Wednesday, 28 March 2012

கத்தோலிக்க செய்திகள்: 28 மார்ச் 2012

1. திருப்பீடப் பிரதிநிதிகளுக்கு வியட்நாம் அரசு அனுமதி மறுப்பு

2. சிரியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இராணுவச் சேவையில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

3. ஐ.நா. தந்த அமைதி திட்டங்களுக்கு சிரிய அரசு ஒப்புக்கொண்டுள்ளது

4. பாகிஸ்தான் அரசின் மிக உயர்ந்த விருது இரு கத்தோலிக்கத் துறவியருக்கு வழங்கப்பட்டது

5. இலங்கை அமைச்சரின் கூற்றுகள் ஆதாரமற்றவை, அர்த்தமற்றவை  - காரித்தாஸ் அதிகாரிகள்

6. தமிழகத்தில், கழிவறை வசதி பெற்றிருப்போரை விட, அலைபேசி வைத்திருப்போரின் எண்ணிக்கை அதிகம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருப்பீடப் பிரதிநிதிகளுக்கு வியட்நாம் அரசு அனுமதி மறுப்பு

மார்ச்,28,2012. வியட்நாமைச் சேர்ந்த காலம் சென்ற முன்னாள் கர்தினால் Francis Xavier Nguyen Văn Thuận அவர்களை அருளாளராக உயர்த்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அந்நாட்டிற்கு செல்லவிருந்த திருப்பீடப் பிரதிநிதிகளுக்கு வியட்நாம் அரசு அனுமதி மறுத்துள்ளது.
கர்தினால் Văn Thuận அவர்களை அருளாளராக உயர்த்தும் முயற்சிகள் அண்மையில் துவக்கப்பட்டன. இது தொடர்பாக, திருப்பீடத்தின் சார்பில் கர்தினால் Peter Turkson தலைமையில் மார்ச் மாதம் 23 முதல் ஏப்ரல் மாதம் 9 ம் தேதி வரை அந்நாட்டில் தகவல்கள் திரட்டச் செல்லவிருந்த பிரதிநிதிகள் குழுவிற்கு வியட்நாம் அரசு கடவு சீட்டு தருவதற்கு அனுமதி மறுத்துள்ளது.
அரசின் இந்த நடவடிக்கை மதச் சுதந்திரத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட அத்துமீறிய ஒரு முடிவு என்று வியட்நாம் கத்தோலிக்கர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்ட ஒரு சில நாட்களில் அங்கு ஆரம்பிக்கப்பட்ட கம்யூனிச இராணுவ அடக்குமுறையால் சிறைப்படுத்தப்பட்டு அடுத்த 13 ஆண்டுகள் எவ்வித விசாரணையும் இன்றி, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த கர்தினால் Văn Thuận, நம்பிக்கையைத் தன் ஆயர் பணியின் விருதுவாக்காகக் கொண்டிருந்ததால், அரசு உருவாக்கியுள்ள இந்தத் தடையும் நீங்கி, திருப்பீட அதிகாரிகளின் வருகை விரைவில் நடைபெறும் என்று தலத் திருஅவை நம்பிக்கை தெரிவித்துள்ளது.


2. சிரியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இராணுவச் சேவையில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

மார்ச்,28,2012. சிரியாவின் Homs நகரில் தொடரும் வன்முறைகளிலிருந்து தப்பியோடும் கிறிஸ்தவர்கள் தலத் திருஅவையின் உதவிகளைப் பெற்றுவந்த போதிலும், இன்னும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி எந்த உறுதியும் இல்லாமல் வாழ்கின்றனர், அவர்கள் மனதில் நம்பிக்கையை வளர்ப்பது மிக அவசரமானத் தேவை என்று Aleppo ஆயர் Antoine Audo கூறினார்.
கடந்த ஆறு வாரங்களாக சிரியாவின் Homs நகரிலிருந்து பெருமளவில் வெளியேறிவரும் கிறிஸ்தவர்களுக்கு Aid to the Church in Need பிறரன்பு அமைப்பின் நிதி உதவிகள் பெருமளவில் வழங்கப்பட்டு வருகிறதென்றும், இன்னும் பிற உதவிகள் அவசரகால அடிப்படையில் செய்யப்பட வேண்டும் என்றும் இயேசு சபையைச் சேர்ந்த ஆயர் Audo எடுத்துரைத்தார்.
இதற்கிடையே சிரியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இராணுவச் சேவையில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று ஐ.நா.வின் குழந்தைகள் அமைப்புப் பிரதிநிதி ராதிகா கூமாரசாமி கூறியுள்ளார்.
ஐ.நா. அதிகாரியின் இந்தக் கூற்று தன்னை எவ்வகையிலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கவில்லை என்று கூறிய இயேசு சபை அருள்தந்தை Paul Dall'Oglio, கடந்த ஓராண்டளவாக சிரியாவில் சிறுவர்களும், இளையோரும் சிறைப்படுத்தப்பட்டு, சித்திரவதைகளுக்கு ஆளாகி இறப்பது அடிக்கடி நிகழ்ந்துள்ளது என்று Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இதே கருத்தை இப்புதனன்று வெளியிட்ட ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் நவி பிள்ளை, சிரியாவின் தலைவர் Bashar al-Assad மனது வைத்தால், இவ்விளையோரையும், சிறுவர்களையும் ஒரு நொடியில் விடுவிக்க முடியும் என்று கூறினார்.


3. ஐ.நா. தந்த அமைதி திட்டங்களுக்கு சிரிய அரசு ஒப்புதல்

மார்ச்,28,2012. சிரிய அரசுடன் முன்னாள் ஐ.நா.பொதுச் செயலர் Kofi Annan அண்மையில் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் பயனாக, ஐ.நா. தந்த அமைதி திட்டங்களுக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக இச்செவ்வாயன்று சிரிய அரசு கூறியது.
சிரிய அரசின் இந்த ஒப்புதல் அந்நாட்டில் வன்முறை நீங்கி, அமைதி திரும்புவதற்கு முதல் படி என்று கூறினார் ஐ.நா. முன்னாள் பொதுச் செயலர் Kofi Annan.
சிரிய அரசுத் தலைவர் இத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது நம்பிக்கை தரும் ஒரு பெரும் அடையாளம் என்று சிரியாவில் பணிபுரியும் இயேசுசபை அருள்பணியாளர் Nawras Sammour, ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
ஐ.நா. பரிந்துரைத்துள்ள இந்த அமைதி திட்டத்தில் வன்முறைகள் நிறுத்தப்படுதல், மனிதாபிமான உதவிகள் மக்களைச் சென்றடைய அனுமதி வழங்குதல், விசாரணையின்றி கைது செய்யப்பட்டுள்ளவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுதல் போன்ற ஆறு அம்சங்கள் கூறப்பட்டுள்ளன.


4. பாகிஸ்தான் அரசின் மிக உயர்ந்த விருது இரு கத்தோலிக்கத் துறவியருக்கு வழங்கப்பட்டது

மார்ச்,28,2012. பாகிஸ்தான் அரசு தன் நாட்டு மக்களுக்கு வழங்கக்கூடிய மிக உயர்ந்த விருதுக்கு இரு கத்தோலிக்கத் துறவியரைத் தெரிவு செய்ததற்காக தலத் திருஅவை தன் மகிழ்வையும் நன்றியையும் தெரிவித்தது.
Sitara-e-Quaid-e-Azam என்று வழங்கப்படும் இந்த உயர்ந்த விருது, இவ்வாண்டு 27 பேருக்கு வழங்கப்பட்டது. அவர்களில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அருள்தந்தை Robert McCullochம், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த அருள் சகோதரி John Berkmans Conwayம் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானில் உழைத்துவரும் அருள்தந்தை McCulloch, குணப்படுத்த முடியாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்வதிலும், ஏழைச் சிறுவருக்கு பள்ளியொன்றை நடத்துவதிலும் ஈடுபட்டிருந்தார்.
81 வயதான அருள் சகோதரி Conway, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானில் கல்விப் பணியில் முழு மூச்சுடன் ஈடுபட்டவர். பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரான Benazir Bhutto, மற்றும் மனித உரிமை ஆர்வலர் Asma Jahangir உட்பட, பாகிஸ்தானில் உள்ள பல பெருமைக்குரியப் பெண்களுக்கு அருள்சகோதரி Conway ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.


5. இலங்கை அமைச்சரின் கூற்றுகள் ஆதாரமற்றவை, அர்த்தமற்றவை  - காரித்தாஸ் அதிகாரிகள்

மார்ச்,28,2012. இலங்கையில் பணிபுரியும் காரித்தாஸ் பிறரன்பு அமைப்பு, அந்நாட்டில் குழப்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்று இலங்கை அமைச்சர் ஒருவர் கூறியிருப்பதைத் தலத் திருஅவை வன்மையாகக் கண்டித்துள்ளது.
அண்மையில் இலங்கையில் விவசாயிகள் மேற்கொண்ட ஒரு போராட்டத்தை நடத்த காரித்தாஸ் வாகனங்களையும், உணவையும் ஏற்பாடு செய்திருந்ததென்று இலங்கையின் நலத்துறை அமைச்சர் Maithripala Sirisena கூறினார். மேலும், காரித்தாஸ் உறுப்பினர்கள் ஜெனீவா சென்று இலங்கை அரசுக்கு எதிராகப் பேசினர் என்றும் இவ்வமைச்சர் கூறினார்.
அமைச்சரின் இந்தக் கூற்றுகள் அப்பட்டமான பொய் என்று இலங்கை ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுவின் தலைவரான ஆயர் Harold Anthony Perera எடுத்துரைத்தார்.
அமைச்சரின் இந்தக் கூற்றுகள் அனைத்தும் ஆதாரமற்றவை, அர்த்தமற்றவை என்று காரித்தாஸ் அதிகாரிகளும் கூறியுள்ளனர்.
விவசாயிகள் மற்றும் மீன்பிடித் தொழிலாளிகளை ஒருங்கிணைக்கும் ஒரு தேசிய அமைப்பு இந்த போராட்டத்தை நடத்தியது என்றும், தங்கள் அடிப்படை உரிமைகளுக்குப் போராடும் உரிமை தங்களுக்கு உள்ளது என்றும் இவ்வமைப்பின் பிரதிநிதி Nihal Winadhipathi கூறினார்.


6. தமிழகத்தில், கழிவறை வசதி பெற்றிருப்போரை விட, அலைபேசி வைத்திருப்போரின் எண்ணிக்கை அதிகம்

மார்ச்,28,2012. தமிழகத்தில், கடந்த 10 ஆண்டுகளில், கழிவறை வசதி பெற்றிருப்போரை விட, அலைபேசி வைத்திருப்போரின் வளர்ச்சி விகிதம், பெருமளவு உயர்ந்துள்ளது. மேலும், "டிவி' மற்றும் சமையல் எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு, 15வது மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி, நாடு முழுவதும் நடந்தது. இப்பணிக்கு அடித்தளமாக, கடந்த 2010, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், "வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பு' பணி நடந்தது. தமிழகத்தில், 1.85 கோடி வீடுகளில், இப்பணி மேற்கொள்ளப் பட்டது.
இதில், குடிநீர், மின்சாரம், சமையல் எரிவாயு இணைப்பு, கழிவறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் ரேடியோ, "டிவி', தொலைபேசி, கம்ப்யூட்டர், வாகனங்கள் தொடர்பாக, கேள்விகள் கேட்கப்பட்டன.
இவற்றுக்கு பொதுமக்கள் அளித்த பதில்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட, "வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பு' என்ற நூல் இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது.
இந்நூலில், தமிழக அளவில், பின்வரும் சில அம்சங்கள் இடம்பெற்றுள்ளன:
  • தமிழகத்தில், மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை, 1.42 கோடியிலிருந்து, 1.85 கோடியாக உயர்ந்துள்ளது.
  • இவர்களில், 80 விழுக்காட்டினர், குழாய் இணைப்புகளின் மூலம், குடிநீர் வசதி பெற்றுள்ளனர். மீதமுள்ள 20 விழுக்காட்டினர், கிணறு, ஆழ்துளை கிணறு, ஆகியவற்றின் மூலம் குடிநீர் வசதி பெறுகின்றனர்.
  • கடந்த 2001ம் ஆண்டில், 43.7 விழுக்காடாக இருந்த, ரேடியோ மற்றும் டிரான்சிஸ்டர் பயன்பாடு தற்போது, 22.7 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
  • 50 விழுக்காடு வீடுகளில் தான், முறையான கழிவுநீர் வெளியேற்றும் வசதி உள்ளது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...