இரத்தன் டாடா மறைவிற்கு இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை இரங்கல்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இந்தியாவின் பிரபல தொழிலதிபரான இரத்தன் டாடா தொழில்துறையில் சிறந்து விளங்கியவர் மட்டுமல்ல, கருணை மற்றும் தாராள மனப்பான்மையின் கலங்கரை விளக்கமாக இருந்தவர் என்று தெரிவித்துள்ளது இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை.
தலைசிறந்த தொழிலதிபரும், தொலைநோக்குப் பார்வை கொண்டவரும், எதிர்காலத் தலைமுறையினர் மற்றும் சந்ததியினரின் நல்வாழ்விற்காக ஏராளமாகப் பங்களித்தவருமான இந்தியாவின் இரத்தன் டாடா அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை.
அக்டோபர் 9 புதன்கிழமை மாலை இறந்த இந்தியாவின் பிரபல தொழிலதிபரான இரத்தன் டாடா அவர்களின் மறைவைக் குறித்து வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையானது, டாடா அறக்கட்டளைகள் மற்றும் சமுதயாநலனை அடிப்படையாகக் கொண்ட அவரது பல்வேறு விதமான முயற்சிகள் வழியாக இலட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தவர் டாடா என்றும் குறிப்பிட்டுள்ளது.
விளிம்புநிலை மக்களின் நலனுக்காக போராடியவர், இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர், சமூகநீதி, கல்வி, சுகாதாரம் மற்றும் கிராமப்புற மக்களுக்கான பணியில் ஆழமான அர்ப்பணிப்பு கொண்டவர் என்றும், அவரது அர்ப்பணமுள்ள வளர்ச்சி கத்தோலிக்க திருஅவையின் முக்கியமான விழுமியங்களான ஏழை மற்றும் பலவீனமானவர்களுக்கு பணியாற்றும் நோக்கத்தை எதிரொலிக்கின்றது என்றும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்திய நாட்டை கட்டியெழுப்புவதில் டாடா அவர்களுக்கு இருந்த பங்களிப்பு, உலகப் பொருளாதார சக்தியாக இந்தியாவை நிலைநிறுத்துவதில் அவரது பங்கு ஆகியவற்றை நினைவுகூர்ந்துள்ள ஆயர் பேர்வையானது ஏழைகளுக்கு உதவ வேண்டியதன் அவசியத்தை அவர் ஒருபோதும் இழந்ததில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
மறைந்த இரத்தன் டாடா அவர்களின் ஆன்மா இறைவனில் நித்திய இளைப்பாற்றி அடைய செபிப்பதாகவும் அவரது மறைவினால் வருந்தும் குடும்பத்தாருக்கு ஆன்மிக ஆறுதலையும் உடனிருப்பையும் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை.
No comments:
Post a Comment