மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
கர்நாடகா மாநிலத்தின் மங்களூருவில் அமைந்துள்ள ஒரு பூங்காவிற்கு, அநீதியாய் கைதுசெய்யப்பட்டு, மும்பையில் தடுப்புக்காவலில் கொலைசெய்யப்பட்ட, சமூகப் போராளி இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மங்களூருவில் இயேசு சபையினர் நடத்தும் புனித அலாய்சியஸ் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பூங்காவிற்கு, "ஸ்டான் சுவாமி அமைதிப் பூங்கா" என்று பெயரிடப்பட்டுள்ளது.
கல்லூரியின் அமைப்பில் பசுமைப் பகுதியை உருவாக்கும் நோக்கத்தில், அக்கல்லூரியின் வளாகத்தில் பூங்கா அமைப்பதற்கு, மனித உரிமை ஆர்வலரான ஸ்டான் சுவாமி அவர்களின் வாழ்வு தூண்டுதலாக இருந்தது என்று, இயேசு சபையினர் கூறியுள்ளனர்.
84 வயது நிரம்பியிருந்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி இன மற்றும், தலித் மக்களின் உரிமைகள் காக்கப்படுவதற்காகத் தன்னை அர்பணித்திருந்தவர். இவர், இந்திய தேசிய புலனாய்வு அமைப்பினால் அநியாயமாய்க் குற்றம் சாட்டப்பட்டு, மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டார். இவர், இவ்வாண்டு ஜூலை 5ம் தேதி தடுப்புக்காவலில், மும்பை திருக்குடும்ப மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது வயது மற்றும், நோயைக் காரணம் காட்டி பலமுறை விண்ணப்பிக்கப்பட்ட பிணையல் மனுவையும் நீதிமன்றம் புறக்கணித்தது.
இதற்கிடையே, தன் தீர்மானம் பற்றி உறுதியாக இருக்கும், திருஅவை மற்றும், இயேசு சபை அதிகாரிகள், மங்களூரு புனித அலாய்சியஸ் கல்லூரி, இனம், மதம், மொழி, சமூகநிலை போன்ற எந்தவிதப் பாகுபாடுகளுமின்றி, கடந்த 140 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றது என்று கூறியுள்ளனர். (Fides)
No comments:
Post a Comment