இலத்தீனிலுள்ள திருவழிபாட்டு நூல்களை மொழிபெயர்க்கும்போது, இம்மொழிபெயர்ப்பில் தேர்ச்சிபெற்ற வல்லுனர்கள் உட்பட தகுதியான நபர்களின் ஒத்துழைப்போடு, ஆயர் பேரவைகள் இந்தப் பணியை ஆற்றவேண்டும்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
திருவழிபாட்டு நூல்களை இலத்தீன் மொழியிலிருந்து உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்க்கும் திட்டத்தில் ஆயர் பேரவைகளுக்கு இருக்கின்ற மிகப்பெரிய பொறுப்பைச் சுட்டிக்காட்டியுள்ளது, திருவழிபாட்டு பேராயம்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் சொந்த விருப்பத்தின்பேரில் வெளியிடும் motu proprio அறிக்கை வழியாக வெளியிட்டுள்ள “Magnum principium” அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அம்சங்களை நடைமுறைப்படுத்துவதற்கு, புதிய விதிமுறை ஒன்றை, அக்டோபர் 22, இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளது, திருவழிபாட்டு பேராயம்.
இப்புதிய விதிமுறை குறித்து வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த, திருவழிபாட்டுப் பேராயத்தின் புதிய தலைவரான, பேராயர் Arthur Roche அவர்கள். திருவழிபாட்டு நூல்களை மொழிபெயர்ப்பதில் ஆயர் பேரவைகளின் பங்கை விளக்கிக் காட்டியுள்ளார்.
திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் திருநாளன்று வெளியிடப்பட்டுள்ள இப்புதிய விதிமுறை, இலத்தீனிலுள்ள திருவழிபாட்டு நூல்களை மொழிபெயர்க்கும்போது, இம்மொழிபெயர்ப்பில் தேர்ச்சிபெற்ற வல்லுனர்கள் உட்பட தகுதியான நபர்களின் ஒத்துழைப்போடு, ஆயர் பேரவைகள் இந்த வேலையை நேரிடையாக ஏற்றுச் செயல்படவேண்டும் என்று வலியுறுத்துகிறது என பேராயர் ரோச் அவர்கள் கூறியுள்ளார்.
கத்தோலிக்கத் திருஅவையின் நம்பிக்கையை முழுமையாக வெளிப்படுத்துவதற்கு உறுதிசெய்யும் முறையில், திருஅவையின் போதனைகளுக்கு ஏற்ற முறையில், சரியான வார்த்தைகளோடு அந்தந்த மொழிகளில், அந்நூல்கள் மொழிபெயர்க்கப்படவேண்டும் என்பதே இப்புதிய விதிமுறையின் நோக்கம் எனவும், பேராயர் ரோச் அவர்கள் விளக்கினார்.
No comments:
Post a Comment