Thursday, 8 March 2012

கத்தோலிக்க செய்திகள்: 06 மார்ச் 2012

1. இந்தியாவில் சீரோமலபார் ரீதிக்கென புதிய மறைமாவட்டம்

2. கிராமப்புறப் பெண்களின் சார்பாக, ஐ.நா.வில் திருப்பீடத்தின் குரல்

3. திருப்பீட உயர் அதிகாரி - உலகின் இளையோர் அனைவருமே உலகின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கிய கருவிகள்

4. சிஸ்டைன் கோவில் பாடகர் குழுவினரும் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயப் பாடகர் குழுவினரும் முதன் முறையாக இணைந்து பாட உள்ளன‌ர்

5. காங்கோ நாட்டில் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோருக்குக் கத்தோலிக்கத் திருஅவை அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது

6. காஷ்மீர் மக்களிடையே கிறிஸ்தவர்களின் செல்வாக்கு குறைந்து வருகிறது

7. சிரியாவிற்கு உதவ ஜெனீவா செஞ்சிலுவைச் சங்கம் முடிவு


------------------------------------------------------------------------------------------------------

1. இந்தியாவில் சீரோமலபார் ரீதிக்கென புதிய மறைமாவட்டம்

மார்ச்,06,2012. இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் சீரோ மலபார் ரீதியின் ஃபரிதாபாத் புதிய மறைமாவட்டத்தை உருவாக்கி அதன் புதிய ஆயராக சீரோமலபார் ரீதி குரு குரியாகோஸ் பரணிகுளங்கராவை நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இது நாள் வரை ஜெர்மனிக்கான திருப்பீடத்தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றிவந்த குரு பரணிகுளங்கரா, 1959ம் ஆண்டு எர்ணாகுளம் அங்கமலி உயர்மறைமாவட்டத்தின் கரிப்பசேரி எனுமிடத்தில் பிறந்து 1983ம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டவர்.
உரோம் நகரில் உயர்கல்வி பயின்ற இவர், முதலில் நியூ யார்க்கிலுள்ள ஐ.நா.விற்கான திருப்பீட நிரந்தரப்பார்வையாளர் அலுவலகத்திலும், பின்னர் ஜெர்மனிக்கான திருப்பீடத்தூதரகத்திலும் பணியாற்றியுள்ளார். ஃபரிதாபாத் ஆயராக அறிவிக்கப்பட்டுள்ள இவர், பேராயர் என்ற பட்டத்துடன் திருநிலைப்படுத்தப்படுவார்.
சீரோமலபார் திருஅவைக்கு வழங்கப்பட்டுள்ள ஃபரிதாபாத் மறைமாவட்டம், 23 பங்குதளங்களையும், பல மேய்ப்புபணி மையங்களையும் கொண்டு 44 குருக்களுடன் இயங்க உள்ளது. இப்புதிய மறைமாவட்டத்தில் கத்தோலிக்க திருஅவை 3 பள்ளிகளையும் 4 மருத்துவமனைகளையும் கொண்டுள்ளது.
ஐந்து ஆண் துறவு சபைகளைச் சார்ந்தவர்களும் எட்டு பெண்துறவு சபைகளைச் சார்ந்தவர்களும் இங்கு பணியாற்றுகின்றனர்.


2. கிராமப்புறப் பெண்களின் சார்பாக, ஐ.நா.வில் திருப்பீடத்தின் குரல்

மார்ச்,06,2012. கிராமப்புறப் பெண்களின் கைகளைப் பலப்படுத்தும் பாதையில், ஏழ்மை மற்றும் பசி அகற்றலும், வளர்ச்சியை ஊக்குவித்தலும், இன்றைய சவால்களை எதிர்கொள்ள கற்பிப்பதும் மிக முக்கிய கூறுகளாக உள்ளன என்கிறது ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட்டின் செய்தி.
'இரண்டாயிரத்தின் பெண்கள்:21ம் நூற்றாண்டிற்கான அமைதி, வளர்ச்சி மற்றும் பாலின சரிநிகர் தன்மை' என்ற தலைப்பில், இச்செவ்வாயன்று நடையெற்ற ஐ.நா. பொது அவையின் 23வது சிறப்பு அவைக்கூட்டத்தில் பேராயர் சுள்ளிக்காட்டின் சார்பில் உரையாற்றிய திருப்பீட நிரந்தரப் பார்வாவையாளர் அலுவலகத்தின் அங்கத்தினர் Dianne Willman, ஊதியமற்ற நீண்ட நேர வேலை, சுகாதாரமற்ற சூழல்கள், போதிய சத்துணவின்மை, குடிநீர் வசதியின்மை, நல ஆதரவு வசதியின்மை, பாகுபாட்டுடன் நடத்தப்படல், வன்முறைக்கு உள்ளாக்கப்படுதல் என பல சவால்களைக் கிராப்புற பெண்கள் எதிர்நோக்க வெண்டியுள்ளது என்ற கவலையை வெளியிட்டார்.
தங்கள் குடும்பங்களைக் காப்பாற்ற நகர்களுக்கு குடிபெயரும் கிராமப்புற பெண்கள் சுரண்டப்படும் நிலைக்கு தள்ளப்படுவதையும் சுட்டிக்காட்டினார் திருமதி  Willman.
சமூகத்தில் பெண்களின் முக்கியப் பங்களிப்பு அங்கீகரிக்கப்படுவதுடன், தங்களைச் சுற்றியுள்ள உலகில் நல்லதொரு பாதிப்பை ஏற்படுத்த அவர்களுக்கு உதவ வேண்டிய சமூகத்தின் கடமையையும் வலியுறுத்தினார் ஐநாவிற்கான திருப்பீட அலுவலகத்தின் அங்கத்தினரான இவர்.
இன்றைய உலகம் எதிர்நோக்கும் சவால்களுக்கான தீர்வு கிராமப்புற பெண்களின் வளர்ச்சியைச் சார்ந்து உள்ளது என்ற ஐநா பொதுச்செயலரின் அறிக்கையையும் மேற்கோள்காட்டி உரையாற்றினார் Willman.


3. திருப்பீட உயர் அதிகாரி - உலகின் இளையோர் அனைவருமே உலகின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கிய கருவிகள்

மார்ச்,06,2012. இளையோர் மனமாற்றம் அடைந்து இறைவனிடம்  வருவது பாரம்பரியம் மிக்க கிறிஸ்துவ நாடுகளில் மீண்டும் நற்செய்தியை எடுத்துரைக்கும் ஒரு முக்கிய வழியாக அமையும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
2013ம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற உள்ள உலக இளையோர் நாள் முன்னேற்பாடுகளை மேற்பார்வையிட, பொது நிலையினர் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Stanislaw Rylko, அங்கு சென்று திரும்பியபின் CNA கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களின் முயற்சியால் 25 ஆண்டுகளுக்கு முன்னர் துவக்கப்பட்ட உலக இளையோர் நாள், நற்செய்தி பரப்புப் பணியில் மிகச்சிறந்த ஒரு சக்தியாகச் செயல்படுகிறது என்று கூறிய கர்தினால் Rylko, பிரேசில் நாட்டில் நடைபெற உள்ள இளையோர் நாளும் இதே பணியைத் தொடரும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.
1987ம் ஆண்டு Buenos Aires நகரில் நடைபெற்ற உலக இளையோர் நாளைக் குறித்துப் பேசிய கர்தினால் Rylko, 25 ஆண்டுகளுக்குப் பின் இலத்தீன் அமெரிக்காவில் மீண்டும் இந்த நாள் கொண்டாடப்பட உள்ளது பெரும் மகிழ்வைத் தருகிறது என்று கூறினார்.
வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் வாழும் இளையோரைப் பற்றிய கேள்வி ஒன்று எழுந்தபோது, இவ்விளையோரின் ஒட்டுமொத்த நிலை குறித்து குறுகிய நேரத்தில் விளக்கம் தருவது சாத்தியமல்ல என்று கூறிய கர்தினால் Rylko, இவ்விரு கண்டங்களின் இளையோர் மட்டுமல்ல, உலகின் இளையோர் அனைவருமே உலகின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கிய கருவிகள் என்பதை வலியுறுத்திக் கூறினார்.


4. சிஸ்டைன் கோவில் பாடகர் குழுவினரும் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயப் பாடகர் குழுவினரும் முதன் முறையாக இணைந்து பாட உள்ளன‌ர்

மார்ச்,06,2012. ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தின் உலகப்புகழ் வாய்ந்த பாடகர் குழுவை உரோம் நகரின் புனித பேதுரு பேராலய விழாவில் வந்து பாடும்படி அழைப்பு விடுத்துள்ளது திருப்பீடம்.
ஜூன் மாதம் 29ம் தேதி புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் திருவிழாக் கொண்டாட்டத் திருப்பலியின்போது திருப்பீடத்தின் சிஸ்டைன் கோவில் பாடகர் குழுவுடன் இலண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயக்குழுவும் இணைந்து பாடும்.
திருப்பீடப் பாடகர்குழு தன் 500 வருட வரலாற்றில் பிறிதொரு பாடகர் குழுவோடு இணைந்து பாட உள்ளது இதுவே முதன்முறையாகும்.
ஜூன் மாதம் 28ம் தேதி மாலை உரோம் நகர் புனித பவுல் பேராலயத்தின் திருவழிபாட்டுச் சடங்கிலும், 29ம் தேதி காலை உரோமையின் புனித பேதுரு பேராலயத்தில் திருத்தந்தை நிறைவேற்ற உள்ள திருப்பலியிலும் இவ்விரு பாடகர் குழுக்களும் இணைந்து பாடும்.
2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இலண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தைத் தரிசித்ததைத் தொடர்ந்து, இரு கிறிஸ்தவ சபைகளிடையே தங்கள் கலாச்சார மற்றும் திருவழிபாட்டுக் கொடைகளைப் பகிர்ந்துகொள்வது குறித்த நடவடிக்கைகள் துவக்கப்பட்டன.


5. காங்கோ நாட்டில் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோருக்குக் கத்தோலிக்கத் திருஅவை அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது

மார்ச்,06,2012. காங்கோ நாட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்களில் புனித Louis des Francais கத்தோலிக்கக் கோவில் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது என்றும், இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருடன் தான் தங்கியிருப்பதாகவும் Brazzaville உயர்மறைமாவட்டப் பேராயர் Anatole Milandou கூறினார்.
காங்கோ நாட்டின் தலைநகரில் இஞ்ஞாயிறு நிகழ்ந்த குண்டு தாக்குதல்களில் ஞாயிறு திருப்பலிகள் முடிந்து சென்ற மக்கள் பலர் இறந்துள்ளனர், மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
ஞாயிறு காலை 8 மணி முதல் 11 மணி வரை மூன்று இடங்களில் நடந்த பலமான தாக்குதல்களிலும், பின்னர் ஓரிரு இடங்களில் நடைபெற்ற குறைந்த அளவிலான தாக்குதல்களிலும் இதுவரை 200க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்றும், 2000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. காயமடைந்துல்லோரில் பலர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், இறப்போரின் எண்ணிக்கை உயரக்கூடும்  என்று சொல்லப்படுகிறது.
இந்தத் தொடர் தாக்குதல்களுக்கான காரணங்கள் இன்னும் தெளிவாக்கப்படவில்லை என்றும், இந்தத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோருக்குக் கத்தோலிக்கத் திருஅவை அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் Fides செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.


6. காஷ்மீர் மக்களிடையே கிறிஸ்தவர்களின் செல்வாக்கு குறைந்து வருகிறது

மார்ச்,06,2012. மதமாற்றத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுடன் கிறிஸ்தவ குரு ஒருவர் இந்தியாவின் காஷ்மீர் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது அப்பகுதி கிறிஸ்தவர்கள் குறித்த சந்தேகத்தை காஷ்மீர் மக்களிடையே வளர்த்துள்ளதாக கூறினார் இந்திய கிறிஸ்தவ சபைகளின் தேசிய அவையின் அதிகாரி ஒருவர்.
தென்னிந்திய திருச்சபையின் கிறிஸ்தவ குரு கன்னா என்பவர் கைது செய்யப்பட்டு அப்பகுதியிலிருந்து இஸ்லாமிய நீதிமன்றத்தால் வெளியேற்றப்பட்டது, கிறிஸ்தவர்கள் மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்களோ என்ற அச்சத்தை இஸ்லாமியர்களின் மனதில் வளர்த்துள்ளது என்றார் கிறிஸ்தவ தேசிய அவையின் அதிகாரி சாமுவேல் ஜெய்குமார்.
இஸ்லாமிய இளைஞர்களை மதம் மாற்றியதாக கிறிஸ்தவ குரு கன்னாவுக்கு எதிராக ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிறிஸ்தவர்களின் மீதான இஸ்லாமியர்களின் சந்தேகம் அதிகரித்துள்ளதாக உரைத்த ஜெய்குமார், கிறிஸ்தவத்தைப் பலவந்தமாக புகுத்துவதையோ, எவரையும் ஏமாற்றி மதமாற்றுவதையோ கிறிஸ்தவ சபைகளின் இந்திய தேசிய அவை ஒருநாளும் அங்கீகரித்ததில்லை என்றார்.
குரு கன்னா தவிர, மற்றொரு கிறிஸ்தவ சபை குருவும், கத்தோலிக்க குரு ஒருவரும் காஷ்மீரை விட்டு வெளியேற கட்டளையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


7. சிரியாவிற்கு உதவ ஜெனீவா செஞ்சிலுவைச் சங்கம் முடிவு

மார்ச்,06,2012. சிரியாவின் ஹோம்ஸ் நகரில் ஏவுகணைத் தாக்குதலில் காயமடைந்த பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்ய ஜெனீவாவில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் முன்வ‌ந்துள்ளது.
இது குறித்து உரைத்த மருத்துவ சேவை செய்தித் தொடர்பாளர் சாலிகு தவாகே, பாபா ஆம்ருக்கு 3 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஆபெல் கிராமத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் தமது மருத்துவச் சேவையைத் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.
இந்தக் கிராமத்தில் உள்ள பலருக்கு உணவுப்பொருட்களும், குளிருக்கு போர்வையும் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்த அவர், அடுத்ததாக இன்ஷாத் என்ற ஊரில் தங்கள் பணிகளைத் தொடர உள்ளதாகவும் அப்போது சிரியாவின் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தாரும் இச்சேவையில் இணைய உள்ளதாகவும் கூறினார்.
இதனைத் தொடந்து செஞ்சிலுவைச் சங்கத்தினரின் பாதுகாப்புக்காக பெரிய இராணுவ வாகனங்கள் பாபா ஆம்ர் பகுதிக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவம் நடத்திய அட்டூழியங்களைச் செஞ்சிலுவைச் சங்கத்தினர் பார்வையிடக் கூடாது என்பதற்காக சிரியாவின் அரசு ஆதரவாளர்கள் செஞ்சிலுவைச் சங்கத்தினரைத் தடுத்து வருகின்றனர் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.
இதுவரை சிரியாவில் நடந்த மக்கள் போராட்டத்தில் 7500 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா.வின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...