Tuesday, 5 October 2021

2023ம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் உலக இளையோர் நாள் நிகழ்வுகள்

 


கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கிய நெருக்கடிகளின் காரணமாக, 2022ம் ஆண்டு நடைபெறுவதாக இருந்த உலக இளையோர் நாள் நிகழ்வுகள், தற்போது, 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் 6ம் தேதி முடிய நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

போர்த்துக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 முதல் 6ம் தேதி முடிய உலக இளையோர் நாள் நிகழ்வுகள் நடைபெறும் என்று லிஸ்பன் பெருமறைமாவட்டத்தின் பேராயரும், போர்த்துக்கல் முதுபெரும் தந்தையுமான கர்தினால் மானுவேல் கிளமெண்ட்டே (Manuel Clemente) அவர்கள், அக்டோபர் 4, இத்திங்களன்று அறிவித்தார்.

பெருந்தொற்று உருவாக்கியுள்ள நெருக்கடியால் பன்னாட்டு பயணங்கள் இன்னும் தடுமாற்றம் கண்டுள்ள வேளையில், இந்த அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட்டால், இந்த இளையோர் நாள் நிகழ்வுகளில் பங்கேற்க  விழையும் இளையோருக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகிறது என்று கர்தினால் கிளமெண்ட்டே அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.

2020ம் ஆண்டு அக்டோபர் மாதம், உரோம் நகரில் நடைபெற்ற ஒரு திருப்பலியில், உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் முக்கிய அடையாளங்களான திருச்சிலுவையும், அன்னை மரியாவின் திரு உருவப்படமும் புனித பேதுரு பெருங்கோவிலில், திருத்தந்தையின் முன்னிலையில், பானமா இளையோரிடமிருந்து, போர்த்துக்கல் இளையோரின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 2021ம் ஆண்டு சனவரி மாதம், இந்த இளையோர் நாள் நிகழ்வுகளின் அதிகாரப்பூர்வ பாடல் வெளியிடப்பட்டது.

1985ம் ஆண்டு திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களால் உருவாக்கப்பட்ட உலக இளையோர் நாள் கொண்டாட்டங்கள், முதல் முறையாக 1986ம் ஆண்டு உரோம் நகரில் நடைபெற்றது.

இதற்குப்பின், 1987ம் ஆண்டு Buenos Aires, 1989ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் Santiago de Compostela, 1991ம் ஆண்டு Czestochowa, 1993ம் ஆண்டு Denver, 1995ம் ஆண்டு Manila, 1997ம் ஆண்டு Paris, 2000ம் சிறப்பு யூபிலி ஆண்டில் மீண்டும் Rome, 2002ம் ஆண்டு Toronto, 2005ம் ஆண்டு Cologne, 2008ம் ஆண்டு Sidney, 2011ம் ஆண்டு Madrid, 2013ம் ஆண்டு Rio de Janeiro, 2016ம் ஆண்டு Krakow ஆகிய நகரங்களில் நடைபெற்ற இளையோர் உலக நாள் நிகழ்வுகள், 2019ம் ஆண்டு Panamáவில் நடைபெற்றது.

பானமா உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் இறுதி நாளன்று, பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kevin Farrell அவர்கள், அடுத்த உலக இளையோர் நாள் நிகழ்வுகள், 2022ம் ஆண்டு, போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் நடைபெறும் என்று அறிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கிய நெருக்கடிகளின் காரணமாக, 2022ம் ஆண்டு நடைபெறுவதாக இருந்த உலக இளையோர் நாள் நிகழ்வுகள், தற்போது, 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் 6ம் தேதி முடிய நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...