Wednesday, 20 October 2021

கர்நாடக அரசின் கிறிஸ்தவ மறைப்பணியாளர்கள் குறித்த கணக்கெடுப்பு

 


மதமாற்ற நடவடிக்கைகள் இடம்பெறுவதாக சில மத தீவிரவாதக் குழுக்கள் கூறி வருவது உண்மையானால், இந்தியாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது ஏன்?

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்தவ மறைப்பணியாளர்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை நடத்த உள்ளதாக கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது, ஓர் ஆபத்து நிறைந்த நடவடிக்கை என தன் கவலையை வெளியிட்டுள்ளார் பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ.

கர்நாடக மாநிலத்தில் பணிபுரியும் கிறிஸ்தவ மறைப்பணியாளர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா அரசின், பின்தங்கிய வகுப்பினர், மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து கவலையை வெளியிட்ட பேராயர் மச்சாடோ அவர்கள், ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் அருள்பணியாளர்களும், அருள்சகோதரிகளும், மேலும் அடையாளம் காணப்பட்டு, அநீதியான முறையில் நடத்தப்படுவதற்கே இந்த கணக்கெடுப்பு உதவிசெய்வதாக இருக்கும் என அக்டோபர் 15, வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

கிறிஸ்தவப் பணியாளர்கள், மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்கள் பற்றிய கணக்கெடுப்பை மட்டும் எடுக்க மாநில அரசு முயல்வது ஏன் என்ற கேள்வியை முன்வைத்துள்ள பெங்களூரு பேராயர், மதமாற்ற நடவடிக்கைகள் இடம்பெறுவதாக சில மத தீவிரவாதக் குழுக்கள் கூறி வருவது, உண்மையானால், இந்தியாவில் மற்ற மதங்களோடு ஒப்பிடுகையில் இந்திய கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதன் காரணம் என்ன என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.

திருஅவைப் பணியாளர்கள் என்பவர்கள் ஒருநாளும் மறைந்திருந்து செயலாற்றுவதில்லை என்பது மட்டுமல்ல, மக்களின் நலனுக்காகவே உழைக்கிறார்கள் என்பது அரசுக்குத் தெரிந்திருந்தும், இத்தகைய கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதில் அரசு முனைப்பு காட்டுவதன் நோக்கம் குறித்தும் சந்தேகத்தை எழுப்பும் பேராயர் மச்சாடோ அவர்கள், கிறிஸ்தவ கல்வி நிலையங்கள், மற்றும் மருத்துவமனைகள், நாட்டை கட்டியெழுப்பும் பணியில் ஆற்றும் சேவைகள் குறித்தும், அவைகள் மதமாற்றப் பணிகளில் ஈடுபடுவதில்லை என்பதும் அரசுக்குத் தெரியாததல்ல என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவின் எட்டு மாநிலங்களில் மதமாற்ற தடைச்சட்டம் அமலில் உள்ளது. 6 கோடியே பத்து இலட்சம் மக்கள் வாழும் கர்நாடகாவில், 84 விழுக்காட்டினர் இந்துக்கள் ஆகவும், 13 விழுக்காட்டினர் இஸ்லாமியர்களாகவும், 2 விழுக்காட்டினரே கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர். (UCAN)


No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...