இவ்வாண்டு செப்டம்பர் 27ம் தேதி நிலவரப்படி, 124 நாடுகளில் பள்ளிகள் முழுவதுமாகவும், 44 நாடுகளில் ஒரு சில வகுப்புகளுக்கு மட்டுமாகவும் திறக்கப்பட்டுள்ளன. 16 நாடுகளில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
உலக அளவில் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் கல்வியை மீட்டெடுப்பதில், ஆசிரியர்கள் உந்துசக்திகளாக உள்ளனர் என்று, ஐ.நா. அமைப்புக்களின் தலைவர்கள் கூறியுள்ளனர்.
அக்டோபர் 05, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக ஆசிரியர்கள் நாளுக்கென்று கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐ.நா. அமைப்புக்களின் தலைவர்கள், ஆசிரியர்கள் அனைவரின் சிறந்த அர்ப்பணிப்பு, துணிச்சல், மற்றும், நிச்சயமற்ற சூழல்களுக்கேற்ப அவர்கள் தங்களை மாற்றியமைத்துக்கொள்ளும் திறன் ஆகியவற்றை இன்று கொண்டாடுவோம் என்று கூறியுள்ளனர்.
அனைத்துலக ஆசிரியர்கள் நாளைச் சிறப்பிக்கின்ற இவ்வேளையில், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கண்ணோக்கி, அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் கொள்கைகளை அமைப்பது குறித்து சிந்திப்பதற்கு, இந்த நாள், முக்கியமான வாய்ப்பை அரசுகளுக்கு வழங்குகிறது என்று அத்தலைவர்கள் கூறியுள்ளனர்.
உலகின் 7 கோடியே 10 இலட்சம் ஆசிரியர்களுக்கு நல்வாழ்வளித்தல், ஆசிரியப்பணியின் முன்னேற்றத்திற்குப் பயிற்சியளித்தல், பணியிடங்களை மேம்படுத்தல் ஆகியவற்றுக்கு முதலீடுகள் அதிகம் தேவைப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ள அத்தலைவர்கள், ஆசிரியர்களோடு ஒத்துழைத்து செயல்பட்டால், பெருந்தொற்றால் பின்னடைவு கண்டுள்ள கல்வியை மீட்டெடுக்கமுடியும் என்றும் கூறியுள்ளனர்.
இவ்வாண்டு செப்டம்பர் 27ம் தேதி நிலவரப்படி, 124 நாடுகளில் பள்ளிகள் முழுவதுமாகவும், 44 நாடுகளில் ஒரு சில வகுப்புகளுக்கு மட்டுமாகவும் திறக்கப்பட்டுள்ளன. 16 நாடுகளில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை என்று அத்தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
71 விழுக்காட்டு நாடுகள், ஆசிரியர்களுக்கு பெருந்தொற்று தடுப்பூசிகள் வழங்குவதற்கு முன்னுரிமை கொடுத்துள்ளன என்று யுனெஸ்கோ நிறுவனம் கூறியுள்ளது.
உலக அளவில் 2030ம் ஆண்டுக்குள், 6 கோடியே 90 இலட்சத்திற்கு அதிகமான ஆசிரியர்கள், ஆரம்ப மற்றும், நடுத்தரப் பள்ளிகளுக்குத் தேவைப்படுகின்றனர்.
அக்டோபர் 05, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக ஆசிரியர்கள் நாளுக்கென்று, யுனெஸ்கோவின் தலைவர் Audrey Azoulay, யுனிசெப்பின் தலைவர் Henrietta Fore, உலக தொழில் நிறுவனத்தின் அதிகாரி Guy Ryder, உலகளாவிய கல்வி அமைப்பின் தலைவர் David Edwards ஆகியோர் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். (UN)
No comments:
Post a Comment