Thursday, 30 June 2011

Catholic News - hottest and latest - 30 June 2011

1. திருத்தந்தை : பாலியம், பேராயர்களுக்கு இருக்கும் பொறுப்புக்களை நினைவுபடுத்துகின்றது

2. இறையியலில் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்துள்ள மூன்று ஐரோப்பிய இறையியலாளருக்கு ஜோசப் ராட்சிங்கர் விருது

3. லொசர்வாத்தோரே ரொமானோ தினத்தாளின் 150 வருடச் சேவைக்குத் திருத்தந்தை பாராட்டு

4. கர்தினால் Georg Sterzinsky இறைபதம் அடைந்தார்

5.உலகில் பசியால் வாடும் சுமார் நூறு கோடிப் பேரைப் பசியால் துன்புறாமல் வைக்க முடியும் - திருப்பீட உயர் அதிகாரி

6. ஆசிய நாடுகளில் தேர்தல் கால ஊழல்கள் ஒழிக்கப்பட ஐ.நா.அழைப்பு

7. பாங்காக் உலக புத்தகத் தலைநகர் 2013

8. இந்தியாவில் ஏழைகள் எத்தனை கோடிப் பேர்: துவங்கியது கணக்கெடுப்பு

----------------------------------------------------------------------------------------------------------------

‌‌1. திருத்தந்தை : பாலியம், பேராயர்களுக்கு இருக்கும் பொறுப்புக்களை நினைவுபடுத்துகின்றது

ஜூன் 30,2011. பேராயர்கள் அணியும் பாலியம் என்ற கழுத்துப்பட்டை, விசுவாசம், அன்பு இறைமக்களை வழிநடத்துதல் ஆகியவற்றின் ஒன்றிப்பின் அடையாளமாக இருக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
தூயவர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவான இப்புதன்கிழமையன்று பாலியம் பெற்ற நாற்பது புதிய பேராயர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை இவ்வியாழனன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, ஆயர்கள் என்ற முறையில் இந்தப் பேராயர்களுக்கு இருக்கும் பொறுப்புக்களையும் இந்தப் பாலியம் நினைவுபடுத்துகின்றது என்றார்.
இந்தியாவின் ஆந்திர மாநிலம் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த இந்தப் புதிய பேராயர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு பல ஐரோப்பிய மொழிகளிலும் இவ்வுரையை வழங்கினார் திருத்தந்தை.
இந்தப் புதிய பேராயர்கள் தங்களது மேய்ப்புப்பணியைத் திறம்பட ஆற்றுவதற்கு ஊக்கமளித்ததோடு அவர்களுக்காகச் செபம் செய்வதாகவும் உறுதியளித்தார் திருத்தந்தை.

2. இறையியலில் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்துள்ள மூன்று ஐரோப்பிய இறையியலாளருக்கு ஜோசப் ராட்சிங்கர் விருது

ஜூன் 30,2011. இறையியலில் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்துள்ள மூன்று ஐரோப்பிய இறையியலாளருக்கு ஜோசப் ராட்சிங்கர் விருதை இவ்வியாழனன்று வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தை 16ம் பெனடிக்டின் திருமுழுக்குப் பெயரான ஜோசப் ராட்சிங்கர் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இவ்விறையியல் விருதை முதன்முறையாக வழங்கி உரையாற்றிய அவர், இறையியல் என்றால் என்ன என்பதை விளக்கினார்.
வத்திக்கானில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிறிஸ்தவ வரலாற்றுப் பேராசிரியரான உரோமை நகரைச் சார்ந்த 85 வயது நிரம்பிய Manilo Simonetti, பல இறையியல் நூல்களை எழுதியுள்ள இஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 76 வயது குரு Olegario Gonzalez de Cardedal, Cistersian துறவு இல்ல அதிபரும், இறையியலாலருமான 50 வயது நிரம்பிய ஜெர்மானியக் குரு Maximilian Heim ஆகியோர் இவ்விருதைப் பெற்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் ஐம்பதாயிரம் யூரோக்களையும் பெற்றனர்.
ஜோசப் ராட்சிங்கர் அறிவியல் கழகம் என்ற வத்திக்கான் அமைப்பு இவ்விருதை வழங்குகின்றது. இவ்வறிவியல் கழகத்தின் தலைவர் கர்தினால் கமிலோ ரூயினி  ஆவார். இறையியல் துறையை, சிறப்பாக, திருமறைநூல், திருச்சபைத் தந்தையர்கள், அறிவு மற்றும் கலாச்சாரத்தை மையப்படுத்தும் இறையியல் ஆகிய துறைகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

3. லொசர்வாத்தோரே ரொமானோ தினத்தாளின் 150 வருடச் சேவைக்குத் திருத்தந்தை பாராட்டு

ஜூன் 30,2011. லொசர்வாத்தோரே ரொமானோ”(L'Osservatore Romano) என்ற திருப்பீடச் சார்பு தினத்தாள், கடந்த 150 ஆண்டுகளாக உண்மையைத் தலையாய நோக்கமாகக் கொண்டு திருத்தந்தையின் மறைப்பணியோடு என்றும் ஒன்றித்துச் செயல்பட்டு வருகின்றது என்று புகழாரம் சூட்டினார்  திருத்தந்தை.
லொசர்வாத்தோரே ரொமானோ தினத்தாளின் 150ம் வருட நினைவை முன்னிட்டு அத்தினத்தாளின் இயக்குனருக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, 1861ம் ஆண்டு ஜூலை ஒன்றாந்தேதி இத்தினத்தாளின் முதல் பிரதி வெளிவந்ததைக் குறிப்பிட்டு அதன் 150 வருடச் சேவையைப் பாராட்டியுள்ளார்.
திருத்தந்தையின் தினத்தாள் என்று வழக்கமாக இது அழைக்கப்படுகின்றது என்றும், உலகப் போர்களின் காலத்திலும் அதற்குப் பின்னானப் பனிப்போரின் போது கிறிஸ்தவருக்கு எதிரான அடக்குமுறைகளின் போதும் இத்தினத்தாள் திருத்தந்தையர் 15ம் பெனடிக்ட், 11ம் மற்றும் 12ம் பத்திநாதர் ஆகியோருக்குத் தைரியமுடன் ஆதரவு வழங்கியதையும் நினைவுகூர்ந்துள்ளார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.
2008ம் ஆண்டில் மலையாள மொழியில் வெளியானது உட்பட 20ம் நூற்றாண்டின் இரண்டாவது பாதிப் பகுதியில் பல்வேறு மொழிகளில் இத்தினத்தாள் உலகெங்கும் விநியோகிக்கப்பட்டதையும் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் அவர்.
தற்சமயம் இணையதளம் உட்பட நவீன தொழிட்நுட்பத்தில் லொசர்வாத்தோரே ரொமானோ தினத்தாள் கொண்டுள்ள வளர்ச்சியையும் சுட்டிக்காட்டி இதில் பணி செய்வோர் எல்லாருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.

4. கர்தினால் Georg Sterzinsky இறைபதம் அடைந்தார்

ஜூன் 30,2011. ஜெர்மனியின் பெர்லின் உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயர் கர்தினால் Georg Sterzinsky இவ்வியாழன் காலை இறைபதம் அடைந்தார்.
இவ்விறப்பையொட்டி பெர்லின் உயர்மறைமாவட்டத்திற்கு இரங்கல் தந்தி அனுப்பிய திருத்தந்தை, கர்தினால் Sterzinsky தலத்திருச்சபைக்கும் அகிலத் திருச்சபைக்கும் ஆற்றிய சேவைகளைப் பாராட்டியிருப்பதோடு அவரின் ஆன்மா நிறைசாந்தியடையச் செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
1936ம் ஆண்டு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த கர்தினால் Sterzinskyயின் குடும்பமும், ஜெர்மனியின் மற்ற குடும்பங்களைப் போலவே இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1946ம் ஆண்டில் Thüringen என்ற ஊரில் புகலிடம் தேடியது. பின்னர் தனது படிப்பைத் தொடர்ந்த அவர், 1960ல் குருவானார். 1989ல் பெர்லின் ஆயரானார். 1991ல் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.
கர்தினால் Sterzinskyன் இறப்போடு திருச்சபையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 197. இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 114 ஆக உள்ளது.

5.உலகில் பசியால் வாடும் சுமார் நூறு கோடிப் பேரைப் பசியால் துன்புறாமல் வைக்க முடியும் - திருப்பீட உயர் அதிகாரி

ஜூன் 30,2011. இயற்கைப் பேரிடர்கள் தவிர்க்க முடியாதவைகளாக இருக்கக்கூடும் ஆனால் உலகில் பசியால் வாடும் சுமார் நூறு கோடிப் பேரைப் பசியால் துன்புறாமல் வைக்க முடியும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
FAO எனும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் உரோமையில் நடத்தி வரும் 37 வது அமர்வில் கலந்து கொள்ளும்  FAO வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் லூயிஜி த்ரவலினோ இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
2015ம் ஆண்டுக்குள் உலகின் ஏழ்மையைப் பாதியாகக் குறைப்பதற்கு FAO முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் இதற்கு அனைத்து நாடுகளும் பொது மக்கள் சமுதாயமும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் இந்த இலக்கை அடைய இயலும் என்றார் அவர்.
FAOவில் இடம் பெறும் கூட்டமானது இச்சனிக்கிழமை நிறைவடையும். இந்த ஐ.நா. நிறுவனத்தில் திருப்பீடம் 1948ம் ஆண்டிலிருந்து நிரந்தரப் பார்வையாளராக இருந்து வருகிறது.

6. ஆசிய நாடுகளில் தேர்தல் கால ஊழல்கள் ஒழிக்கப்பட ஐ.நா.அழைப்பு

ஜூன் 30,2011. ஆசிய நாடுகள் தேர்தல் காலங்களில், ஊழல்கள் மற்றும் பொய்யான நடவடிக்கைகளுக்குத் தள்ளப்பட்டுள்ளன, எனவே தேர்தல்களில் மக்களின் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா.அறிக்கை ஒன்று வலியுறுத்தியுள்ளது.
UNDP என்ற ஐ.நா.வின் வளர்ச்சித் திட்ட அமைப்பு, பங்களாதேஷ், இந்தியா, இந்தோனேசியா, நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் ஆய்வு செய்து ஆசியாவில் தேர்தல் வன்முறையைப் புரிந்து கொள்ளுதல் எனும் தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கேட்டுள்ளது.
சந்தேகமும் புகார்களுமே, சனநாயகங்களில் மக்களின் நம்பிக்கைகளை இழப்பதற்குப் போதுமானவைகளாக இருக்கின்றன என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

7. பாங்காக் உலக புத்தகத் தலைநகர் 2013

ஜூன் 30,2011. பாங்காக் நகரை உலக புத்தகத் தலைநகர் 2013 என்று ஒரு சர்வதேச குழு குறித்திருப்பதாக யுனெஸ்கோ என்ற ஐ.நா.வின் கல்வி, கலாச்சார மற்றும் அறிவியல் நிறுவனம் அறிவித்தது.
உலக அச்சகங்கள் மற்றும் யுனெஸ்கோவில் நியமிக்கப்பட்ட ஒரு சர்வதேச குழு, இப்புதனன்று பாரிசில் கூட்டம் நடத்திய போது பாங்காக்கை 13வது உலக புத்தகத் தலைநகராகத் தேர்ந்தெடுத்தது என்று யுனெஸ்கோ அறிவித்தது.
பல்வேறு புத்தகங்களைக் கொண்டு வருவதற்கு பாங்காக் இசைவு தெரிவித்ததையொட்டி இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
2003ம் ஆண்டில் இந்தியாவின் புதுடெல்லி உலக புத்தகத் தலைநகராக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

8. இந்தியாவில் ஏழைகள் எத்தனை கோடிப் பேர்: துவங்கியது கணக்கெடுப்பு

ஜூன்30,2011. இந்தியாவில் சமூக-பொருளாதரா ரீதியில் பின்தங்கியவர்கள் மற்றும் வறு‌மைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் யார்? யார்? என்பது குறித்த தேசிய அளவிலான கணக்கெடுப்புப் பணி இப்புதன்கிழமை துவங்கியது.
மத்திய அரசின் உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி, நாட்டில் ஏழைகள், சமூக-பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் என வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பற்றிய விவரங்களை தேசிய அளவில் தகவல் சேகரிக்க மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகம், மக்கள்‌தொகை கணக்கெடுப்புத்துறை ஆகியன இணைந்து இப்பணியை துவக்கின.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் மேற்கு மாவட்டம் ஒன்றின் பழங்குடியினர் கிராமத்தில் இந்தக் கணக்கெடுப்பை இந்திய ஊரக வளர்ச்சித்துறைச் செயலர் பி.கே. சின்ஹா துவக்கி வைத்தார்.
ஏற்கெனவே, கடந்த பிப்ரவரி மாதம் பொதுவான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்றது. தற்போது துவங்கியுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, வறுமைக்கோட்டுக்கீழ் உள்ளவர்களைக் கண்டறிந்து, நலத்திட்டங்கள் அவர்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்கான முயற்சி என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இக்கணக்கெடுப்பில், வாகனம், வீடு, வீட்டுத் தொலைபேசி, மீன்பிடிப்படகு வைத்திருப்போர், வருமான வரி செலுத்துவோர் உள்பட பல்வேறு தரப்பினர், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள்.
இந்தக் கணக்கெடுப்பு 40 நாட்களில் முடிவடையும் என்றும், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தவும் அரசின் மானியங்களை வழங்குவதற்கும் அந்தத் தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் இந்திய அரசின் பதிவாளரும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையருமான சந்திரமெளலி தெரிவித்துள்ளார்.
14 ஆண்டுகளுக்கு பிறகு இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...