Wednesday, 29 June 2011

Catholic News - hottest and latest - 28 June 2011

தமது குருத்துவத் திருநிலைப்பாட்டு வாழ்வில் அறுபது ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை இறைவன் தம் அருள்வரங்களால் மேலும் மேலும் நிறைத்தருளுமாறு செபிக்கின்றது, நெஞ்சார்ந்து வாழ்த்துகின்றது வத்திக்கான் வானொலி


1. Ecumenical கிறிஸ்தவ சபை பிதாப்பிதாவின் பிரதிநிதிகள் குழுவை சந்தித்தார் திருத்தந்தை

2. இப்புதனன்று தன் அறுபதாவது குருத்துவ திருநிலப்பாட்டு நினைவைச் சிறப்பிக்கின்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

3. இஸ்பெயின் இளையோர் தினக்கொண்டாட்டங்களுக்கானத் திருத்தந்தையின் பயணத்திட்டம்

4. அனைத்து வத்திக்கான் செய்திகளும் ஒரே இணையதளத்தில்

5. 53 முறைகள் இரத்ததானம் செய்ததற்காக கத்தோலிக்க அருட்சகோதரி கௌரவிக்கப்பட்டுள்ளார்

6. கேரளாவின் 10ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் திருச்சபைக்கு எதிரான பகுதிகள் நீக்கப்பட பரிந்துரை

7. ஜூலை முதல் தேதியை நாட்டின் அமைதிக்கான செபம் மற்றும் உண்ணாநோன்பின் நாளாகச் சிறப்பிக்க நிக்கரகுவா தலத்திருச்சபை அழைப்பு

8.போரினால் இடம்பெயர்ந்த இலங்கை மக்கள் இன்னும் முழுமையாக மீள்குடியமர்த்தப்படவில்லை

9. கம்போடியா இனப்படுகொலை வழக்கு விசாரணைகள் அந்நாட்டில் துவக்கம்

----------------------------------------------------------------------------------------------------------------

1. Ecumenical கிறிஸ்தவ சபை பிதாப்பிதாவின் பிரதிநிதிகள் குழுவை சந்தித்தார் திருத்தந்தை

ஜூன் 28, 2011. புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் பெருவிழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள உரோம் நகர் வந்திருந்த Ecumenical கிறிஸ்தவ சபை பிதாப்பிதாவின் பிரதிநிதிகள் குழுவை இச்செவ்வாயன்று திருப்பீடத்தில் சந்தித்து அவர்களுக்கு உரை ஒன்றும் வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தான் உயிர்த்தபின் சீடர்களை சந்தித்த இயேசு, மீட்பு நற்செய்தியின் சாட்சிகளாக இருக்குமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சீடர்கள் பலர் மறைசாட்சியாக உயிரிழந்தனர் என்ற திருத்தந்தை, உரோமையில் கொல்லப்பட்ட் புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் கல்லறைகள் விசுவாசிகளின் வணக்கத்துக்குரியதாக உள்ளதையும் சுட்டிக்காட்டினார். கத்தோலிக்கத் திருச்சபைக்கும் Ecumenical கிறிஸ்தவ சபைக்கும் இடையே இடம்பெற்றுவரும் இறையியல் பேச்சுவார்த்தைகள் ஆய்வு, சிந்தனை மற்றும் மனம் திறந்த செயல்பாட்டிற்கான அர்ப்பணத்துக்கு அழைப்பு விடுப்பதையும் திருத்தந்தை எடுத்துரைத்தார். வன்முறை, பாராமுகம், சுய‌நலப்போக்கு போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் இன்றைய உலகில், நற்செய்தி உண்மைக்கான கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிணைந்த சாட்சியம் மூலமே, மக்கள் உண்மையின் பாதையை கண்டுகொள்ள நாம் உதவ முடியும் என மேலும் கூறினார் திருத்தந்தை.

2. இப்புதனன்று தன் அறுபதாவது குருத்துவ திருநிலப்பாட்டு நினைவைச் சிறப்பிக்கின்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஜூன் 28, 2011. இப்புதனன்று தன் அறுபதாவது குருத்துவத் திருநிலைப்பாட்டு நினைவைச் சிறப்பிக்கின்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இந்த நாளை பெரும் கொண்டாட்டங்களில் செலவிடாமல், நன்றியறிவிப்பிற்கான நாளாகவும், தேவ அழைத்தலுக்கான செப நாளாகவும் சிறப்பிக்கத் திருத்தந்தை விரும்புவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
குருக்களுக்கான செப நாளாக இந்நாளைச் சிறப்பிக்க அகில உலக திருச்சபையும் முடிவெடுத்துள்ள வேளை, 60 மணி நேர திருநற்கருணை ஆராதனைக்கும் அழைப்பு விடுத்துள்ளது குருக்களுக்கான திருப்பேராயம்.
செபம் மற்றும் ஐக்கியத்தின் மூலம் திருத்தந்தைக்கு இந்நாளில் நம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கமுடியும் என அத்திருப்பேராயம் மேலும் தெரிவித்துள்ளது.

3. இஸ்பெயின் இளையோர் தினக்கொண்டாட்டங்களுக்கானத் திருத்தந்தையின் பயணத்திட்டம்

ஜூன் 28, 2011. வரும் ஆகஸ்ட் மாதத்தில் இஸ்பெயினின் மத்ரித்தில் இடம்பெறும் உலக இளையோர் தினத்தில் பங்குகொள்ளச் செல்லும் திருத்தந்தை, இளையோருக்கு ஒப்புரவு அருட்சாதனத்தை நிறைவேற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 19 முதல் 21 வரை மத்ரித் நகர் செல்லும் திருத்தந்தையின் பயணத்திட்டத்தில், இளைஞர் பிரதிநிதிகளுடன் மதிய உணவருந்தல், அவர்களுடனானச் சிலுவைப்பாதைக்குத் தலைமை தாங்குதல், அவர்களுக்கு ஒப்புரவு அருட்சாதனத்தை வழங்குதல், இரவு திருவிழிப்புச் செப வழிபாட்டில் கலந்துகொள்ளல், சர்வதேச இளையோருக்கான திருப்பலி நிறைவேற்றல் ஆகியவை இடம்பெற உள்ளன. இச்சந்திப்பின்போது திருத்தந்தை, இஸ்பெயின் நாட்டு ஆயர்கள், அந்நாட்டு மன்னர், பிரதமர் ஆகியோரையும் தனித்தனியாக சந்தித்து உரையாடுவார் எனவும் அவரின் பயணத்திட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

4. அனைத்து வத்திக்கான் செய்திகளும் ஒரே இணையதளத்தில்

ஜூன் 28, 2011. பன்வலை தொடர்புசாதனத்தின் ஒரே இணையதளத்தில் பல்வேறு கத்தோலிக்கத் தளங்களின் செய்திகளை ஒன்றிணைத்துத் தரும் வகையில் புதிய சேவையை இப்புதன் முதல் துவக்குகிறது திருப்பீடத்தின் சமூகத்தொடர்பு அவை.
திருத்தந்தையின் 60ம் ஆண்டு குருத்துவ விழாவும் புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் திருவிழாவுமான இப்புதனன்று திருத்தந்தையால் துவக்கி வைக்கப்படவுள்ள இந்தப் புதிய இணையதளம்,  'லொசொர்வாத்தோரே ரொமானோ', வத்திக்கான் வானொலி, Fides செய்தி நிறுவனம் ஆகியவைக‌ளை ஒன்றிணைத்துச் செய்திகளை வழங்குவதாக இருக்கும்.
 www.news.va என்ற பெயருடன் இப்புதன் முதல் செயல்படும் இந்த இணையதளம் முதலில் இத்தாலியம் மற்றும் ஆங்கிலத்தில் விவரங்களைக் கொண்டிருக்கும்.

5. 53 முறைகள் இரத்ததானம் செய்ததற்காக கத்தோலிக்க அருட்சகோதரி கௌரவிக்கப்பட்டுள்ளார்

ஜூன் 28, 2011. கடந்த 29 ஆண்டுகளில் 53 முறைகள் இரத்ததானம் செய்ததற்காக ஹாங்காங் கத்தோலிக்க அருட்சகோதரி ஒருவரை கௌரவித்துள்ளது செஞ்சிலுவைச் சங்கம்.
திரு இரத்த சபையைச் சேர்ந்த அருட்சகோதரி Anna Chinன் இந்த அரிய சேவைக்காக அவரைக் கௌரவிப்பதாக அறிவித்தது செஞ்சிலுவைச் சங்கம்.
25 தடவைகளுக்கு மேல் இரத்ததானம் செய்த 1600 பேர் ஹாங்காங்கில் செஞ்சிலுவைச்சங்கத்தால் கௌரவிக்கப்பட்டுள்ள நிலையில், அருட்சகோதரி 53 முறைகள் இரத்ததானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

6. கேரளாவின் 10ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் திருச்சபைக்கு எதிரான பகுதிகள் நீக்கப்பட பரிந்துரை

ஜூன் 28, 2011.   கேரள மாநிலத்தின் 10ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் திருச்சபைக்கு எதிரான பகுதிகள் நீக்கப்படவேண்டும் என அது குறித்து ஆய்வு செய்த வல்லுனர் குழு பரிந்துரை செய்துள்ளது.
இது குறித்து ஆய்வு செய்ய அரசால் நியமிக்கப்பட்ட இருவர் அடங்கிய குழு, பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தின் சில பகுதிகள் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருப்பதாகவும், அப்பகுதிகள் நீக்கப்படவேண்டும் எனவும் பரிந்துரைச் செய்துள்ளது.

7. ஜூலை முதல் தேதியை நாட்டின் அமைதிக்கான செபம் மற்றும் உண்ணாநோன்பின் நாளாகச் சிறப்பிக்க நிக்கரகுவா தலத்திருச்சபை அழைப்பு

ஜூன் 28, 2011. நிக்கரகுவா நாட்டில் வரும் நவம்பரில் தேர்தல்கள் இடம்பெற உள்ள நிலையில், ஜூலை முதல் தேதியை நாட்டின் அமைதி மற்றும் நிலையான தன்மைக்கான செபம் மற்றும் உண்ணாநோன்பின் நாளாகச் சிறப்பிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டு பேராயர் Leopoldo Brenes Solorzano.  தேர்தலை ஒரு போர்க்களமாக மாற்றாமல் இருக்க இப்போதிருந்தே வன்முறைகளையும் தீவிரவாதங்களையும் மக்கள் கைவிட்டு, அமைதியின் பாதையில் இப்போதே நடைபோட பழக வேண்டும் என அழைப்பு விடுத்தார் மனகுவா பேராயர்.
ஏனைய பல நாடுகளில் இடம்பெறுவதுபோல் நிக்கரகுவாவிலும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கப்பட்டு அமர்த்தப்பட வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த பேராயர் Brenes Solorzano, இது அமைதிக்கும் நிலையானத்தன்மைக்கும், ஒரு வெளிப்படையானப் போக்கிற்கும் சிறப்புப் பங்காற்றுவதாக இருக்கும் என்றார்.

8. போரினால் இடம்பெயர்ந்த இலங்கை மக்கள் இன்னும் முழுமையாக மீள்குடியமர்த்தப்படவில்லை

ஜூன் 28, 2011. இலங்கை அரசு கூறுவதுபோல் போரினால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் முழுமையாக மீள்குடியமர்த்தப்படவில்லை எனவும், வன்னியில் எங்கும் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு, பௌத்தக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதாகவும்,போருக்குப் பின்னர் தமிழ் மக்கள் குறித்த உண்மை நிலையை அறிய மலேசியாவில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் இலங்கைக்குப் பயணம் செய்து திரும்பிய ஒரு குழுவினர் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மக்களை முழுமையாக மீள்குடியமர்த்தி விட்டோம் என இலங்கை அரசு சர்வதேச சமூகத்திடம் சொல்வதில் உண்மையில்லை என்பதை நேரடியாகக் கண்டு உணர முடிந்தது எனக்கூறும் இக்குழு, 30 ஆண்டுகாலப் போரினால் 90 ஆயிரம் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர், 40 ஆயிரம் பேர் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர் எனவும் தெரிவித்தது.
முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட எல்லோரும் முழுமையாக மீள் குடியமர்த்தப்படவில்லை. இன்னும் இரண்டு பெரிய முகாம்கள் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன என மேலும் கூறியது, அண்மையில் இலங்கையிலிருந்து திரும்பிய இக்குழு.

9. கம்போடியா இனப்படுகொலை வழக்கு விசாரணைகள் அந்நாட்டில் துவக்கம்
 
ஜூன் 28, 2011. பொல்பொட் தலைமையிலான கெமரூஜ் என்ற கம்யூனிசக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் 1970களின் இறுதியில் ஏறத்தாழ 20 இலட்சம் கம்போடியர்கள் கொல்லப்பட்டது குறித்த விசாரணை தலைநகர் நாம்பென்னில் ஆரம்பித்துள்ளது.
நான்கு ஆண்டு கால கெமரூஜ் ஆட்சியில் புரியப்பட்ட இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரானக் குற்றங்களுக்காக, தற்போது உயிரோடு இருக்கும் கெமரூஜ் கட்சியைச் சேர்ந்த நான்கு மூத்த உறுப்பினர்கள் மீது நீதி விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
உரிமை மீறல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட நாலாயிரம் பேரின் சாட்சியங்களும் வழக்கு விசாரணைகளின் போது பதிவு செய்யப்படவுள்ளன.
கம்போடியாவில் 1970களின் இறுதியில் ஏறத்தாழ 20 இலட்சம் பேர் உயிரிழந்ததற்கு, கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல், பசி பட்டினி மற்றும் சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் காரணமாக இருந்தன.
இந்தச் சிறப்பு தீர்ப்பாயம் பணியாற்றத் தொடங்கி ஆறு ஆண்டுகளாகி விட்ட நிலையில், வழக்கு விசாரணைகள் பூர்த்தியடைய இன்னும் பல ஆண்டுகள் எடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...