Tuesday 15 October 2024

அக்.16. உலக உணவு தினம்

 

அக்.16. உலக உணவு தினம்


வீட்டில் குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உணவின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுங்கள். அதுமட்டுமன்றி, உணவு மீந்துவிட்டால் பசியால் வாடும் மக்களுக்கு தானமாக அளிக்கலாம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அன்பு நெஞ்சங்களே, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 16ஆம் தேதியை உலக உணவு தினமாகச் சிறப்பிக்கின்றோம். இவ்வாண்டு, அதாவது 2024ஆம் ஆண்டு, ‘நல்லதொரு வாழ்வுக்கும் நல்லதொரு வருங்காலத்திற்கும் உணவுக்கான உரிமையைக் கொண்டிருத்தல்’ என்பது தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது.

உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர்வாழ அடிப்படை ஆதாரம் உணவுதான். நோய் நொடியின்றி மனிதன் உயிர்வாழ தேவையான ஊட்டச்சத்து, உணவு மூலமாகத் தான் நமக்கு கிடைக்கிறது. அத்தகைய உணவை  சிறப்பிக்க, உலக உணவு தினம், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 16 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பசி, பட்டினியால் அவதிப்படும் மக்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டது. மேலும், பசியை எதிர்த்துப் போராடுவதும் இதன் நோக்கங்களுள் ஒன்று. இது தவிர, உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள் முதல் உணவு ஏற்றுமதி, இறக்குமதி துறையில் வேலை பார்க்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாகவும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு தொடங்கப்பட்ட நாளே, 1979லிருந்து உணவு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 1981ஆம் ஆண்டு முதல், உலக உணவு தினம் ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு கருப்பொருளைக் கொண்டு கொண்டாடப்படுகிறது.

உலகில் 10 பேரில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனையை எதிர்கொள்கிறார். 2020ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலகளவில் 5 வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளில் ஒருவர் வளர்ச்சி குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பசி, பட்டினியால் தவிக்கும் மக்கள் கோடிக்கணக்கானோர் உள்ளனர்.

உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான உணவை விவசாயிகள் தயாரித்து தந்தாலும், பசி என்பது இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. உலகில் 73 கோடியே 30 இலட்சம் பேர் இன்னும் பசியால் வாடிக்கொண்டிருக்கின்றனர். கால நிலை மாற்றங்கள், மோதல்கள், பொருளாதார வீழ்ச்சி, சரிநிகரற்ற தன்மை, தொற்று நோய்கள் என காரணங்களை அடுக்கிக்கொண்டேச் சென்றாலும், உணவை உற்பத்திச் செய்யும் விவசாயியும் ஏழ்மையில் உழல்வதுதான் புரியாத புதிராக உள்ளது.

உலகில் மனிதன் உயிர்வாழ்வதற்கு தேவையான காற்று, தண்ணீர் என்பவைகளுக்கு அடுத்து உணவு வருகிறது. தேவையான அளவு உணவை கொள்வதற்கான உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது. உணவுக்கான உரிமை பன்னாட்டு அரசுகளால் மனித உரிமைகள் ஒப்பந்தத்திலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய பத்து விழுக்காட்டினர் இன்றும் பசியின் கோரப்பிடியிலேயே உள்ளனர். ஆம், ஒவ்வொரு நாளும் ஐந்துக்கு ஒருவர் பசியால் உறங்கச் செல்கின்றனர். இந்த உலகில் 35 விழுக்காட்டு மக்கள், அதாவது, 280 கோடி பேர் ஆரோக்கியமான உணவைப் பெறுவதற்கான வசதியற்றவர்களாக இருக்கின்றனர். குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் 71.5 விழுக்காட்டு மக்கள் ஆரோக்கியமான உணவை பெறுவதற்கான வசதிகளின்றி உள்ளனர். அதேவேளை, வருமானம் நிரம்பிய நாடுகளிலோ 6.3 விழுக்காட்டு மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்குவதற்கான வசதிகளின்றி உள்ளனர். உலகில் பசிக்கொடுமைகள் பற்றி இவ்வாண்டு வெளியிடப்பட்ட அறிக்கை, பசியால் அதிக அளவில் வாடும் நாடுகளாக 36 நாடுகளை குறிப்பிட்டுள்ளது. அதிலும் 6 நாடுகளை, அதாவது புருண்டி, சாடு, மடகாஸ்கர், சொமாலியா, தென்சூடான், மற்றும் ஏமனை மிகவும் கடுமையான உணவுப் பற்றாக்குறை உள்ள நாடுகளாக, அதாவது பசியால் மக்கள் துயருறும் நாடாக அறிவிக்கிறது.

2019ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் பசியால் துயருறும் மக்களின் எண்ணிக்கை 15 கோடியே 20 இலட்சம் அதிகரித்துள்ளது. உலகில் 13 இலட்சத்து 30 ஆயிரம் மக்கள் பஞ்சத்தில் அல்லது பஞ்சத்தை ஒத்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இது மட்டுமா? உலகில் இறக்கும் குழந்தைகளுள் பாதிபேர் சத்துணவின்மையால் உயிரிழக்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் பசி தொடர்புடையவைகளால் உயிரிழக்கும் 90 இலட்சம் பேரில் பெரும்பான்மையினோர் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள். ஏழ்மையும் பசியும் ஆப்பிரிக்காவில்தான் தங்கள் வசிப்பிடத்தை அதிக அளவில் கொண்டுள்ளன.

2030ஆம் ஆண்டுக்குள் எவரும் பசியால் வாடாத ஒரு நிலையை உருவாக்க வேண்டும் என ஐ.நா. நிறுவனம் திட்டமிட்டு செயலாற்றிவருவது நிறைவேறாது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. சஹாராவை அடுத்த ஆப்பிரிக்க நாடுகளைப் பார்க்கும்போதும், தெற்காசிய நாடுகளை நோக்கும்போதும் 2030ன் குறிக்கோளை எட்டுவது சிரமம் என்றுதான் தோன்றுகிறது. இங்கு சத்துணவின்மை, குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்ததாகத் தெரியவில்லை. ஆகவே, இன்னும் 130 ஆண்டுகள் தாண்டி கூட, அதாவது 2160ஆம் ஆண்டில்கூட பசியை எதிர்த்து வெற்றிபெறுவோம் என்பது சந்தேகத்திற்குரியதுதான். ஏனெனில் பசி என்பது அரசியல் மற்றும் காலநிலை மாற்றங்களோடு நெருங்கியத் தொடர்புடையதாக இருக்கின்றது. ஏனெனில், பசி என்பது மோதல்களாலும், கால நிலை மாற்றங்களாலும் பொருளாதார நெருக்கடிகளாலும் கீழ்நிலை அடைந்துள்ளது. உணவு பாதுகாப்பின்மையாலும் சத்துணவின்மையாலும் அதிகம் பாதிக்கப்படுள்ளவர்கள் பெண்களும் சிறுமிகளும்தான். அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதில் ஓரளவு முன்னேற்றத்தை இவ்வுலகம் கண்டுவந்தாலும், இது எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் அல்ல என்பதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

இவ்வுலகில் பசி இன்னும் தன் ஆதிக்கத்தைக் கொண்டிருக்கும் முக்கியக் காரணங்கள் என்னவென்று நாம் ஆராய்ந்து பார்த்தால் அனைத்திற்கும் மேலாக ஏழ்மை முதலில் வந்து நிற்கிறது. ஏழ்மையில் வாடும் குடும்பத்தால் போதிய உணவை, குறிப்பாக சத்துள்ள உணவைப் பெற முடியாது. போதிய உணவில்லையேல் அக்குடும்பத்தின் குழந்தைகளால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது. இதனால்தான் சத்துணவுத் திட்டத்தையேக் கொண்டுவந்தார் கர்மவீரர் காமராசர்.

உணவுப் பற்றாக்குறை பிறிதொரு காரணமாக உள்ளது. பல ஏழை நாடுகளில் முந்தைய ஆண்டின் சேமிப்பு பயன்படுத்தப்பட்டு, அடுத்த ஆண்டு அறுவடைக்கு இடைப்பட்ட காலத்தில் விலைவாசிகள் உயர்ந்து, மூன்றுவேளை உணவில் ஒருவேளையை சில குடும்பங்கள் தியாகம் செய்யும் நிலை உருவாகும். இது தவிர, கோவிட் பெருந்தொற்று காலத்தின்போதும், தற்போதைய உக்ரைன் போர்க்காலத்தின் துவக்கத்திலும் இதைத்தான் கண்டோம். போர் மற்றும் மோதல்களின்போதும் மக்கள் பசியால் வாடுவதும் தொடர்கின்றது. ஓர் உதாரணத்திற்கு இரஷ்யா-உக்ரைன் போரை எடுத்துக் கொள்வோம். போருக்கு முன்னர் உலகின் கோதுமை தேவையில் 25 விழுக்காட்டை இவ்விரு நாடுகளும் தான் நிறைவுச் செய்தன, அதாவது ஏற்றுமதிச் செய்தன. ஆனால், இன்றோ அந்த சங்கிலி அறுபட்டு, கோதுமை பற்றாக்குறையும், விலையேற்றமும் இடம்பெற்றுள்ளன. இதனால் ஏழை நாடுகளில் பசியின் பிடி இறுக்கமாகியுள்ளது.

காலநிலை மாற்றம், இன்னொரு காரணமாக உள்ளது. உலகம் வெப்பமாகி வருவதும், இயற்கை பேரிடர்களும் பசியின் கொடுமைக்கு இன்னும் வலுசேர்த்துள்ளன. இது தவிர திட்டமிடாத அரசின் செயல்கள், அரசியல் நிலையற்றதன்மை, மோசமான பொருளாதாரம், உணவை வீணாக்குதல், பாலின பாகுபாட்டு முறைகள், கட்டாயப்படுத்தப்படும் புலம்பெயர்வுகள் என பல காரணங்களால் உலகில் பசி இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.  

வட கொரியா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, லைபீரியா, நிஜர், ஹெய்ட்டி, காங்கோ ஜனநாயகக் குடியரசு, மடகாஸ்கர், சாடு, ஏமன், சொமாலியா போன்ற நாடுகள் உலகில் பசியை அதிக அளவில் அனுபவித்துவரும் நாடுகள். நமது பூமி இங்குள்ள அனைவருக்கும் உணவளிக்க போதுமான உணவை உருவாக்குகிறது. இருப்பினும், ஒவ்வோர் ஆண்டும் 130 கோடி கிலோ உணவு இழக்கப்படுகிறது அல்லது வீணாகிறது. இது மொத்த உணவு உற்பத்தியில் ஏறக்குறைய 20%.

உலக மக்களை பசிக்கொடுமையில் இருந்து ஒரே நாளில் மீட்டுவிட முடியாது. ஆனால், முடிந்தவரை ஒவ்வொருவரும் இதில் பங்கேற்க முடியும். முதலில் தாங்கள் உண்ணும் உணவை வீணாக்குவதைத் தவிர்க்கலாம். ஒரு பருக்கை சோறாக இருந்தாலும் அதை வீண் செய்யக்கூடாது என உறுதியாக இருக்கலாம். வீட்டில் குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உணவின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுங்கள்.  அதுமட்டுமன்றி, உணவு மீந்துவிட்டால் பசியால் தவிக்கும் மக்களுக்கு தானமாக அளிக்கலாம். தேவைக்கு மட்டும் சாப்பிடுவதில் கவனம் செலுத்தினால், உணவை வீணாக்குவதையும், பசியுடன் படுக்கைக்குச் செல்லும் நபர்களின் எண்ணிக்கையையும் குறைக்கலாம். உலக உணவு தினம் என்பது அளவுக்கு அதிகமாக உண்பதை தவிர்க்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த முடிவுகளை எடுக்கவும் நினைவூட்டுகிறது.

உலகில் உணவுப் பற்றாக்குறையை நிவர்த்திச் செய்ய நம்மால் இயன்றதை ஆற்றுவோம். பகிர்தலும், வீணாக்காத மனமும் இருந்தால் போதும், நாமும் இதில் பங்களிக்கலாம்.

No comments:

Post a Comment

Pope: Respect UN peacekeepers in Lebanon

  Pope: Respect UN peacekeepers in Lebanon After the Israeli army fires at UN peacekeeping forces in southern Lebanon, the Pope calls for th...