Monday, 7 October 2024

அக்.10. உலக மனநல நாள்

 

அக்.10. உலக மனநல நாள்


2024ஆம் ஆண்டிற்கான கருப்பொருளாக, 'பணியிடத்தில் மனநலத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் இது’ என்பது எடுக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உலக மனநல நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பாண்மைக்காக வாதிடும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. 2024ஆம் ஆண்டிற்கான கருப்பொருளாக, 'பணியிடத்தில் மனநலத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் இது’ என்பது எடுக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியாக வாழவும், நம் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தவும், பணியாற்றும் இடங்களிலும் சமூகத்திலும் செயலூக்கத்துடன் பங்கேற்கவும் உடல் நலம், மன நலம், சமூக சூழமைவு ஆகிய மூன்றும் சரியாக இருக்க வேண்டும். ஆனால், இன்றைய உலகில் ஏறக்குறைய 100 கோடி மக்கள் மனநலச் சிக்கலால் அவதியுறுகிறார்கள். மனவியல், உளவியல் பிரச்சினைகளால் துன்புறுகிறவர்களை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்குப் பதிலாகப் போதிய விழிப்புணர்வு இல்லாததால் கோவில்கள், நண்பர்கள், பெரியவர்கள், பேய் ஓட்டுபவர் என ஒவ்வொருவரிடமும் அழைத்துச்சென்று காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.

WHO இன் கூற்றுப்படி, உலகெங்கிலும் உள்ள ஒவ்வோர் எட்டு நபர்களில் ஒருவர் மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றார் என்று தெரிய வருகிறது. உலக அளவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 விழுக்காட்டினர் மனச்சோர்வு பாதிப்பால் சிரமப்படுவதாகக் கூறுகிறது உலக நலவாழ்வு நிறுவனம்.

வாழ்வின் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் பிரச்சனை என்பது வந்து கொண்டுதான் இருக்கும். ஆனால், அதை நினைத்து கொண்டு இருப்பது ஆழ்மனதில் ஒரு வகையான பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணம் அமைகிறது. அப்பாதிப்பு உடலை பாதிக்கும். இதனால் உடலில் இரத்த அழுத்தம் ஏற்பட்டு சரியாக உணவு எடுத்து கொள்ளாமல் போவது போன்ற உடலின் நலனை பாதிக்கும் காரணியாகவே இது மாறிவிடும். எனவே, மனநலம் உடல் நலனுக்கு வழிவகுக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

"மனநலமும் உடல்நலத்தைப் போலவே முக்கியமானதுதான். மனநல மருத்துவரை பார்க்கப் போவது என்றால் அதை வெளியில் சொல்லவே கூச்சப்பட்ட காலகட்டமும் இருந்தது. ஆனால், முன்பு அளவுக்கு இப்போது இல்லை. மனநலமும் முக்கியம் என்பதை மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். மனரீதியாக சோர்வு அடைவோரின் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில், மனநலம் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

மனநலத்துக்கும், உடல்நலத்துக்கும் ஒரு வித தொடர்பு உள்ளது. நாள்தோறும் உடற்பயிற்சி செய்தாலே மனநலம் சார்ந்த பாதிப்புகள், பிரச்னைகளைத் தவிர்க்கலாம். ஏனென்றால் உடற்பயிற்சி உடலுக்கு ஆரோக்கியம் தருவது மட்டுமில்லாமல் மனதில் கவலை, சோர்வு ஏற்படுவதையும் தடுக்கிறது.

சின்ன விடயமாகவே இருந்தாலும் பதற்றத்தோடும் பயத்தோடுமே அணுகுவது, எந்த வேலையையும் படபடப்புடனேயே செய்வது, செய்ய வேண்டிய வேலையை நினைத்து, நடக்க வேண்டியதை நினைத்து அதற்கும் வெகுகாலத்திற்கும் முன்பிருந்தே மிகுந்த பதற்றத்திற்கு உள்ளாவது, சிறு விடயமாகவே இருந்தாலும் அதிர்ந்துவிடுவது போன்றவைகளுக்கு உள்ளாகும் மக்களை நாம் பார்த்திருக்கிறோம். இன்னும் சிலர், சாவு மேளத்தைக் கேட்டால் பயந்து அலறிவிடுவது, பல்லியைப் பார்த்தாலே ஊரையே கூப்பிடுமளவுக்கு அலறுவது,  கூட்டத்தில் இருப்பது பிடிக்காது, இருட்டு அறையில் இருந்தால் பிடிக்காது என்பன போன்ற தாக்கங்கள் இருக்கும்போது அதனை நாம் மன நோய் என தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது. இதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு, அவர்களுக்கு அந்த பயத்தைப் போக்குவதற்கான சிகிச்சை, அதாவது ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். அச்சத்தைப் போக்குவதற்கு மருந்தியல் சிகிச்சையளிப்பதோடு சேர்த்து, அச்சத்தின் அடிப்படைக்கான உளவியல் சிகிச்சையும் வழங்கப்படுகிறது.

ஆனால், இங்கு சில வித்தியாசமான காட்சிகளையும் நாம் பார்க்கிறோம். இருவர் ஒரு சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருக்கும்போது, எதேச்சையாக அதில் ஒருவர் தனது எச்சிலைத் துப்புகிறார் என வைத்துக் கொள்வோம். அப்போது மற்றொருவர், 'அவன் என்னைப் பார்த்து, என்னைக் கேவலப்படுத்தவே துப்புகிறான்' என்று தனக்குத் தானே ஓர் எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்வது, கொஞ்சம் யோசிக்க வேண்டிய விடயம். எதேச்சையாக நடக்கும் ஒரு விடயத்தைக் கூட, தன்னைக் குறி வைத்தே நடப்பதைப் போல் நினைத்துக் கொள்வது. உறவுகளிலும் இதுபோன்ற பிரச்னைகள் அதீத சந்தேகம் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. குடிப்பழக்கத்தால் இது அதிகமாகிறது. இத்தகைய மனப் பிறழ்வுகள், மனநலப் பிரச்சனைக்கு இட்டுச் செல்கின்றன. சிலர் திடீரென கோபப்பட்டு கத்துவார்கள், கண்ணீர் விட்டு அழுவார்கள். தீவிர மன உளைச்சல், கோபம் போன்ற இயல்புக்கு மாறான மனநிலைக்கு ஆளாவார்கள். இப்படி இயல்பான மனநிலையில் இருந்து திடீரென வியத்தகு மாற்றங்கள் ஏற்படுவது மனநல பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம்.

நம் வாழ்வின் நேர்மறையான கூறுகளில் கவனம் செலுத்தினால், இத்தகைய அசாதாரண நிகழ்வுகள் இடம்பெறாமல் தடுக்கலாம். நேர்மறையாக இருக்க முயற்சி செய்வோம், எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருப்போம், மாற்றங்கள் வரும்போது அவற்றை ஏற்றுக்கொள்ள நம்மையே தயாரித்துக் கொள்வோம். உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்போம், வழக்கமான உடல் செயல்பாடு மற்றும் உடற்பயிற்சி மன அழுத்தத்தை குறைக்கும் மற்றும் மனநிலையை உயர்த்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக நம் மனப்பிரச்சனைகளுக்கு ஆதிகாரணம் என்னவென்று எண்ணிப் பாருங்கள்.

நடந்ததை நினைத்து அதிலிருந்து வெளியேற முடியாமல் திணறிக்கொண்டிருப்பதுதான் முதல் காரணம் என்று கூறலாம். ”நாளை என்பது நிச்சயம் இல்லை. நேற்று என்பது முடிந்த போன பொய், இன்று என்பதே உண்மை” என இப்படி மூன்றையும் கடைபிடித்தாலே வாழ்க்கையில் அதிகப்படியான பிரச்சனையை சரி செய்து விடலாம். அடுத்த நாளுக்கு எக்காரணத்தை கொண்டும் நேற்றைய நாளை எடுத்துச் செல்லக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஆசைப்பட்ட விடயம் கிடைக்கவில்லை என்றால் அதற்காக மனம் வருந்தாமல், அதற்கு மாற்று வழி என்ன? என்பது பற்றி யோசித்தாலே பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். இது தவிர, ஒரு நாளைக்கு 8 மணி நேரம் நன்றாக தூக்கம் தேவை. சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, நண்பர்களுடன் உரையாடுவது, நம்மை நாமே ஊக்கமூட்டுவது,

யாருக்காகவும் நம் சுய மரியாதையை விட்டுக் கொடுக்காமல் இருப்பது போன்றவை நம் மனநிலையை சீராக வைத்திருப்பதற்கு உதவும். புகையிலை மற்றும் மது, தேவையற்ற குற்றவுணர்வு, இயலாமையிலிருந்து பிறக்கும் தோல்வி மனப்பான்மை போன்றவைகளில் இருந்து சற்று தூரமாகவே விலகி நிற்போம்.

மனநலத்திற்கு நாம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பது உங்களுக்குப் புரிகிறதா?

மன அழுத்தமடைதல் அல்லது வாழ்வில் பிடிப்பில்லாதிருத்தல், கவலையற்று நடந்து கொள்ளுதல், அளவுக்கதிகமாக மது அருந்துதல், போதை மருந்து பயன்படுத்துதல், பாலியல் அல்லது உடல்ரீதியான தகாத பழக்கம், நெருங்கிய நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரின் மரணம், விவாகரத்து அல்லது பிரிவு, உறவு முறிதல், படிப்பில் தோல்வி, வரப்போகிற தேர்வுகள், தேர்வு முடிவுகள்,   வேலை இழப்பு, பணிபுரியுமிடத்தில் பிரச்சனை, வரப்போகிற சட்ட நடவடிக்கை போன்றவை மனப்பிரச்சனைக்கு இட்டுச்செல்லலாம். இதன் தொடர்பாக, மனிதர்கள் தனிமை, ஒதுக்கப்பட்டதாக நினைத்தல், தன்னையே காயப்படுத்திக் கொள்ளல், மரணம் மற்றும் தற்கொலை பற்றி எண்ணுதல், குறுகிய கண்ணோட்டத்தை தாண்டி சிந்திக்க இயலாமை, சுயமதிப்பை இழத்தல், மன அழுத்தம் போன்றவைகளுக்கு உள்ளாகி, இதில் பல தற்கொலைகளுக்கும் இட்டுச்செல்கின்றன. உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 8 இலட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். உலகளாவிய ரீதியில் மரணத்திற்கு காரணமாக விளங்கும் 10வது முக்கிய காரணியாக தற்கொலை கருதப்படுகிறது. உலகில் நாற்பது வினாடிகளுக்கு ஒரு தற்கொலை இடம்பெறுகிறதாம்.

மேலும் 15-29 வயதுக்கிடைப்பட்டோரில், தற்கொலையே இறப்பிற்கு இரண்டாவது பெரிய காரணமாக அமைவதாகவும், 78 விழுக்காட்டுத் தற்கொலைகள் குறைந்த அல்லது நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலேயே நடப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

2022ஆம் ஆண்டில், இந்தியாவில் தற்கொலைகள் 4.2% அதிகரித்துள்ளன. மொத்தமாக 1.7 இலட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் தற்கொலை நிகழ்வுகள் நடந்துள்ளன. மேலும் 2018ஆம் ஆண்டோடு ஒப்பீடு செய்து பார்த்ததில் 2022ஆம் ஆண்டு 27% தற்கொலைகள் அதிகரித்துள்ளன.  2022 அறிக்கையின்படி, மாநிலவாரியாக கணக்கிட்டதில், மகாராஷ்டிரா (22,746), தமிழ்நாடு (19,834), மத்தியப் பிரதேசம் (15,386), கர்நாடகா (13,606), கேரளா (10,162), தெலுங்கானா (9,980) ஆகிய மாநிலங்களில் அதிக தற்கொலைகள் நடந்துள்ளன. 2022இல் தற்கொலை செய்து கொண்ட 48,000க்கும் மேற்பட்ட பெண்களில் 52%க்கும் அதிகமானோர் இல்லத்தரசிகளே என்பது அதிர்ச்சிகரமான தகவலாகும். தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவில்தான் அதிகளவு தற்கொலைகள் நிகழ்கின்றன என்று உலக நலவாழ்வு அமைப்பின் அண்மை அறிக்கை தெரிவித்துள்ளது. உலக அளவில் பார்க்கும்போது தற்கொலை முயற்சியில் ஈடுபடும் பெண்களைக் காட்டிலும் ஆண்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகம் என்றும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தற்கொலை எண்ணமும் ஒருவிதமான மனபிறழ்வுதான். மனநலம் பேணி, மனித உயிர்களைக் காப்போம்.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...