Monday, 7 October 2024

அக்.1. முதியோர் பராமரிப்பு. அக்.2. அகிம்சை தினம்

 

அக்.1. முதியோர் பராமரிப்பு. அக்.2. அகிம்சை தினம்


முதியோர் இல்லங்களை உருவாக்கி பெரியோரைச் சிறைவைத்துவிட்டு, முதல் தலைமுறைக்கும் மூன்றாம் தலைமுறைக்கும் இடையேயான தொடர்பை அறவே துண்டித்துவிட்டோம் நாம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஆலோசனைப்படி,  அனைத்துலக முதியோர் தினம் 1991ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும், மரியாதையை செலுத்தவும், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவுகூரும் வகையிலும், அவர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் சாதனைகளை பார்த்துக் கற்றுக்கொள்ளவும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாக முதியோர் தினம் கொண்டாடப்படுவதே இதன் முக்கிய நோக்கம்.

முதுமை என்பது நோயல்ல, அது மனிதன் மறுபடியும் குழந்தையாகின்ற ஒரு பருவமாகும். தனது பிள்ளைகளிடமிருந்தும் சொந்த பந்தங்களிடமிருந்தும் அன்பையும் அரவணைப்பையும் பாதுகாப்பையும் எதிர்பார்க்கும் காலம் இது. இவை கிடைக்காத சூழல்களில் மனவேதனையுடன் சமூகத்திலிருந்து ஓரமாக ஒதுங்குகின்றனர் முதியோர். இது போன்ற காரணங்களால்தான் ஒவ்வொரு மனிதனும் சமூகமும் வயதில் முதியோர்களை கண்ணியமாகவும் கௌரவமாகவும் நடத்துவதற்கும், முதியோர்களின் நலனை பாதுகாப்பதற்கும், உரிமைகளை மதிப்பதற்கும் ஐக்கிய நாடுகள் நிறுவனம் அக்டோபர் முதல் தேதியை அனைத்துலக முதியோர் தினமாக அறிவித்துள்ளது.

கடந்த நூற்றாண்டு நடுப்பகுதிவரை கூட்டு குடும்ப வாழ்வில் முதியவர்கள் போதியளவு கவனிக்கப்பட்டார்கள் என்று கூறலாம். எல்லாவற்றிலும் முதியோரின் ஆலோசனைகளையும் அனுபவத்தையும் பெற்றுக் கொண்டோம். உறவுகளுடனான மனப்பகிர்வும், கொண்டாட்டங்கள், குடும்ப வைபவங்கள், உற்சவங்கள் என்பவற்றில் பங்கேற்பதன் மூலம் கிடைக்கும் மன நிறைவு முதியவர்களுக்கு உற்சாகத்தை அளித்ததுடன் அவர்கள் இடையூறின்றி இயங்குவதற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. முன்னொரு காலத்தில் முதியோருக்கும் பேரப்பிள்ளைகளுக்குமிடையில் நல்ல பிணைப்பு இருந்தது. ஆனால் அந்த நிலைமை தற்போது மாறி அவர்களிடமிருந்து தங்கள் பிள்ளைகளை பிரித்து வாழ்வதனையே பெற்றோர் விரும்புகின்றனர். இதனால், வயதானவர்களின் அனுபவங்கள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு கிட்டாமல் போய்விடும் அபாயம்தான் மிஞ்சி நிற்கிறது.

வார்த்தைகள் தடுமாறும் என்றாலும், வாழ்க்கை தடுமாறாமல் வழிகாட்ட வல்லவர்கள் முதியவர்கள். ஆனால், நவீன உலகம் என்ன செய்திருக்கிறது?  முதியோர் இல்லங்களை உருவாக்கி அவர்களை சிறைவைத்துவிட்டு, முதல் தலைமுறைக்கும் மூன்றாம் தலைமுறைக்கும் இடையேயான தொடர்பை அறவே துண்டித்துவிட்டது. மனிதராக பிறந்த அனைவரும் ஒருநாள் முதுமையினை சந்தித்தே ஆகவேண்டும். உலகில் மிகவும் அமைதியும் நிம்மதியுமாக வாழ வேண்டிய பருவம் முதுமைப்பருவம். முதுமையை போற்றி பாராட்டி பாதுகாத்த காலம் மாறி, இன்றைய நவீன காலத்தில் அவர்களைக் குடும்பத்திற்கு பெரும் சுமையாக எண்ணி முதியோர் இல்லத்தில் ஒப்படைக்கும் நிலைக்கு நம்மை சுயநலம் மாற்றிவிட்டது.

நவீன வாழ்க்கை முறை, நகரத்தை நோக்கிய நகர்வு, பொருளாதார காரணிகள் காரணமாக முதியவர்களை சுமையாக நோக்குகிறோம். இந்த சுயநல சுமை உணர்வே, முதியோர் இல்லங்கள் அதிகரிப்பதற்கும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் பிச்சைக்காரர்களாக வீதியோரங்களிலும் பேருந்துகளிலும் கையேந்துவதற்கும் காரணங்களாகின்றன.

இன்று செய்திகளில் அடிக்கடி பார்க்கும் செய்தியை உங்களுடன் பகிர விரும்புகிறோம்.

வீட்டை எழுதி வாங்கிக் கொண்டு பெற்றோரை விரட்டிய மகன்;  நான்கு ஆண்பிள்ளைகளைப் பெற்றும் தெருவில் பிச்சையெடுக்கும் தாய், தன் பேரப்பிள்ளைகளை பார்க்க ஏங்கித்துடிக்கும் பாட்டி என இதுபோன்ற எத்தனையோ செய்திகளைப் படிக்கும்போது உலகம் இவ்வளவு சுயநலமாக மாறிவிட்டதே என்ற கண்ணீர்தான் வருகிறது.  

முதியோர்களின் கொடுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15-ம் தேதியை ‘முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு ஊட்டும்’ நாளாக 2006ஆம் ஆண்டில் இருந்து கடைபிடித்துவருகிறோம். முதியோர்களை சரியாகப் பராமரிக்காவிட்டால் அதற்கு பொறுப்புள்ள மகன் அல்லது மகளை தண்டிக்க ஒரு சட்டத்தையும் கொண்டுள்ளோம். அப்படியிருந்தும் முதியோர், பிள்ளைகளால் கைவிடப்பட்டு அநாதைகளாக்கப்பட்டுள்ளது ஏன்?

தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 75 இலட்சம் முதியோர் உள்ளனர். 2030-ல் இந்த எண்ணிக்கை 1.5 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.   2030ஆம் ஆண்டில் உலகில் முதியவர்களின் எண்ணிக்கை 140 கோடியாக உயருமாம். அறிவியல் மற்றும் மருந்துக்களின் கண்டுபிடிப்புக்களால் மனிதனின் ஆயுட்காலம் அதிகரிக்க அதிகரிக்க, முதியோர் குறித்த இளம் தலைமுறையினரின் பொறுப்புணர்வுகளுக்குப் பதிலாக வெறுப்புணர்வுகளே அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது.

வயதான காலத்தில் பெரும்பாலானவர்கள் பல்வேறு நோய்களுடன் வாழ வேண்டியிருக்கிறது. பலருக்கு சரியான உறுதுணை இல்லை. படுத்த படுக்கையாகி விட்டால் பார்ப்பதற்கு யாரும் இல்லை. கைவிடப்பட்ட முதியோரின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ளது. முதுமையின் விளைவாக பலர் மறதிநோய், பக்கவாதம், உதறுவாதம் என்கிற பார்க்கின்சன்ஸ் நோய், மூட்டுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சை அவசியமாகிறது. இதற்கு பல குடும்பங்களில் நிதி வசதி இடம் கொடுக்காது. இப்படிப்பட்ட நிலையில் கருணைக்கொலையை நடைமுறைப்படுத்துவது குறித்துகூட சில நாடுகளில் வாதங்கள் இடம்பெற்றுவருவது வேதனை தரக்கூடியது.

அனைத்து முதியோர்களுக்கும் உணவு, உடை, இருப்பிடம், நல ஆதரவு வசதிகள் போன்றவை கிடைக்கப்பெற வேண்டும். அவர்கள் வாழ்வதற்கான நல்ல சூழலை உருவாக்கிக் கொள்ள அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் மற்றும் அவர்களை பாதிக்ககூடிய எந்த கொள்கை முடிவுகளிலும் அவர்களின் கருத்துக்களுக்கு அரசுகள் மதிப்பளிக்க வேண்டும். முதியோர்கள் சமூகத்திற்கு சேவை புரியவும் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். சமூக மற்றும் சட்டப் பாதுகாப்புகள் அவர்களுக்கு அளிக்க வேண்டும்.

இதன் வழி, சமூகத்திற்கு முதியவர்கள் செய்யும் மதிப்புமிக்க பங்களிப்புகளை அங்கீகரிக்கவும் பாராட்டவும் ஒரு தளத்தை வழங்குவதாக இருக்கும். உடல்நலம், சமூக தனிமைப்படுத்தல் மற்றும் பாகுபாடு போன்ற வயதான தனிநபர்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களையும் சமூகத்தின் ஓர் அங்கமாக உணரவைக்க நாம் உதவ வேண்டும்.

முதியவர்களின் மனித உரிமைகள் மற்றும் கண்ணியத்தை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை முதலில் நாம் உணர்ந்து அதனை மற்றவர்களுக்கும் உணர்த்த வேண்டும். இதன் வழி நாம், தலைமுறை இடைவெளிகளைக் குறைக்க உதவுவதுடன், சமூகங்களுக்குள் ஒற்றுமை உணர்வை வளர்க்கவும் பங்காற்றலாம்.

உலக வன்முறையற்ற தினம்

ஒவ்வோர் ஆண்டும் அகிம்சையின் உலகளாவிய அடையாளமான மகாத்மா காந்தியின் பிறந்தநாளில், அதாவது, அக்டோபர் 2ஆம் தேதி உலக அகிம்சை தினம் சிறப்பிக்கப்படுகிறது. 1869 அக்டோபர் 2இல் பிறந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அகிம்சை தத்துவத்தின் முன்னோடி ஆவார். அவர் பிரபலமான சமஸ்கிருத சொற்றொடரான 'அஹிம்சா பரமோ தர்மா' என்ற 'அகிம்சையே உயர்ந்த ஒழுக்க தர்மம்' என்பதை கையிலெடுத்துக் கொண்டார்.

அகிம்சை தினத்தை உலகில் கொண்டாடும் யோசனை முதலில் ஜனவரி 2004இல், ஈரானிய நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபாடியால் முன்மொழியப்பட்டது. மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2ஆம் தேதியை உலக அகிம்சை தினமாக அனுசரிக்க வேண்டும் என்று கோரி இந்தியாவின் சார்பில் ஜூன் 15, 2007இல் ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 142 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அத்தீர்மானம் பொதுச் சபையில் நிறைவேறியது. அகிம்சை மனித குலத்தின் வசம் உள்ள மிகப்பெரிய சக்தி, மனிதனின் புத்திசாலித்தனத்தால் உருவாக்கப்பட்ட அழிவுகரமான ஆயுதத்தை விட இது வலிமையானது என்பதை உலகம் உணர இது வழிவகுத்தது. வன்முறையாலும்,  போராலும் மட்டுமே உரிமைகளை பெற முடியும் என உலகம் நினைத்திருந்த கட்டத்தில் அது பிழையானது என நிரூபித்த காந்திஜி உலகத்தையே கைகளுக்குள் அடைக்க நினைத்த பிரிட்டானிய ஆட்சியாளர்களை ஆயுதமெடுக்காமல் நாட்டை விட்டு விரட்டிக் காட்டினார் என்பது இதன் வழி அங்கீகரிக்கப்பட்டது. காந்தியின் நடைமுறைகளால்  கவரப்பட்ட மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்றவர்கள் அகிம்சை வழியிலேயே சென்று வெற்றி பெற்றுக் காட்டினர். ‘அகிம்சை என்பது வலிமையற்றவர்களின் ஆயுதமல்ல,  வலிமையற்றவர்கள் வன்முறையை தான் தேர்வு செய்வார்கள், வலிமையானவர்களால் மட்டுமே அகிம்சையின் பாதையில் நடக்க முடியும். எதிரியை எழ முடியாமல் அடித்து வீழ்த்த வலிமை தேவையில்லை, எந்த தாக்குதலையும் சமாளித்து எழுந்து நிற்கவே வலிமை தேவை” என்று மகாத்மா காந்தி கூறிய வாசகங்கள் ஆழமாக சிந்தித்துப் பார்க்க இன்றும் என்றும் நமக்கு அழைப்பு விடுத்துக்கொண்டேயிருக்கின்றன.

அகிம்சைப் போராட்டத்தின் பலம் எத்தகையது என்பதற்கான ஓர் உதாரணமாக இந்தியாவில் 1930இல் காந்தி மேற்கொண்ட ‘உப்பு பேரணி” காணப்படுகிறது. 1942ல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு!” என்ற போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார். காந்தியின் அகிம்சை போராட்டம் நான்கு அடிப்படைகளைக் கொண்டது. அவை சத்யாகிரகம் என்னும் ‘ஆத்ம வலிமை’,  சர்வோதயா என்னும் ‘யாவர்க்கும் நன்மை’,  சுவராஜ் என்னும் ‘சுய ஆளுகை’ மற்றும் சுவதேசி என்னும் ‘இது எனது நாட்டுப் பொருள்’ என்பவையே ஆகும்.

இந்த அகிம்சை என்ற ஆயுதத்திலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால், இது தைரியசாலிகளின் ஆயுதம், ஒருபோதும் கோழைகளின்   ஆயுதம் அல்ல என்பதும்,  எத்தகைய துன்பத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் ஒருபோதும் பழிவாங்க முயலாதே என்பதும், எதிரியையும் ஆதரி, ஆனால்,  தீய செயலுக்கு வெறுப்பைக் காட்டிக்கொள் என்பதும், எதிரியை தோற்கடிக்காமல் அல்லது புண்படுத்தாமல்,  காயப்படுத்தாமல் அல்லது இழிவுபடுத்தாமல்,  அன்பினூடாக எதிரியை வெற்றி கொள்வதன் மூலம் முரண்பாட்டை தீர்ப்பதில் உறுதியாக இரு என்பதும், துன்பத்தை ஏற்படுத்தாமல் துன்பத்தை ஏற்றுக்கொள் என்பவையே ஆகும்.

சத்யாகிரகம் என்பது அடுத்தவர்களைக் காயப்படுத்தும் வேலை அல்ல, மாறாக, மற்றவர்களின் மனதை இளக வைப்பது என்றார் காந்திஜி. இதன்மூலம் எதிரிகளை எளிமையாக வென்றுவிடலாம் என்பது அவரின் நம்பிக்கை.

அமைதியைக் கொண்டுவர துப்பாக்கிகளும், குண்டுகளும் தேவையில்லை. அதற்கு அன்பும், கருணையுமே அவசியம் என்றார் புனிதர் அன்னை தெரேசா. வன்முறையை விரும்பாத, அறவழியைப் போதித்த காந்திஜி, கர்மவீரர் காமராஜர் போன்ற உன்னதத் தலைவர்களை நினைவுகூரும் அக்டோபர் 2ல் நாமும், இவர்களைப் பின்பற்றி, உடலளவிலும், மனத்திலும் வன்முறை உணர்வுகளை அகற்றி வாழ்வோம்.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...