Wednesday, 20 October 2021

இந்திய தலத்திருஅவையில் ஆயர்கள் மாமன்றத் தயாரிப்புகள்

 


சென்னை-மயிலைப் பேராயர் ஜார்ஜ் ஆன்டனிசாமி அவர்கள், இஞ்ஞாயிறன்று சென்னை சாந்தோம் பேராலயத்தில் ஆடம்பரத் திருப்பலி நிறைவேற்றி, மாமன்றத்தின் முதல்நிலைப் பணிகளைத் துவக்கி வைத்துள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“ஒன்றிணைந்து பயணம் மேற்கொள்ளும் திருஅவைக்காக: ஒருங்கிணைப்பு, பங்கேற்பு, மறைப்பணி” என்ற தலைப்பில், 2023ம் ஆண்டு அக்டோபரில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் 16வது உலக ஆயர்கள் மாமன்றத் தயாரிப்புக்களின் முதல்நிலைப் பணிகள், அக்டோபர் 17, இஞ்ஞாயிறன்று ஆசியத் தலத்திருஅவைகளில் மிக உற்சாகத்தோடு துவக்கப்பட்டுள்ளன.

16வது உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு, உலக அளவில் ஈராண்டு தயாரிப்புக்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளதையடுத்து, உலகின் அனைத்து மறைமாவட்டங்களும் முதல்நிலைப் பணிகளைத் துவக்கியுள்ளன.

தமிழகத்தில் சென்னை-மயிலைப் பேராயர் ஜார்ஜ் ஆன்டனிசாமி அவர்கள், இஞ்ஞாயிறன்று சென்னை சாந்தோம் பேராலயத்தில் ஆடம்பரத் திருப்பலி நிறைவேற்றி, மாமன்றத்தின் முதல்நிலைப் பணிகளைத் துவக்கி வைத்துள்ளார்

இந்திய ஆயர் பேரவையின் தலைவரான மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று மும்பை மாநகரின் இயேசுவின் திருப்பெயர் பேராலயத்தில் ஆடம்பரத் திருப்பலி நிறைவேற்றி, இம்முதல்நிலைப் பணிகளைத் துவக்கி வைத்துள்ளார்.

திருஅவையிலிருந்து விலகியிருப்போர், திருஅவையிலிருந்து விலக நினைத்துக்கொண்டிருப்போர் போன்றவர்கள், நாம் சிந்திப்பதற்கு செய்திகளைக் கொண்டிருக்கின்றனர் என்று தன் மறையுரையில் கூறிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், மாமன்றத்தின் நடைமுறைகள், இத்தகையோரால் திருஅவை துயருறுவது குறித்து தெளிந்துதேர்வதன் வழியாக, திருஅவையை சீர்திருத்தும் நோக்கத்தைக் கொண்டிருக்கின்றன என்று எடுத்துரைத்தார்.

அருள்பணித்துவ வாழ்வுமுறையை ஏற்றுள்ளோரின் ஆதிக்கம், பெண்களுக்கு எதிரான பாகுபாடு, புலம்பெயர்வோர் புறக்கணிக்கப்படல், சிறார் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், காலநிலை மாற்றத்தின் பாதிப்பு, குறிப்பாக இந்தியாவில் இந்நிலை, திருஅவையில் தலித்துக்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு போன்ற பல விவகாரங்கள் ஆய்வுசெய்யப்படவேண்டியுள்ளன என்றும் கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.  

இத்திருப்பலியில், கோவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாட்டு விதிகளை மதிக்கும்வண்னணம் 122 விசுவாசிகளே பங்குகொண்டாலும், இணையதளம் வழியாக ஆயிரக்கணக்கான விசுவாசிகள் பங்குகொண்டனர் என்று ஆசியச் செய்தி கூறுகின்றது.

இத்திருப்பலியில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த பெண் ஒருவர் முதல் வாசகத்தை இந்தி மொழியிலும், மற்றொரு பெண் இரண்டாவது வாசகத்தை மராத்தி மொழியிலும் வாசித்தனர். விசுவாசிகள் மன்றாட்டு, தமிழ் மற்றும் கொங்கனி மொழிகளில் செபிக்கப்பட்டது. (AsiaNews)

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...