Thursday, 1 March 2012

கத்தோலிக்க செய்திகள்: 29 பெப்ரவரி 2012

1. மிலான் நகரில் நடைபெறும் அகில உலக குடும்பங்கள் மாநாட்டில் திருத்தந்தை கலந்து கொள்வார்

2. அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஆயர்கள் மாமன்றத்தின் முக்கியக் கருப்பொருளாக குடும்பங்கள் அமையும்

3. திருப்பீடப் பிரதிநிதிகளும், வியட்நாம் அரசின் பிரதிநிதிகளும் இணைந்து வெளியிட்ட அறிக்கை

4. பிலிப்பின்ஸ் அரசுத் தலைவருக்கு ஆயர் பேரவை விடுத்த அழைப்பு

5. புனித பூமியில் கடும் குளிரில் வாடும் வறியோருக்கு உதவிகள்

6. நகரங்களில் பல கோடி குழந்தைகள் அடிப்படைத் தேவைகள் இன்றி வாடும் நிலை அதிகரித்துள்ளது - ஐ.நா. அறிக்கை

7. தமிழக முதல்வருடன் கூடங்குளம் எதிர்ப்புக் குழு சந்திப்பு

8. உலகச் சேவையின் 80 ஆண்டு நிறைவு : சிறப்பு ஒலிபரப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. மிலான் நகரில் நடைபெறும் அகில உலக குடும்பங்கள் மாநாட்டில் திருத்தந்தை கலந்து கொள்வார்

பிப்.29,2012. இவ்வாண்டு மேமாதம் 30ம் தேதி முதல் ஜூன் மாதம் 3ம் தேதி வரை மிலான் நகரில் நடைபெறும் அகில உலக குடும்பங்கள் மாநாட்டில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கலந்து கொள்வார் என்று மிலான் பேராயர் கர்தினால் Angelo Scola அறிவித்தார்.
திருத்தந்தை மிலான் நகருக்கு வருகை தந்து, ஜூன் மாதம் 1ம் தேதியிலிருந்து 3ம் தேதி வரை மாநாட்டில் கலந்து கொள்வது வரலாற்று சிறப்பு மிக்க செய்தி என்று, இந்த மாநாட்டைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசுகையில் கர்தினால் Scola கூறினார்.
"குடும்பம்: வேலை மற்றும் கொண்டாட்டம்" என்ற மையக் கருத்துடன் நடைபெறும் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முழு மூச்சுடன் நடைபெறுகிறதென்று கூறிய கர்தினால் Scola, ஒவ்வொரு குடும்பத்திலும் வேலைகளையும், கொண்டாட்டங்களையும் இணைத்துச் செல்வதற்கு குடும்பங்களுக்குத் தேவையான பாடங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று கர்தினால் Scola விளக்கினார்.
அருளாளர் இரண்டாம் ஜான்பால் மிலான் நகருக்கு வருகை தந்து 27 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அந்நகருக்கு மூன்று நாட்கள் வருகை தருவது மிலான் நகரின் வரலாற்றில் முக்கியமான ஒரு நிகழ்வு என்று மிலான் பேராயர் கர்தினால் Angelo Scola எடுத்துரைத்தார்.


2. அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஆயர்கள் மாமன்றத்தின் முக்கியக் கருப்பொருளாக குடும்பங்கள் அமையும்

பிப்.29,2012. இவ்வாண்டு அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஆயர்கள் மாமன்றத்தின் முக்கியக் கருப்பொருளாக குடும்பங்கள் அமையும் என்று வத்திக்கான் அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஆயர்கள் மாமன்றத்தின் செயற்குழு இத்திங்களன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், விசுவாசத்தின் அடிப்படையாக அமைவது குடும்பங்களே என்பதால், இளையோருக்கு விசுவாசத்தைப் புகட்டும் ஒரு முக்கிய கருவியாக குடும்பங்கள் அமையவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ள அனுபவம் மிக்க அருள்பணியாளர்கள், கர்தினால் Francis George தலைமையில் உருவாக்கி வரும் ஒரு முக்கிய கட்டுரை, ஆயர் மாமன்றத்தின் விவாதங்களுக்கு மையமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு அக்டோபர் மாதம் திருத்தந்தையால் அறிவிக்கப்பட உள்ள விசுவாச ஆண்டு, வரும் ஆண்டு நவம்பர் வரை நீடிக்கும். இந்த விசுவாச ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வாக ஆயர்களின் இந்த மாமன்றம் நடைபெறும்.


3. திருப்பீடப் பிரதிநிதிகளும், வியட்நாம் அரசின் பிரதிநிதிகளும் இணைந்து வெளியிட்ட அறிக்கை

பிப்.29,2012. திருஅவையின் செயல்பாடுகளுக்கு வியட்நாம் அரசு அளித்துள்ள ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என்றும், சிறப்பாக, 2010ம் ஆண்டு வியட்நாம் திருஅவை தன் ஜுபிலி கொண்டாட்டங்களை நடத்துவதற்கு அரசு அளித்த அனுமதிகள் பாராட்டுக்குரியது என்று வத்திக்கான் அறிக்கை ஒன்று கூறுகிறது.
இத்திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு நாட்கள் வியட்நாமின் Hanoi நகரில் திருப்பீட பிரதிநிதிகளுக்கும், வியட்நாம் அரசின் பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் இறுதியில் திருப்பீடப் பிரதிநிதிகளும், வியட்நாம் அரசின் பிரதிநிதிகளும் இணைந்து வெளியிட்ட ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு நடைபெற்ற ஜுபிலி கொண்டாட்டங்களின்போது திருப்பீடத்தின் சிறப்புப் பிரதிநிதியாக அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட பேராயர் Leopoldo Girelli, வியட்நாமில் தொடர்ந்து திருப்பீடத்தின் சார்பில் தன் பயணங்களை மேற்கொள்ள வியட்நாம் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
நாடுகளுக்கான உறவுகளின் திருப்பீட அவை துணைச் செயலர் பேராயர் Ettore Balestrero தலைமையில் இந்தக் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த திருப்பீடப் பிரதிநிதிகள், தங்கள் கூட்டத்திற்குப் பின், அந்நாட்டின் அமைச்சர்கள் சிலரையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்தனர் என்று வத்திக்கான் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


4. பிலிப்பின்ஸ் அரசுத் தலைவருக்கு ஆயர் பேரவை விடுத்த அழைப்பு

பிப்.29,2012. அக்டோபர் மாதத்தில் அருளாளர் Pedro Calungsod புனிதராக உயர்த்தப்படும் வேளையில், பிலிப்பின்ஸ் அரசுத் தலைவர் Benigno Aquino அங்கிருந்தால், தங்களுக்குப் பெருமையும், மகிழ்வும் அளிக்கும் என்று பிலிப்பின்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Jose Palma கூறினார்.
ஆயர் பேரவையின் சார்பில் பேராயர் Palmaவும், முன்னாள் பேராயர் கர்தினால் Ricardo Vidalம் இப்புதனன்று பிலிப்பின்ஸ் அரசுத் தலைவரைச் சந்தித்தபின், செய்தியாளர்களிடம் பேசுகையில், பேராயர் Palma அரசுத் தலைவருக்கு ஆயர் பேரவை விடுத்துள்ள இந்த அழைப்பைப் பற்றி குறிப்பிட்டார்.
மேலும், பிலிப்பின்ஸ் நாட்டின் இரண்டாவது புனிதராக உயர்த்தப்படும் Pedro Calungsodக்காக நவம்பர் மாதம் Cebu நகரில் நடைபெற உள்ள ஒரு பெரும் விழாவுக்கும் அரசுத் தலைவரை அழைத்திருப்பதாக பேராயர் அறிவித்தார்.
2012ம் ஆண்டுக்கான பயணத் திட்டங்களை அரசுத் தலைவர் Aquino ஏற்கனவே தீர்மானித்துவிட்டதால், இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியாதென்று அவர் கூறியதாக கர்தினால் Vidal அறிவித்தார்.


5. புனித பூமியில் கடும் குளிரில் வாடும் வறியோருக்கு உதவிகள்

பிப்.29,2012. புனித பூமியின் நண்பர்கள்என்ற பெயரில் இயங்கி வரும் ஒரு கிறிஸ்தவ பிறரன்பு நிறுவனமும், ‘பூமியின் மக்கள்என்ற கழகமும் இணைந்து புனித பூமியில் உள்ள 500க்கும் அதிகமான வறியோருக்கு உதவிகள் செய்துள்ளனர்.
புனித பூமியில், உறைவிடமும், உணவும் இன்றி, கடும் குளிரில் வாடும் வயது முதிர்ந்த 90 பேருக்கும், 450 குழந்தைகளுக்கும் 17 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உணவு, உடைகள், மற்றும் கம்பளிப் போர்வைகளை இவ்வமைப்பினர் வழங்கினர்.
பிறரன்புப் பணிகள் மூலம் கிறிஸ்தவச் சமுதாய வாழ்வை வலுப்படுத்துவதே புனித பூமியின் நண்பர்கள் என்ற அமைப்பின் தலையாய நோக்கம் என்று இவ்வமைப்பின் உதவித் தலைவர் Peter Rand கூறினார்.
2009ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புனித பூமியின் நண்பர்கள் என்ற இவ்வமைப்பு தற்போது இங்கிலாந்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்படுகிறதென்றும், இவ்வமைப்பின் முதல் நோக்கம் புனித பூமியில் உள்ளவர்களுக்கு உதவிகள் செய்வது என்றாலும், ஏனையப் பிறரன்புப் பணிகளிலும் இவ்வமைப்பு ஈடுபட்டு வருகிறதென்றும் ICN கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் கூறியது.


6. நகரங்களில் பல கோடி குழந்தைகள் அடிப்படைத் தேவைகள் இன்றி வாடும் நிலை அதிகரித்துள்ளது - ஐ.நா. அறிக்கை

பிப்.29,2012. நகரங்களில் வளரும் பல கோடி குழந்தைகள் அடிப்படைத் தேவைகள் இன்றி, வறுமையில்  வாடும் நிலை அதிகரித்துள்ளது என்று ஐ.நா.வின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
குழந்தைகளின் கல்வி மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கென உருவாக்கப்பட்டுள்ள UNICEF என்ற ஐ.நா. அமைப்பு, ‘2012ம் ஆண்டில் உலகக் குழந்தைகளின் நிலைஎன்ற அறிக்கையை இச்செவ்வாயன்று வெளியிட்டது. இந்த அறிக்கையில் நகர் வாழ் குழந்தைகளின் பிரச்சனைகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
நலவாழ்வுக்கு எதிராக, மிகவும் மோசமானச் சூழல்களில் குழந்தைகள் வாழ்வதால், நோய்கள் எளிதில் அவர்களைத் தாக்குவதாகவும், இந்த நோய்களில் பல அவர்கள் வாழ்வு முழுவதும் பாதிப்புக்களை உருவாக்குவதாகவும் இவ்வறிக்கை விவரிக்கிறது.
உலகின் பல நகரங்களில் தற்போது வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை 100 கோடி என்று கூறும் இவ்வறிக்கை, இக்குழந்தைகளில் பெரும்பான்மையானோருக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்பதையும் சுட்டிக்  காட்டுகிறது.
நலவாழ்வு கிட்டாமல் வாடும் இக்குழந்தைகளில் பல கோடி பேர், அடிப்படை கல்வி வசதிகளும் இல்லாமல் வாழ்கின்றனர் என்று இவ்வறிக்கை மேலும் கூறுகிறது.


7. தமிழக முதல்வருடன் கூடங்குளம் எதிர்ப்புக் குழு சந்திப்பு

பிப்.29,2012. கூடங்குளம் அணுமின்உலை குறித்து மாநில அரசின் வல்லுனர் குழு இச்செவ்வாயன்று அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில், கூடங்குளம் எதிர்ப்புக்குழு இப்புதனன்று முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசியது.
கூடங்குளம் அணுமின்உலை இறுதிகட்டப் பணிகள் எட்டியிருந்த நிலையில், உதயகுமார் தலைமையிலான எதிர்ப்புப் போராட்டக்குழுவினர் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்குத் தீர்வு காணும் வகையில், மத்திய, மாநில அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது. ஆனால், இம்முயற்சி பலனளிக்கவில்லை.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் கூடங்குளம் மக்களின் கருத்துகளை அறிய டாக்டர் இனியன் தலைமையிலான வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. பிப்ரவரி 18ம் தேதி முதல் கூடங்குளம் அணுஉலையை ஆய்வு செய்த இக்குழு, இச்செவ்வாயன்று தனது அறிக்கையை மாநில அரசிடம் வழங்கியது.
கூடங்குளம் எதிர்ப்புக்குழு போராட்டத்திற்கு வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் அரசுசாரா அமைப்புகள் நிதியுதவி செய்து வருவதாக பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு உதயகுமார் குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
உதயகுமார் குழுவினர் இப்புதனன்று முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்தபோது, மாநில அரசின் வல்லுனர் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கைக்கு எதிராக மனு ஒன்றை அளித்துள்ளனர்.
முதலமைச்சருடன் சந்திப்பை முடித்தபின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த உதயகுமார் குழுவினர், டாக்டர் இனியன் தலைமையிலான குழுவின் அறிக்கை ஒருதலைப்பட்சமாக உள்ளது என்றும் முதல்வரிடம் இருந்து சாதகமான பதில் வரும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.


8. உலகச் சேவையின் 80 ஆண்டு நிறைவு : சிறப்பு ஒலிபரப்பு

பிப்.29,2012. பிபிசி உலகச் சேவை ஆரம்பிக்கப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அதன் பன்மொழிச் சேவைகளில் பல சிறப்பு நிகழ்ச்சிகள் தற்போது ஒலிபரப்பப்படுகின்றன.
வத்திக்கான் வானொலி ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டுக்குப் பின், அதாவது, 1932ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பமான பிபிசி வானொலி சேவை, தன் 80 ஆண்டு நிறைவை இப்புதனன்று துவக்கியது. உலகச் சேவையின் தலைமையகமான 'புஸ் ஹவுஸ்'ன் (Bush House) முற்றத்தில் பெரிய கூடாரம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து இந்த ஒலிபரப்புகள் நேரடியாக நடத்தப்படுகின்றன.
உலகெங்கும் உள்ள பிபிசியின் நேயர்கள் இந்நிறுவனத்தின் கடந்தகால உலகச் சேவையைத் திரும்பிப்பார்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...