லை என்றும் எடுத்துரைத்தார்.
மார்க்சியத் தலைவர் ஜோதி பாசுவும், அன்னை தெரேசாவும் வேறுபட்டக் கொள்கைகள் கொண்டவர்கள் ஆயினும், இருவரும் ஏழைகள் மட்டில் அக்கறை கொண்டவர்களாய் இருந்ததால், ஒருவரை ஒருவர் மதித்தனர் என்றும் பேராயர் டிசூசா சுட்டிக் காட்டினார்.
கடந்த சில நாட்களாக நடைபெற்ற இந்த மறைபரப்புப் பணி மாநாட்டின் இறுதித் திருப்பலியை இந்தியாவுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் Salvatore Pennachhio நிறைவேற்றினார்.


4. திருத்தந்தை ஆற்றும் திருப்பலியில் திரட்டப்படும் காணிக்கைத் தொகையானது சிரியாவிலிருந்து புலம் பெயர்ந்தொருக்கென அனுப்பப்படும்

மார்ச்,29,2012. சிரியா நாட்டிலிருந்து புலம்பெயர்ந்துள்ள மக்கள் மீது திருத்தந்தை காட்டும் அன்பும், அவர்களுக்கு உதவி செய்வதற்கு Cor Unum என்ற பாப்பிறைக் கழகம் மேற்கொண்டுள்ள முயற்சிகளும் போற்றுதற்குரியன என்று தமாஸ்கு நகரின் Maronite ரீதி பேராயர் சமீர் நாசர் கூறினார்.
ஒவ்வொரு புனித வாரத்தின் வியாழன்று மாலைத் திருப்பலியைத் திருத்தந்தை, உரோம் நகரில் உள்ள புனித யோவான் லாத்தரன் பசிலிக்காவில் நிறைவேற்றுவது வழக்கம். இவ்வாண்டு அவர் அங்கு ஆற்றும் திருப்பலியில் திரட்டப்படும் காணிக்கைத் தொகையானது சிரியாவிலிருந்து புலம் பெயர்ந்தொருக்கென அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Cor Unum என்ற பாப்பிறைக் கழகம், இத்தொகையை சிரியாவில் உள்ள காரித்தாஸ் அமைப்பிற்கு அனுப்பி வைக்கும்.
திருத்தந்தையும், பாப்பிறைக் கழகமும் மேற்கொண்டுள்ள இந்த அன்பு முயற்சிக்குத் தன் நன்றியை கூறிய பேராயர் நாசர், துன்பத்தில் இருக்கும் விசுவாசிகளுடன் திருஅவை எப்போதும் இணைந்துள்ளது என்பதற்கு இந்த செயல்பாடு ஓர் அடையாளம் என்று கூறினார்.
சிரியாவில் தொடர்ந்து நிகழ்ந்துவரும் வன்முறைகளில் இருந்து இதுவரை 20,000க்கும் அதிகமானோர் தப்பித்து, லெபனான், இன்னும் மற்ற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்துள்ளனர் என்று Fides செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
உடலாலும், உள்ளத்தாலும் தளர்ந்துள்ள புலம்பெயர்ந்தோர் மீது திருத்தந்தை காட்டும் இந்த அக்கறை, அவர்களுக்குப் பெரும் பக்கபலமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என்று லெபனான் காரித்தாஸ் அமைப்பின் தலைவரான அருள்தந்தை Simon Faddoul கூறினார்.


5. தலத் திருஅவையின் உதவியால், எல் சால்வதோர் நாட்டில் கொலைக் குற்றங்கள் பெருமளவில் குறைந்துள்ளன

மார்ச்,29,2012. எல் சால்வதோர் நாட்டில் இரு வன்முறை கும்பல்களுக்கு இடையே ஒப்புரவு உருவாக தலத் திருஅவை பெரிதும் உதவியுள்ளது என்று அந்நாட்டின் அமைச்சர் ஒருவர் கூறினார். இந்த ஒப்புரவைத் தொடர்ந்து, நாட்டில் நடைபெறும் கொலைக் குற்றங்கள் பெருமளவில் குறைந்துள்ளன என்று அமைச்சர் தன் மகிழ்வைத் தெரிவித்தார்.
எல் சால்வதோர் நாட்டில் உள்ள Mara Salvatrucha, La Mara 18 என்ற இரு வன்முறை கும்பல்களின் தலைவர்கள் சிறையில் உள்ளனர். இவ்விரு தலைவர்களையும் அண்மையில் சந்தித்த அந்நாட்டு ஆயர் Fabio Colindres, இவ்விரு தலைவர்களையும் ஒப்புரவாக்கியதன் மூலம் இவ்விரு கும்பல்களும் தற்போது வன்முறைகளை நிறுத்தியுள்ளன.
ஒவ்வொரு நாளும் 14 அல்லது 15 கொலைகள் நடைபெற்று வந்த எல் சால்வதோர் நாட்டில், இவ்விரு தலைவர்களின் ஒப்புரவிற்குப் பிறகு, ஒரு நாளில் அதிகப் பட்சம் 5 கொலைகளே நடைபெறுகின்றன என்று கூறிய பாதுக்காப்புத் துறை அமைச்சர் David Munguia, இந்த மாற்றத்தை உருவாக்கக் காரணமான ஆயருக்கும், தலத் திருஅவைக்கும் தன் நன்றியை எடுத்துரைத்தார்.
ஆயரின் இந்த முயற்சி நிரந்தரமான அமைதியைக் கொணர வாய்ப்பில்லை என்று ஒரு சில அமைப்புக்கள் தங்கள் எதிர்ப்பையும், விமர்சனத்தையும் கூறியுள்ளன.
உலகில் சராசரியாக 10,000 மக்களில் 8.8 கொலைகள் நிகழ்கின்றன என்றும், எல் சால்வதோர் நாட்டிலோ 10,000 பேருக்கு 60 கொலைகள் வீதம் நடைபெறுகின்றது என்றும் Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


6. நான்கு கத்தோலிக்க குருக்களுக்கு பங்களாதேஷ் நாட்டின் உயர்ந்த விருதுகள்

மார்ச்,29,2012. 1971ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராகப் போராடி, பங்களாதேஷ் நாடு தன் விடுதலையை அடைவதற்கு பெரும் உதவிகள் செய்த நான்கு கத்தோலிக்க குருக்களுக்கு அந்நாட்டின் உயர்ந்த விருதுகள் இச்செவ்வாயன்று வழங்கப்பட்டன.
பாகிஸ்தானுக்கு எதிராக, நாற்பது ஆண்டுகளுக்கு முன் பங்களாதேஷ் போராடியபோது, இந்தச் சுதந்திரப் போராட்டத்திற்குப் பல்வேறு வகையில் உதவியாக இருந்த 83 பேருக்கு 'பங்களாதேஷ் விடுதலைப் போர் விருதினை' அரசுத் தலைவர் Zillur Rahman வழங்கினார்.
விருது பெற்றவர்களில் அருள்தந்தையர் Richard Timm என்பவரும், Eugene Homrich என்பவரும் நேரடியாக இந்த விருதினைப் பெற்றுக் கொண்டனர். மறை சாட்சிகளாக இறந்த Mario Veronesi, William Evans என்ற வேறு இரு குருக்கள் சார்பில் இந்த விருதுகளை மற்றவர்கள் பெற்றுக் கொண்டனர்.
பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தில் தங்களுக்கு உதவிய பல்வேறு நாட்டைச் சேர்ந்த நண்பர்களுக்கு இந்த விருது வழங்கும் விழாவின்போது பிரதமர் Sheikh Hasina தன் நன்றியைத் தெரிவித்தார்.


7. இந்தியாவில் புற்றுநோய் உள்ள ஆண்களில் 40 விழுக்காட்டினருக்கு புகையிலைப் பயன்பாடே இந்நோயின் காரணம்

மார்ச்,29,2012. இந்தியாவில் 2010ம் ஆண்டு ஆறு இலட்சம் பேர் புற்று நோயினால் இறந்துள்ளனர் என்றும், இந்நோய் ஏழைகள் செல்வந்தர் இருவரையும் பாதிக்கின்றது என்றும் அண்மையில் வெளியான ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
Lancet என்ற நிறுவனம் நடத்திய இந்த ஆய்வு, புற்றுநோயைப் பற்றி இதுவரை நடத்தப்பட்ட மற்ற ஆய்வுகளில் இருந்து வேறுபட்டிருந்தது என்று கூறப்படுகிறது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட மற்ற ஆய்வுகள் நகர மக்களையே அதிகம் சார்ந்திருந்தது. தற்போதைய ஆய்வு நகரங்களிலும், மிகவும் பின்தங்கிய கிராமங்களிலும் 10 இலட்சம் குடும்பங்களில் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.
ஆண்கள் மத்தியில் வயிறு மற்றும் நுரையீரல் புற்றுநோய் அதிகம் உள்ளதென்றும், பெண்கள் மத்தியில் மார்பகம் மற்றும் வயிற்றுப் பகுதியில் புற்றுநோய் அதிகம் உள்ளது என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புற்றுநோய் உள்ளவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவும், மிசோராம் மாநிலத்தில் மிக அதிகமாகவும் காணப்படுவதாக இவ்வறிக்கை தெரிவிக்கிறது.
புற்றுநோய் உள்ள ஆண்களில் 40 விழுக்காட்டினருக்கு புகையிலைப் பயன்பாடே இந்நோயின் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...