மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
உலக ஆயர்கள் மாமன்றத்தை நடத்துவது என்பது, மனிதராகப் பிறந்த இறைவார்த்தையாம் இயேசு நடந்த பாதையில் பயணத்தைத் தொடர்வதாகும், அத்துடன், அவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, மற்றவரின் வார்த்தைகளுக்குச் செவிமடுப்பதோடு, அவரது வார்த்தைகளையும் உற்றுக்கேட்பதாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 12, இச்செவ்வாயன்று கூறியுள்ளார்.
2023ம் ஆண்டு அக்டோபரில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் 16வது உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு, உலக அளவில் ஈராண்டு தயாரிப்புப் பணிகளைத் துவக்கிவைத்துள்ள திருத்தந்தை, அம்மாமன்றம் பற்றி, இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் இவ்வாறு பதிவுசெய்துள்ளார்.
உலக ஆயர்கள் மாமன்றத்தை நடத்துவது என்பது, புதிய பாதைகள் மற்றும் மொழிகளைப் பரிந்துரைப்பதற்கு, எதிர்பாராத முறையில் திகைப்பூட்டும் வழியில், தூய ஆவியார் வரங்களைப் பொழிகிறார் என்பதை வியப்போடு கண்டுணர்வதாகும் என்றும், திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.
மேலும், பேரருள்திரு தியோகோ ஜொவான்னி ரவெல்லி (Diego Giovanni Ravelli) அவர்களை, திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பாளராகவும், பாப்பிறை சிஸ்டீன் சிற்றாலய பாடகர் குழுவின் தலைவராகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார்.
இத்தாலியில் 1965ம் ஆண்டில் பிறந்த பேரருள்திரு ரவெல்லி அவர்கள், திருவழிபாட்டியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளவர்.
இதுவரை, திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பாளராகவும், பாப்பிறை சிஸ்டீன் சிற்றாலய பாடகர் குழுவின் தலைவராகவும் பணியாற்றிவந்த பேரருள்திரு குய்தோ மரினி அவர்கள், Tortona ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment