Friday, 1 October 2021

நமது நம்பிக்கை, நாம் மறைப்பரப்பாளர் என்பதை நினைவுபடுத்துகின்றது

 


ஆண்டவரிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட அனைத்தும் நல்ல செயல்களுக்காகப் பயன்படுத்தப்படவேண்டும், மற்றும், அவை, கைம்மாறு கருதாமல், மற்றவரோடு பகிரப்படவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 01, இவ்வெள்ளியன்று துவங்கும் மறைபரப்புப் பணியாளர் மாதத்தையொட்டி, திருத்தந்தையின் மறைபரப்புப்பணி கழகங்கள் அமைப்பின் பன்னாட்டு செயலகம், “நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” (தி.ப.4:20) என்ற தலைப்பில், செய்தியாளர் கூட்டத்தில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மறைபரப்புப் பணித்தளங்களின் பாதுகாவலரான புனித குழந்தை தெரேசா விழாவான அக்டோபர் ஒன்றாந்தேதி இவ்வெள்ளியன்று துவங்கும் மறைபரப்புப் பணியாளர் மாதத்தில், 24ம் தேதி ஞாயிறன்று, 95வது உலக மறைபரப்புப்பணி நாள் சிறப்பிக்கப்படுகின்றது என்றுரைத்துள்ள அச்செயலகம், இந்த உலக நாளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியின் சுருக்கத்தையும் கூறியுள்ளது.

திருத்தூதர்கள் பணி நூலிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட, இவ்வாண்டின் உலக மறைபரப்புப்பணி நாள் தலைப்பை மையப்படுத்தி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட செய்தியில், திருத்தூதர்கள் மற்றும், முதல் கிறிஸ்தவர்களைப் போல நாமும், “நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” என்று, முழுமையான மன உறுதியுடன் கூறலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டவரிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட அனைத்தும் நல்ல செயல்களுக்காகப் பயன்படுத்தப்படவேண்டும், மற்றும், அவை, மற்றவரோடு சுதந்திரமாகப் பகிரப்படவேண்டும் என்று அச்செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, திருத்தூதர்கள் போன்று நாமும், ஒவ்வொரு நாளும் சந்திக்கும் கிறிஸ்துவின் துன்புறும், மற்றும், மகிமைநிறை சதைகளாகிய மக்களோடு, ஆண்டவர் எப்போதும் நம் அருகில் இருக்கிறார் என்ற உறுதியான அறிவை, துணிச்சலோடு பகிரவேண்டும் என்று கூறியுள்ளார்.

திருத்தந்தையின் இச்செய்தியை மையப்படுத்தி, மறைபரப்புப் பணியாளர் மாதம் பற்றிய தன் கருத்தை வெளியிட்டுள்ள, திருத்தந்தையின் மறைபரப்புப்பணி கழகங்கள் அமைப்பின் தலைவர் பேராயர் Giampietro Dal Toso அவர்கள், மறைபரப்பாளர் மாதம் மற்றும், உலக மறைபரப்புப்பணி நாளைக் கொண்டாடுவது என்பது, நமது கிறிஸ்தவ நம்பிக்கை, எப்போதும் மறைபரப்புப் பணியாளராக இருக்கவேண்டும் என்பதை நினைவுபடுத்துகின்றது என்று கூறியுள்ளார்.

மேலும், மறைபரப்புப் பணியாளர் மாதத்திற்கு விசுவாசிகளைத் தயாரிப்பதற்கு உதவியாக  இறைவேண்டல், தியானம், மற்றும், மறைபரப்புப்பணி அனுபவப் பகிர்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய காணொளிகளை வெளியிட்டுவந்த திருத்தந்தையின் மறைபரப்புப்பணி கழகங்கள் அமைப்பு, ஒவ்வொரு கண்டத்திற்கும் ஒவ்வொரு தலைப்பில் இத்தயாரிப்பை மேற்கொண்டது.

ஆசியக் கண்டம், கோவிட்-19 பெருந்தொற்றின் கடுமையான சூழலை எதிர்கொண்டுவருவதையொட்டி, வியட்நாமில், இப்பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், திருத்தந்தையின் மறைபரப்புப்பணி கழகங்கள் அமைப்பு ஆற்றியுள்ளது.

1922ம் ஆண்டில் திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், விசுவாசப் பரப்பு கழகத்தை உருவாக்கினார். பின்னர், இக்கழகம் கேட்டுக்கொண்டதன் பேரில், 1926ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதியன்று, அதே திருத்தந்தை, உலகின் அனைத்து மறைமாவட்டங்களிலும் ஒரே நாளில், மறைப்பணித்தளங்களுக்காகச் செபிக்கும் நாளுக்கு அனுமதியளித்தார். இவ்வாறு மறைபரப்புப்பணிக்காகச் செபிக்கும் உலக நாள் உருவானது.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...