Wednesday, 29 June 2011

Catholic News - hottest and latest - 29 June 2011

1.திருத்தந்தை : புனிதர்கள் பேதுரு, பவுலின் அன்பு மற்றும் விசுவாச வாழ்வின் சாட்சியம், மக்களை உண்மைக்கு வழிநடத்திச் செல்கின்றது 

2. கருணைக்கொலை குறித்த மசோதாவுக்குக் இஸ்பெயின் ஆயர்கள் கண்டனம்

3.ஒரே பாலினத் திருமணங்கள் சட்டத்திற்கு நியுயார்க் ஆயர்கள் எதிர்ப்பு

4.மத்திய பிரதேசத்தில் அமைதியை ஊக்குவிப்பதற்கு அனைத்துப் பள்ளிகளிலும் எல்லா மதங்கள் பற்றியும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் : அருட்பணி முட்டுங்கல்

5.எல்லைகளையல்ல, மக்களைப் பாதுகாப்பதற்கு காரித்தாஸ் அழைப்பு

6.பாகிஸ்தானில் சிறுபான்மை அமைச்சகத்தை இரத்து செய்வது அடக்குமுறைகளுக்கு உதவக்கூடும், திருச்சபை கவலை

7.உலகில் கால்நடைகளைத் தாக்கிய தொற்று நோய் ஒழிக்கப்பட்டுவிட்டது, ஐ.நா.அறிவிப்பு

8.ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகள் கடும் உணவு நெருக்கடியை எதிர்நோக்குகின்றன, ஐ.நா. அறிவிப்பு



----------------------------------------------------------------------------------------------------------------

1.திருத்தந்தை : புனிதர்கள் பேதுரு, பவுலின் அன்பு மற்றும் விசுவாச வாழ்வின் சாட்சியம், மக்களை உண்மைக்கு வழிநடத்திச் செல்கின்றது 

ஜூன்29,2011. புனிதர்கள் பேதுரு, பவுலின் அன்பு மற்றும் விசுவாச வாழ்வின் சாட்சியம், திருச்சபையின் மேய்ப்பர்களை ஒளிர்விக்கிறது மற்றும் மக்களை உண்மைக்கு வழிநடத்தி கிறிஸ்துவில் விசுவாசம் கொள்வதற்குப் பயிற்சியளிக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
உரோம் நகரின் பாதுகாவலர்களான புனிதர்கள் பேதுரு, பவுலின் பெருவிழாவான இப்புதனன்று நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இந்த மாபெரும் இரண்டு இளவரசர்களின் விலைமதிப்பில்லாக் குருதியினால் வளமடைந்த உரோம் நகரே அகமகிழ்வாய் என்றும் கூறினார்.
குறிப்பாக, புனித பேதுரு, திருத்தூதர்கள் குழுவின் ஒன்றிப்பைக் குறித்து நிற்கின்றார் என்று சொல்லி, இதனால் வத்திக்கான் பேதுரு பசிலிக்காவில் நடைபெற்ற இன்றையத் திருவழிபாட்டில் நாற்பது புதிய பேராயர்களுக்குப் பாலியம் என்ற கழுத்துப்பட்டை வழங்கினேன் என்றார் திருத்தந்தை.
இந்தப் பாலியமானது, இறைமக்களை மீட்பின் பாதையில் நடத்திச் செல்லும் மறைப்பணியில் உரோம் ஆயருடன் பேராயர்கள் கொண்டுள்ள ஒன்றிப்பின் வெளிப்பாடாக இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.
இப்பெருவிழா நாளில் தான் தனது அறுபதாவது குருத்துவத் திருநிலைப்பாட்டைச் சிறப்பித்ததையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, இந்த நாளில் தனக்காகச் செபித்த மற்றும் தனக்கு வாழ்த்துக் கூறிய எல்லாருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
இந்த நாளின் அர்த்தமுள்ள நிகழ்வில் கலந்து கொண்ட கான்ஸ்டாண்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தலைவர் தலைமையிலான பிரதிநிதி குழுவுக்கும், இந்நாளில் பாலியம் பெற்ற நாற்பது பேராயர்களுடன் வந்திருந்த அனைவருக்கும் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

2. கருணைக்கொலை குறித்த மசோதாவுக்குக் இஸ்பெயின் ஆயர்கள் கண்டனம்

ஜூன்29,2011. இஸ்பெயின் நாட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கருணைக்கொலை குறித்த மசோதாவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள அதேவேளை, அம்மசோதாவின் தற்போதைய கூறுகள் இரத்து செய்யப்பட வேண்டும் அல்லது மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று இஸ்பெயின் ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மாண்புச் சட்டத்துடன்கூடிய மரணம்என்ற தலைப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இம்மசோதா குறித்து கருத்து தெரிவித்த இஸ்பெயின் ஆயர்கள், மனிதர் வாழ்வதற்கான உரிமையை சகித்துக் கொள்ளும் அல்லது அதனை மீறும் சட்டங்கள் அநீதியானவை, எனவே இவற்றுக்கு மக்கள் பணிந்து நடக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளனர்.
இந்தச் சட்டங்கள் அனைத்துச் சனநாயக வழிகளிலும் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று இவ்வாரத்தில் வெளியிட்ட அறிக்கையில் ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அதேசமயம் மக்களின் மனச்சான்றின் உரிமை மதிக்கப்பட வேண்டும் என்றும் இஸ்பெயின் ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

3.ஒரே பாலினத் திருமணங்கள் சட்டத்திற்கு நியுயார்க் ஆயர்கள் எதிர்ப்பு

ஜூன்29,2011. திருமணம் குறித்து மனித வரலாற்றில் காலம் காலமாய்ப் புரிந்துகொள்ளப்பட்ட கூறுகளை மாற்றும் மசோதாவுக்கு நியுயார்க் மாநிலம் அங்கீகாரம் அளித்திருப்பது தங்களுக்கு மிகுந்த கவலையையும் ஏமாற்றத்தையும் அளித்திருப்பதாக அம்மாநிலத்தின் எட்டு கத்தோலிக்க ஆயர்கள் கூறினர்.
நியுயார்க் பேராயர் திமோத்தி டோலன் மற்றும் பிற ஆயர்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், கத்தோலிக்கத் திருச்சபையின் தெளிவான போதனையின்படி, ஒரே பாலினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ள சகோதர சகோதரிகளை மதிக்கிறோம், அதேசமயம் திருமணம் என்பது ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே வாழ்வு முழுவதும் ஏற்படும் பந்தம் என்பதையும் உறுதியுடன் வலியுறுத்துகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
ஒரே பாலினத் திருமணங்களை அங்கீகரிக்கும் நியுயார்க் மாநில அரசின் நடவடிக்கை, திருமணம் மற்றும் குடும்பத்தின் அடிப்படை விழுமியங்கள் குன்றிப்போகக் காரணமாக அமையும் என்று ஆயர்கள் எச்சரித்துள்ளனர்.

4.மத்திய பிரதேசத்தில் அமைதியை ஊக்குவிப்பதற்கு அனைத்துப் பள்ளிகளிலும் எல்லா மதங்கள் பற்றியும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் : அருட்பணி முட்டுங்கல்
           
ஜூன்29,2011. சமூகத்தில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் வளர்ப்பதற்கு மத்திய பிரதேச மாநிலத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் இந்துமதம் பற்றி மட்டுமல்லாமல் எல்லா மதங்கள் பற்றியும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று மத்திய பிரதேச மாநில ஆயர் பேரவையின் பொது உறவுகளுக்கானத் தலைவர் அருட்பணி ஆனந்த் முட்டுங்கல் கூறினார்.
மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் Shivraj Singh Chauhan க்கு முன்வைத்த அழைப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள அருட்பணி முட்டுங்கல், அம்மாநிலத்தில் அரசும் மதமும் தனித்தனியாக இயங்க வேண்டுமென்ற தனது அழைப்பு கேட்கப்படும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
மத்திய பிரதேச மாநிலத்தை வளமையான மாநிலமாக உருவாக்குவதற்கு அம்மாநிலத்தின் அரசியலமைப்பில் அரசும் மதமும் பிரிக்கப்படுவதற்கு முதலமைச்சர் போதுமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு உறுதி வழங்குமாறும் அருட்பணி முட்டுங்கல் கேட்டுக் கொண்டார்.
பி.ஜே.பி கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் Shivraj Singh Chauhan, சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தை வெறுப்பூட்டும் பல சட்டங்களையும் விதிமுறைகளையும் அங்கீகரித்துள்ளார் என்று கூறப்படுகின்றது.

5.எல்லைகளையல்ல, மக்களைப் பாதுகாப்பதற்கு காரித்தாஸ் அழைப்பு

ஜூன்29,2011. அரபு நாடுகளின் அண்மைப் பதட்டநிலைகளால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் குடியேற்றதாரர் மற்றும் அகதிகளுக்குச் சர்வதேச சமுதாயம் பாதுகாப்பு வழங்குமாறு அனைத்துலக கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு கேட்டுள்ளது.
நாடுகளின் எல்லைகளைப் பாதுகாப்பதைவிட மக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் கொள்கைப்பிரிவு இயக்குனர் மார்ட்டினா லிபெஷ் வலியுறுத்தினார்.
வட ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட  பதட்டநிலைகளால் அண்மை மாதங்களில் லிபியாவை விட்டு ஏழு இலட்சத்து நாற்பதாயிரம் பேரும் சிரியாவை விட்டு பத்தாயிரம் பேரும் வெளியேறியுள்ளனர். இவ்விரு நாடுகளிலிருந்தும் பெருமளவான  அகதிகள் வெளியேறி வருவது பெருமளவான மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கும் மற்றும் அப்பகுதிகளை மேலும் உறுதியற்ற  தன்மைக்கு இட்டுச் செல்லும் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் எச்சரித்துள்ளது.
வன்முறை மற்றும் பதட்டநிலைகளால் நாடுகளை விட்டு வெளியேறும் அகதிகளின் எதிர்கால வாழ்வைப் பாதுகாத்து அவர்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்குவதும், அப்பகுதிகளின் பிரச்சனைகளுக்கு நிலையான தீர்வு காண்பதும் அவசியம் என்று    லிபெஷ் கூறினார்.

6.பாகிஸ்தானில் சிறுபான்மை அமைச்சகத்தை இரத்து செய்வது அடக்குமுறைகளுக்கு உதவக்கூடும், திருச்சபை கவலை

ஜூன்29,2011. பாகிஸ்தானில் சிறுபான்மை மதங்களுக்கான அமைச்சகத்தை இரத்து செய்வதற்கான அரசின் திட்டம், அந்நாட்டில் அடக்குமுறைகளுக்குப் பச்சைக் கொடி காட்டுவதற்கு வழி அமைக்கும் என்று திருச்சபை வட்டாரங்கள் கவலை தெரிவித்தன.
பாகிஸ்தானில் சிறுபான்மை அமைச்சகத்தை மாநில வாரியாகப் பிரிப்பதற்கானப் பரிந்துரைகள் குறித்து திருச்சபை கவலை அடைந்துள்ளதாகக் கூறிய லாகூர் அருட்பணியாளர் ஒருவர், இதன்மூலம் கிறிஸ்தவர்களின் உரிமைகள் தேசிய அரசியல் திட்டத்திலிருந்து இருட்டடிப்புச் செய்யப்பட்டு விடும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், இசுலாம் அடிப்படைவாதிகள் புதிய கொடுஞ்செயல்களில் ஈடுபடுவதற்குப் பச்சைக் கொடி காட்டுவதாகவும் இது இருக்கும் என்றும் அவர் கூறினார்.
கடைசி நிமிட மாற்றங்கள் இடம் பெறவில்லையெனில் பாகிஸ்தான் அரசு இந்தத் திட்டங்களை ஜூலை ஒன்றாந்தேதியிலிருந்து செயல்படுத்த ஆரம்பித்து விடும் என்றும் அக்குரு ஃபீடெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

7.உலகில் கால்நடைகளைத் தாக்கிய தொற்று நோய் ஒழிக்கப்பட்டுவிட்டது, ஐ.நா.அறிவிப்பு

ஜூன்29,2011. இலட்சக்கணக்கான கால்நடைகள் உயிரிழப்புக்குக் காரணமான நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் இச்செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இது, பெரியம்மைக்குப் பிறகு உலகில் ஒழிக்கப்பட்ட இரண்டாவது நோய் என்றும் முதல் கால்நடை நோய் என்றும் FAO என்ற ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் அறிவித்தது.
உலகில் பெரியம்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக 1979ம் ஆண்டு டிசம்பரில் ஒரு முக்கிய அறிவியலாளர் குழு சான்றிதழ் வழங்கியது. இதனை உலக நலவாழ்வு நிறுவனம் 1980ல் அங்கீகரித்தது.

8.ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகள் கடும் உணவு நெருக்கடியை எதிர்நோக்குகின்றன, ஐ.நா. அறிவிப்பு

ஜூன்29,2011. ஆப்ரிக்காவின் கொம்பு எனப்படும் திஜிபுத்தி, எத்தியோப்பியா, கென்யா, சொமாலியா, உகாண்டா போன்ற நாடுகளில் சுமார் ஒரு கோடிப் பேர் கடும் உணவு நெருக்கடியை எதிர்நோக்குகின்றனர் என்று ஐ.நா. அறிவித்தது.
இந்நாடுகள் கடந்த அறுபது ஆண்டுகளில் தற்சமயம் கடும் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றன என்று ஐ.நா.மனிதாபிமான அலுவலகம் அறிவித்தது.
தென் சொமாலியாவிலிருந்து எத்தியோப்பிய முகாம்களுக்கு வரும் சிறாரில் ஏறக்குறைய பாதிப்பேர் ஊட்டச்சத்துக்குறையுடன் உள்ளனர் என்றும் ஐ.நா.கூறியது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...