Wednesday, 13 October 2021

பிலிப்பீன்சின் மரியா ரெஸ்ஸாவுக்கு ஆயர்கள் நல்வாழ்த்து

 


58 வயதான மரியா ரெஸ்ஸா அவர்கள், புலனாய்வுகளை மேற்கொள்ளும் இதழியல் நெறியுடன், 2012ம் ஆண்டில் Rappler என்ற டிஜிட்டல் ஊடக நிறுவனம் ஒன்றை நிறுவி நடத்தி வருகிறார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற நொபெல் அமைதி விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முதல் பிலிப்பீன்ஸ் நாட்டவரான மரியா ரெஸ்ஸா (Maria Ressa) அவர்களுக்கு, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் தங்கள் நல்வாழ்த்தை வெளியிட்டுள்ளனர்.

பேச்சு சுதந்திரம்

மரியா ரெஸ்ஸா அவர்கள், பிலிப்பீன்சில் பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு மேற்கொண்டுவரும் முயற்சிகளைப் பாராட்டி, 2021ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது அவருக்கு அறிவிக்கப்பட்டிருப்பதை நினைத்து மகிழ்ச்சியடையும் நாட்டு மக்கள் அனைவரோடு, ஆயர்களாகிய நாங்களும் இணைவதாக, அந்நாட்டு ஆயர் பேரவைத் (CBCP)  தலைவர், பேராயர்  ரோமுலோ வாலெஸ் (Romulo Valles) அவர்கள், அக்டோபர் 11, இத்திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.  

மக்களாட்சிக்கும், நிலையான அமைதிக்கும் முன்நிபந்தனையாகிய பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு, மரியா ரெஸ்ஸா, மற்றும், இரஷ்ய நாட்டின் திமித்ரி முரட்டோவ் (Dmitry Muratov) ஆகிய இரு செய்தியாளர்களும், அவரவர் நாடுகளில் துணிச்சலோடு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்காக, 2021ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதை, அவ்விருவருக்கும் வழங்கத் தீர்மானித்திருப்பதாக, நார்வே நாட்டு நொபெல் அமைதி விருது குழு கூறியது.

மக்களாட்சியும், பத்திரிகை சுதந்திரமும் கடும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுவரும்  ஓர் உலகில், அவற்றைப் பாதுகாப்பதற்காக உறுதியோடு பணியாற்றும் அனைத்து பத்திரிகையாளர்களின் பிரதிநிதிகளாக, இவ்விருவரும் இருக்கின்றனர் எனவும், அக்டோபர் 08, கடந்த வெள்ளியன்று நொபெல் அமைதி விருதை அறிவித்தபோது கூறியது, நொபெல் அமைதி விருது குழு.

பத்திரிகை சுதந்திரம்

ஓர் உண்மையான மற்றும், நலமான மக்களாட்சியை அமைப்பதற்கு, பத்திரிகைகளின் முக்கிய பங்கினை, அண்மைக் காலத் திருத்தந்தையர் எடுத்துரைத்து வருகின்றனர் என்றும், இதனால்,  மரியா ரெஸ்ஸா அவர்கள், பத்திரிகை சுதந்திரத்திற்காக ஆற்றிவரும் பணிகளை திருஅவை மிகவும் உயர்வாக மதிப்பதில் வியப்பேதும் இல்லை என்றும், பேராயர் வாலெஸ் அவர்கள் கூறியுள்ளார். 

உலகெங்கும், சமூகத் தொடர்புச் சாதனங்கள் வழியாக, தவறான மற்றும், போலியான செய்திகள் பரவிவருவது தொடர்ந்து அதிகரித்துவரும் இவ்வேளையில், பத்திரிகையாளரின் பணிகள் மிகக் கடினமாக மாறிவருகின்றன என்று தன் அறிக்கையில் கூறியுள்ள பேராயர் வாலெஸ் அவர்கள், உண்மையைத் தேடுவதற்கு மட்டுமின்றி, உரையாடல் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு உதவும் வழிகளைத் தேடுவதற்கு மிக முக்கியமாக உழைப்பதே பத்திரிகையாளரின் அழைப்பும், பணியும் என்று குறிப்பிட்டுள்ளார். 

58 வயதான மரியா ரெஸ்ஸா அவர்கள், புலனாய்வுகளை மேற்கொள்ளும் இதழியல் நெறியுடன், 2012ம் ஆண்டில் Rappler என்ற டிஜிட்டல் ஊடக நிறுவனம் ஒன்றை நிறுவி நடத்திவருகிறார். இந்நிறுவனம் வழியாக, ரொத்ரிகோ துத்தெர்த்தே அவர்கள், பிலிப்பீன்ஸ் நாட்டின் அரசுத்தலைவராக, பதவியேற்றத்திலிருந்து நடத்திவரும் போதைப்பொருள் ஒழிப்புப் போரினால் கொல்லப்பட்டவர்கள் சார்பில் உண்மை விவரங்களையும் ரெஸ்ஸா அவர்கள் வெளியிட்டுவருகிறார். (UCAN)

No comments:

Post a Comment

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions...

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions... :   New Decree clarifies discipline on Mass Intentions and collec...